நான் தானோ! நான் தானோ! நாவலூர் ஏரி கர தானோ! ஏந்தானோ! ஏந்தானோ! என் தலயில மயிர் இல்லையே!

mimeநாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வாள்.

மண்ணாங்கட்டி ஒரு மிகப் பெரிய சோம்பேறி. ஆடுகள் மேய்த்தாலும் அவன் அந்த ஏரி கரையோரமாக தூங்கிக் கொண்டுதான் இருப்பான். ஆடுகள் பல இடங்களில் மேய்ந்து மாலையில் அவன் அருகில் வந்து கத்தும். அவனும் தூக்கம் கலைந்து எழுந்து ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீடு திரும்புவான். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் அவனை எழுப்புவது மிகக் கடினம்.

அந்த ஊரில் உள்ள அனைவரும் நல்லவர்களாக இருந்ததால் அவனது பிழைப்பு தப்பித்தது. ஏனென்றால் அவன் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் யாருமே அவனது ஆடுகளை திருடுவதில்லை.

அவன் எந்த அளவுக்கு சோம்பேறியென்றால், ஐந்து ஆண்டுகளாக அவன் முடி திருத்தமே செய்துகொள்ளவில்லை. அதனால் அவனது தலை முடி மற்றும் தாடி தரை வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவனது மனைவி எவ்வளவோ கூறியும் அவன் முடி திருத்தம் செய்த பாடில்லை. ஏனென்றால் அவனது ஊரில் முடி திருத்துபவர்கள் இல்லை. ஆறு மைல் தொலைவு சென்றால்தான் அங்கு ஒரு முடி திருத்துபவர் இருப்பார்.

அவனது மனைவிக்கோ அவனை பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினாள். வெளியூருக்குச் சென்று ஒரு பரேரியை(முடி திருத்துபவர்) அழைத்து வந்தாள். அவனுக்கு காசு கொடுத்துவிட்டு,

“இதோ பாரு! ஏரி கரையில ஒருத்தன் சாமியார் மாதிரி முடி வச்சிக்கிட்டு தூங்கிக்கிட்டிருப்பான். எப்படியாவது அவன் முடிய மொத்தமா செரச்சிகிட்டு வந்துடு” என்று கூறினாள்.

அவனும் சரி என்று கூறிவிட்டு ஏரிக்கு வந்தான். மண்ணாங்கட்டியை எழுப்பினான். அவன் எழவில்லை.

“காசு வாங்கியதற்கு செய்துவிட்டு செல்வோம்” என்று எண்ணியவன் மண்ணாங்கட்டி தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவனது தலை முடி மற்றும் தாடியை முழுவதும் வழித்துவிட்டு சென்றுவிட்டான்.

மாலையில் ஆடுகள் அவனிடம் திரும்பியதும் அவனுக்கு முழிப்பு வந்து எழுந்தான். எழும்போது கால்வரை தொங்கிக் கொண்டிருந்த அவனது தாடியை காணோம். உடனே தலையைத் தடவி பார்த்தான். அது மொட்டையாக இருந்தது. திடீரென்று முடி காணாமல் போனதால் ஏதோ பிசாசுதான் செய்துவிட்டது என்று பயந்தான். ஏரி தண்ணீரில் அவனது பிம்பத்தைப் பார்த்தான். அவனையே அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.

“நான் தானோ! நான் தானோ!

நாவலூர் ஏரி கர தானோ!

ஏந்தானோ! ஏந்தானோ!

என் தலயில மயிர் இல்லையே!”

என்று புலம்ப ஆரம்பித்தான். புலம்பிக்கொண்டே ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்தான். அவனைப் பார்த்த அவனது மனைவிக்கும் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான் தெரிந்துகொண்டாள்.

மண்ணாங்கட்டி அவனது மனைவியிடமும் புலன்பினான்.

“அடியே! இது நான் தானோ! நான் தானோ!

நாவலூர் ஏரி கர தானோ!

ஏந்தானோ! ஏந்தானோ!

என் தலயில மயிர் இல்லையே!”

அவள் பதிலுக்கு

“இது நீதானே! நீதானே!

நாவலூர் ஏரி கரதானே!

நான் தானே! நான் தானே!

மயிர் செரைக்கச் சொன்னேன்.”

என்று கூறினாள்.

தனது முடி காணாமல் போனதற்கு தன் மனைவிதான் காரணம் என்பதை உணர்ந்தபோதுதான் அவனது பயம் தீர்ந்தது. மேலும் பல மைல் செல்லாமல் மொட்டை அடித்தது எண்ணி கொஞ்சம் சந்தோஷமும் பட்டான். இப்படியாக மிகவும் சோம்பேறியாக அவனது வாழ்க்கையை கழித்தான்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
3 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஆகஸ்ட் 29, 2012 2:52 காலை

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி… தொடர வாழ்த்துக்கள்…

திண்டுக்கல் தனபாலன்
ஆகஸ்ட் 29, 2012 2:54 காலை

சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்… இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்… வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்… பல பேர் விரும்புவதும் இல்லை… நன்றி…

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.