proverbs-பழமொழிகள்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி – 6

proverbs-பழமொழிகள்

பகுதி ஐந்தை படிக்க இங்குச் சொடுக்கவும்.

1. ஜாடிக்கேத்த மூடி.

ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்தப் பழமொழியை வைத்துக் கூறுவார்கள். அதாவது, மிகப் பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

2. ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது. கஞ்சியோ கூழோ எது கிடைத்தாலும் அதை மன நிறைவுடன் சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது இந்தப் பழமொழியைக் கூறிக்கொண்டே திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.

3. சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை.

கண்டிப்பாக நமக்கு வாழ்கையில் துணை என்றால் அது நாம் செய்யும் தொழில் அல்லது வேலைதான். அதில் சோம்பேறித்தனமா இருந்தால் வாழ்வே நமக்குச் சோதனைதான்.

4. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

ஒரு பொருளின் அருமை, அது நமக்குக் கிடைக்காமல் ஏங்கும்போதுதான் தெரியும்.

5. நொய் அரிசி கொதிக்குத் தாங்காது.

இளகிய மனம் கொண்டவர்களை லேசாகத் திட்டினால் கூட அழுதுவிடுவார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது. சில நேரங்களில் அனுபவம் இல்லாத இளம் வயதினர் நொய்யரிசிக்கு ஒப்பிடப்படுகின்றனர்.

6. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஒரு சிறு கதை:

ஒருவனுக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்குத் தன் கணவன் இன்னொரு பெண்ணை வைத்திருப்பது தெரியவர வீட்டில் தினமும் சண்டைதான். இரண்டாவது மனைவியைவிட முதல் மனைவிதான் மிகவும் அழகு மற்றும் நல்லவள். ஆனால், அடிக்கடி சண்டை நடப்பதால் கோபத்தில் முதல் மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றுவிட்டான்.

இதனைத் தன் பெற்றோர்களிடம் கூறினான். அவர்கள் இவ்வாறாகக் கூறினர்.

“ஒன்னு, நீ இந்த ஊர விட்டுட்டு கண் காணாத இடத்திற்கு ஓடிடு. இல்லை, அவள மாதிரியே நீயும் செத்திடு. இல்லன்னா போலீஸ் எங்கள நிம்மதியா வாழவிடாது”

இதனைக் கேட்டதும் தன் பெற்றோர்களின் மீது ஆத்திரம் கொண்டு வாழப் பிடிக்காமல் விஷம் சாப்பிட்டு இறந்தான். அவனது இரண்டாவது மனைவி இப்போது தனியாகத் தவிக்கிறாள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை இவன் விஷயத்தில் நன்கு உணரலாம்.

7. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்

பொய் மட்டும் அல்ல. ஒரு கெட்ட செயலைச் செய்ய ஆரம்பித்தால் மேலும் பல கெட்ட செயல்களைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

8. ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை

எப்போதாவது அபூர்வமாகச் செய்வதை இப்படிக் குறிப்பிடலாம். உதாரணம்: “இவன் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறைதான் என் வீட்டிற்கு வருகிறான்.”

9. பிஞ்சு வத்தினா புளி ஆகாது

புளியங்காய் பழுத்து அதனைக் காயவைத்து கொட்டை எடுத்தால்தான் அது புளி. பிஞ்சைப் பறித்து அதிலிருந்து புளி எடுக்க முடியாது. அதுபோல, பிள்ளைகளைப் புளியாக மாற்றவேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களைப் பிஞ்சிலே வத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

10. தடிக்கும் நோகாம பாம்புக்கும் வலிக்காம

அதாவது யாராவது நமக்குப் பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என்றால், நமக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அவருக்கும் மனம் வலிக்காமல் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

11. பாம்புன்னும் மிதிக்க முடியாம பழுதுன்னும் தாண்ட முடியாம

ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றே தெரியாது. அவர்களை ஒரு பிரச்சினையில் எப்படி அனுகுவது மற்றும் கையாள்வது என்று தெரியாது. அந்தச் சமயத்தில் இந்தப் பழமொழி அவர்களைக் குறிக்கும். அதாவது அவர்களைப் பாம்பு என நினைத்து மிதித்துக் கொல்லவும் முடியாது. பழுதென்று நினைத்துத் தாண்டவும் முடியாது.

12. பட்டாதான் தெரியும் பல்லிக்கு, சுட்டாதான் தெரியும் நண்டுக்கு.

பல்லி நம் மேல் வந்து விழுவது, சாப்பாட்டில் விழுவது போன்ற பல அழிச்சாட்டியங்களைச் செய்யும். அது தவறு என்று அதனால் உணர முடியாது. நாம் அதனை அடிக்கும்போதுதான் உணரும். நண்டை நாம் சுட்டுத் திங்கும்போதுதான் அது புரிந்துகொள்ளும் வலையை விட்டு வெளியே வருவதால் வரும் ஆபத்தை.

அதுபோல, ஒருசிலருக்கு அவர்களது தவறை உணரமுடியாத அளவுக்கு மூளை மழுங்கியிருக்கும். அவர்கள் தவற்றின் விளைவுகளை அனுபவித்தால்தான் திருந்துவார்கள்.

13. உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யாதே.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பார்கள். அதுபோல நமக்கு ஆபத்தில் உதவியவர்கள் மற்றும் பசிக்கு சோறு போட்டவர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.

14. வாழப் பழத்தில் ஊசி ஏத்துவது போல்

சிலர் பேசுவது நம்மைத் திட்டுவது போல் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாகப் பேசுவதுபோல்தான் தெரியும். நமக்குதான் தெரியும் அவர்கள் பேசுவதில் எவ்வளவு சூழ்ச்சமம் இருக்கிறது என்று. ஏன் என்னைத் திட்டுகிறீர்கள் என்று கேட்கவும் முடியாது. ஏனென்றால் அவர்கள் பேசுவது மறைமுகமாக இருக்கும். இப்படியாக எப்போது பார்த்தாலும் சாதாரணமாகப் பேசுவதுபோல் பேசி நம்மை அசிங்கப்படுத்துபவர்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசுகிறார்கள் என்போம்.

சிலர் இனிக்க இனிக்க பேசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்று கலவங்களை மூடிவிடுவர். நாம்தான் அவர்களை இனம்கண்டு எதரவாக இருக்க வேண்டும்.

15. கரும்புக் கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.

பிரச்சினைகளுக்கான சூழ்நிலையை (கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்கங்கள்) சுமந்து கொண்டிருந்தால், நம்மைத்தேடி பிரச்சினைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றைத் தூக்கிபோடுங்கள், ஒரு பிரச்சினையும் நம்மை அணுகாது.

தொடரும்…


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

7 Comments

  1. Jayadev Das ஜூன் 16, 2013
  2. Iniya நவம்பர் 5, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading