நடுநாட்டுச் சொற்களின் தொகுப்பு

நடுநாட்டுச் சொற்கள்: தென்னாற்காடு மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள்

வட்டார வழக்குச் சொற்கள் தமிழின் தொன்மையையும் செம்மையையும் மக்களுடைய பண்பாட்டையும் காட்டுகின்றன. பெரும்பாலும் அவை தூய தமிழ்ச் சொற்களாக உள்ளன.  இக்காலத்தில் வட்டார வழக்கில் பேசுவது வெகுவாகக் குறைந்து விட்டது. எனவே, அவற்றைக் காப்பதும் அவைகளை இணையதளங்களில் பதிவு செய்வதும் மிகவும் அவசியமாகிறது. இவைகள் தமிழ் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தென்னாற்காடு மாவட்டம் பழைய விழுப்புரம் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. சென்னைத் தமிழ், நெல்லை தமிழ், குமரித்தமிழ், தஞ்சை தமிழ், கொங்குத்தமிழ் என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கு இருப்பது போல், தென்னாற்காடு மாவட்டத்திற்கும் வட்டார வழக்குச் சொற்கள் இருக்கின்றன. தென்னாற்காடு மாவட்ட தமிழ் பொதுவாக நடுநாட்டுத் தமிழ் என்று அழைக்கப்படுகிறது. நடுநாட்டுத் தமிழ் சொற்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண இருக்கிறோம். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த நடுநாட்டுச் சொற்களைச் சேர்க்கலாம். 

சில தென்னாற்காடு (நடுநாட்டு) வட்டார வழக்குச் சொற்களும் அதன் பொருள்களும்

There are currently 117 நடுநாட்டுச் சொற்கள் in this directory

அடப்பாசாரம்
தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்து இருத்தல்

அணித்தான்
அணில்

அந்தாண்ட
அந்தப் பக்கம்

அந்துசு
அழகு, அம்சம்

அன்னக்குத்தி
சோத்துக்கரண்டி

அம்மா
அவ்வளவு

அம்மாசி
அம்மாவாசை

அம்மாத்திரம்
அவ்வளவு

அய்யன்
தந்தை

அளப்பன்
அதிகமாகப் பொய் மற்றும் கற்பனைகளைப் பேசுபவன்

அழவாணி
மருதாணி

அவுத்துக்கா
அங்கே

அவுத்துட்ட
அங்கே


ஆயாள்
அம்மா

ஆயி
அம்மா


இசுத்துக்கிணு
இழுத்துக்கொண்டு

இந்தாண்ட
இந்தப் பக்கம்

இன்னபொழுது
இன்று

இன்னமுட்டும்
இதுவரை

இம்பா
இங்க வா

இம்மா
இவ்வளவு

இம்மாத்திரம்
இவ்வளவு

இவுத்துக்கா
இங்கே

இவுத்துட்ட
இங்கே


உடம்பானல்
உடற்சூடு

உறக்கம் பிடித்தல்
விரக்தியுடன் கூடிய மனச்சோர்வுடன் இருத்தல்


எட்ட
தூரம்

எத்தசோடு
எவ்வளவு பெரியது

என்னங்காட்டியும்
என்னைவிடவும்

எம்மா
எவ்வளவு

எம்மாத்திரம்
எவ்வளவு

எவுத்துக்கா
எங்கே

எவுத்துட்ட
எங்கே


ஏக்கிளி பித்தன்
சுயநினைவோடு பைத்தியக்கார செயல்களைச் செய்பவன்

ஏடை
பால் ஆடை

ஏணை
தூளி

ஏதரவு
ஜாக்கிரதை


ஐனாலை
மருதாணி

ஐயா
தந்தை


ஒட்டுத் தூத்தல்
மழை கிட்டத்தட்ட நின்றபிறகு கடைசியாகப் பெய்யும் பிசிறுத் தூரல்

ஒணக்கை
இதமாக இருத்தல்

ஒப்புக்கு
பெயரளவில் மட்டும் ஒரு காரியத்தைச் செய்தல்

ஒரேடியா
ஒரே முறையில், ஒட்டுமொத்தமாக

ஒரேமுட்டா
எல்லாம் ஒரே நேரத்தில், மொத்தமாக


ஓசரக்கு
அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையுடனும் ஒரு வேலையைச் செய்தல் (not in hurry burry), அவசர மற்றும் முக்கிய வேலைகளை முதலிலும் பிற வேலைகளை ஓசரக்காகவும் செய்தல்

ஓட்டாண்டி
வாழ்வாதாரம் ஒன்றுமில்லாதவன்

ஓட்டேலி வீடு
ஓட்டு வீடு

ஓணாத்தி
ஓணான்


கக்குள்
நீர் மற்றும் எண்ணையில் அவை தெளிந்தபின் அடியில் நிற்பவை

கடிப்பான்
பொரியல் அல்லது கூட்டு

கமான்
ஓடை அல்லது ஆற்றுப் பாலத்தில் இருபுறமும் அமர்வதற்கு கட்டப்படும் திண்ணை போன்ற அமைப்பு

காத்தால
காலையில்

காபந்து செய்தல்
(சொந்தக்காரர்களுக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு) தேவையானவைகளை பார்த்துப் பார்த்துச் செய்து அவர்களை முன்னேற்றுதல்

காமகாரம்
அன்பற்ற வெறுப்புடன் வஞ்சத்தோடு இருத்தல்

காலம்பர
காலையில்

கிட்ட
அருகில்

கீதா
இருக்குதா

குச்சத்தனம்
கலகம் மூட்டி கலவரம் உண்டு பண்ணும் குணம், அடுத்தவரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சி காணுதல்

குச்சிவள்ளி
மரவள்ளி

குந்து
உட்காரு

கெடாசு
தூக்கி எறி

கெராளி
அரை பைத்தியம் போன்றவன்

கைலி
லுங்கி

கொஞ்சபோரம்
ஒரு மிகச்சிறு பகுதி

கொட்டமுத்து
ஆமணக்கு

கொல்லி
விவசாய நிலம்


சட்டுவம்
தோசை திருப்பி

சாமந்தி
செவ்வந்தி

சாயங்காலம்
மாலை

சித்தாத்தா
சித்தி

சினப்புப்பொருள்
ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்

சிறுப்பாணி
எப்பொழுதும் கஷ்டம், சோதனை மற்றும் வேதனைகளையே அனுபவித்தல்

சீமெண்ணெய்
மண்ணெண்ணெய்

சூல்வரிசை
வளைகாப்பு

சோப்ளாங்கி
எதற்கும் உதவாத சோம்பேறி


தாராத்துட்டேன்
தொலைத்துவிட்டேன்

திப்பி
கரைத்தும் கரையாமல் அல்லது அரைத்தும் அரையாமல் தொக்கி நிற்பவை

திருநா
திருவிழா

தூத்தல்
தூரல்

தெக்கணாமுட்டி
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று இல்லாமல் எடக்கு முடக்காகச் செய்யும் மனிதன். அதாவது, அறிவு கொஞ்சம் குறைவானவன்


நமோது
பெயரளவு (formality)

நாக்குப்பூச்சி
மண்புழு

நாள் முட்டும்
நாள் முழுவதும்

நீனு
நீ

நீலகிரி மரம்
யுக்கலிப்டஸ் மரம்

நெட்டாரல்
மழைத்தூரல் தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருத்தல்

நெண்டி விடுதல்
ஒருவருக்கு எதிராக வேறொருவரைத் தூண்டி விடுதல், பழைய பிரச்சனையைக் கிளரி மனவேதனைப் படுத்துதல்

நெவ்வாக அரைத்தல்
மாவை மிகவும் நுண்ணிய துகள்களாக அரைத்தல்

நோக்காடு
நோய் நொடியுடன் கூடிய நிலை

நோஞ்சான்
பலவீனமானவன்


பாப்பாத்தி
தங்கை

புழுக்கமாக இருத்தல்
வெக்கையாகவோ அல்லது உருக்கமாகவோ இருத்தல்

பூனாச்சி
பூனை

பொசாய
மாலையில்

பொய்யாலாட்டம்
கள்ளாட்டம்(போங்கு)

பொறைக்கு
பிறகு

பொழிதிரிக்கும்
நாள் முழுவதும்

பொழுதன்னைக்கும்
நாள் முழுவதும்


மகடாள்
அறிவிலி

மதனம்
உடல் மந்தமான நிலை

மறிச்சை
வரப்பு

மல்லாட்டை
வேர்க்கடலை

முக்கூட்டு
முச்சந்தி

முள்வேலி மரம்
சீமைக் கருவேலமரம்

மூடாக்கு
மூடி

மெத்தை வீடு
மாடி வீடு

மெல்லிமா
மெதுவாக

மைய அரைத்தல்
நன்கு அரைத்தல்(நெவ்வைவிட கொஞ்சம் குறைவு)


ரவிக்கு
இரவுக்கு

ரவோது
மிகச் சிறிய அளவு


விடியாப்பழங்கலம்
எவ்வளவு உதவி செய்தாலும் முன்னேறாதவன்(ஆரம்பநிலையிலேதான் இருப்பான்)

விடியாப்பானை
விடியாப்பழங்கலம்

வீக்காடு
நோய் முற்றிய நிலையில் படுத்த படுக்கையாதல்

வெகாளம்
எதைச் சாப்பிடலாமோ என்று ஏங்குதல், அகோர ஆசை

வெட்டெலும்பன்
சதைப்பற்று இல்லாத மெல்லிய தோலை உடைய எலும்பன்

வெளிக்கி
காலைக்கடன் (மலம்)

வேலிக்காத்தான்
சீமைக் கருவேலமரம்


Submit a நடுநாட்டுச் சொல்

Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading