குழந்தைகளுக்கு உண்மையை கூறுங்கள்

childrenசிறு குழந்தைகள் நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது வாயை அடைக்க நாம் ஏதேனும் பொய் கூறுவதுண்டு. குறிப்பாக தாத்தா மற்றும் பாட்டி. கதை சொல்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஒன்று கூறி குழந்தைகளுக்கு உண்மை விஷயத்தை மறைக்கிறோம். எனக்குக் கூட இப்படி நடந்துள்ளது.

எனக்கு நாலு ஐந்து வயது இருக்கும்போது, ஒரு நாள் வீட்டில் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பலத்த மழை பெய்தது.

“பாட்டி! பாட்டி! மழை எப்படி பெய்யுது?” நான் கேட்டேன்.

“அது ஒண்ணும் இல்லச் செல்லம். கடவுள் மேல தான இருக்கிறாரு?அவரு அழுவுராரு. அவர் கண்ணீர்தான் மழையா பெய்யுது.” பாட்டி கூறினார்.

“ஏன் பாட்டி? அழராரு?”.

“மனுஷங்க பாவம் பண்ணினா அழுவாறு. அதனால நீ பெரியவங்க பேச்ச கேட்டு நடந்து பாவம் பண்ணாம இருக்கணும். சரியா?”.

“சரி பாட்டி.”

நான் அவர் கூறிய அனைத்தையும் நம்பிவிட்டேன். எப்போது மழை பெய்தாலும் கடவுள் அழுகிறார் என்றுதான் நினைத்துக் கொள்வேன். “கடவுளே! அழாத! நான் இனிமே அப்பா அம்மா பேச்ச கேட்டு நடக்கிறேன். என்ன மன்னிச்சிடு!” என்று மன்னிப்பு வேறு கேட்டுக் கொள்வேன்.

நண்பர்களிடமும் கூட இந்த கூற்றை கூறி வந்தேன். அவர்களும் நம்பிவிடுவார்கள். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

‘மழை எப்படி பெய்கிறது?’ என்பதுதான் அது.

“நீர் நிலைகளில் இருந்து சூரிய ஒளியினால் நீர் ஆவியாகி பின் அது மேகமாகிறது. மேகம் காற்றினால் குளிர்ந்து மழையாக பெய்கிறது.”

இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. ஆசிரியரிடம் என் பாட்டி கூறியது பற்றி கேட்டேன். அப்போதுதான் பாட்டி எனக்கு கூறியது கதை என்று தெரிய வந்தது.

அவர் கூறியதன் நோக்கம் என்னவோ நல்லதற்காகத்தான். பெரியவர்களுக்கு கீழ்ப்படியவேண்டும் என்ற கருத்திற்காகத்தான். ஆனால் அதன் விளைவு, எனது நண்பர்கள் எனக்கு வைத்த பட்டப் பெயர் “புளுகன்”(எப்போதும் பொய் பேசுபவன்). ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளி செல்லும் வரை என்னை ஓட்டித் தள்ளிவிட்டனர்.

நான் இப்பொழுது என்ன சொல்கிறேன் என்றால், குழந்தைகள் கேள்விகளை கேட்க்கத்தான் செய்வார்கள். அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறுவது பெரியவர்களின் கடமை. அதுவும் அது உண்மையான பதிலாக இருக்கவேண்டும். வேறு சிலர் தங்கள் குழந்தைகள் நச்சரிப்பதாக எண்ணி அவர்களது வாயை மூட பயம்புறுத்துகிறார்கள். உதாரணத்திற்கு

“இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருந்த ஒன்ன அந்த பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்திடுவேன்”.

இப்படியெல்லாம் செய்வதால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கைதான் குறையும்.

குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க உதவுமாறு பதில் கூறுங்கள். அவர்களது தெரிந்துகொள்ள விழையும் ஆர்வத்தை தடுக்குமாறு பதில் கூறாதீர்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். குழந்தைதானே! அதற்கு என்ன தெரியப்போகிறது! என்று ஏதோ ஒரு கதையை அடித்து விடாதீர்கள்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஆகஸ்ட் 19, 2012 2:19 காலை

நல்ல பல கருத்துக்கள்… தொடருங்கள்…

வாழ்த்துக்கள்… நன்றி…

s suresh
ஆகஸ்ட் 19, 2012 12:02 மணி

சிறப்பான கருத்து! குழந்தைகள் புத்திசாலிகளாக மாற நாம் உண்மையை கற்றுக் கொடுப்போம்! நன்றி!

இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.