சிற்றுலா (Picnic)

குறிப்பு: இந்தக் கதை உண்மைக் கதையாதலால், உண்மையான ஊர் மற்றும் மக்கள் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். மேலும், இதில் நிறைய கிறிஸ்துவப் பெயர்களும், கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சில முக்கிய கலைச் சொற்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

திருப்பலி – (Mass) பிராத்தனை.

மறைக்கல்வி – மத அறிவை புகட்டுவது.

விவீலியம் – Bible.

Father / குரு / பங்கு தந்தை – கிறிஸ்துவ துறவி.

Brother / (Br.) / அருட் சகோதோரர் – துறவி ஆவதற்கு படித்துக்கொண்டிருப்பவர்.

Sister / Sr. / கன்னியர் – பெண் துறவி.

DM – Daughters of Mary.

மடம் – (Convent) கன்னியர்கள் தங்கும் இடம்.

Hymns – பக்திப் பாடல்கள்.

டேக்சா – பெரிய சமையல் பாத்திரம்.

 

40 வருடங்களுக்கு முன்பு இளையாங்கண்ணி கிராமத்தில் ஒருநாள்,

Church-ல் மாணவர்கள் குழுமியிருந்தனர். அன்று ஞாயிறு. திருப்பலி முடிந்து சில நிமிடங்களே ஆகியிருந்தது. பங்குத்தந்தை K.P.Kurian ஒலிப்பெருக்கியில் அனைத்து மாணவ மாணவிகளையும் பார்க்க விரும்புவதாக கூறியதால்தான் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். குருவானவர் பேச ஆரம்பித்தார். மாணவர்கள் மனதில் பெருமிதத்துடன் கூடிய மகிழ்ச்சி.

“நீங்கள் எல்லோரும் இந்த கோடை விடுமுறையில் தினமும் தவறாமல் மறைக்கல்வி பயில வந்தீர்கள். விவீலியக் கண்காட்சியை மிகச்சிறப்பாகச் செய்து முடித்தீர்கள். அனைவருக்கும் எனது பாராட்டுகள். இன்னும் இரண்டு நாளில் விடுதிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பவிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. எல்லாரும் picnic போகப்போகிறோம்.” என்றதுதான் தாமதம், கைதட்டும் சத்தம் ஒலித்தது (ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்).

குரு தொடர்ந்தார். “Picnic எங்கு போகலாம்? சேலூற்றைப் பார்க்கவா? ரயண்டாபுரம் ஏரியை பார்க்கவா?”

ஆபிரகாம் எழுந்தான். எல்லோரும் அவனையே பார்த்தனர். “செஞ்சிக்கோட்டைக்கு செல்லலாமே?” என்றான்.

குரு – கால அவகாசம் இல்லை என்றார். அவர்கள் விவாதித்த வகையில் cheap & best ஆக 5 km தொலைவில் நாவகொல்லையை அடுத்த காட்டில் இருந்த சேலூத்து என்ற சிறிய நீர் வீழ்ச்சியை போய் பார்பதென முடிவாயிற்று.

அடுத்த நாள் காலை 5 ½ மணிக்கு அனைவரும் ஒன்று கூட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. செலவை church ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சமையல் பாத்திரங்களை மடத்திலிருந்து எடுத்துக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர்.

அன்று இரவு சந்தோஷமேரி க்கு தூக்கம் வரவில்லை. ஏதோ ஒருவித இனம்புரியாத உணர்வில் அடிக்கடி விழித்தெழுந்தாள். இதை கவனித்த அவள் அம்மா “நிம்மதியாக தூங்கு. 4 மணிக்கு எழுப்பி விடுகிறேன்” என்றார். அதனால் ஏற்பட்ட மன அமைதியால் கண் அயர்ந்தாள்.

அவள் அம்மா எழுப்பினபோதுதான் 4 மணி என்பதை உணர்ந்து தயாராகி, கிளம்பி, அவள் வீட்டிலிருந்து 1 ½ km நடந்து church ஐ அடைந்தாள்.

குரு சொன்னதைப்போன்று அனைவரும் சரியான நேரத்திற்கு வந்தனர். சரியாக 6 மணிக்கு சிறு ஜெபத்துடன் பயணம் ஆரம்பித்தது. ஜேம்ஸ் இடம் bun பாக்கெட்டுகள் நிறைந்த அட்டைப் பெட்டி கொடுக்கப்பட்டது. அதை தலை மீது வைத்துக்கொண்டான். 40 வருடங்களுக்கு முன்பு பணக்காரர்கள்தான் சைக்கிள் வைத்திருப்பார்கள். எனவேதான் அவரவர்கள் பொருட்களை தலைகளிலும், கைகளிலும் தூக்கினர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 50. அனைவரும் 9 முதல் 11 ம் வகுப்பு படிப்பவர்கள்.

பைகளில் இருந்த அரிசி, ரவைமாவு மற்றும் தேவையான சமையல் பொருள்களை பெண்கள் கையிலும், கனமான பாத்திரங்களை ஆண்கள் தலையிலும் தூக்கிச் சென்றது, பார்ப்பவருக்கு வினோத உணர்வை உண்டாக்கியது. Brother ஜோதி முன்னே சென்றார். அவருக்கு guide ஆக ஆபிரகாம் சென்றான். ஏனெனில் அவன்தான் நாவகொல்லையில் இருக்கும் தனது அத்தை வீட்டுக்கு அடிக்கடி செல்வான். அப்படியே அந்தந்த சீசனில் நாவகொல்லையை ஒட்டிய காட்டில் பழுக்கும் பழங்களை பரித்துத்திண்ண மகிழ்ச்சி பெருமிதத்துடன் வழிக் காட்டிக்கொண்டே சென்றான். DM மடத்து கன்னியர்கள் நால்வர் வரிசையாக சென்ற மாணவர்களின் நடுவே watchman வேலை பார்த்தனர். பங்கு தந்தை சலுகையை வழங்கிவிட்டு வரவில்லை என்பதால் இன்னும் சுதந்திரமான கலைப்பயணம் இருக்கும் என்ற நம்பிக்கை.

ஒரு சிறிய கணவாய் வழியாகத்தான் பெருங்குளத்தூர் ஐ அடைய முடியும். அவ்வாறு செல்லும் போது இளையங்கண்ணி மலை கோயிலுக்கு நேராக நின்று மாதா பாடலை பாடி பயணம் சிறப்பாக இருக்கவேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

அவர்கள் நின்ற சாலைக்கும் மலையில் உள்ள மாதாவுக்கும் 1 km தொலைவு இருக்கும்.

பக்திக்கு பாசம் தான் இலக்கு; தூரம் ஒரு பொருட்டல்ல.

தத்துவம் பேசறதா நினைக்காதீங்க. நம்புறவனுக்கு சாணியும் சாமிதான். நம்பாதவனுக்கு கோயிலும் குப்பைமேடுதான்.

அடடே! சொல்ல மறந்துட்டங்க. ஃப்ரான்சிஸ் ஒரு ரேடியோவை தலைமேல் வைத்துக்கொண்டு நேயர் விருப்பப்பாடல்களை எல்லோரும் கேட்க நடந்தான்.

ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தால்’ பாடல் ஒலித்தது.

அதைக்கேட்டு வரிசையில் சென்றவர்களின் சில வாய்கள் பாடலை அசை போட்டன. சிலர் தங்கள் சொந்த கதைகளை பேசி சென்றனர். சிலர், கன்னியர்கள் சொன்ன அனுபவங்களுக்கும் அறிவுரைகளுக்கும் செவிகொடுத்து சென்றனர்.

அந்த கணவாயின் இரு மருங்கிலும் காரப்பழம், புலாப்பழம் மற்றும் உன்னிப்பழம் செடிகளும் இருந்தன. ஆங்காங்கே நின்று பறித்து தின்றனர். சட்டைப்பையிலும் பாவாடைப்பையிலும் போட்டு தின்று கொண்டே சென்றனர்.nature

2km நடந்த பிறகு பெருங்குளத்தூர் கிராமம் வந்தது. அங்கே ஒரு கிணற்றில் கவலை இறைத்து கொண்டிருந்தார்கள். அனைவரும் அங்கிருந்த மரங்களின் கீழே அமர்ந்தனர். அட்டை பெட்டியில் இருந்த bun பாக்கெட்டுகள் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டது. எல்லாரும் சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தினர். 1/2 மணி நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். கன்னியர்களில் ஆலிஸ் என்பவர் “வாருங்கள் hymns பாடுவோம், பாடிக்கொண்டே நடப்போம்.” என்றார். எல்லோரும் ஆமோதித்து ஒவ்வொரு பாடலாக பாடிக்கொண்டே சென்றனர்.

பெருங்குளத்தூர் அடுத்துள்ள குயிலம் கிராமத்து மக்கள் வீட்டிற்கு வெளியில் நின்று மாணவர்கள் செல்லும் அழகை ரசித்தனர்.

ஒரு வழியாக அனைவரும் நாவகொல்லை காட்டை அடைந்தனர். இப்பொழுது முன்னால் சென்றவர்கள் நின்றார்கள். “இதுவரை தாராளமாக நடந்து வந்தோம்; இனி ஒத்தையடி பாதையில்தான் நடக்கணும்; இருபுறமும் முட்புதர்கள்; பார்த்து நடந்து வாருங்கள்.” என அறிவுறுதப்பட்டது.

சரியென்று ஒருவர் பின் ஒருவராக நடந்தனர். பெண்கள் பயப்படுவார்கள் என்று இடையிடையே ஆண்கள், இறுதியாக ஆசிரியர் ஒருவர் என picnic தொடர்ந்தது. இடையிடையே பறந்த பொன்வண்டுகளை சிலர் பிடித்து பைகளில் அடைத்தனர். அதன் பசிக்கு சில வகை இலைகளையும் குறிப்பாக இலந்தை இலைகளை பறித்து வைத்தனர். இருபுறமும் அவர்கள் பார்த்ததை, பின் எடுத்துக் கூற வேண்டியிருக்கும் என்பதால் மிக கவனமாக நடந்தனர். 8.30 மணிக்கு காட்டில் இருந்த அந்த சிறிய நீர்வீழ்ச்சியைக் கண்டனர். அதனருகில் அமர நிழல் காத்த பாறைகளும் நிறைய இருந்தன. தண்ணீரைப்பார்த்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். ஓடிச்சென்று அருந்தினார்கள்.

அச்சமயம் Sr.பிரசன்னா “Boys, எல்லாம் காய்ந்த சுள்ளிகளை பொறுக்கி வாங்க. Girls, சிலர் சென்று குடத்தில் தண்ணீர் பிடியுங்கள். ரெண்டு மூனு பேர் இங்க வாங்க” என்று சொன்னார். கபிரியேல்மேரி, சூசன்னா, பிரான்சிஸ்கா மூவருக்கும் பிரசன்னா sister ஐ மிகவும் பிடிக்கும். எனவே அடுத்த வினாடி அவர் முன் நின்றார்கள்.

“என்ன செய்யனும் சிஸ்டெர்?” என சூசன்னா கேட்டாள்.

“வெங்காயம், தட்டு, கத்தி, பச்சைமிளகாய் எல்லாம் கழுவி வாருங்கள். அரிசி உப்புமா செய்வோம்” என்றார். அப்படியே அவர்களும் செய்தனர். பிரான்சிஸ்கா வெங்காயம் தோலுரித்துத் தர கபிரியேல்மேரி பொடியாக நறுக்கினாள். சிஸ்டர் மிளகாயை நறுக்கினார். சந்தோஷமேரி “சிஸ்டர்” என அழைத்துக்கொண்டே அருகில் வந்தாள்.

சிஸ்டர் நிமிர்ந்த போது காட்டுக்கருவேப்பிலையுடன் எதிரில் நின்றாள். அதைப்பார்த்த Sr.ஆலிஸ், “Well done. காட்டுக்கருவேப்பிலை இன்னும் வாசனையாக இருக்கும்” என்றார். பின் அதனை Sr.பிரசன்னா விடம் கொடுத்தார்.

“Boys களை அழைத்து போய் காய்ந்த சுள்ளிகளை பொறுக்கி வந்துட்டோம். இந்தாங்க சமைக்க விறகு” என்றார், Br.ஜோதி. “பேஷ் நன்னாயிருக்கு. இரண்டு வேளை சமையலுக்கும் போதுமான விறகு”, என Sr.பிரசன்னா சொல்ல “Thanks brother, thanks boys” என்ற பதில் அவர்களுக்கு கிடைத்தது, sister கள் தரப்பிலிருந்து.

ஸ்தனிஸ்தலாஸ், அருள்சாமி ஆகிய இரு பிரதர்களும் “Brother ஜோதி! வாங்க. இந்த சிறிய மலை மீது ஏறி சுற்றி பார்போம்”, என்று கூறி அழைத்துச் சென்றனர்.

“சமைத்து முடிக்க இன்னும் அரை மணியாவது ஆகும், சென்று வாருங்கள்.” என்றனர் பெண்கள்.

“அம்மாங்க சொன்னா பிள்ளைங்க கேக்காம இருப்போமா?” – இது மாணவர்கள் தரப்பு பதில். எல்லோர் முகத்திலும் லேசான புன்னகை.

பாறை மீது சமமான 3 கற்களை வைத்து அடுப்பு மூட்டினார்கள். அங்கிருந்த மரத்து நிழல் இதமான காற்றையும் வீசியது. டேக்சாவை அடுப்பில் வைத்தார்கள். அங்கிருந்த மணிலா எண்ணையை தேவையான அளவு ஊற்றி, பச்சைப் பயிறு, கடுகு, கருவேப்பிள்ளை எல்லாம் போட்டு, வறுத்து தண்ணீர் விட்டார்கள்.

வறுத்த அரிசி ரவையாக்கப்பட்டு ஒரு டின்னில் கொண்டு வந்திருந்தார்கள். அதை ஒருவர் கொட்ட மற்றவர் நீண்ட கரண்டியினால் கிளறினர். இறுதியில் சில கொத்தமல்லித் தழைகளைத் தூவினர். அப்படியே சற்று ஆறவிட்டனர். பின்னர் எடுத்துச்சென்றிருந்த வாழை இளைக்கட்டுகளில் சிலவற்றை கழுவினர். எல்லாம் தயாரானப் பின்பு Sr.பிரசன்னா ஒரு விசில் ஊதினார். எல்லோரும் ஒன்று கூடினர். அனைவரும் பாறைகளில் வட்டமாக அமர்ந்தனர். அரிசி உப்புமா பரிமாறப்பட்டது. அனைவரும் ரசித்து சாப்பிட்டனர். இவர்கள் சாப்பிடும் போது இரண்டு நாள் முன்பு இவர்களால் நடத்தப்பட்ட “விதி நாடகத்தைப்பற்றி அலசினார்கள்.

அந்தக்கதையின் முக்கிய சாரம்சம்: அக்கா, தங்கை என இருவர். அக்கா மக்கு; அவ்வளவு அழகல்ல. தங்கை, பார்ப்போர் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு அழகு; நிறைய திறமைகள்; அவளைப் பார்ப்பவர் பிரமிப்பர்; பெண்களே பொறாமைப்படும் அழகு நடை. பெற்றோர் அக்காவை சதா திட்டுவார்கள்; தங்கைக்குச் செல்லம் காட்டுவார்கள். பின் நாடகத்தின் பிற்பாதியில், அக்கா உயர் பதவியில் இருப்பாள், தங்கை கஷ்டப்படுவாள். இதெல்லாம் நாடகத்தில் ரோசி மற்றும் கிரேஸி இருவரும் நடித்தது.

அனைவரும் மகிழ்ந்து சாப்பிட்டு முடித்த பிறகு தாராள மனது கொண்ட பெண்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு சமைத்த பாத்திரங்களை கழுவி வைத்தனர். உதவி பங்குதந்தை Fr.சவரி அனைவரையும் அமரச்சொன்னார். மாணவர்கள் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. சவரி தொடர்ந்தார்.

“பிள்ளைகளே! கடவுளால் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளை தவறில்லாமல் எழுதுபவர்களுக்கு பரிசு தரப்படும். நான் சொன்னபின்பு ஆரம்பிக்கலாம்.” எனக்கூறி தன் பையிலிருந்து வெள்ளைத்தாள்களையும் பேனாக்களையும் அனைவருக்கும் தந்தார். காலை 9.30 மணியளவில் போட்டி ஆரம்பமானது. கொடுக்கப்பட்ட நேரம் 15 நிமிடம். அந்தோணிசாமியை தவிர அனைவரும் நன்றாக எழுதியிருந்தனர். எனவே ஃபாதர் அவனை அழைத்து விசாரித்தார்.

“என்ன, அந்தோணிசாமி! இந்த 10 கட்டளைகளையும் எப்படி சுருக்கமாக இரண்டு கட்டளைகளாகக் கூறலாம்?” என்று கேட்டார். அவன் அமைதியாக நின்றான். அதனால் ஃபாதர் அனைவருக்கும் புரியும்படி கூறினார்.

1. அனைத்திற்கும் மேலாக கடவுளை நேசிப்பது.

2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

இந்த ரெண்டு கட்டளைகளையும் அன்று வந்த யாரும் மறக்கமாட்டார்கள்.

தொடர்ந்தார் ஃபாதர்.

“இரண்டு முக்கியக் கருத்துக்களை எல்லோரும் ஞாபகம் வச்சிக்கோங்க. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. எனவே ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு முதலிடம் கொடுங்கள். இரண்டாவதாக அடுத்தவங்க என்ன உங்களுக்கு செய்யணும்னு எதிர்ப்பார்கறீங்களோ அதை முதலில் நீங்க செய்யணும்.

Count your life by friends and not by years.

Problems come not to bitter us but to better us.

எனவே மகிழ்ச்சியாய் இருக்க பழகிக்கோங்க.

ஏனெனில், Happiness is the greatest gift that one can ever posses.” என்றார். அந்த முக்கிய கருத்துக்களையும் மாணவர்கள் மனதில் குறித்து வைத்துக்கொண்டனர்.

பின்னர் Sr.பிரிட்டோ ஒரு சின்ன பெட்டி எடுத்துத்தந்தார். அதில் துண்டு சீட்டுச்சுருள்கள் இருந்தன. ஒவ்வொருவராக வந்து ஒன்றினை எடுத்து அதில் உள்ளபடி நடித்துக்காட்ட வேண்டும் எனக் கூறப்பட்டது.

பிரான்சிஸ்கா முதல் சீட்டை எடுத்தாள்; கூட்டத்தை சுற்றி மூன்று முறை நொண்டி அடிக்கவேண்டியதாயிற்று.

ரெண்டாவது ஆபிரகாம் எடுத்தான். ‘நண்பனுக்கு முத்தம் தர வேண்டும்’ என எழுதியிருந்தது. சார்லஸ் தான் அந்த முத்தத்திற்கு சொந்தக்காரன்.

ஜாக்குளின் எடுத்த சீட்டு அவளுக்கு நல்ல உடற்பயிற்சியை தந்தது (25 தோப்புக்கரணம்).

அடுத்தது ரஞ்சிதமேரி. அவள் கையை உதறிக் கொண்டு நாணி கோணி நின்றாள். Br.ஜோதி அதை வாங்கி உரக்கப் படித்தார். ‘அழுகிற குழந்தையை தூங்க வைக்க என்ன செய்வாய்?’ என்பதுதான் கேள்வி. எல்லோரும் அவளை என்ன செய்யப் போகிறாளோ என உற்றுப்பார்த்தனர். அவள் தோழி புனிதா ஓடிவந்து அவள் காதில் கிசுகிசுத்தாள். உடனே boys இடம் இருந்து, “யாரும் idea சொல்லித் தரக்கூடாது” என்ற கூச்சல் வந்தது. ஒரு கணம் யோசித்த ரஞ்சிதமேரி, கீழே இருந்த கல்லை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு “டல்ல… டல்ல… டல்லைக்கு டல்ல. தூங்கு ராசா தூங்கு.” என கல்லைத்தட்டினாள். அனைவரும் ஆர்பரித்துக் கைத்தட்டினர்.

அடுத்ததாக லூர்து வந்தான். சீட்டை எடுத்து மனதுக்குள் படித்துவிட்டு பைக்குள் போட்டான்-பேசினான். “டேய்! நாற்று நட்டாயா? களைப் பறித்தாயா? ……. மாமனா மச்சானா?. மானங்கெட்டவனே!” என்று வசனத்தைத் தொடர்வதற்குள், “கட்டபொம்மன் வழி வந்தவரே! பிரமாதம் உங்கள் நடிப்பு.” என்றனர் boys.

ஆடம்பரக் கைத்தட்டலுக்குப் பின் எழுந்து சீட்டு எடுத்தான் சின்னப்பன். ‘பைத்திய காரணை போல் நடி’ என்றது சீட்டு. அவனும் நடிக்க தயாரானான். Fr.சவரி அவனை தடுத்து “எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் எந்த செயலும் மாணவர்களுக்குத் தரப்படக்கூடாது.” என்று கூறி பாடல் ஒன்று பாடச்சொன்னார். அவனும் ‘ஓடி விளையாடு பாப்பா!” பாடலைப் பாடினான். இப்படியாக விளையாட்டு தொடர்ந்தது.

“மணி, 11.30 ஆகிவிட்டது. வாருங்கள் சமைப்போம்” என்றார் Sr.பிரசன்னா. உடனடியாக எல்லோருடைய கூட்டு முயற்சியால் காய்கறி பிரியாணி தயாரானது. அவ்வமயம் Br.ஜோதி சில பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பாறைகள் மீது ஏறி நடந்தார். ஏதோ சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறார்கள் என்று யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. மதிய உணவு உண்ணும் நேரத்தில் விசில் சத்ததைக் கேட்டு Br.ஜோதி யும் அவரது பட்டாளமும் வந்து சேர்ந்தது.

சாப்பிடப் பின்பு அரை மணிநேரம் ஒய்யு தரப்பட்டது. பின்பு, “இப்போது Treasure Hunt விளையாடப்போகிறோம். எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும்.” என்றார் Br.ஜோதி. எல்லோரும் ஆமோதித்தனர். அவர்களுக்கு முதல் துப்பு தரப்பட்டது. “அருகில் உள்ள தடாகத்தில் உள்ளது.” என்பதுதான் அது.

அனைவரும் ஓடிச்சென்று அந்த மலையருவிப் பள்ளத்தில் தேடினர். அங்கிருந்த புற்களுக்கு இடையில் இருந்த சிறிய துண்டு சீட்டைக் கண்டுபிடித்தனர். அந்த சீட்டில் இருந்தது பகிரங்கமாகப் படிக்கப்பட்டது.

“மனிதன் ஆடி அடங்கும் தூரத்தை வலப்பக்கம் கடக்கவும்.”

அதைப் படித்த அவர்கள் யோசித்தனர். “ஆடி அடங்கும் தூரம் என்றால் என்ன?” என்று சிலர் தலையை சொரிய ஆரம்பித்தனர். Sr.ஆலிஸ் அந்த புதிருக்கு விடை ஆறடி என்பதைச் சொன்னார். எனவே அவர்கள் வலது புறமாக ஆறடி தூரம் சென்றனர். போட்டிப்போட்டுக்கொண்டு தேடியதில் ஒரு சிறு கல்லின் அடியில் கிடைத்தது அந்த சீட்டு.

சீட்டில் இருந்த தகவல்-“அடுத்த துப்பு மேற்கே உள்ள திருடியிடம் உள்ளது.”

“டேய்! அந்த அலங்காரமேரி தாண்டா திருடி. அவகிட்டதான் இருக்கும், பாருங்கடா!” என்று சொன்னான் அவளின் முறைப் பையன் சூசை. எல்லோரும் கொள்ளென சிரித்தார்கள். அவள் பதிலுக்கு “டேய்! முட்டக் கண்ணா! ஒங்க அம்மாகிட்டயே சொல்றேன் இரு.” என்றாள்.

“சரி, கிண்டல் செய்வதை விட்டுவிட்டு உருபடியாக யோசிப்போம்.” என்று ஒரே சலசலப்பு.

அப்போது நம்பிக்கைமேரி, “ஐ! நான் கண்டுபிடிச்சிட்டேன். கள்ளிமரம்.” என்றாள். அனைவரும் அதை சரிதான் என்று ஆமோதித்தனர். எனவே, மேற்கு புறமாக இருந்த கள்ளிச்செடியை அடைய 10 அடி உயர மலைச் சரிவில் ஏறினர். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, எங்கு பார்த்தாலும் குட்டைக் குட்டையான கள்ளிமரங்கள். அனைவரும் அவரவர் உயரத்திற்கேற்ப மரங்களில் தேடினர். கடைசியில் அதனை ஆபிரகாம் கண்டுபிடித்தான்-படித்தான் உரத்த குரலில்.

“கோடிட்ட இடத்தை நிரப்புக…. வீராதி வீரன்; _____________.”

“சூராதி சூரன்” என்ற chorus பதில் உடனே வந்தது.

“சூராதி சூரன் என்றால்….? இங்க என்ன இருக்கு…? சூரைச் செடியாகத்தான் இருக்கும்.” என்றான் திலீப்.

உடனே, ஆபிரகாம் அந்த கள்ளி மரத்தின் அருகிலேயே இருந்த சூரைச் செடியிலிருந்து அடுத்தை துப்பை எடுத்தான்.

அடுத்த துப்பு- “தொங்கும் வீடு; அதனுள் நீ தேடு.”

எல்லாரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்ததில் அடுத்த துப்பு தூக்கணாங்க் குருவிக்கூட்டில் கிடைக்கலாம் என்பதால் முண்டி அடித்துக்கொண்டு பாறைமீது ஏறினர். அப்போது Br.ஜோதி, “சீக்கிரம் தேடுங்க. ஒன்பது சீட்டுக் கண்டுபிடிச்சாதான் பத்தாவது புதயலா கிடைக்கும்.” என்று கூறி தற்செயலாக திரும்பும்போதுதான் அந்த மூவரை கவனித்தார். தடாகத்தில் இருந்த பெரிய கல்லின் மீது அமர்ந்து கால் ஆட்டிக்கொண்டு கதைப் பேசிக்கொண்டிருந்தனர், சந்தோஷமேரி, அன்னம்மா மற்றும் நான்சி.

“சோம்பேறிகளா! எல்லாரும் கண்டிப்பா விளையாட்டுல கலந்துக்கணும். மேல ஏறி சீக்கிரமா வாங்க.” என்று அவர்களை அதட்டினார். அவர் கட்டளைக்கு மறுப்பு சொல்ல மனம் இல்லாத பெண்கள், வேகமாக மேலே ஏறினர். சந்தோஷமேரி மட்டும் வேகமாக வலப்புறம் சென்றாள். “இன்னும் நாலு துப்பு தேட அரை மணி நேரத்திற்கு மேலே ஆகும்.” என எண்ணிக்கொண்டே அங்கிருந்த ஒரு பறை மீது அமர்ந்தாள்.

துப்பு தேடிக்கொண்டிருந்தவர்கள் அங்கு உள்ள துறிஞ்சமரத்தில் இருந்த தூக்கணாங்க் குருவிக்கூட்டைக் கவனித்துவிட்டனர். ஏறுவதற்கு முட்டி மோதிக்கொண்டனர்.

அமர்ந்திருந்த சந்தோஷமேரிக்கு அருகில் வந்த சம்மனசுமேரி, “நமக்கெல்லாம் எங்க கிடைக்கப்போகுது. நம்ம கொஞ்சம் rest எடுப்போம். ஐஞ்சாங்கல் விளையாடலாமா?” என்று கேட்டாள். அதற்குள் அங்கு வந்த சலேத்மேரிகாரப்பழம் பறிக்கலாம், வாங்கடி.” என்று அவர்களை அழைத்தாள்.

சந்தோஷமேரி, “நீ, போ. நாங்க விளையாடப்போறோம்.” என்று கூறி கல் பொறுக்க கீழே குனிந்தாள். அப்போது பாறை இடுக்கில் சிவப்பாகத் தெரிவதைப் பார்த்தாள். “இதுதான் புதையலாக இருக்குமோ” என லேசான எண்ணம் தோன்ற அதைப் பிடித்து இழுத்தபோது புதையல் பொட்டலம் அவள் கைக்கு வந்தது. உடனே மகிழ்ச்சியில் கத்தினாள். எல்லோரும் துப்பு தேடுவதை நிறுத்திவிட்டு அவளிடம் ஓடி வந்தனர். அந்தப் புதையலை எடுத்து அனைவரிடமும் காட்டினாள். அனைவர் முகத்திலும் ஆச்சர்யம். அங்கு ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.

“என்ன புதையல் எனப் பிரித்துக்காட்டு” என்றக் கூச்சல். ஆர்வமுடன் பிரித்தாள். சாக்லேட் பொட்டலமும், ஒரு bible-ம், ஒரு துண்டு சீட்டும் இருந்தது. அந்த சீட்டை ராணி வாங்கி படித்தாள்.

“புதையல் கண்டு பிடித்ததற்கு அனைவரின் பாராட்டுகள். Bible தங்களுக்குக் கிடைத்த புதையல். சாக்லேட்டை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.”

சாக்லேட்டை அனைவரும் உண்டனர். அத்தோடு காரமும் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக உண்டபின் சிறிது நேரம் உரையாடிவிட்டு, பின்னர் கடவுளுக்கு நன்றி கூறி பிராத்தனை செய்தனர். பின் வீடு திரும்பலாம் என எத்தனித்தபோது, எங்கிருந்தோ வந்த மழை அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தது. ஆளுக்கொரு மரத்தடியிலும் பாறைகளிலும் பதுங்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த திடீர் மழை விடாப்பிடியாய் அனைவரையும் நனைத்துவிட்டு மறைந்தது.

பின்னர் ஆளுக்கொரு பொருளை எடுத்துக்கொண்டு பாட்டுப்பாடிக்கொண்டே ஒற்றையடிப்பாதையில் வந்தனர். மீண்டும் இளையங்கண்ணி கோயிலுக்கு வந்தபோது மாலை 6 மணி. மாதாவுக்கு ஒரு நன்றிப் பாட்டுடன் அவரவர் வீடு திரும்பினர்.

இந்த நிகழ்வை சந்தோஷமேரி யின் மனம் அசைபோட்டது. “எல்லோரும் முண்டி அடித்துக்கொண்டு புதையலை தேடினார்கள். ஒரு முயற்சியும் செய்யாத எனக்கு ஏன் கிடைத்தது?…. இதுதான் அதிர்ஷ்டம்.” என்றது அவள் மனம்.

வருடங்கள் உருண்டோடிவிட்டன. மேரி இப்போது 53 வயது அம்மையாராகிவிட்டார். அவர் சொன்னது – “எங்கள் set ல் இருந்த அனைவர் வாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. அன்று நடத்திய நாடகம், “விதி” உண்மையில் விதியாகத்தான் இருந்தது .நாடகத்தில் நடித்த அதே நிலைக்கு தள்ளப்பட்டனர், ரோசியும் கிரேஸியும்.”

முற்றும்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
மார்ச் 13, 2014 8:23 காலை

அருமையான புதையல் இனிப்புடன்… சுவாரஸ்யம் கடைசி வரை…!

வெங்கட் நாகராஜ்
மார்ச் 14, 2014 2:02 காலை

சுவாரஸ்யம்…..

அடுத்தது என்ன என்ற்ய் யோசிக்க வைத்தது…. பாராட்டுகள்.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.