Bride_and_Groom.png

அன்றும் இன்றும் – ஒப்பிட ஒரு சிறுகதை

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ பட்டிமன்றம் வைக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கான சிந்தனை. அன்று திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவும், இன்று திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு அழைப்பு.

Bride_and_Groom.png

60 வருடங்களுக்கு முன்பு கிராமங்களுக்குப் போக்குவரத்து வசதி கிடையாது. சுமார் 5 to 7 மைல் நடந்து போய்தான் பேருந்தில் பயணம் செய்ய முடியும்.

லூர்து மேரியின் ஊர் இளையாங்கண்ணி. அவள் ஊரில் அவளுக்குப் பெயர், “ரவிக்க காரிச்சி’. அந்த ஊரிலேயே முதன் முதலில் ரவிக்கை அணிந்ததால் லூர்துவுக்கு இந்தப் பேர் வந்தது. அவர்கள் ஊருக்கும் மூங்கில் துறைப்பட்டுக்கும் 5 மைல் தூரம். மூங்கில் துறைப்பட்டுக்குச்‌ சென்றுதான் வேண்டுகிற பொருள் வாங்கிவர முடியும். 99% பேர்க்கு நடைவண்டிதான். மீதி 1% பேர்தான் அந்தக் கிராமத்திலேயே அதிஷ்டசாலிகள். அவங்க யாருமில்லங்க, சைக்கிள் வச்சிருந்தவங்கதாங்க. அப்படின்னா? சைக்கிள் வச்சிருக்கவங்கதாங்க கிராமத்துல பணக்காரங்க.

லூர்து 16 வயது பெண்ணாயிருந்தபோது, மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாகச் சேதி தெரிந்த நபர்மூலம் வந்தது. எல்லோரும் தயாராகி மாப்பிளை வீட்டார் வருகையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சைக்கிளில் ஒருவன் அவர்கள் தெருவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பலமுறை சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். லூர்துவின் வீட்டைப் பார்த்துக்கொண்டே பலமுறை சைக்கிளில் வட்டம் அடித்துக்கொண்டு பந்தா காமித்துக்கொண்டிருந்தான். ஊரில் உள்ள அனைவரும் அவனையே ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவன் மட்டும் லூர்துவின் வீட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

லூர்துவின் அப்பா ஊரின் பெரிய மனிதர்களில் ஒருவர் என்பதால், அவனைக் கூப்பிட்டு “தம்பி உடம்பு எப்படி இருக்கு? நீ எந்த ஊரு? இங்க என்ன வேலை?” என அதட்டிக் கேட்டார். அதற்கு அவன் “ஐயா! நான்தான் உங்க பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை. என் சொந்தக்காரங்கயெல்லாம் நடந்து வராங்க. நான் சைக்கிள் வச்சியிருப்பதால முன்னாடியே வந்துட்டேன்.” எனக்கூறினார்.

“பெற்றோருடன் வராம அவங்க வருவதற்கு முன்பாகவே வேவு பார்க்க வந்திருக்கயே அது தப்பு. சரி, பரவாயில்லை. நேராக வீட்டிற்கு வரவேண்டியதுதானே? அதவிட்டுட்டு போக்கிரி மாதிரி வலம் வந்தியே அது பெரியத் தப்பு. உனக்கு என் பெண்ணைத் தர முடியாது. ஓடிப்போயிடு!” என்றாராம் லூர்து மேரியின் அப்பா.

சைக்கிளில் சுற்றிச் சுற்றி எல்லார் கவனத்தையும் ஈர்க்க நினைத்த அவரின் பந்தா அவருக்கே தடையானது. தோல்வி உணர்வுடன் திரும்ப நினைத்தபோது மாப்பிளை வீட்டார் வந்தனர். “நாங்கதாங்க பையனை அனுப்பியிருந்தோம்” என்றனர்.

ஆனால் பெண் வீட்டார் “எங்க குடும்பத்துக்குன்னு ஒரு மரியாத இருக்கு. ஆனா, இவன் சரியான பந்தா காட்டுபவனா இருக்கான். எங்க குடும்பத்தின் சிறப்பை அறியாத உங்க பையனுக்குப் பெண் தர முடியாது. நீங்க கிளம்பலாம்.” என்று கூறி மாப்பிள்ளை வீட்டரை அனுப்பிவிட்டனர். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் முகம் வாடிச் சென்றார்கள்.

அடுத்த இரண்டு நாள் கழித்து 10 பேர் 5 சைக்கிளில் வந்து இறங்கினார்கள். பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினார்கள்.

அறிவிப்பு இல்லாமல் வந்தது பற்றிக் கேட்டதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் பெண் பார்க்க வந்தவர்கள் அவர்கள் ஊர்தான் என்றும், மாப்பிளை பந்தா காட்டியதால் வேண்டாமென்று கூறியதைக் கேள்விப்பட்டதாவும் கூறினர். அதனால், அவர்கள் குடும்பம் கண்டிப்பாக நல்ல குடும்பமாகத்தான் இருக்கும் என்று பெண் பார்க்க வந்ததாகவும் கூறினர்.

பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை முகமலர்ச்சியுடன் அழைத்தனர். மாப்பிள்ளை ஒரு விவசாயி. அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தது அவர்கள் பேச பேச நினைவுக்கு வந்தது. இப்படிப்பட்டவர்கள் பெண் கேட்க வந்ததை எண்ணி பெண் வீட்டார் பூரிப்படைந்தனர். மாப்பிளை வீட்டார் 5 சைக்கிள்களில் வந்தது குறித்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மிகச்சிறப்பாகப் பேசினார்கள்.

வயலில் வேலை செய்துகொண்டிருந்த லூர்துமேரியை அழைத்துவர ஆள் அனுப்பும்போது மாப்பிள்ளை வீட்டார் “பெண்ணைப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. நாங்க நல்ல பொண்ண தேடிக்கிட்டு இருந்தோம். உங்களோட கராரான குணத்தைப் பார்க்கும்போது பெண்ணைக் கண்டிப்பாக நல்லபடியாகத்தான் வளர்த்திருப்பீங்க.” என்று கூறினார்கள். அந்த நேரத்தில் பெண் வந்துவிடவும் அவளிடம் சம்மதம் பெற்று தட்டு மாற்றிக்கொண்டார்கள். அடுத்த நாளே ஓலையும் எழுதிவிட்டார்கள். விரைவிலேயே திருமணமும் நடந்தது.

ரவிக்க காரிச்சிக்கு ஏற்ற நல்ல மாப்பிள்ளை கிடச்சாச்சி. அவர்கள் இன்றுவரை சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆனால், இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், லூர்துவின் மாமனார் மாமியார்தான் அவளது குடும்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முதலில் வந்த மாப்பிள்ளை குடும்பத்தைச் செட்டப் செய்து அனுப்பி வைத்தார்களாம். இந்த விஷயம் பின்னர்தான் தெரிந்ததாம். மாப்பிள்ளை வீட்டாரும் உஷாராதாங்க இருந்திருக்கிறாங்க.

மேற்கண்டது அன்றைய நிலை. பெண்ணைப் பொத்தி பொத்தி வளர்த்தது மட்டுமல்ல, நல்ல துணையையும் தேடித் கொடுத்தார்கள். மனிதர்களின் குணங்களில் சின்னச் சின்னத் தவறு இருந்தால்கூடப் பரவாயில்லை என்று சமரசம் செய்துகொண்டு பெண் கொடுக்கமாட்டார்கள். இந்த அணுகுமுறையின் முடிவு பெரும்பாலும் வெற்றியாகவே இருந்தது.

ஆனால், இன்றைய நிலை என்ன?

திருமணங்கள் எப்படி நடக்கின்றன?

எப்படி திருமண கலாச்சாரம் என்பது மாறியிருக்கிறது?

இவைகள் உங்கள் சிந்தனைக்கு.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments

  1. Ramani S டிசம்பர் 18, 2013
  2. Ramani S டிசம்பர் 18, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading