விதியையும் மதியால் வெல்லலாம்

இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால் சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “ எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள்,சோம்பேறிகள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். புத்திசாலிகளும் உழைப்பாளிகளும் அப்படி கூற மாட்டார்கள்.துணிந்து போராடுவார்கள்.

நடக்கப்போகும் கெடுதலை நம் நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் தடுக்கலாம்.அதற்கு உதாரணமாக பின்வரும் கதையை கூறுகிறேன்.

முன்பொரு காலத்தில் ‘செல்வன்’ என்னும் பெயருடைய ஒருவன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுகொண்டிருந்தான்.அந்த ஊருக்கு செல்லும் வழியில் ஒரு காட்டை கடக்க வேண்டியிருந்தது.வழியில் அவனுக்கு மிகவும் பசித்தது.கொண்டுவந்த சாப்பாடும் தீர்ந்துவிட்டது.என்ன செய்வது என்று தெரியவில்லை.

அப்போது தூரத்தில் ஒரு மாமரம் தென்பட்டது.அதனருகில் சென்றான்.மாமரத்தில் காய் கனிகள் காய்த்து தொங்கின.அதன் கீழே ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.செல்வன் தனது பசியை போக்க மாம்பழம் பறித்து சாப்பிட எண்ணினான்.ஆனால் எட்டவில்லை.எனவே அவன் கல்லை எடுத்து ஒரு பழத்தை குறி வைத்து எறிந்தான்.ஆனால் பழம் விழவில்லை.அந்த கல்தான் மரத்தில் பட்டு மீண்டும் வந்து அந்த முனிவரின் தலையை பதம் பார்த்தது.

வலி தாங்கமுடியாத முனிவர் கத்தினார்.அதனால் அவர் தவம் கலைந்தது.அவர் அவனை கோவத்தோடு நோக்கினார்.அவனோ நடுங்கிப்போய் இருந்தான்.meditation

“அடேய்! துன்மார்க்கா! எனது இருபது வருட தவத்தை கலைத்துவிட்டாயே!”

“மன்னித்துவிடுங்கள் சுவாமி!”

“காரியம் கூடி வரும் நேரத்தில் அனைத்தையும் கெடுத்துவிட்டாயே! உனக்கு மன்னிப்பே கிடையாது.இதோ வாங்கிக்கொள் என் சாபத்தை;இன்னும் ஒரு வருடத்தில் நீ இறப்பாய்.”

சாபத்தை வாங்கிய செல்வன் அதிர்ந்து போனான்.

“சுவாமி! நான் வேண்டுமென்று செய்யவில்லை.மாங்காய் பறித்து என் பசியை ஆற்ற கல்லெறிந்தேன்.அது உங்கள் மீது பட்டுவிட்டது.இதற்கா இவ்வளவு பெரிய சாபம்? என் பிழையை பொறுத்து எனக்கு சாப விமோசனம் தாருங்கள்.”

என்று கெஞ்சினான் கதறினான்.அவனைக் கண்டு முனிவர் மனமிறங்கினார்.

“கொடுத்த சாபம் கொடுத்ததுதான்.நீ இறந்தே தீருவாய்.ஆனால் ஒன்று மட்டும்தான் என்னால் கூற முடியும்.நம்பிக்கையோடு இரு.ஒருவேளை உனக்கு விமோசனம் கிடைக்கலாம்.” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றார்.

அவனோ அந்த இடத்திலேயே அமர்ந்து நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

“எப்படியும் ஒரு வருடத்தில் இறக்கப்போகிறோம்;அதனால் இனிமேலாவது நல்லது செய்வோம்.அப்போதுதான் நமக்கு சொற்கமாவது கிடைக்கும்.” என்ற முடிவுடன் தனது ஊருக்கு சென்றான்.தனது சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு உதவி செய்து வந்தான்.எட்டு மாதங்கள் ஓடின.அவன் சொத்துக்கள் அனைத்தும் கரைந்தன.எனவே அவன் துறவறம் மேற்கொள்ள நினைத்தான்.

எனவே ஒரு துறவற மடத்தில் சேர்ந்தான்.அங்கு அவனுக்கு நிறைய வாழ்கையின் தத்துவங்கள் போதிக்கப்பட்டன.ஒரு நாள் குரு அனைவருக்கும் தவம் செய்வதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

“சீடர்களே! இன்று உங்களூக்கு தவத்தை பற்றி கூறப்போகிறேன்.நமது ஐம்புலங்களையும் கட்டுப்படுத்தி ஒரு நோக்கத்திக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வேண்டி செய்வதுதான் தவம்….” இவ்வாறாக அவர் கூறிக்கொண்டிருந்தார்.

“குருவே நான் ஸ்ரீதேவியிடம் ஒரு வரம் கேட்கவேண்டும். எத்தனை காலங்கள் தவம் செய்தால் எனக்கு ஸ்ரீதேவியின் தரிசனம் கிடைக்கும்?” என்று ஒருவன் கேட்டான்.

“ஒரு வருடம் கடுமையான தவம் செய்தால் ஸ்ரீதேவி திரிசனம் கிட்டும்.” என்று குரு கூறினார்.

“மூன்று மாதங்கள் தவம் செய்தால் எந்த கடவுளின் தரிசனம் கிடைக்கும்?” என்று செல்வன் கேட்டான்.ஏனென்றால் அவன் இன்னும் உயிரோடு இருக்கப் போவது நான்கு மாதங்கள்தானே.

குருவுக்கு கோபம் வந்துவிட்டது.ஏனென்றால் அவரே சீடர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக ஒரு வருடம் என்று கூறினார்.பல வருடங்கள் தவம் செய்து கூட ஸ்ரீதேவி தரிசனம் கிடைக்காதவர்கள் பல பேர் உள்ளனர்.எனவே ஒரு வருடம் என்று கூறினலாவது அவர்கள் நம்பிக்கையோடு தவம் செய்வார்கள் என்று எண்ணிதான் கூறினார்.ஆனால் இவன் அதைக்கூட செய்ய முடியாத சோம்பேறியைப்போல் மூன்று மாதங்கள் செய்தால் யார் வருவார்கள் என்று கேட்கிறானே!

“மூன்று மாதங்கள் தவம் செய்தால் மூதேவி தரிசனம்தான் கிடைக்கும்.” என்று ஒருவித எரிச்சலோடு கூறினார்.அவனோ அதை நம்பிவிட்டான்.

ஆனால் மூதேவி என்னும் தெய்வம் நமக்கு கஷ்டங்கள் கொடுப்பது.அதனால் யாரும் அதனை வேண்டி தவம் செய்யமாட்டார்கள்.ஆனால் இவனோ தவம் செய்ய முடிவெடுத்துவிட்டான்.

தவம் செய்வதற்கான வழிமுறைகளை குருவிடம் இருந்து தெரிந்துகொண்டான்.காட்டிற்கு சென்று மூதேவியை நினைத்து தவம் செய்தான்.

அவனது அசைக்க முடியாத நம்பிக்கையால் மூன்றாவது மாத இறுதியில் மூதேவி மகிழ்ந்து அவன் கண்முன் தோன்றினாள்.

“மானிடா! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம்;என்ன வரம் வேண்டும் கேள்!”

“நான் நூறு வயது வரை உயிரோடு வாழ வேண்டும்.எனக்கு அந்த வரத்தைக் கொடுத்தருளுங்கள்.”

“நான் யாருக்கும் வரம் கொடுப்பதில்லை.ஆனால் உன் நம்பிக்கையான தவம் உன்னை காப்பாற்றியது.நீ கேட்டவாறே நடக்கட்டும்” என்று வரம் வழங்கி சென்றுவிட்டாள்.

அப்போது ‘உன் நம்பிக்கை உனக்கு விமோசனம் தரும்’ என்று முனிவர் கூறியது ஞாபகம் வந்தது.தனது குருவிடம் நடந்தவற்றை கூறினான்.அவரும் அவனது நம்பிக்கையை பாராட்டினர்.

அவன் கடைசிவரை சன்னியாசியாக இருந்து நிறைய தவ வலிமை பெற்று மக்களுக்கு நிறைய வரங்கள் கொடுத்தான்.இறுதியில் நூறு வயதில் இறந்து சொர்கம் சேர்ந்தான்.

இந்த கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நாம் துன்பங்களைக் கண்டு விதியே என்று துவண்டுவிடக் கூடாது.நாம் அந்த விதியையே எதிர்த்து போராடவேண்டும்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.