கிராம புறங்களில் நல்ல சுத்தமான சுவையான குடிநீரை “கிளா நீர் போன்று இருக்கிறது” என்கிறார்கள். “அது என்ன கிளா நீர்?” என்று என் பாட்டியிடம் கேட்டேன். அதனால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். கிளா நீர் என்பது, மிகவும் தூய்மையான குடிநீர். அதுவும் ஊர்புறங்களில் இருக்கும் குடிநீர் அல்ல, காட்டில் இருக்கும் குடிநீர்.
காட்டில் குடிநீரா? ஆம். காட்டில் அதிகமாக மனித நடமாட்டம் இல்லாததால் அங்குத் தூய்மை எப்போதும் இருக்கும். சாதாரண சமதள பரப்புகளில் கூடச் சில சிறு ஓடைகள் அல்லது குட்டைகளை தோன்றும். அவ்வாறு தோன்றும் சிறு நீர் நிலைகளில் ஆண்டு முழுவதும் மழை பெய்யவில்லை என்றாலும் நீர் இருக்கும். அவற்றின் நீர் ஆதாரம் ஒரு குட்டையோ ஏரியோ அல்ல. அவை ஒரு நீரூற்று அல்லது சுனை போன்றவை. பூமிக்கடியிலிருந்து நீர் வெளியில் வரும். பாறைகளில் உள்ள நீர் அல்லது மரத்தில் உள்ள நீர் ஆகியவை ஒன்று சேர்ந்து ஒரு சிறு நீர் நிலையாக மாறி எப்போதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட அவற்றில் நீர் வற்றுவதில்லை. அதனுடைய சுவையும் மிக அருமை. அந்த நீர்தான் கிளா நீர்.
உலகின் எந்த ஒரு நீரிலிருந்தும் அது வேறுபட்டது. அதன் சுவையை எவற்றுடனும் ஒப்பிட முடியாது. அது இளநீர் போன்று சுவையுடனும் பழங்களின் சுவை கலந்ததாகவும் இருக்கும். அதன் நிறம் கூடத் தனித்தன்மை வாய்ந்தது. அதனுடைய படங்களைக் கீழே இணைத்துள்ளேன் .
கிளா நீர் ஊற்று, பாறைகளின் இடுக்கிலிருந்து நீர் வருகிறது. |
கிளா நீர் ஓடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. |
என்ன? ஏதோ சோப்புத்தண்ணீர் போன்று இருக்கிறதா? இதுதான் கிளா நீர். நான் இதைப் படம் பிடிப்பதற்காகக் காட்டிற்கு சென்றபோது மழை பெய்து கிட்டதட்ட மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. ஆனாலும் இந்த நீரூற்று இருந்ததால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காட்டில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றிபோகும் தருவாயில் இருந்த நிலையில் காட்டில் ஏதோ ஒரு இடத்தில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நீர் இருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.
இந்த நீரூற்று ஒரு பாறை இடுக்கிலிருந்து கசிந்து வருவதைக் காணலாம். இதிலிருந்து அது எவ்வளவு சுத்தமானது என்பதை அறியலாம். ஏனெனில் அது தேங்கி நிற்கும் தண்ணீர் இல்லை. இந்த நீரூற்று ஒரு சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப் போன்று பல நீரூற்றுகள் ஒன்று சேர்ந்து பெரிய ஓடையாகி காட்டில் உள்ள விலங்குகளுக்கும் காட்டின் வழியே செல்லும் மனிதர்களுக்கும் தாகத்தை தனிக்கின்றன. நானும் அதைக் குடித்துப்பார்த்தேன். என்ன ஒரு சுவை! மேலும் அதில் பல தாதுக்கள் இருப்பது போன்று தெரிந்தது.
காட்டில் உள்ள பல மூலிகைகள், பாறைகளில் உள்ள தாதுக்கள் இவைகளின் மேல் மழை நீர் படுவதால்தான் அந்த நீரில் அவ்வளவு தாதுக்கள் உள்ளது. மேலும் அந்த நீரூற்று மரத்தின் வேரிலிருந்து அல்லது பாறைகளிலிருந்து வரும் நீரூற்று. அதனால்தான் அதன் நீர் அவ்வளவு சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது என்று நினைக்கிறேன்.
இந்தக் காலத்தில் நாம் என்னதான் நீரை சுத்திகரித்து பயன்படுத்தினாலும், இயற்கையாகக் கிடைக்கும் தூய்மையான, சுவையான இந்தக் கிளா நீருக்கு ஈடாகது.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
சுவையான கிளாநீர் பகிர்வு அருமை ..பாராட்டுக்கள்..
கிளாநீர் அருமை …கிளாநீர் என்ற வார்த்தை முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.
Wonderful, your blessed…