அவர் ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை. பள்ளி சென்றால் தன்னையும் தன் குடும்பத்தையும் கூட நினைக்க மறந்துவிடுவார். அந்த அளவுக்குப் பள்ளிமீதும் மாணவர்கள்மீதும் அக்கறை. பள்ளி நேரத்தைத் திருடமாட்டார்.
அவருக்கு ஆங்கிலத்தில் தனித்திறமை உண்டு. கவிதைகளும் எழுதுவார், கட்டுரைகளும் எழுதுவார். அழகான ஆங்கிலம் பேசுவார். அதனால் மாணவர்களுக்கும் அவர்மீது கூடுதல் பற்றுதான்.
சரி, கதைக்கு வருவோம்.
அவர் ஒருநாள் 7-ம் வகுப்பு மாணவர்களைப் பார்வையிடச் சென்றார். மணிகண்டன் என்ற பையன் வகுப்பில் முதல் மாணவன். அழகும், அறிவும், பணிவும் ஒரு சேர, தூய்மையான உடைகளை உடுத்தி மிடுக்காக இருந்தான். இவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளைச் சரியாகப் புரிந்துகொண்டு மிகச்சரியாக விடைகளைக் கூறினான்.
மற்ற மாணவர்களைவிட இவனிடம் இருந்த சுறுசுறுப்பு, பணிவு எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒருசில வாரங்கள் கழித்து அதே வகுப்பிற்கு HM சென்றபோது, கணக்குகள் தந்து சோதித்துப் பார்த்தார். அதிலும் அவன்தான் முதலிடம். குறிப்பாகச் சொன்னால் எல்லாப்பாடத்திலும் கெட்டிக்காரனாக இருந்தான். HM அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகத் தந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது உதவி ஆசிரியர்களிடம் இவன் வீட்டிற்கு மட்டும் அல்ல, நாட்டிற்கும் ஒரு சொத்துதான் என்றார்.
ஆனால், அவரது போராத காலத்தால் உடல்நிலை சரி இல்லாமல் ஆகி (ஒரு விபத்தின் காரணமாக) ஒரு மாதத்திற்கு அப்புறம்தான் மீண்டும் பள்ளிக்கு வந்தார்.
HM அன்று எல்லா வகுப்புகளும் சரியாக நடைபெறுகிறதா என்று பார்க்கச் சென்றார். அப்படிச் சென்றபோது மணிகண்டனையும் பார்க்கத் தவறவில்லை. பார்த்த அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏனெனில், கணித ஆசிரியர் அவனிடம் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.
HM அவரிடம், “Sir, நீங்க உங்க மாணவர்களின் திறன் பதிவேட்டினை office roomலிருந்து எடுத்துவாருங்கள்” என்றார். அவர் எடுக்கச் சென்றார்.
“மணிகண்டன், உனக்கு என்ன ஆச்சி?”
பதில் இல்லை.
“ஏன் இப்படி அழுக்கா வந்திருக்க?”
பதில் இல்லை.
“தலை சீவாமல் வந்திருக்காயே! என்னாச்சி?”
சோகம் மட்டும்தான், பதில் இல்லை.
குழுப் பதில் HM க்கு பிடிக்காது. அதுவரை பொறுமையாக இருந்த மாணவர்கள், “Teacher, அவன் அம்மா மருந்து குடிச்சிட்டாங்க! ஆஸ்பத்திரியில இருக்காங்க!” என்றார்கள்.
“சரி, இங்க வா.” என்று ஆதரவோடு அவனை அழைத்தார். எத்தனை நாள் ஆனது என்று வினவினார்.
“ஐந்து நாள் ஆகிறது” இதுவும் மாணவர்களிடமிருந்து வந்த பதில்தான். ஆனால், அவனிடமிருந்து கடைக்கண்ணில் வடிந்தது கண்ணீர். HM அவனுக்குத் தைரியம் சொல்லி ஆறுதல்படுத்தினார். அவன் முகம் மலரும் அளவிற்கு தைரியம் சொன்னார்.
“இனி அழாதே, எதுவாக இருந்தாலும் பார்க்கலாம். உன் பாட்டி கொடுக்கிற சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு. உன்னை அடுத்த வருடம் Trust பள்ளியில் சேர்த்துவிடுகிறேன். உன்ன அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்.” என்றார்.
ஒரு மாணவனை அழைத்து “நீயும் இவனுடன் வீட்டிற்கு சென்று, இவன் குளித்து உடை மாற்றியபின்பு அழைத்து வா.” என்று மணிகண்டனுடன் அனுப்பினார்.
கணித ஆசிரியர் கொண்டுவந்த திறன் பதிவேட்டைப் பார்த்து அவன் தாய் செவிலியர் வேலைப் பார்க்கிறாரெனத் தெரிய வந்தது.
அடுத்தநாள், பிற்பகல் இரண்டரை மணிக்கு HM தனது எழுத்து வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, “வணக்கம் madam” என்னும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். முகத்தைப் பார்த்து யூகித்த அவர், “மணிகண்டனின் அம்மாவா?” என்று கேட்டார்.
“ஆமாம் madam. பையன் சொன்னான், என்னைப் பார்க்கணும்னு சொன்னிங்களாமே?” என்றார் அந்தப் பெண்.
“கதவுக்கருகில் நிற்பவர் யார்?”
“அவர்தான், என் புருஷன்”
அலட்சியம் தெரிந்தது அவள் பேச்சில்.
“ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வந்து அமருங்கள்”
அந்தப் பெண்ணை “ஏன் விஷம் சாப்பிட்டாய்?” என்று கேட்டார்.
அதற்கு அவள் சொன்ன பதில், “என் கூட இருக்காதீங்க, என்னைவிட்டுப் போங்க என்று சொன்னேன்; என் புருஷன் மறுத்தார். அதனாலதான் விஷம் குடிச்சேன்.”
“ஏன் அவ்வாறு கூறினாய்? உன்னைக் கொடுமைப்படுத்தினாரா?”
“இல்லை.”
“உன்னை அடிக்கிறாரா?”
“இல்லை”
“குடிக்கிறாரா?”
“இல்லை”
“வேறு பெண்ணுடன்…?”
“அதெல்லாம் இல்லீங்க.”
“பின் ஏன்? உனக்குப் பைத்தியமா?”
அவள் சொன்ன பதில்,
“என் அம்மா எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. அவர கலியாணம் பண்ணிக்கணும். அதனால்தான் என் கணவரை என்னைவிட்டு போகச்சொன்னேன்.”
HMக்கு தூக்கிவாரிப் போட்டது…..
எழுந்து கோபமாக, “நீயெல்லாம் ஒரு பொம்பளையா? ஒரு கணவன் இருக்கும்போது இன்னொருவனுக்கு ஆசைப்படுறியே! உன் கணவர் என்னாவது?”
அவள் – “அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் அம்மா, அவங்க பார்த்த மாப்பிள்ளையைக் கலியாணம் செய்யச் சொல்றாங்க. நான் அவர கலியாணம் பண்ணிக்கப்போறன்.”
HM மணிகண்டனை வரவழைத்து அவளிடம் கேட்டார். “இவன் உன் மகன்தானே?”
“ஆமாம். வசதியான ஒருவரைத்தான் எங்கம்மா எனக்குப் பாத்து வச்சிருக்காங்க. அவர் இவன சொந்தப் பிள்ளையைபோல் பார்த்துக்கிறேன்னார்.”
“அப்போ! இவர் எந்தப் பையன பார்ப்பாரு?”
“இவரு, இவனுக்கு அப்பா இல்ல.”
“இதென்ன, கொழப்பமான குடும்பமா இருக்குதே!” என்று எண்ணிய HM செய்வதறியாது நின்றுகொண்டிருந்தார்.
ஆனால், அங்குப் பரிதாபமாக நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர் பேசத்தொடங்கினார்.
“Madam, இவளுக்கு நான் நான்காவது கணவன்.”
அதிர்ந்த HM “உலக சாதனை இல்ல! ரொம்ப பெருமையா சொல்றீங்க?” என்று கேட்டார்.
அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள்.
“ஆமாம், madam. எங்க வீட்ல என் அம்மா சொல்றததான் கேட்பேன். முதல் புருஷன் என் அம்மாவைப் பார்த்துப் பயந்து ஓடிட்டார். இரண்டாவது புருஷனை நாங்கள் வேண்டுமென்றே துரத்திவிட்டோம்.”
“ஏன்?”
“அவர் வெளிநாட்டிலிருந்து நிறைய பொருள் கொண்டுவந்திருந்தார். கட்டிகிட்டேன். எல்லாம் தீர்ந்த பிறகு அவரை அனுப்பிவிட்டோம். சொத்து பத்து இல்லாதவர் வேண்டாம் என்றார் என் அம்மா.”
சிறிது கூட அசிங்கப்படாமல் பேசும் பெண்ணைப்பார்த்து முகம் சுளித்தார் HM. அதை அவள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்தாள்.
“மூனாவது புருஷன் எங்கள் தெருவேதான். நாங்கள் இருவரும் விரும்பி ஒரு கோயில்ல கலியாணம் பண்ணிக்கிட்டோம். எங்க அம்மாவுக்குப் பயந்து நெய்வேலிக்கு சென்று குடியிருந்தோம். அவருக்குப் பிறந்ததுதான் மணிகண்டன்.”
இதுவரை அமைதியாக இருந்த அந்தப் பெண்ணின் தற்போதைய கணவர் கதையைத் தொடர்ந்தார்.
“Take it easy policy கொண்ட மக்களோ இவர்கள்”, என்று எண்ணிய HM, தன் மாணவனான மணிகண்டனுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று, பொறுமையாக அவர்களது கதையைக் கேட்டார்.
“Madam, இவள் தன் கணவனுடன் என் வீட்டில்தான் குடியிருந்தாள். ஒரு தட்டிதான் எங்கள் இரு குடும்பத்திற்கும் நடுவில் தடுப்பாக இருந்தது. அப்படி இருக்கும்போதுதான் இவளைப் பார்த்து விரும்பினேன். இவளுக்கும் என்மேல் விருப்பம். அதனால்தான் இவள் தன் கணவனையும் நான் என் மனைவியையும் விட்டுவிட்டு இங்கு வந்து குடியிருக்கிறோம். மூன்று வருடத்திற்கு பிறகு இவள் என்னை வேண்டாம் என்கிறாள். என் குழந்தை இவள் வயிற்றில் இருக்கிறது. அதைக் கலைத்துவிட்டு இன்னொரு ஆளுக்கு ஜோடி சேர்க்கப் பார்க்கிறார்கள்.” என்று சொன்னவர் கண்கள் கலங்கத் தொடங்கினார்.
“இவளை நம்பி என் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு வந்துட்டேன். கொலுத்து வேல செய்து சேத்து வச்ச பணத்த முழுசா இவள காப்பாத்த ஆஸ்பத்திரியில அழிச்சிட்டேன். இவள இதுவரை சந்தோசமாகத்தான் வைத்திருக்கிறேன். இவள என்னால பிரிஞ்சு வாழ முடியாது. நடந்தது நடந்துபோச்சி. இவள இனிமேலும் கண்கலங்காமல் வச்சி காப்பாத்துறேன். வேற கலியாணம் பண்ணிக்கவேண்டாம்னு சொல்லுங்கள். மணிகண்டன என்ன அப்பான்னு கூப்பிடச்சொல்லுங்க.” என்று கெஞ்சினார்.
மணிகண்டனும் அவர் தன்னிடம் அன்பாக இருப்பதைக் கூறி அம்மாவும் பாட்டியும்தான் அவ்வாறு கூப்பிட தடையாக இருந்தார்கள் எனவும் கூறினான்.
எல்லாக் கதையையும் பொறுமையாகக் கேட்ட HM அந்தப் பெண்ணின் மீது ஏற்பட்ட வெறுப்பை ஒதுக்கிவிட்டு, நிதானமாகக் கடிந்துகொண்டார்.
“அவருக்கு நீ இரண்டாவது மனைவி. ஆனால், உனக்கு அவர் நான்காவது கணவ்ர். நீயெல்லாம் பொண்ணாயிருக்க தகுதியே இல்ல. இவ்வளவு படிச்சிருக்க. இப்படி புடவையை மாற்றுகிற மாதிரி புருசன மாற்றுகிறாய்! உன் அம்மா பேச்சைக் கேட்டு நீ நடுத்தெருவிற்குத்தான் வரப்போற. உன்னை ஆஸ்பத்திரியில பாத்துக்கிட்டது யார்?”
“நான்தான்” என்று அவளுடைய தற்போதைய கணவர் கூறினார்.
அந்த ஆள் ஒரு முறை தவறி இருந்தாலும் உண்மையான பற்று அவள்மீது கொண்டதை அவளுக்கு எடுத்துக்கூறி திருந்தி வாழும்பாடி கடிந்துகொண்டார் HM.
“இதுக்குமேலும் நீ இப்படித்தான் இருப்பேன் என்றால், நீ ஒரு மிருகத்தைவிட கேவலமான பிறவி. உன்னைப் பார்த்தால் உன் மகன் கெட்டுவிடுவான். ஒரு நல்ல மாணவனின் வாழ்க்கை வீணாகக் கூடாது. அவனை என்னிடம் கொடுத்துவிடு. நான் அவனை trustல் சேர்த்து அவனை நல்லவனாக வளர்த்து, ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை அவனுக்குக் கொடுக்கிறேன்.”
HM-ன் அறிவுரை, கரிசனையான பேச்சு ஏதோ ஒரு விதத்தில் அவளைத் தொட்டது. திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் “சரி, madam. நீங்க சொல்றபடியே இவருடனேயே வாழ்கிறேன்” என்று சம்மதித்தாள். அவளது கணவனுக்கு முகம் மலர்ந்தது. இருவரும் HM-க்கு நன்றி கூறி சென்றார்கள். மணிகண்டனும் வகுப்பிற்கு சென்றான்.
அடுத்த நாள் முதல் அவனிடம் பழைய முகமலர்ச்சி தெரிந்தது. சில நாட்களில் அவன் பழை கெட்டிக்கார மணிகண்டனானான். அதிலிருந்தே அவனது அம்மாவும் அவளது கணவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் HM.
இரண்டு மாதத்திற்கு பின்பு அந்த இருவரும் மணிகண்டனுடன் ஒன்றாக வந்து, பழனி கோயிலுக்குச் செல்ல இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள்.
அப்போது, அவள், “Madam, இவருடன் நான் சந்தோஷமாக இருக்கேன். என் அம்மா பேச்சைக் கேட்பதில்லை. உன் சகவாசமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.” என்றாள்.
அவளுடைய கணவனும் “ரொம்ப நன்றி madam” என்றார். உங்களது உதவியை என்றும் மறக்கமாட்டேன் என்றது அவரது பார்வை.
அதன்பிறகு என்ன ஆச்சின்னு கேட்கிறீங்களா? அந்த HM தனது சொந்தவூருக்கு அருகில் மாறுதலானதால் தொடர்பில்லையாம்.
மாணவர்கள் நன்கு படிக்க அவர்களது குடும்ப சூழல் நன்றாக இருக்க வேண்டும். வெறுமனே பாடத்தை நடத்துவது மட்டும் ஆசிரியர்களின் வேலை அல்ல. ஒவ்வொரு மாணவனும் எப்படி படிக்கிறான் எப்படி நடந்துகொள்கிறான் என்பவைகளை ஆசிரியர்கள் கவனித்து வர வேண்டும். அவனது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால், காரணத்தைக் கண்டுபிடித்து அவனைத் திருத்துவதும் ஆசிரியர்களின் கடமை.
கிராமப்புற பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த உண்மைக் கதையில் வந்ததைப் போன்று சில சவால்களும் இருக்கத்தான் செய்கிறது.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
இதைப்படிக்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது
ஆனால் இப்படியும் இருக்கிறார்களே ?
tha.ma 1
ஆசிரியருக்கு என் வணக்கங்கள்!
நல்ல ஆசிரியர்! இது போன்றவர்களால்தான் நல்ல மாணவர்களை உருவாகிறார்கள்! நன்றி!
அரசு பள்ளியில் பயிலும் சில மாணவர்களின் குடும்ப நிலை இப்படியும் இருப்பதை நான் அறிவேன். பாவம் அந்தக் குழந்தைகள் அவரகளுக்கு எப்படி படிப்பில் கவனம் செல்லும்.? ஆசிரியர்களுக்கு இவ எல்லாம் ஒரு சவால்தான்.