“டேய்! நீ என்னைய பயமுறுத்தறதுக்காகப் பொய் தான சொல்ற?” ராமு கேட்டான்.“இல்லடா! உண்மையாத்தான் சொல்றேன்! மினிபேய் ராத்திரி நேரத்துல நம்மள கொல்ல வரும்டா. வரும்போது நமக்குத் தெரிந்தவர்கள் போன்று உருமாறி வரும். நம்மள எங்காவது கூட்டிட்டுப் போயி கொன்னுடும்டா!”
ராஜேஷ் கூறினான்.
“அப்படியா?”
“ஆமாம்டா! நாம தப்பிசிட்டாலும் பல வேஷங்கல்ல வந்து எப்படியாவது கொன்னுடும்.”
“என்னக்கூட கொல்ல வருமாடா?”
“வரும்டா! என் வேசத்துல வந்தாலும் வரும். அதனால, ராத்திரியில யார் வந்து எழுப்பிக் கூப்பிட்டாலும் அவங்க கூடப் போகாத. சரியா!”
“சரிடா”.
இந்தச் சின்னப் பசங்க பேசிக்கிட்டு இருந்தது ராமுவின் வீட்டில். ராமுவின் அப்பா முத்து. அவன் ஒரு விவசாயி. அவனும் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். சிறு வயது பிள்ளைகள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அதைக் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அவனுக்குப் பேய் என்றால் பயம்.
அவனும் ராஜேஷின் அப்பா ரவியும் நண்பர்கள். பக்கத்துப் பக்கத்துக் கொல்லைக்(form land) காரர்கள். இருவரும் தினமும் காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு எழுந்து சென்று வயலுக்கு நீர் இறைப்பது வழக்கம். அந்தக் காலத்தில் மின் மோட்டார்கள் இல்லை. அதனால் ஏற்றம்தான் இறைக்க வேண்டும். இருவரும் சேர்ந்து செல்வதற்கான முக்கியமான காரணமே முத்து பேய்க்குப் பயப்படுவதுதான்.
இருவரும் பேசிக்கொண்டே இறைப்பார்கள். ஒருவருக்கு சோர்வு ஏற்படும்போது வேறொருவர் சிறிது நேரம் இறைப்பார். முத்துவின் வயல் பாய்ந்தவுடன் ரவியின் வயலுக்கு இறைப்பார்கள். எப்போதும் ரவி முன்பே எழுந்துவிடுவான். அதனால், அவன்தான் முத்துவை தினமும் எழுப்பி அழைத்துச் செல்வான்.
ஒரு நாள் அவ்வாறு முத்துவை எழுப்பினான். இருவரும் வயலுக்கு ஏற்றம் இறைக்கச் சென்றனர். முதலில் முத்துவின் வயலுக்குக் சென்றனர். முத்து இறைத்துக்கொண்டிருந்தான். ரவி அருகில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து, தான் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்ததாக உணர்ந்தான் முத்து. ரவி எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டிருப்பது போன்று தெரிந்தது. அதனால் முத்து ரவியைக் கூப்பிட திரும்பிப் பார்த்தான். ஆனால், அவனை அங்குக் காணவில்லை.
“இங்கத்தானே இருந்தான். எங்கே போயிருப்பான்?” என்று எண்ணியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைக் காணவில்லை. ஆனால், அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. வயல்வெளி இறைக்கப் பட்டு முழுவது தண்ணீராக நிலவு வெளிச்சத்தில் தெரிந்தது.
“வந்து சிறிது நேரம்தானே ஆச்சி. அதுக்குள்ள எப்படி வயல் முழுவது இறைச்சு முடிஞ்சிருக்கு? நாம் அவ்வளவு வேகமாகவா வேலை செய்தோம்? இவன வேற காணோமே! ஒருவேள தூக்கம் வருதுன்னு போயிருப்பானோ? அவன விடக் கூடாது. நான் இங்க கை வலிக்க இறைச்சிக்கிட்டு இருந்திருக்கேன். அவன் என்ன பாதியில விட்டுட்டு ஓடிப் போயிட்டானா? போகும்போது நான் மட்டும் எப்படி தனியாகப் போவது? பயமாய் இருக்காதா?” என்று எண்ணியவன் ரவியின் வீட்டிற்கு சென்றான். ரவியை கூப்பிட்டான்.
ஆனால் ரவி அப்போதுதான் தூங்கி எழுந்து வருவதுபோல் வந்தான்.
“டேய் ! ஏன்டா இறைக்கும்போது என்ன தனியா விட்டுட்டு வந்துட்டே ? வர வழியில எப்படி பயந்து வந்தேன் தெரியுமா?”
“டேய் ! என்னடா, ஏதாவது கனவு கண்டியா? தூகத்துல அப்படியே நடந்து வந்துட்டியா?”
“டேய் ! என்ன, கிண்டல் பன்றியா?”
“பின்ன என்னடா ? எப்பவுமே நான் வந்து மூணு மணிக்கு எழுப்பினால் கூட எழுந்து வர மாட்ட. இப்ப ரெண்டு மணிக்கே வந்து என்ன எழுப்பிட்டு ஏதேதோ உளறுகிறாய்!”
“நீதாண்டா உளறுகிறாய். என்ன வந்து எழுப்பிக் கூட்டிட்டுப் போன. இறைச்சிட்டு இருக்கும்போது என்ன விட்டுட்டு வந்துட்ட.”
“உண்மையிலேயே ஏதோ உனக்கு ஆயிடுச்சிடா. என் பொண்டாட்டிய கூடக் கேட்டுப்பாரு, நான் இப்பதான் எழுந்திரிச்சேன்.”
அது உண்மைதானென ரவியின் மனைவி கூறினாள்.
முத்துவுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
“நீ வரலனா வேற யாரு என்கூட வந்திருப்பா?”
ரவியின் மனைவி, “ஏங்க, இந்த மினி பேயப் பத்திதான் ஊரே பேசுது. நிறைய பேர கூட்டிட்டு போயி கொன்னு இருக்குதாங்க. ஒரு வேள அதுதான் இவரைக் கூட்டிட்டு போயிருக்குமோ?” என்று ரவியிடம் கேட்டாள்.
“நீ வேறடீ! ஊர்தான் மூட நம்பிக்கையில உளறுதுன்னா, நீயுமா?” என்று அவளைத் திட்டிவிட்டு பின் முத்துவிடம் “அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ போய்த் தூங்கு, எல்லாம் சரியாயிடும்.” என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான்.
இருந்தாலும் அவனுக்குப் பயம் போகவில்லை. வீட்டிற்கு செல்லும்போது புலம்பிக்கொண்டே சென்றான்.
“இவன் நம்முடன் வரலனா, பின்ன யார் வந்திருப்பா? ஒருவேள அவங்க சொன்ன மாதிரி மினி பேயா இருக்குமோ? ஆமாம், பேய்தான். மினி பேயேதான். அதுதான் ரவி வேசத்துல வந்திருக்கு. ஐய்யோ! நம்மள அது கொன்னுடுமோ?”
வீட்டில் போய்ப் படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. காலையில் மற்றவர்களிடம் நடந்தவற்றை கூறினான். அவர்களும் அவன் ஏதோ கனவு கண்டிருப்பான் என்றுதான் கூறினர். ஆனால் முத்துவால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவனைப் போன்று அமர்ந்திருந்தான். அதனால் வீட்டில் உள்ளவர்கள் ரவி அவனைக் கூட்டிச் சென்று பயபுறுத்திவிட்டான் என்று எண்ணி அவன்மீது மிகவும் கடுப்பில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ரவி தான் முத்துவை விளையாட்டுக்காக அச்சுறுத்தவே ஏற்றம் இறைக்க வரவில்லை என்று பொய் கூறியதாகச் சொல்லி மன்னிப்பு கேட்டான்.
அன்று முத்துவின் வீட்டில் இருந்த அவனது தாத்தா “அவனே பயந்தவன், அவன மேலும் பயமுறுத்தி வச்சிட்டாயே! டேய்! இனிமே நாங்க ரெண்டு பேரும் காலையில ஏத்தம் இறைக்கபோகிறோம். நீ இனிமே வராதடா.” என்று அவனைத் திட்டிவிட்டார். அவனும் சென்றுவிட்டான். முத்துவிற்கு தன்னுடன் வந்தது பேய் இல்லை என்பது தெரிந்தவுடன் சுய நினைவு வந்தது. வழக்கம்போலத் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை மூன்று மணிக்கு முத்துவின் தாத்தா வந்து முத்துவை கூப்பிட்டார். அவனது மனைவிதான் அவனை எழுப்பி அனுப்பி வைத்தாள். இருவரும் வயலுக்குச் சென்றார்கள். பின் சிறிது நேரம் கழித்து யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. முத்துவின் மனைவி வெளியில் சென்று பார்த்தாள். அது முத்துவின் தாத்தா.
“எங்கம்மா அவன்? அவன எழுப்பு.” என்று கூறினார்.
“என்ன சொல்றீங்க இப்பதான நீங்க வந்து கூட்டிட்டு போனீங்க.!”
“என்னமா சொல்ற? நான் இப்பதானே எழுந்து வரன்.”
“உங்க குரல் மாதிரிதான் இருந்தது. நான்தான் அவரை எழுப்பி அனுப்பி வச்சேன். இம்ம்… நீங்கக் கூட்டிட்டு போகலன வேற யாரு கூட்டிட்டு போயிருப்பா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒரு வேள அவர் சொன்ன மாதிரி பேயா இருக்குமோ?”
“பயப்படாதம்மா, அவனது நண்பர்கள்ள யாராவது கூட்டிட்டு போய் இருப்பாங்க. நீர் பாய்ச்சியபிறகு வந்திடுவான்.” என்று கூறிய அவர் தன் வீட்டிற்கு புறப்படத் தயாரானார்.
அப்போது அங்கு ரவி வந்தான்.
“என்ன எல்லாம் வெளிய நிக்கிறீங்க? முத்துவ கூப்பிடுங்க, இறைக்கப் போகலாம்.”
“டேய்! உன்னதான் வர வேணான்னு சொல்லியாச்சே! எதுக்கு இங்க வந்திருக்க, அவன பயம்புறுத்தியா கூட்டிட்டு வர ?”
“என்ன சொல்றீங்க? எப்ப நான் அவன பயம்புறுத்தினேன்?”
“என்னடா, தெரியாத மாதிரி கேட்கறே? நேத்து அவன கூட்டிட்டு போய்ப் பாதியில விட்டுட்டு வந்துட்ட. அவன் எப்படி பயந்துபோயிட்டான் தெரியுமா?”
“எத்தன முறை சொல்றது? அவன் ஏதோ கனவு கண்டு உளறான். நான்தான் வரவே இல்லன்னு அவனிடம் சொல்லிட்டேனே!”
“அப்புறம் ஏண்டா நேத்து வந்து நீதான் கூட்டிட்டு போனதாகவும், விளையாட்டுக்காகப் பாதியில் அவனை விட்டு வந்துவிட்டதாகவும் சொன்ன?”
“என்ன நீங்களும் விளையாடுறீங்க? நேற்றுதான் நான் வெளியூறுக்கு போயிட்டேனே. நான் எப்படி உங்க வீட்டிற்கு வந்திருக்க முடியும்?”
“என்னடா சொல்ற?”
“ஆமாங்க. நேற்று இரவுதான் வீட்டிற்கு வந்தேன்.”
அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, இதுவரை நடந்ததெல்லாம் மினி பேயால்தான் என்று. இதுவரை ஊரில் நிறைய பேர் மினி பேய் இருப்பதாகவும், அது பலரைக் கொன்றுள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள்தான் நம்பவில்லை. இப்போது இவர்களுக்கும் பயம் தொற்றிக் கொண்டது. மூவரும் முத்துவின் வயலை நோக்கி ஓடினார்கள்.
அங்கு முத்துவின் வயலில்,
முத்து ஏற்றம் இறைத்துக்கொண்டிருந்தான். அப்போது வரை அருகில் அமர்ந்து பாட்டுப் பாடிக்கொண்டிருந்த தனது தாத்தா அமைதியாக இருப்பதை உணர்ந்து, “என்ன தாத்தா மீதி பாட்டையும் பாடு” என்று திரும்பிப் பார்த்தான். அருகில் அவர் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். நிலவு வெளிச்சதில், தூரத்திலே அவர் நின்றுகொண்டிருப்பது போன்று தெரிந்தது.
“தாத்தா, இங்க வா. எனக்குப் பயமா இருக்கு.” என்று அவரைக் கூப்பிட்டான்.
அவரும் நடந்து வந்தார். ஆனால் அவர் அருகில் வர வர அவரது உயரம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அவனுக்கு மிக அருகில் வரும்போது அவரது உருவம் வானளவு உயர்ந்திருந்தது. அது அவனது தாத்தா இல்லை, மினி பேய். மிக உயரமாகக் கரிய அகோரமான உருவத்தில் காட்சியளித்தது. அதைப் பார்த்த அவனுக்குப் பயத்தில் மாரடைப்பு ஏற்பட்டது.
முத்துவை தேடி வந்த மூவரும் அவனது வயலுக்கு வந்தனர். அங்குக் கிணற்றுக்கு அருகில் அவன் இறந்து கிடந்தான். அதைப் பார்த்த அவர்கள் ஓவென்று அழுதனர். அவர்களுக்குத் துக்கம் தாங்கவில்லை.
பின் அவனது இறுதிச் சடங்குகள் நடந்தன. ஒரு பேய்தான் அவனைக் கொன்றதாக ஊர் மக்கள் அனைவரும் நம்பினர். எனவே மினி பேய்பற்றிய பயம் அந்த ஊரில் அதிகரித்தது.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
நல்லாவே பீதியை கிளப்புராங்கப்பா… ஹா… ஹா…
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…
சின்ன வயதில் கேட்ட கதை! புதுசு பண்ணியிருக்கிறீர்கள்! நன்றி!
இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
நல்ல பேய்க் கதை