அ

தமிழின் சுவாரசியங்கள்

அ

தமிழில் பல சுவாரசியங்கள் உள்ளன. நாம் பேசுவதில், எழுதுவதில் மற்றும் உரைநடையில் தமிழ் பல புதிர்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. இன்று நாம் தமிழ் சொற்றொடர்களில் உள்ள சுவையைப் பார்க்கப் போகிறோம். நாம் பேசுவதில் சில வார்த்தைகள் எதுகை மோனை போன்றும் சில அடுக்குத் தொடர்களைப் போன்றும் இருக்கும்.

பொதுவாக நாம் இரு வார்த்தைகளைச் சேர்த்து ஒரு அர்த்தம் தரப் பயன்படுத்துவோம். அந்த இரு வார்த்தைகளில் ஒரு வார்த்தை மட்டும் அர்த்தம் உள்ளதாக இருக்கலாம் அல்லது இரண்டுமே அர்த்தம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நாம் கூற வருவதின் நோக்கத்தை மிகத் தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கூற அல்லது சொற்சுவை மற்றும் சொல்நயம் சேர்க்க நாம் இரு வார்த்தைகளை அடுக்குத் தொடர் போன்றோ அல்லது எதுகை மோனை போன்றோ பயன்படுத்துவோம். அவைகளில் சிலவற்றை இன்று காணலாம்.

சொத்து சுகம்

உதாரணம்: அவனுக்குச் சொத்து சுகம் நிறைய இருக்கு.

அதாவது, சொத்து மற்றும் சுகபோக வாழ்க்கைக்கான வசதிகள் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

பத்துப் பாத்திரம்

உதாரணம்: நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்தாவது பிழைத்துக்கொள்வேன்.

இங்கு, பத்து என்பது பாத்திரத்தில் உள்ள அழுக்கைக் குறிக்கிறது.

சொத்து பத்து

இங்கு, பற்று என்பதே பத்து எனக் குறிக்கப்படுகிறது. பற்றுதலாக உள்ள சொத்து என்பதே இதன் அர்த்தம்.

சொந்த பந்தம்

சொந்தங்களும் அதனால் ஏற்படும் பந்தங்களும்.

உதாரணம்: நல்ல காரியத்திற்கு சொந்த பந்தம் வந்தாதானே நல்லா இருக்கும்?

ஆச்சு போச்சின்னா

எதற்கெடுத்தாலும்.

உதாரணம்: இவன் ஆச்சி போச்சின்னா இதையே சொல்றான்.

லொட்டு லொசுக்கு

தேவை இல்லாமல் பேசுதல் அல்லது அது சரியில்லை இது சரியில்லை என்று குறை கூறுதல்.

உதாரணம்: இவன் எப்ப பாத்தாலும் லொட்டு லொசுக்குன்னு ஏதாவது சொல்லிட்டே இருக்கான்.

நோணா வட்டம்

எதைச் செய்தாலும் அதில் ஒரு குறை கண்டுபிடிப்பது.

உதாரணம்: எப்போவுமே நோணா வட்டம் சொல்றதுதான் உன் பொழப்பே.

மேடு பள்ளம்

உதாரணம்: போகும்போது வழியில் மேடு பள்ளம் பார்த்துச் செல்.

காடு மேடெல்லாம்

காடு, அங்கு உள்ள மலைக் குன்றுகள், பாறைகள் மற்றும் மேட்டுப் பகுதிகள்.

உதாரணம்: காடு மேடெல்லாம் திரிஞ்சி ஆடு மேய்ப்பதுதான் என் வேலை.

அரை குறையாக

சரிவரச் செய்யாமல்.

உதாரணம்: அரைகுறையா கேட்டத வச்சி என்ன பத்தி தப்பா பேசாத.

ஏறக் குறைய / ஏறத் தாழ

தோராய மதிப்பீடு.

உதாரணம்: இன்று ஏறத் தாழ 1000 பேர் பதிவு செய்துள்ளனர்.

கஷ்ட நஷ்டம்

பிரச்சினைகள்.

உதாரணம்: தந்தை படும் கஷ்ட நஷ்டத்தைப் பிள்ளைகளுக்குக் கூறி வளர்க்க வேண்டும்.

வழ வழ கொழ கொழன்னு

உதாரணம்: வழ வழ கொழ கொழன்னு பேசாத.

தெளிவு இல்லாமல் மற்றும் சம்பந்தம் இல்லாமல் பேசுதலைக் குறிக்கிறது.

மேலும் கீழும்

ஒரு செயலைச் செய்ய யோசித்தல்.

உதாரணம்: ஒரு சின்ன வேலைதான் கொடுத்தேன். அதற்கே அவன் மேல கீழ பார்க்கிறான்.

ஏற இறங்க

நோட்டம் போடுதல்.

உதாரணம்: நான் அந்த வீட்டில் நுழைந்தவுடன் அனைவரும் நான் புதிதாக இருந்ததால் என்னை ஏற இறங்க பார்த்தனர்.

பிக்கல் பிடுங்கல்

தொந்தரவு, இடைஞ்சல்.

உதாரணம்: நீ கல்யாணம் பண்ணிக்கப் போற பையனுக்கு நிறைய சொத்து இருக்கு. அம்மா இல்ல. அக்கா தங்கச்சி இல்ல. அதனால மாமியார், நாத்தனார் தொந்தரவுகள் இல்லை. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை.

மூக்கும் முழியுமா

பெண்ணின் அழகை குறிக்கப் பயன்படுகிறது.

உதாரணம்: அந்தப் பொண்ணு மூக்கும் முழியுமா அழகா இருக்கா!

நேந்து நெதானிச்சி

உதாரணம்: வார்த்தையை விடாதே. நேந்து நெதானிச்சி பேசு.

அதாவது வார்த்தைகள் வந்த வேகத்தில் தவறாகப் பேசாமல் தெளிவாக என்ன பேசப்போகிறோம் என்று யோசித்து நிதானத்துடன் பேச வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

திடு திப்புன்னு

திடீரென்று.

உதாரணம்: திடு திப்புன்னு இவ்வளவு பணம் கேட்டால், நான் எங்கே போவேன்?

நேந்தா நேந்த

கண்மூடித்தனமாக.

உதாரணம்: அடப் பாவி! நேந்தா நேந்த வாகுல இவன அடிச்சி ரெண்டு பல்லு விழுந்திடுச்சி பாருடா!

வாட்டஞ் சாட்டமா

பராக்கிரமசாலி போன்று.

உதாரணம்: அவன் வாட்டஞ் சாட்டமா இருக்கான்.

சூடு சுரணை

ரோஷம்.

உதாரணம்: அவன் உன்னை அவ்வளவு அவமானப்படுத்தினான். ஆனால், நீ சூடு சுரணை இல்லாமல் மறுபடியும் அவன் கூடப் பேசுகிறாய்?

கள்ளம் கபடம்

திருட்டுத்தனம் மற்றும் கெட்ட எண்ணம்.

உதாரணம்: அவன் கள்ளம் கபடில்லாத தங்க மனசுக்காரன்.

தப்பித் தவறி

உதாரணம்: தப்பித் தவறி என் வீட்டிற்கு வந்தால் உன்னை அங்கேயே கொன்றுவிடுவேன்.

எதேர்ச்சையாகக் கூட அல்லது தெரியாமல் கூடச் செய்யக்கூடாதவற்றை தப்பித் தவறி என்பதை வைத்துக் கூறலாம்.

ஏறு மாறல்

பொருந்தாமல்.

உதாரணம்: இந்தக் குடுவையின் மூடியை ஏறு மாறலாக மூடியிருக்கிறாய்.

மட்டு மரியாதை

மதிப்பு.

உதாரணம்: அந்தச் சிறுவன் பெரியவர்கள் என்ற மட்டு மரியாதை கூட இல்லாமல் வாடா! போடா! என்று பேசுகிறான்.

எசக்க பிசக்க

நடக்கவேண்டியது வேறு விதமாக நடத்தல்.

உதாரணம்: இந்த விஷயம் மட்டும் எசக்க பிசக்க ஆச்சின்னா என் வேலையே போய்விடும்.

ஏடா கூடமா

விபரீதமாக.

உதாரணம்: இப்படி ஏடாகூடமா ஏதாவது நடக்குமென்று தெரிந்துதான் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என்று சொன்னேன்.

எடக்கு முடக்கு

உதாரணம்: இவன் எப்பவுமே எடக்கு முடக்காத்தான் பேசுவான்.

அதாவது எப்போதுமே ஒரு குதர்க்கமாக ஒரு முரண்பாடோடு பேசுதல்.

குண்டக்க மண்டக்க

உதாரணம்: நாங்க என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீ என்ன குண்டக்க மண்டக்க பேசற?

அதாவது சம்பந்தம் இல்லாமல் பேசுதல் என்று அர்த்தம்.

கொஞ்சம் நஞ்சம்

இருந்ததில் கடைசியாக மிச்சம் இருப்பது.

உதாரணம்: இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இப்படி காற்றில் பறக்கவிட்டு வந்திருக்கிறாயே?

மிச்சம் மீதி

பயன்படுத்தியதில் மீதி இருப்பது.

உதாரணம்: நீங்கச் சாப்பிட்ட மிச்ச மீதிய குப்பையில கொட்டாம தெரு நாய்களுக்குப் போட்டாக்கூட சாப்பிடுங்க.

மழ கிழ

இதில் மழ என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. ஆனால், கிழ என்பதற்கு அர்த்தம் இல்லை. இருந்தாலும் சொற்றொடரில் ஒரு அழுத்தம் கொடுக்க இவ்வாறு சொல்லப்படுகிறது.

உதாரணம்: துணி காயப்போட்டிருக்கிறேன். மழ கிழ வராம இருந்தா நல்லா இருக்கும்.

சூது வாது

சூது என்பது திருட்டுத்தனம். வாது என்பது வர்மம்.

உதாரணம்: இவன் சூது வாது தெரியாமல் இன்னமும் சின்னப்பிள்ளை போன்றே இருக்கிறான்.

தோண்டித் துளங்கி

மிகவும் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு.

உதாரணம்: இப்பதான் தோண்டித் துளங்கி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள மின்சாரம் போய்விட்டதே!

கேட்டுக் கேள்வி

உதாரணம்: கேட்டுக் கேள்வி இல்லாம நீ பாட்டுக்கும் ஆளுக்கு ஒரு இலட்சம் கொடுப்போம் என்று வாக்கு குடுத்திட்ட. உங்கிட்ட இருக்கு, எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே?

நாம் சொல்வதை கேட்கவும் இல்லை, கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இல்லை.

சொல்லிக் கில்லி

பேசி வைத்துக்கொள்ளுதல்.

சொல்லி என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. கில்லி எனபது ஒரு சொற்சுவைக்காகக் கூறப்படுகிறது.

உதாரணம்: அந்தப் பெண் என்னிடம் சரியாகப் பேசவில்லை. என்ன பத்தி அவளிடம் ஏதாவது தவறா சொல்லிக் கில்லி வச்சிருக்கியா?

குற்றம் குறை

இரண்டுமே ஒரே அர்த்தம்தான். இருந்தாலும் மோனை வர இவ்வாறு கூறுகிறோம்.

உதாரணம்: பிறரிடம் உள்ள உள்ள குற்றம் குறைகளைப் பொறுத்து அனைவரையும் நமது நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

சுத்த பத்தம்

உதாரணம்: சுத்த பத்தம் இல்லையென்றால் நமக்குப் பல நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.

வாயும் வயிறுமா

உதாரணம்: வாயும் வயிறுமா இருக்கிற புள்ளைய அடிக்காதே.

பெண்கள் கற்பமாக இருக்கும்போது அவர்களுக்கு வாய்க்கு ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் அவர்கள் பெரிய வயிறோடு இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் வாயும் வயிறுமாக இருக்கிறார்கள் என்கிறோம்.

கூட மாட

மாட என்பதற்கு அர்த்தம் இல்லையென்றாலும் எதுகை வரக் கூறப்படுகிறது.

உதாரணம்: கூட மாட ஒத்தாசையா இருந்தா என்ன?

சேதி கீதி

உதாரணம்: இந்தியா வென்றதா? தோற்றதா? ஏதாவது சேதி கீதி தெரிஞ்சுதா?

கரா முரான்னு

ஒழுங்கற்ற நிலை.

உதாரணம்: இந்த அறையில் புத்தகங்கள் கரா முரான்னு சிதறி கிடக்கிறது. ஒழுங்காக அடுக்கி வை.

குய்யோ முய்யோன்னு

இரண்டு சொற்களுக்குமே அர்த்தம் இல்லை. இருந்தாலும் பயன்படுத்தும்போது அர்த்தம் தருகின்றன.

உதாரணம்: சண்டையில் அனைவரும் குய்யோ முய்யோன்னு கத்தினார்கள்.

பதறி அடிச்சி

மனம் பதைத்து.

உதாரணம்: உனக்கு விபத்துன்னு கேள்விப்பட்ட உடனே நான் பதறி அடிச்சி ஓடியாந்தேன்.

அரக்க பறக்க

அவசரமாக.

உதாரணம்: நேரம் இல்லை, வேலையை அரக்க பறக்க முடி.

அலைந்து திரிந்து

உதாரணம்: ஒரு வேலை வாங்க எவ்வளவு அலைந்து திரிய வேண்டியதா இருக்கு!

மூலை முடுக்கெல்லாம்

எல்லா இடங்களிலும்.

உதாரணம்: மூலை முடுக்கெல்லாம் தேடிவிட்டேன். அந்தச் சாவி கிடைக்கவில்லை.

கையும் களவுமாக

நேரடியாக ஒரு செயலில் அகப்படுவது.

உதாரணம்: திருடன் கையும் களவுமாகப் பிடிப்பட்டான்.

அக்கம் பக்கம்

சுற்றுசூழல்.

உதாரணம்: பேசும்போது அக்கம் பக்கம் பார்த்துப் பேச வேண்டும்.

தில்லு முல்லு

இதற்கு அர்த்தம் கொடுக்கவேண்டியதில்லை.

உதாரணம்: அவன் தில்லுமுல்லு செய்தே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஒருநாள் கண்டிப்பாக அவன் வருந்துவான்.

ஏகப் பட்ட / ஊர் பட்ட

மிகுதியாக.

உதாரணம்: உனக்கு ஊர் பட்ட பொடவை இருக்கு. இருந்தாலும் இன்னும் வேணுமா?

எக்கச் செக்கம்

அதிகமாக.

உதாரணம்: இன்னைக்கு அது இது என்று பார்ப்பதையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டேன். எக்கச் செக்கமா செலவாயிடுச்சி.

தவிடு பொடி

துவம்சம் செய்தல்.

உதாரணம்: எதிரிகளின் திட்டங்களை அவன் தவிடு பொடியாக்கிவிட்டான்.

தமிழின் சுவாரசியம் தொடரும்…


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments

  1. devadass snr ஜூலை 25, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading