சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-7

பகுதி ஆறைப் படிக்க இங்கு சொடுகவும்.பழமொழி

  1. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்.

    கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்யவேண்டும் என்று. எனவே வாழ்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேறவேண்டும்.

  2. ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்.

    அதாவது எங்கோ திருமணம் நடப்பதற்கு இங்கு சந்தனம் பூசிக்கொண்டு கொண்டாடுதல். இப்படியும் ஒருசிலர் பகட்டு வாழ்க்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

  3. எறும்பும் தன் கையால் எண் ஜான்.

    நம் கையால் எறும்பை அளந்தால் அது துரும்பு போலதான் இருக்கும். ஆனால் எறும்பு அதன் கையால் தன்னை அளக்கும்போது அது எட்டு ஜான் இருக்கும். அதாவது அவரவர்களுக்கு அவர்கள் பெரிய புத்திசாலிதான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை உண்டு.

  4. வெல்லம் இருக்கும் இடத்தில்தான் ஈ மொய்க்கும்.

    உதாரணமாக ஒரு உணவகத்தில் உணவுகள் மற்ற உணவகத்தைக் காட்டிலும் சுவையாக இருந்தால் அங்குதான் மக்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் சொல்லவேண்டுமென்றால், நாம் என்னதான் சகஜமாக அனைவரிடமும் நட்புணர்வு பாராட்ட நினைத்தாலும், ஒரு சிலரிடம் மட்டும் அனைவரும் நண்பர்களாகப் பழகுவர். ஏனென்றால் அந்த ஒரு சிலரே இனிக்க பேசுவர், மற்றவர்களைக் கவரக்கூடிய நல்ல குணங்களைக் கொண்டிருப்பர்.

  5. குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?

    பலர் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்கள் நல்ல காரியங்களை செய்ய முற்படுவர். ஆனால், அந்த காரியத்திற்கு எதிரான கெட்ட காரியங்களையே செய்து முடிப்பர்.

  6. சோறு கண்ட இடம் சொர்க்கம், கஞ்சி கண்ட இடம் கைலாசம்.

    மனிதன் ஆடி ஓடி சம்பாதிப்பது எதற்காக? எல்லாம் சாப்பாட்டுக்குத்தான். அதனால்தான் இந்த பழமொழியை கூறி வைத்திருக்கிறார்கள்.

  7. கும்பிடுவது பசுமாட்டை, குருமா வைப்பது அதே பசுமாட்டை.

    மனிதர்கள் கடவுளை தங்களுக்கு வேண்டுமென்றால் கும்பிட்டுக்கொள்வார்கள். அதே கடவுளின் பெயர் வைத்து இனம் பிரித்து தங்களுக்குள் அடித்துக்கொள்வார்கள். அவரை வைத்து அனைவருக்கும் அறிவுரை கூறுவார்கள். ஆனால், யாராவது பணம் கொடுத்தால் அந்த கடவுளையே கொல்லவும் தயங்கமாட்டார்கள்.

  8. கடப்பாரைய முழிங்கிட்டு கஷாயம் குடிச்ச கதை.

    சிலர் பெரிய பெரிய பாவங்களை செய்திருப்பார்கள். அதற்கெல்லாம் பரிகாரமாக பிறருக்கு உதவி, தானம் மற்றும் தர்மங்கள் செய்வார். இதனால் அவர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நம்புவார்கள். அது எப்படியென்றால், கடப்பாரையை முழிங்கிட்டு கஷாயம் குடிக்கும் கதை போல்தான்.

  9. வெண்கல பூட்ட உடச்சி விளக்கமாத்த திரிடியத போல்.

    சில செயல்களை மிகக் குறைந்த முயற்சியில் செய்யலாம் என்றால், அதை அந்த எளிய வழியில் செய்வதுதான் புத்திசாலித்தனம். செய்யக் கூடிய செயலால் வரும் அனுகூலத்தைவிட நம் முயற்சி அதிகம் என்றால் அந்த செயலை செய்யாமல் இருப்பதே நல்லது.

  10. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.

    சிலர் தாங்கள் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பின் பொறியாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அதன்பின் மாவட்ட ஆட்சியாராக வந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள். இப்படியாக எதைப் பார்த்தாலும் ஆசைப்படுபவர்கள் ஒன்றைக் கூட ஒழுங்காக செய்யமாட்டார்கள்.

  11. கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது.

    ஒரு சிலர் இருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து ஊதாரித்தனமாக நிறைய பணம் செலவு செய்வார்கள். ஆனால், தன் உறவினர்களுக்கு ஒரு பத்து ரூபாய்க்கு செலவு செய்ய யோசிப்பார்கள். மேலும் கணக்கு எழுதும்போது ஐந்து பத்து துண்டு விழுந்தால் யாரோ திருடியிருக்கிறார்கள் என்று ஆராய்வார்கள். தாங்கள் சம்பாதித்தது வீணாகிறேதே என்று புலம்புவார்கள். ஆனால், தாங்கள் செய்யும் ஊதாரிச் செலவைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்.

  12. அய்யாச் சாமிக்கு கல்யாணமாம்
    அவரவர் வீட்டிலே சாப்பாடாம்

    ஏழைகள் எப்படி ஒரு விழாவை கொண்டாட முடியும்? ஒரு திருமணம் என்றால் மற்றவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு அளித்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும். ஆனால், அதற்கான வசதி இல்லையே! எனவே அனைவரும் தங்கள் வீடுகளில் அவர்களாகவே சமைத்து சாப்பிட்டுவிட்டு அந்த ஏழைகளை வாழ்த்தவேண்டியதுதான்!.

  13. அறிவாளிக்கு ஆயிரம் கண்; முட்டாளுக்கு ஒரே கண்.

    அறிவாளிகள் எதைச் செய்தாலும் அதனால் வரும் பிரச்சினைகள் நன்மைகள் அனைத்தையும் ஆராய்வர். அந்த செயலை முடிக்க முடியாமல் போனால் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கண்டுபிடித்து முடிப்பர். ஆனால், இந்த முட்டாள்கள் முடியவில்லை என்று உட்கார்ந்துவிடுவார்கள்.

  14. ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் வரக்கூடாது.

    கோபம் ஒரு கொடிய நோய். கோபத்தால் ஒருவன் தன் நண்பர்களை இழக்கிறான். உறவினர்களின் நெருக்கத்தை இழக்கிறான். ஆதலால், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு கோபத்தைக் குறைக்கவேண்டும்.

  15. அண்டையில் காவேரி, முழுகமாட்டாதவ மூதேவி.

    பக்கத்திலேயே காவேரி இருந்தாலும் குளிக்காமல் அசுத்தமாக இருப்பவள் மூதேவிதானே. சுத்த பத்தம் முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

 

தொடரும்….

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
4 Comments
Inline Feedbacks
View all comments
Jayadev Das
ஆகஸ்ட் 3, 2013 6:55 மணி

குருமா\இந்த வார்த்தையெல்லாம் பழமொழியில் சேருமா..#டவுட்டு.

முனைவர் இரா.குணசீலன்
ஆகஸ்ட் 4, 2013 2:15 காலை

தேவையான பதிவு.மிகவும் நன்று. தொடருங்கள்.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.