dog and man

அன்பே சிவம்

dog and man

வியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான். அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்துச் செல்வான். அவனுக்கு அந்த நாய்மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் ஒரே நேரத்தில் இறந்தனர்.

பின் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கோ தாகம் எடுத்தது. தண்ணீர் தேவை. சுற்றும் முற்றும் பார்த்ததில் ஒரு இடத்தில் குளம் ஒன்று தென்பட்டது. அவன் தன் நாயையும் அழைத்துக்கொண்டு அதனருகில் சென்றான். அங்கு ஒரு தகவல் பலகை இருந்தது.

‘இங்கு நீர் அருந்துபவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லலாம்’‘என்று எழுதியிருந்தது. தண்ணீர் குடிக்கச் செல்லும்போது ஒரு தேவதை அவர்களைத் தடுத்தது.

“நில். இந்தத் தண்ணீர் குடிக்கவேண்டுமானால் ஒரு நிபந்தனை.”

“என்ன அது?”

“மனிதர்கள் மட்டும்தான் இதனைக் குடிக்க வேண்டும். எனவே, நீ மட்டும் வேண்டுமானால் குடித்துவிட்டு சொர்க்கம் செல்லலாம்.”

“இவ்வளவு தூரம் என்னுடன் நடந்துவந்த இந்த நாயும் மிகவும் தாகத்தோடு இருக்கிறது. தயவு செய்து இதற்கும் நீர் கொடுங்கள்.”

“முடியாது. ஏன் விலங்குகளுக்கெல்லாம் பரிதாபம் பார்க்கிறாய்? இந்த வாய்ப்பை நழுவவிடாதே. இந்த நீரைக் குடித்துவிட்டு சொர்க்கம் செல்.”

“இந்த நாய் எனக்கு நன்றியுடன் உள்ளது. நான் மட்டும் நன்றி கெட்டத் தனமாக இருக்க விரும்பவில்லை. அப்படிபட்ட சொர்க்கமே எனக்கு வேண்டாம்.” என்று கூறிவிட்டு தனது நாயுடன் மேலும் நடக்க முயற்சித்தான்.

மீண்டும் தேவதைத் தடுத்தது. பின் கூறியது.

“நீங்கள் இருவரும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு சொர்க்கம் செல்லலாம்.”

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின் தேவதையே கூறியது.

“நீ சொர்க்கத்திற்கு தகுதியானவனா எனச் சோதிக்கவே அவ்வாறு கூறினேன். நீயோ சுயநலம் பாராமல் உன்னுடைய நாய்க்கும் நீர் வேண்டுமென்றாய். அதனால் நீ உன்னைப் போலவே பிறரையும் நேசிக்கிறாய் என்பதை அறிந்துகொண்டேன். இப்போது நீ சொர்க்கத்திற்கு செல்ல முழு தகுதியுடையவனாக இருக்கிறாய்.”

அவன் அந்தத் தேவதைக்கு நன்றி கூறினான். பின் தனது நாயுடன் சேர்ந்து தண்ணீர் குடித்தான். சொர்க்கத்தின் வாயில் திறந்தது. இருவரும் சொர்க்கம் சேர்ந்தனர்.

கதை நீதி:

‘தன்னைப் போலவே பிறரையும் நேசி’ என்பதே இக்கதையின் உயரியக் கருத்து. கடவுள் என்பவர் கண்ணால் காண முடியாதவர். ஆனால், நாம் பிறரை நேசித்து அவர்கள்மீது அன்புகொண்டு அவர்களுக்கு உதவி செய்யும்போது அவருடைய பிரசன்னத்தை உணரலாம்.

நாம் எப்படி ஒரு உயிரோ அதேபோல்தான் மற்றவர்களும் விலங்குகளும் ஒரு உயிர்தான். அனைவருக்கும் உணர்வுகள் உண்டு. எனவே மற்றவர்களைத் துச்சமென மதிக்காமல் அவர்களுடைய உணர்வுகளையும் மதித்து வாழக் கற்றுக்கொள்வோம். உயிர்களிடத்தில் அன்புகூர்ந்து, ‘அன்பே சிவம்’ என்பதையுணர்வோம்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments

  1. s suresh ஜூலை 30, 2012

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading