வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

உங்கள் பொழுதுப்போக்கு என்ன?

சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதும், அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதுமே பொழுதுப்போக்கு என நினைக்கின்றனர். அதுவும் ஒருசிலர் தங்கள் பொழுதுப்போக்கு shopping என்கின்றனர்; அதாவது பொழுதுபோவதற்காக தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி பணத்தை விரையம் செய்வது.

வயதானவர்கள் தங்கள் வாழ்கையில் நடந்ததை அசைபோடுவார்கள். சிலர் பழைய நாணயங்களை சேகரிப்பார்கள்; சிலர் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள். சிலர் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவார்கள். இப்படியாக நீண்ட பட்டியலில் உள்ள பல பொழுதுபோக்குகளில் ஒன்றுதான் தோட்டத்தைப் பராமரிப்பது (gardening). அவற்றைப் பற்றிதான் இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம்.

தோட்டத்தில் வகை வகையான செடிகளை நட்டு அவற்றைப் பராமரிப்பது ஒரு கலை. விதவிதமான செடிகளை நட்டு அவற்றின் அழகை ரசித்தல், செடிகளின் மேல் வருடிக்கொடுத்து அவைகளுடன் பேசுதல் ஒருசிலருக்கு பொழுதுபோக்காக இருக்கும். சிறுவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் செடிகளையெல்லாம் தோட்டத்தில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்கிறதா என ஆவலோடு பார்ப்பார்கள்.

அப்படித்தான் என் தம்பி ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு அன்னாசி பழத்தின் நுனியிலிருந்த குருத்தை ஒடித்து வீட்டில் நட்டு வைத்தான். அன்றைய நிலவரத்தில் எங்களுக்கு அன்னாசி பழம் எப்படி காய்க்கும் என்றே தெரியாது. அது மலைப்பிரதேசத்தில் மரத்தில் காய்க்கும் என்று நினைத்திருந்தோம். அதனால் என் தம்பியை அதனை நடவேண்டாம் என்று சொன்னோம். இருந்தாலும் அவன் ஆசையைக் கெடுக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டோம். அன்னாசி செடி

இரண்டு வருடம் ஆகியும் ஒன்றும் காய்க்கவில்லை. அதனால் அதனை பிடுங்கி எறிந்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் என் தம்பி அது அழகுக்காவது இருக்கட்டும் என்று விடாப்பிடியாக இருக்கவே விட்டுவிட்டோம். ஒருநாள் அந்த அதிசயம் நடந்தது. செடியின் நடுவில் சிவக்க ஆரம்பித்தது.அன்னாசி செடியில் காய் வருவதற்கான அறிகுறி

பின் சிவந்த மொட்டு வர ஆரம்பித்தது.அன்னாசி மொட்டு

அப்போதுதான் எங்களுக்கு அன்னாசி பற்றி புரிய ஆரம்பித்தது. பின் அந்த மொட்டு பூ ஆனது. பூ காய் ஆனது. இரண்டு மாதத்திற்கு பிறகு வெளிறிய மஞ்சள் நிறம் வந்தபோது அதனைப் பறித்து அரிந்து சாப்பிட்டோம்.

அன்னாசி காய் 1அன்னாசி காய் 2அன்னாசி பழம்

பின் அன்னாசி ருசியில் மயங்கி வீடு முழுவதும் அன்னாசி தோட்டத்தை வைத்துவிட்டோம். இப்போது வருடா வருடம் அதன் பலனை அனுபவிக்கிறோம்.எங்கள் வீட்டு அன்னாசி தோட்டம்

“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”. அன்னாசி வளர்க்க விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்த பதிவை எழுத விரும்புகிறேன். ஒருவேளை ஒருசிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், தெரியாதவர்களுக்கு அன்னாசி வளர்ப்பது ஒரு சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.

எப்படி நம் வீட்டில் அன்னாசி வளர்ப்பது

நீங்கள் அன்னாசி பழம் வாங்கும்போது, முழு பழமாக வாங்குங்கள்.

அதன் நுனியில் இருக்கும் குருத்தை ஒடித்துக்கொள்ளுங்கள்.அன்னாசி செடிக்குருத்து

உங்களுக்கு விருப்பமான இடத்தில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கவும். அவ்வளவுதான், மிக எளிது.

அன்னாசி செடியை வளர்க்க ஒரு சிறிய ஜாடி இருந்தால் கூட போதும். அதை ஜாடியில் நட்டு உங்களுக்குத் தேவையான இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.

முதல் முறை காய்க்க இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டும் (வளர்ச்சியைப் பொறுத்து ஒரு வருடத்தில் கூட பலன் தருகிறது). பிறகு, ஒரு செடியில் வருடத்திற்கு குறைந்தது ஒன்று என்று காய்க்கும்.அன்னாசி செடி காய்களுடன்

வாழை மரத்தைப் போன்று செடி காய்த்துக்கொண்டிருக்கும்போதே அதிலிருந்து இடைக்கன்றுகள் தோன்றும். அவைகள் அடுத்த வருடம் காய்க்கும்.அன்னாசி இடைக்கன்று

அன்னாசி வளர்ப்பது பற்றி சில உபயோகமான தகவல்கள்

எங்கள் வீட்டில் உள்ள அன்னாசி செடிகள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் பிப்ரவரி வரை பூ பூக்கும். பிறகு ஜூன் ஜூலையில் பழம் கிடைக்கும்.

அன்னாசி பழம் வருடம் முழுவதும் சந்தைகளில் கிடைக்கிறது. ஆனால், எங்கள் வீட்டில் வருடத்தில் ஒருமுறைதான் கிடைக்கிறது. வருடம் முழுதும் காய்க்க அன்னாசி செடியை பண்ணையில் இருந்து வாங்கி நடவேண்டுமா என்றுதான் எனக்குத் தெரியவில்லை.

அன்னாசி நிழலில் இருந்தால்தான் நன்றாக வளரும்; முழு நிழலில் அல்ல, அரைகுறை நிழலில். எனவே, வாழை மரங்களுக்கு இடையிலோ அல்லது தென்ன மரத்தின் நிழலிலோ நட்டு வையுங்கள். அப்படியில்லையென்றால் முற்பகல் நிழல் வரும் இடத்திலோ அல்லது பிற்பகல் நிழல் வரும் இடத்திலோ நடவும்.

இரு செடிகளுக்கு இடையில் இரண்டு அடியாவது இடைவெளி விடுங்கள்.

அன்னாசி கிணற்று புறம்பு மண்ணில் வனப்பாக வளரும். எனவே, நிறைய செடிகளை நடவேண்டுமென்று ஆசைப்பட்டால், கிணற்றுப் பாற்மண் அடித்துவிட்டு அதன்மேல் செம்மண் மற்றும் தோட்டமண் தூவிவிட்டு செடிகளை நடவும்.

தண்ணீர் வாரத்துக்கு ஒருமுறை ஊற்றினால் போதும். அன்னாசி பனி ஈரத்தை வைத்தே வளருகிறது. நாங்கள் செடி பிழைக்கும்வரை மட்டுமே தண்ணீர் ஊற்றினோம். அதன்பிறகு மாதக்கணக்கில் தண்ணீர் ஊற்றவேயில்லை. அப்போ அப்போ வரும் மழையை வைத்தே எங்களுக்கு பலன் தந்துகொண்டிருக்கிறது. ரொம்ப வறண்டு இருந்தால் மட்டும் தண்ணீர் ஊற்றுவோம்.

அன்னாசி பிஞ்சு சிவப்பு நிறத்தில் இருக்கும்; முற்றும்போது பச்சை, பழுக்கும்போது வெளிறிய மஞ்சள் நிறம். (எங்கள் வீட்டில் உள்ள ரகம் இப்படியிருக்கிறது.)

அன்னாசியை அறுவடை செய்தபிறகு செடிகளிலுள்ள தேவையற்ற முற்றிய கீற்று இலைகளை வெட்டிவிட்டால் புதுச் செடிகள் நன்றாக வளர்கின்றன.

பல அன்னாசி பழங்களில் பக்கவாட்டில் கூட செடிக் குருத்துக்கள் வருகின்றன. அவைகளைக் கூட நட்டால் காய்க்கின்றன.அன்னாசி பக்கவாட்டுக் குருத்துக்கள்

அவ்வளவுதான். அன்னாசி பழம் வளர்க்க என்னால் இயன்ற .குறிப்புகளைக் கொடுத்துவிட்டேன். முயன்று பாருங்கள். எங்கள் ஊருக்கே அன்னாசி செடியை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான். எங்களைப் பார்த்து தற்போது நிறையபேர் தங்கள் வீடுகளிலும் அன்னாசி வளர்க்கின்றனர். அன்னாசி வளர்க்கும் முறையை இணையத்தின் மூலம் தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் இந்த இடுகையை இட்டேன். அனைவருக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
3 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்

ஆகா…!

தம்பிக்கும் எனது பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…

yarlpavanan
மே 15, 2015 11:05 காலை

சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

வரதன்மணி பாலமுருகன்
வரதன்மணி பாலமுருகன்
அக்டோபர் 20, 2016 12:16 மணி

உங்களுக்கும், உங்கள் தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.