பிறரை புண்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் பழமொழிகள் 1

பிறரை புண்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் பழமொழிகள்

நமது தமிழ் நாட்டில் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பழமொழிகள் வாழ்க்கைக்கு தேவையானதாகவும், நமது சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கின்றன.

என்னதான் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளுக்காகப் பழமொழிகள் கூறி இருந்தாலும், சில பழமொழிகள் மற்றவர்களை இழிவுபடுத்தவும் அவர்களது மனதை புண்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பழமொழிகளின் உண்மை பொருள் வேறாக இருந்தாலும் அவைகள் திரித்துக் கூறப்பட்டு வருகின்றன.

அவைகளில் சிலவற்றை பார்ப்போம்.

பெண்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லப்படும் பழமொழிகள்:

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?

பெண்களை அடிமைகளாக வைத்திருக்க எண்ணிய ஆணாதிக்க வர்கம் இதைக் கூறியே பெண்களை மட்டம் தட்டி வந்தனர், அவர்களைப் படிக்க அனுமதிக்கவில்லை. இவ்வாறாக ஒருசிலர் புரட்சிக்கருத்து பேசுவார்கள். ஆனால், உண்மையில் இது திரிந்த பழமொழி. உண்மையான பழமொழி, “அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பூ எதற்கு?” என்பதேயாகும்.  

அதாவது, அந்தக் காலத்தில் பெண்கள் முழக்கணக்கில் தங்கள் கொண்டையில் பூச்சூடிக்கொள்வர். தற்காலத்தைப் போல் கட்டிய பூ கிடைப்பது மிக அரிது. படிக்கணக்கில் மொட்டுகளை வாங்கி தாங்களே அதனைச் சரமாகக் கட்டிச் சூடுவதே பெரும்பாலானோரின் வழக்கம். இருக்கப்பட்டவர்கள் ஒருபடியாவது வாங்குவார்கள்.

கொன்டையில் மல்லிப்பூ

சமைக்கும்போது தலையில் மூச்சூடினால் அடுப்பு அனல் வெப்பத்தில் அது காய்ந்துதானே போகும்? அதனால்தான் “அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பூ எதற்கு?” என்று கேட்டார்கள் பெரியவர்கள்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

பெண்கள்தான் பிரச்சினைகள் உருவாக்குகின்றனர் மற்றும் அழிவையும் ஏற்படுத்துகின்றனர் என்பது போன்று தவறாகப் பலர் பயன்படுத்துகின்றனர்.

“நன்மை ஆவதும் பெண்ணாலே, தீமை அழிவதும் பெண்ணாலே” என்பதுதான் உண்மையான அர்த்தம்.

பெண் புத்தி பின் புத்தி

“பெண்கள் எதையும் யோசிக்காமல் செய்துவிடுவார்கள். பின் அதன் விளைவைப் பார்த்துதான் தாங்கள் செய்த தவறை உணர்வார்கள்” என்பது தவறானது.

“பெண்கள் எப்போதும் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். பின்னால் நடக்கப் போவதை முன்பே யூகித்து எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வார்கள்” என்பதுதான் சரி. இந்தப் பழமொழி “பெண் புத்தி பின்புத்தி, ஆண் புத்தி அவசர புத்தி” என்று வேறுவிதமாகவும் சில வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருவதிலிருந்து இந்த உண்மைப் புலப்படும்.

உடல் குறைபாடு உள்ளவர்களைப் புண்படுத்தப் பயன்படுத்தப்படுபவை

disability

நொண்டிக்கு நூத்தியெட்டு குறும்பு

அவர்களே தங்களால் பிறரைப் போன்று ஓடி ஆடி விளையாட முடியவில்லையே என்று தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதை விட்டுவிட்டு மேலும் அவர்களது மனம் புண்பட இந்தப் பழமொழியை உபயோகப்படுத்துகிறோம். குறும்பு என்பதை கலகலப்பாக இருத்தல் என்று நாம் நல்ல அர்த்ததில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊமை ஊரைக் கெடுக்கும், ஆமை வீட்டைக் கெடுக்கும்

ஆமை புகுந்த வீடு நாசமாகப் போகும் என்பார்கள். அது உண்மையா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அதனுடன் ஊமைகளை ஒப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவர்கள் என்ன அவ்வளவு கெட்டவர்களா? ஆம். என்ன ஆம் என்கிறேனே என்றுதானே பார்க்கிறீர்கள்?

இங்கு ஊமை என்பது ஊனமுள்ள ஊமை கிடையாது. ஊமை போன்று இருப்பவர்கள். அதாவது மனதில் வஞ்சத்தை வைத்துக் கொண்டு எப்போதும் ஊமை போன்று இருப்பவர்கள். அவர்கள் சமயம் பார்த்துக் காலை வாரி விடுவார்கள். இதுதான் உண்மையான அர்த்தம்.

செவுடன் காதில் சங்கு ஊதியது போல்

செவுடன் காதில் சங்கு ஊதினால் கேட்காதுதான். ஆனால், சிலர் காதிருந்தும் செவிடர்களாக உள்ளனர். நல்லதை கேட்க மறுக்கின்றனர். அறிவுரைகளை மதிப்பதில்லை. செவிடர்களை இங்கு உபயோகப்படுத்தி இந்தக் கருத்தைக் கூறியிருப்பதுதான் இந்தப் பழமொழியின் ஒரே குறை. மற்றபடி இது செவிடர்களை இழிவுபடுத்தவில்லை.

கள்ளனை நம்பினாலும் நம்பலாம் குள்ளனை நம்பக் கூடாது.

இந்தப் பழமொழி உருவத்தில் குள்ளமாக உள்ளவர்களைப் புண்படுத்தும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் ஒருபோதும் உருவக்கேலியை ஆதரித்திருக்கமாட்டார்கள். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பேசும்போது, நிறைய தெரிந்தவன் ஒன்றும் தெரியாதவனைப் போன்று நடித்தால் அல்லது அடக்கமாக இருந்தால் அவனைக் கள்ளன் என்றும், அரைகுறை அறிவோடுள்ளவன் எல்லாம் தெரிந்ததைப் போல் காட்டிக்கொண்டால் அவனைக் குள்ளன் என்றும் அழைப்போம். கள்ளன் அடுத்தவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாகப் படிப்பான். குள்ளன் அடுத்தவர்களைப் படிக்கவிடாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பான். எனவே அவனை நம்பக் கூடாது என்போம். ஒருவேளை, இதுவே உண்மையான அர்த்தமாகவும் இருக்கலாம்.

தமிழாசிரியர்களிடம் கேட்கும்போது அவர்கள் மூன்றுவிதமான பொருள்களைத் தருகிறார்கள். ஒன்று – யாரையும் உருவம் கண்டு குறைத்து மதிப்பிடக் கூடாது. குள்ளமாக இருப்பவர்கள்கூட நம்மைவிட பெரிய காரியங்களையும் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே, குள்ளனைத் தவறாக எடைபோட்டு அவனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது பொருள், கள்ளன் என்பவன் திருடன். குள்ளன் என்பவன் உயரத்தில் குள்ளன் அல்லன், எண்ணத்தில் குள்ளன். அதாவது, குறுகிய வஞ்சக எண்ணம் உடையவன் குள்ளன். திருடன்கூட திருடிவிட்டுச் சென்றுவிடுவான். ஆனால், நயவஞ்சகம் உடைய குள்ளன் நம்மைக் கவிழ்க்கத் திட்டமிடுவான். எனவே, அவனை நம்பக் கூடாது. 

மூன்றாவது அர்த்தமாக ஒருசிலர் கூறுவது, இந்தப் பழமொழியே திரிந்த பழமொழி என்பதுதான். “கல்லணையை நம்பலாம், குள்ளணையை நம்பக் கூடாது” என்பதன் திரிபுதான் இந்தப் பழமொழி. அதாவது, உயரமான கல்லணையை நம்பலாம் குள்ளமான தடுப்பணையை நம்ப முடியாது. தடுப்பணை வறட்சிக்கு நீரும் தராது, கனமழையின்போது பெருவெள்ளத்தைத் தடுத்து நம்மைக் காக்கவும் செய்யாது.

இதில் எந்த அர்த்தமாக இருந்தாலும், அளவில் சிறிய குள்ளர்களைமட்டும் இந்தப் பழமொழி குறிக்கவில்லையென்பது உறுதி.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

One Response

  1. s suresh செப்டம்பர் 16, 2012

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading