குறிப்பு: இங்கு என்னாங்க என்பது செய்தால் என்ன?, ஏன் செய்யக் கூடாது?, ஏன் செய்யத் தவறுகிறீர்கள்? என்ற அர்த்தங்களில் வருகிறது. என்னங்க என்பது ஒரு செயலைச் செய்யப் பல நல்ல மாற்று வழிகள் இருக்கும்போது தவறான வழியை ஏன் கையாளுகிறீர்கள்? என்னும் அர்த்தத்தில் வருகிறது.
கேட்டா என்னாங்க?
கண் முன்னே தவறு நடக்கும்போது அதைத் தட்டிக்கேட்டா என்னாங்க?
சொன்னா என்னாங்க?
நண்பர்களது குறைகளைச் சுட்டிக்காட்ட நாசுக்காகச் சொன்னா என்னாங்க?
பார்த்தா என்னாங்க?
சக மனிதர்கள் அனைவரையும் சமம் என்றும், மனிதர் அனைவரும் ஓர் குலம் என்றும், அவர்களை அன்போடு பார்த்தா என்னாங்க?
உதவினா என்னாங்க?
கஷ்டப்படுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்தால் என்னாங்க?
அழுதா என்னாங்க?
பிறரது வேதனையைப் பார்த்துச் சிரிக்காமல் அவர்களுக்காக நாமும் கொஞ்சம் அழுதா என்னாங்க?
சிரிச்சா என்னாங்க?
கஷ்டம் வரும்போது அதிலேயே மூழ்கிவிடாமல் வள்ளுவர் சொன்னது போன்று மனம் விட்டுச் சிரிச்சா என்னாங்க?
மன்னிச்சா என்னாங்க?
ஒருவர் உங்களுக்குக் கெடுதல் செய்துவிட்டார். அது மன்னிக்கமுடியாத கெடுதலாக இருந்தாலும், அவர்களே மிக வருந்தி மன்னிப்பு கேட்கும்போது மன்னிச்சாதான் என்னாங்க?
உழைச்சா என்னாங்க?
உழைப்புதான் உயர்வைத்தரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நமது தேவைக்கு ஏற்றாற் போன்று உழைச்சா என்னாங்க?
பகிர்ந்தா என்னாங்க?
ஒரு பயணத்தின்போது அல்லது ஒரு பொது இடத்தில் சாப்பிட வேண்டிய நிலை வரும்போது அருகில் உள்ளவரை யாரோ என்று நினைக்காமல் அவருக்கும் தன்னிடம் உள்ள உணவின் ஒரு பகுதியைப் பகிர்ந்தா என்னாங்க?
பாராட்டினா என்னாங்க?
ஆங்கிலத்தில் சொல்வார்கள். “A word to the living is worth a cataract of tributes to the dead”. அதாவது ஒருவர் உயிரோடு இருக்கும்போது விட்டுவிட்டு அவர் இறந்தபிறகு அவரைப் பற்றிப் புகழ்வது, அவருக்குக் கோயில் கட்டுவது போன்ற செயல்களையெல்லாம் செய்வதால் என்ன பயன்? அதனால், அவர் வாழும்போதே சரியான நேரத்தில் அவர்களை ஊக்குவிக்க, அவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டினா என்னாங்க?
மறந்தா என்னாங்க?
வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டம் நஷ்டம், துக்கம் துயரம், தோல்விகள், அடுத்தவர் நமக்குச் செய்த துரோகம் இவை எல்லாவற்றையும் மனசுக்குள்ளே வச்சி புழுங்கிக்கிட்டு இருந்தா என்னாங்க ஆகப்போகுது? அவற்றையெல்லாம் மறந்தா என்னாங்க?
அமைதியா இருந்தா என்னாங்க?
ஒருவர் உங்களிடம் சண்டைக்கு வரும்போது அவர்களிடம் பதிலுக்குப் பதில் வார்த்தை விடாமல் விட்டுக்கொடுத்துப் பிரச்சினையைத் தவிர்க்கத் தீர்வாக இருக்கும் அமைதியை கடைபிடிச்சா என்னாங்க?
நினைச்சா என்னாங்க?
குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ நம்மில் உள்ள கெட்ட குணங்கள் மற்றும் நல்ல குணங்களை சிந்தித்துப்பார்த்து, கெட்ட குணங்களை ஒதுக்கவும், நல்ல குணங்களை மேம்படுத்தவும் நினைச்சா என்னாங்க?
சோதிச்சா என்னாங்க?
ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்முன், அன்று என்ன நல்ல காரியங்கள் செய்திருக்கிறோம், எப்படி நேர்மையாக வாழ்ந்திருக்கிறோம், எத்தனை பேருக்கு உதவியிருக்கிறோம், எவ்வளவு தீமை செய்திருக்கிறோம் என்று நம்மையே சோதிச்சா என்னாங்க?
ரசிச்சா என்னாங்க?
இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு அங்கமும் நமக்கு ஒரு செய்தியைச் சொல்ல வருகின்றன. அந்தச் செய்தியைக் கிரகிக்க இயற்கையை ரசிச்சா என்னாங்க?
நின்னா என்னாங்க?
உண்மை, அன்பு, நேர்மை, உழைப்பு, மனிதநேயம், கடமை, கண்ணியம், கட்டுபாடு இவை போன்ற நல்ல கொள்கையில் விடாப்பிடியாக, உறுதியாக நின்னா என்னாங்க?
கலங்கினா என்னங்க!
வாழ்கையில் மேடு பள்ளமும், கஷ்ட நஷ்டமும் இருக்கத்தான் செய்யும். அதைப்பார்த்து கலங்கினா என்னங்க!
வாழ்ந்தா என்னாங்க?
‘வாழ்க்கை என்பது ஒருதரம். அது நமக்கு ஒரு பெரும் வரம். உணர்ந்து வாழ்வோம் அனைவரும்.’ என்னும் பொன்மொழியில் கூறியதை கடைபிடித்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால் என்னாங்க?
சும்மா இருந்தா என்னங்க!
இந்த இடுகையைப் படிச்சிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டம் இடாமல் சும்மா இருந்தா என்னங்க!
என்னங்க… தீபாவளி நல்வாழ்த்துக்கள தெரிவிச்சிக்கிறேனுங்க.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! – மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கு நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.