பூமி

உலகம் அழியப் போகிறதா?

இப்போது, அனைவரும் பயப்படுவது இதற்காகத்தான்.

“உலகம் அழியப்போகிறது, எனவே அனைவரும் இனிமேலாவது நல்லவர்களாக வாழ்ந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்“.

எங்க ஊர்ல இத பத்திய பீதி அதிகமாவே இருக்கு. இதைப் பற்றிய ஒரு திரைப் படம் வந்ததுதான் இந்தப் பீதிக்கு காரணம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் 21 டிசம்பர் 2012 அன்று உலகம் அழியும் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் இப்போது அனைவரும் உலகம் அழியும் என்ற பயத்தில் உள்ளனர்.

என் ஊரில் கிறிஸ்துவர்கள் 21ம் தேதி உலகம் இருளில் சூழப்போவதாகவும், ஒரு பெரிய பேரழிவு காத்திருப்பதாகவும் நம்புகின்றனர். இருளின்போது தேவாலயத்தில் கொடுக்கும் மெழுகுவத்தி மட்டுமே எரியும் என்று ஏகப்பட்ட மெழுகுவத்திகளை வாங்கி இருப்பில் வைத்துக் கொள்கின்றனர். இந்துக்களும் தினமும் இரவு தங்களது வாசலில் விளக்குகளை ஏற்றி வைத்துக் கடவுளை வேண்டிக்கொள்கின்றனர்.

மெழுகுவத்தி

இதைப் பற்றி ஒரு தேநீர் விடுதியில் காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. இருவர் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் கேட்டபோது,

“ஆமாப்பா தம்பி! நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூடச் சொல்லிடுச்சு. கண்டிப்பா 21ம் தேதி உலகம் அழிஞ்சிடும்.” என்றனர்.

“அப்படியா, நாசா சொல்லிடுச்சா?” என்று கேட்டேன். உடனே கடைக்காரர் இடையில் குறுக்கிட்டு,

“அதெல்லாம் நம்பாதப்பா, இவனுங்க வெந்தத தின்னுட்டு வந்தத சொல்லிக்கிட்டு இருக்கானுங்க!” என்று கூறினார்.

அவர்கள் கூறியது உண்மையில்லை போலும். அதனால்தான் ‘வெந்தத தின்னுட்டு வந்தத சொல்வது’ என்னும் பழமொழியொடு அவர்களை ஒப்பிடுகிறார். அதாவது அவர்கள் வெட்டியாக எந்த வேலைவெட்டிக்கும் செல்லாமல் கதை பேசிக்கொண்டிருக்கின்றனர் என்கிறார்.

சரி, ஏன் இவ்வாறான பயம் நிலவுகிறது? உலகம் உண்மையிலேயே அழியுமா? அதைப் பற்றி அலசி ஆராய்வோம்.

2012

இந்தப் படம் வெளிவந்ததுதான் முக்கியமான காரணம். இதைப் பார்த்துதான் உலகத்தில் பாதி பேர் பயத்தில் உள்ளனர்.

மாயன் நாள்காட்டி

இன்னொரு முக்கியமான காரணம் இந்த மாயன் நாள்காட்டி. மாயன் இனத்தார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மத்தியப் பகுதியின் வாழ்ந்தவர்கள். அவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் கட்டடக் கலையில் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்கள் எதிர்கால ஆண்டுகளுக்கான நாள்காட்டியை அப்பொழுதே எழுதி வைத்திருந்தார்களாம். ஆனால் அவர்களது நாள்காட்டி 2012ம் ஆண்டோடு முடிகிறது. உலகம் அழியப்போவதைத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் 2012 வரை மட்டும் நாள்காட்டி எழுதியுள்ளனர் என மக்கள் நம்புகின்றனர். அதன்படி, 2012 டிசம்பர் 21 காலை 11 மணி 11 நிமிடம் 11 வினாடியில் உலகம் அழியும் எனக் கருதப்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி

பூமி

சூரியனில் பல வேதி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் விரைவில் சூரியப் புயல் வரலாம். அந்தப் புயலால் பூமியின் காந்தப்புலம் பாதிக்கப்பட்டு, தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். மின்சாரம் இருக்காது. புயலின் வெப்பத்தின் கொடூரத்தால் பூமிக்கு அழிவு ஏற்படும். ஒரு நொடியில் அனைவரும் சாம்பலாகிவிடுவோம்.

மேலும் இதுவரை, பல விண்கற்கள் பூமியை நோக்கி வந்தன. அவைகளை ஏவுகணைகள் வைத்து அழித்துவிட்டனர். ஆனால், மேலும் பல கற்கள் வரப்போகிறதாம். அவை மிகவும் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அவற்றுள் ஒன்று பூமியின் மேல் விழுந்தால் பூமியே அழிந்துவிடும் எனக் கணிக்கிறார்கள். இப்படி பல காரணங்களால் அறிவியல் ஆராச்சியாளர்களே உலகம் அழிந்துவிடுமோ எனப் பயப்படுகின்றனர். அழியவில்லையென்றாலும் ஏதோ ஒரு பேரிழப்பு ஏற்படும் என்று உறுதியாக உள்ளனர்.இப்படித்தான் செய்திகளில் வெளியாகிறது.

மத நம்பிக்கையின்படி

கிறிஸ்துவர்கள் கூறுவது – பைபிளில் குறிப்பிட்டுள்ள உலகம் அழிவதற்கான அறிகுறிகள் நடந்தேறிவிட்டதாகவும், உலக அழிவு சமீபத்திலிருக்கிறது என்பதுதான்.

அப்படி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?

உலகம் அழியும் காலத்தில் சூரியன் கருப்பாகவும், சந்திரன் சிவப்பாகவும் இருக்கும்.

இது நடந்துவிட்டது. சூரியன் தனது நிறத்தை இழந்து ஏறக்குறைய 10 சதவீதம் கருப்பாக உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் சந்திரன் இருமுறை சிவப்பாக மாறியதாகச் செய்திகளில் வந்துள்ளது.

வானிலிருந்து விண்கற்கள் மற்றும் எரிகற்களும் கூரையைப் பிய்த்துக்கொண்டு வருவதுபோல் பூமியின் மேல் விழும்.

முன்பே கூறியது போல் வரும் காலங்களில் பெரிய பெரிய விண்கற்கள் பூமியை நோக்கிவரும் என்பது ஆராச்சியாளர்களின் கருத்து.

மக்கள் அழிவிற்கு பயந்து குகைகளிலும் பூமிக்கு அடியிலும் பதுங்குவார்கள்.

இதுவும் நடக்கும். எப்படி? சூரியப் புயலைப் பற்றிய பயத்தால் இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் பூமிக்கு அடியிலும் மலைகளிலும் பதுங்கு இடங்களை அமைத்துள்ளன. சுவிசர்லாந்து தன் நாட்டின் அனைத்து மக்களுக்கும் இப்படிப்பட்ட பதுங்கு இடங்களை அமைத்துவிட்டதாம். அமெரிக்காவில் ஒரு மலைக்குக் கீழ் 2000 அடியில் சகல வசதியுடன் ஒரு நகரமே அமைக்கப்பட்டுள்ளதாம். ரஷ்யாவிலும் 10 லட்சம் பேருக்குப் பாதுகாப்பு இடத்தை அமைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இப்படி பல அறிகுறிகள் நடந்துவிட்டதால், உலகம் அழியும் எனக் கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர்.

உலகம் அழிவது – மக்களின் மத்தியில்

சமீபத்தில் என் தம்பி தேர்வுக்குச் சென்றிருந்தான். அவனுடைய அறையில் தேர்வு எழுதிய சில மாணவர்கள் பக்கத்தில் பார்த்து எழுதிக்கொண்டிருந்தார்கள் போலும். அது சாதாரண மாதாந்திர தேர்வு என்பதால் அந்த அறை கண்காணிப்பாளர் அவர்களை அதட்டுவதோடு விட்டுவிட்டார். ஆனாலும் மாணவர்கள் நிறுத்தவில்லை. வெறுத்த கண்காணிப்பாளர், “டேய்! எழுதுங்கடா எழுதுங்க, எவ்வளவு நாளைக்குதான் பாத்து எழுதுவீங்க? எல்லாம் டிசம்பர் 21 வரைக்கும்தான்.” என்று கூறினாராம். உடனே அறையில் உள்ள அனைவரும் சிரித்துவிட்டனராம்.

எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் கவலையாக இருந்தார். ஏன் என்று கேட்டதற்கு, “உலகம் இன்னும் நான்கு மாதங்கள் கழித்து அழிந்தால், நன்றாக இருக்கும்” என்றார். அது ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கியிருக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் கரும்பு அறுவடை செய்து கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன். சாகும்போது கடன்காரனாகச் சாவதற்கு நான் விரும்பவில்லை” என்று கூறினார். நான் அப்படியே நெகிழ்ந்துபோய்விட்டேன்.

இப்படி ஒருசிலர் இருக்க ஒருவர், “ஐயோ! அந்த நெடுந்தொடர் மிகவும் சுவாரசியமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. அது முடிந்த பின் உலகம் அழியட்டும்” என்கிறார். இப்படியும் ஒருசிலர் இருக்கின்றனர்.

உலகம் அழிந்தால் என்ன நடக்கும்?

என்ன பெருசா நடக்கும்? நல்லவர்கள் சொர்க்கம் செல்வார்கள்; தீயவர்கள் நரகம் செல்வார்கள். இது நம் நம்பிக்கை. எது எப்படியோ, இருக்கும் வரை நம் கடமையை ஒழுங்காகக் செய்வோம்.

உலகம் அழியுமா? காத்திருப்போம்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments

  1. Appaturai Balu டிசம்பர் 16, 2012
  2. river livejobs பிப்ரவரி 1, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading