குறிப்பு: பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இந்தக் கதையில் உண்மையான ஊர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதை அனைத்தும் கற்பனையே. இது முழுக்க முழுக்க என் கனவுப் பட்டறையில் உருவானது.
மேலும், இந்தக் கதையில் தென்னாற்காடு மாவட்ட (விழுப்புரம், கடலூர்) வட்டார மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. புரியாதவர்கள் பின்னூட்டமிடவும்.
“டேய்! குமார், எந்திரிடா! என்னடா இன்னும் தூங்கற?” என்று குமார் வீட்டிற்கு வந்த சீனு அவனை எழுப்பினான்.
“என்னப்பா! எந்திரிக்க மாட்டேங்கறானா?” என்று கையில் காஃபியுடன் வந்தாள் குமார் அம்மா.
“ஆமாம்மா! ஏம்மா, இவன் இப்படி இருக்கான்?”
“அவன பத்திதான் ஒனக்குத் தெரியுமில்ல! எப்பபாத்தாலும் தூக்கம்தான்.”
“இப்ப பாருங்க! அவன எப்படி எழுப்பறேன்னு” என்று கூறிய சீனு, சுடு tumbler ஐ குமார் கையில் வைத்தான்.
“ஐயோ! அம்மா! சுடுது” என்று பதறியடித்து எழுந்தான் குமார்.
“டேய்! தூங்குமூஞ்சி, ஏந்திரிச்சி கிளம்பு. காலேஜ் பாக்க போலாம்.”
குமார் ஒரு அதிர்ச்சியுடனேயே எழுந்து குளித்து, கிளம்பி தயாராகி வந்தான்.
“நாங்க போய்ட்டுவரோம்மா!”
“சரிப்பா! பாத்து போய்ட்டு வாங்க!”
“டேய்! 8.30க்கு பஸ் வரும்னு ஒனக்கு தெரியும். அப்புறம் ஏன்டா தூங்கிட்டே இருந்த? சோம்பேறிக் கழுத!. டே டேய் பஸ்ஸு போகுது. ஒடியாடா!” என்று பதற்றத்துடன் சீனு ஓட, பின்னாலே வேகமாக ஓடி வந்தான் குமார். இருவரும் பேருந்தில் ஏறினர்.
“டேய்! அங்க முன்னாடி ஒரு seat காலியா இருக்கு பாரு. நீ அங்க ஒக்காந்துக்க. நான் இங்க ஒக்காந்துக்கறேன்.”
“சரிடா சீனு”
“டிக்கெட் எடுத்துறுடா, குமாரு”
“ம்ம்….சரி!”
சிறிது நேரம் கழித்து நடத்துநர், “தம்பி டிக்கெட் எடுத்தாச்சா?” என்று சீனுவை கேட்டார்.
“அண்ணா, முன்னாடி எடுத்திருக்காங்க”.
“முன்னாடி யாரும் எடுக்கலப்பா!”
“எடுக்கலயா, என்ன பண்றான்? டேய்! என்னாடா தூங்கிட்ட? ஒன்னயெல்லாம் என்ன பண்றதுனே தெரியலடா!” என்று குமாரை எழுப்பினான் சீனு.
“மன்னிச்சிடுறா, இப்ப எடுத்துடறன். அண்ணா! ரண்டு கள்ளக்குறிச்சி குடுங்க.”
“இந்தாப்பா”
சீனு தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் அருகில் இருந்தவர் அவனிடம் “என்னப்பா, இவன் பஸ்ல ஏறி அஞ்சு நிமிஷங்கூட ஆவல, அதுக்குள்ள தூங்கிட்டான்?.” என்று கேட்டார்.
“அவன் இப்படித்தாண்ணா சரியான தூங்குமூஞ்சி. இதாச்சும் பரவால்ல. அவன பத்தி மேல சொன்னா கொல்லுன்னு சிரிப்பீங்க!”
“சொல்லுப்பா, நமக்கும் கொஞ்சம் பெராக்கா இருக்கும்ல”
“அவன பத்தி சொன்னா, நெறயா சொல்லலாம். ஒரு வாட்டி ராத்திரில அவன் ஊட்டுக்கு போனேன், அப்ப current இல்ல. ஆனா, அவன் ஊட்டுல மட்டும் ரொம்ப வெளிச்சமா இருந்துச்சு. என்னடானு பாத்தா, அவன் பக்கத்துல தக தகனு நெருப்பு ஏரிஞ்சிட்டு இருந்துச்சி.”
“என்னப்பா! என்னாச்சு?”
“அவன் வத்தி ஏத்தி வச்சி படிச்சிருக்கான் போல. ஆனா அவன் தூங்கிட்டான். வத்தி bag மேல வீந்து bagம் பத்தி கொழுந்து விட்டு ஏரிய ஆரம்மிச்சிடுச்சி.”
“பக்கத்துல நெருப்பு எரியறது கூடவா தெரியாம தூங்கிட்டு இருந்தான்?”
“ஆமாங்க, இதுல கொடும என்னனா அவன் முடிகூட பொசுங்கிடுச்சி. அது அவனுக்குச் சொகமா இருந்துச்சி போல; தூங்கிட்டேதான் இருந்தான்.”
“அடக் கொடுமையே!”
“அப்புறம், நான்தான் தண்ணி ஊத்தி நெருப்ப அணச்சேன். அப்புறம் வெளியே போயிருந்த அவங்க அம்மா வந்து பார்த்து அவன செமயா வாங்கனாங்க.”
“நானா இருந்தா மிதிச்சிருப்பேன், என்னப்பா இப்படிக்கூடமா தூங்குவாங்க?”
“இதாது பரவால்ல. இவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு. விரியூர்’ல +2 படிக்கும்போது ஒரு நாள் ராத்திரி girls hostelல போய்த் தூங்கிட்டான்”.
“என்னப்பா பெரிய பிரச்சனை ஆயிச்சா?”
“நல்ல வேள, ஒன்னும் ஆகல. பாதி ராத்திரில அவனுக்கு முழிப்பு வந்திருக்கு. ஏன்ச்சி பாத்த பிறகுதான் girls hostel verandhaவுல தூங்கிட்டிருந்தது தெரிஞ்சுச்சாம். பயத்துல ஒடியாந்துட்டானாம். நல்லகாலம் யாரும் பாக்கல.”
“ஒரே தமாசுதாம்பா!”
இப்படியாக அவர்கள் இருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டு வந்தார்கள்.
“சரிப்பா! கள்ளக்குறிச்சி வந்தாச்சு, நான் வர்றேன். நீங்க இங்கிருந்து எங்க போகணும்?”.
“மேலூர்.”
“மேலுரா? சேலம் busல ஏறிப் போங்கப்பா.”
“ரொம்ப நன்றிங்க.”
சீனுவும் குமாரும் மேலூர் வந்தடைந்தனர். அங்கு உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரிக்குச் சென்றார்கள். B.sc(physics)ல் சேர விண்ணப்பம் வாங்கினார்கள்; அப்படியே விடுதியில் சேரவும் ஒரு விண்ணப்பம் வாங்கினார்கள். அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார்கள்.
“தம்பிங்களா! காலேஜ் இன்னும் நாலு நாளுல தொடங்கப்போகுது. மொத நாளன்னைக்கு எல்லா பீசையும் கட்டிட்டு சேந்திடுங்க.”
“சரிங்க madam” என்று கூறி வந்தவர்கள் கல்லூரியைச் சுற்றி பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள். அவர்கள் கையில் விடுதி விதிமுறைகள் அடங்கிய தாள் இருந்தது, அதனைப் படித்தார்கள்.
விடுதி விதிமுறைகள்
- மாணவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி இல்லை.
- மாணவர்கள் வீட்டிற்கு செல்ல விரும்பினால் பெற்றோர் வந்தால்தான் அனுமதி தரப்படும்.
- …………………..
இந்த விதிமுறையெல்லாம் படித்தவர்கள் அதிர்ந்தார்கள்.
“என்னடா சீனு, ஏதோ college படிச்சா ஜாலியா இருக்கலாம்னு பாத்தா, இவுங்க rules தாங்க முடியாது போல?”
“ஆமாண்டா”
“பேசாம வேற college பாக்கலாமா?”
“இந்தச் சுத்துவட்டாரத்தில இருக்கறதே ஒண்ணு ரண்டு college தான். அதுல இதான் கொஞ்சம் பரவால்லாம இருக்கும்”.
“அப்ப என்னடா பண்ணலாம்? இந்த ஹாஸ்டல்ல தங்கனா, jailல இருக்கற மாதிரி இருக்குமேடா!”
“ஆமான்டா! அப்பனா ஒன்னு பண்ணுவோம்”
“என்னடா?”
“இந்த ஊருல ஏதாவது வீடு எடுத்துத் தங்குவோம்”
“இது நல்ல யோசனதான்டா”
“சரி வா, போய்த் தேடிப்பார்களாம்”
“இப்பவேவா? நாளைக்கு வரலான்டா! இன்னிக்கு சீக்கிரமா ஊட்டுக்கு போலனா, எங்கம்மா சங்க சங்கையா திட்டுவாங்க!”
“எங்க அய்யன் கூடத்தான். என்னிய வண்ட வண்டையா பேசுவாறு. இம்மாந்தூரம் வந்துட்டோம், கையோட கையா இதயும் முடிச்சிடுவோம்.”
“சரி, அப்பனா மொதல்ல சாப்புடுவோம், அப்புறமா போய் வீடு தேடுவோம்” என்றான் குமார். அவன் கூறியபடியே அருகில் இருந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஊரில் அலைந்து திரிந்தனர். கிராமத்தில் வீடு கிடைப்பதே கடினம். அதிலும் பிரமாச்சாரிகளுக்கு கிடைக்குமா?.
மாலை 5 மணிவரை அலைந்த அவர்களுக்கு அந்தக் கிராமத்தின் இயற்கை அழகை ரசித்ததைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.
“டேய் சீனு, வாடா! ஊட்டுக்கு போலாம். நாளைக்கு வந்து பாத்துக்கலாம்.”
“இருடா, கொஞ்ச நேரம் பாக்கலாம். சரி வா, அங்க ஒரு tea கட தெரியுது பாரு. tea குடிக்கலாம் வா”
tea கடைக்குச் சென்றார்கள்.
“அண்ணா! ரண்டு tea போடுங்க.”
“டேய்! கடசி bus போய்டப்போதுடா!”
“நீ மாட்டும் கம்முனு இரு. 7.30 மணிக்குத் தான் கடசி bus. பொறுமையா போலாம்.”
“என்னா ஊருப்பா நீங்க?” என்று tea கொடுத்துக்கொண்டே கேட்டார், tea கடைக்காரர்.
“மையனூர் ணா” என்றான் குமார்.
“இங்க என்னப்பா பண்றீங்க?”
“இங்க collegeல சேந்திருக்கோம். Hostel எங்களுக்குப் புடிக்கல, அதான் வெளிய வீடு பாக்கறோம்.”
“ஏம்பா இங்க வீடு பாக்கிறீங்க? கள்ளக்குறிச்சில பாக்க வேண்டியதுதானே?”
“அங்கல்லாம் வாடக அதிகமா இருக்குமே! அதில்லாம இவன் சரியான தூங்குமூஞ்சி. காலையில சீக்கிரம் கிளம்பி வர முடியாது. ஏண்ணா! இங்க ஏதாவது வீடு காலியா இருக்காண்ணா?” என்றான் சீனு.
“ம்…இருக்குப்பா. 1000 ரூபா வாடகைக்கு ஒரு வீடு இருக்கு. ஒரு bakery கட வச்சிருக்கரவரு, அவர் வீட்டுல மாடிய வாடகைக்கு விடப்போவதா சொன்னாரு.”
“அப்பாடா… ரொம்ப சந்தோஷம், அந்த வீடு எங்க இருக்குணா?”
“நான் ஊருக்குப் புதுசு. எனக்கு எங்க இருக்குனு தெரியாது. Phone number தந்துட்டு போயிருக்காரு. இப்ப அவரு வர நேரம்தான். எதுக்கும் நான் phone பண்ணி கேக்கறேன்.”
“சரி, இந்தாங்கணா கிளாசு. எம்மாத்திரம்?” என்றான் சீனு.
“பத்துருவா”
காசு கொடுத்துவிட்டு இருவரும் tea கடை benchல் அமர்ந்தனர்.
“ஹலோ, நான் tea கடகாரரு பேசறங்க. வீடு காலியா இருக்கறதா சொன்னீங்களே, வீடு பாக்க ரண்டு பசங்க வந்திருக்காங்க, கடைக்கு எப்ப வருவீங்க?”
“இப்ப நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன். வந்து பேசிக்கலாம்.”
சிறிது நேரத்தில் அவர் bikeல் வந்தார்.
Tea கடைக்காரர் அவரிடம், “ஒங்க வீட்டப்பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீங்க அவங்கள கூட்டிட்டுப்போய் காட்டுங்க.” என்று கூறினார்.
வீட்டுக்காரர் அவர்களிடம், “எத்தினி பேருப்பா?” என்று கேட்டார்.
“நாங்க ரண்டு பேருதாங்க!”
“சரிப்பா! பையன் இந்நேரம் வேலைக்கு வந்து காத்துக்கிட்டு இருப்பான். நான் போயி கடைய தொறந்துவிட்டு வந்துடறன். அப்புறம் நாம வீட்ட போயி பாக்கலாம்.”
“சரிங்க.”
சிறிது நேரம் கழித்து அவர் வந்தார். இருவரும் அவரது வண்டியில் ஏறி அவர் வீட்டிற்கு சென்றனர்.
வீடு மிகவும் பிரகாசமாக இருந்தது. ஏகப்பட்ட மின் விளக்குகள்; அவைகளின் வெளிச்சத்தில் வீடு பளபளத்தது.
“சார்! சூப்பரா இருக்கு சார் வீடு!” என்றான் குமார்.
“இருக்காதா பின்ன? பாத்து பாத்து கட்டண வீடாச்சே!”
வீட்டிற்கு வெளியில் ஒரு நாய் அவர்களைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது.
“என்னங்க! இது இப்படி கொரைக்குது?”
“அது என்னான்னே தெரியலப்பா. இந்த மாதிரி நெறைய நாய் இந்தச் சுத்து வட்டராத்துல இருக்குதுங்க. எல்லாமே இப்படித்தான் குரைக்குங்க. ஆனா நம்மள ஒன்னும் பண்ணாதுங்க. சரி, வாங்கப்பா! மேல போயி பாக்கலாம். அங்கதான் நீங்க வாடகைக்குத் தங்கப்போறீங்க.”
அவர்களுக்கு வீடு மிகவும் பிடித்திருந்தது. வீட்டுக்காரர் அவரது குடும்பத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
“என் பேரு கணபதி; இது என் பொண்டாட்டி லட்சுமி; அது என் ஒரே பையன் ராமு.”
பின் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
“சரிங்க, ரொம்ப சந்தோஷம். இன்னும் நாலு நாள்ல காலேஜ் ஆரம்பிக்கிது. நாங்க இன்னும் ரண்டு நாள்ல வந்துடறோம். அட்வான்ஸ் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா வரம்போது எடுத்துட்டு வந்துடுவோம்.”
“அட்வான்ஸ் எதுவும் தேவல்லப்பா.”
“அட்வான்ஸ் தேவல்லயா? மெய்யாலுமா சொல்றீங்க?”
“ஆமாம்ப்பா. எனக்குக் காசு முக்கியமில்ல. நாங்க நல்லா சம்பாரிக்கறோம். இங்க நாங்க மூனு பேர் மட்டுந்தான் இருக்கோம். அதனால மேல் மாடிய கவனிக்க முடியல. வீட்டில் யாரும் குடியில்லன்னா, பேய் குடியிருக்கும்ன்னு சொல்வாங்க. அதனாலதான் வாடகைக்கு விடறன். நீங்க வாடக மட்டும் கொடுத்தா போதும்.”
“என்னங்க, பேய் பிசாசுன்னு சொல்றீங்க?” என்று பயத்துடன் கேட்டான் குமார்.
“பயந்தாங்கொள்ளி, ஒடனே உன் புராணத்தை ஆரம்பிச்சிடாத! அவரு ஏதோ sentiment பாக்கராரு. சரிங்க. நாங்க போயிட்டு ரெண்டு நாள்ல வறோம்.”
“நல்லது போயிட்டு வாங்கப்பா!”
விடைபெற்று வெளியே வந்தவர்கள் அங்குப் பல நாய்கள் குரைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்.
“டேய்! நாயின்னா எனக்குப் பயம்டா! இந்த வீடு வேணாண்டா.”
“சும்மா இருடா! இந்த மாதிரி சொகுசான வீடு எங்கடா கிடைக்கும்? அதான் சொன்னாருல்ல! அதுங்க நம்மள ஒன்னும் பண்ணாதுங்க.”
அவர்கள் கிளம்பி வீட்டிற்கு சென்றனர். அவர்களது பெற்றோர்கள் அவர்களைத் திட்டினார்கள். வெளியே தங்கக் கூடாது எனவும், விடுதியில் தங்கவும் கட்டாயப்படுத்தினர். ஆனால், எப்படியோ அவர்களிடம் சம்மதம் வாங்கி இரண்டு நாள் கழித்து இருவரும் அந்த வீட்டிற்கு காலை 10 மணி அளவில் சென்றனர். ஆனால் யாருமே இல்லை. வீடு சாத்தியிருந்தது. மேலும், வீடு பழைய வீடுபோல் இருந்தது. காத்திருந்து பார்த்தார்கள். பின் பசித்ததால் 4 மணிக்கு வெளியில் சாப்பிடச் சென்றார்கள்.
“டேய்! அன்னிக்கு நம்ம வந்தப்ப வீடு பளபளன்னு இருந்துச்சி. ரண்டு நாள்ல பாழடஞ்ச வீடுமாதிரி ஆயிடுச்சே!”
“அதாண்டா எனக்கும் ஒன்னும் புரியல. ஏதாவது வித்தியாசமான கல்லுல கட்டியிருப்பாங்க. ராவுல மட்டும் பளபளக்கும் போல.”
“ம்…அப்படிக் கூட இருக்கும்.”
அவர்கள் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். வந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். வீடு ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
“நான் சொல்லல! அவங்க ஏதோ வித்தியாசமான கல்ல வச்சி வீடு கட்டியிருக்காங்க; பாத்தியா ஜொலிக்குது!” என்றான் சீனு.
“சரிதாண்டா! வந்துட்டாங்க போலிருக்கு. வா, போயி கேப்போம்.”
வீடு திறந்தே இருந்தது. வீட்டுக்காரர் இவர்களைப் பார்த்தார்.
“வாங்கப்பா! எப்ப வந்தீங்க?”
“சார், நாங்க காலையிலேயே வந்துட்டோம். நீங்க எங்க ஆளையே காணோம்? நாங்க எம்மா நேரம் காத்திருந்து பாத்தோம். நீங்க வரல. அதான் சாப்டபோயிட்டு வறோம். வெளியூர் போயிருந்தீங்களா சார்?”
“என்னப்பா பாத்தீங்க? நான் வீட்லதானே இருந்தேன்.”
“என்ன சார் சொல்றீங்க? வீடு சாத்தியிருந்துச்சே!”
“நாங்க வீட்லதான் இருந்தோம். ஒரு குரல் கொடுத்திருந்தா வந்திருப்போம்.”
“அப்படியா சார்! நாங்கதான் சரியா பாக்கல போல.”
“சரி, வாங்கப்பா. ரூம தொறந்து விடறேன்.”
இருவரும் தங்கள் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
“என்னிக்குப்பா காலேஜி?”
“நாளன்னிக்கு.”
“நாளன்னிக்கு எதுக்குப்பா இப்பவே வந்தீங்க? ஓ! நாளைக்கு rest எடுத்துப் போவீங்களோ?”
“ஆமாம் சார்.”
“சரி, இந்தாங்கப்பா வீட்டு சாவி. பாத்துக்குங்க. நான் வறன்.”
“சரி, சார்.”
வீட்டுக்காரர் போனவுடன் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
“அவர் என்னடா, வீட்ல இருந்ததா சொல்றாரு? வீட்டில் யாரும் இருந்த மாதிரியே தெரியலையே!” என்றான் குமார்.
“நம்ம ஒழுங்கா பாத்து இருக்கமாட்டோம். நாம எங்க, வீடு சாத்தியிருந்தவுடனே மேல் மாடிக்கு வந்துட்டோம். சரியா கவனிச்சு இருக்கமாட்டோம்.”
“என்னமோ சொல்ற. ஆனா எனக்குச் சரியா படல.”
“மனச போட்டுக் கொழபிக்காத. வா, போயி தூங்கலாம்.”
அவர்கள் தூங்க முற்பட்டனர். ஆனால் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அதனால் அவர்கள் தூங்கவே முடியவில்லை. வெளியில் வந்து பார்த்தனர். இருபது நாய்கள் இருக்கும். தாறுமாறாகக் குரைத்துக்கொண்டிருந்தன. அவர்கள் வீட்டுக்காரர் கணபதி யிடம் கேட்டனர்.
“அது அப்படித்தாம்பா கொரைக்கும். என்னன்னே தெரியல. ஆனா நம்மள ஒன்னும் பண்ணாது.”
“தூங்க முடியலயே சார்!”
“எங்களுக்கும் மொதல்ல அப்படிதாம்பா இருந்துது. இப்ப பழகிடுச்சி. ஒங்களுக்கும் போகப் போகச் சரியாயிடும்.”
“என்ன சார் இப்படி சொல்றீங்க? நாங்க எப்படி தூங்கறதோ தெரியலயே!”
என்று அலுத்துக்கொண்டே தங்கள் அறை சென்று தூங்க முற்பட்டனர். ஆனால், இன்னொரு பிரச்சினை. கொசு பட்டாளம் படையெடுத்தது.
“டேய்! என்னாடா சுள்ளான் புடிங்கியெடுக்குது?” என்று கேட்டான் குமார்.
“ஆமாண்டா. இந்த வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கு; எங்கியும் சாக்கடையும் இல்ல; சுத்தமான காத்து வருது; ஆனாலும் இங்க இவ்வளவு கொசு இருக்கு?”
“டேய்! எனக்கு என்னமோ இந்த வீட்ட பாத்தா பயமா இருக்கு. இங்க தங்க வேணாண்டா. நாளைக்கு ஹஸ்டெல்ல போயி சேந்துடலாம்.”
“டேய்! பயந்தாங்கொள்ளி. இதெல்லாம் ஒரு பெரிய விசயமடா? இதுக்குப்போயி இப்பிடி பயப்படற? பேசாம தூங்குடா.” என்று அதட்டினான் சீனு.
இருவரும் எப்படியோ முயன்று தூங்கிவிட்டனர். சிறிது நேரம் கழித்து ஏதோ சத்தம் கேட்டு எழுந்தான் சீனு.குமார் ஏதோ ஓதிக்கொண்டிருந்தான்.
“ஓம் ரீம் கிரீம் ரீம், அஃப்ராகா டபரா, புஸ்ஸ்…..”
பின்பு எழுந்து சென்று கதவைத் திறந்து வெளியில் எட்டிப்பார்த்துவிட்டுக் கதவை மூடாமல் மீண்டும் வந்து படுத்தான் குமார்.
“அடப்பாவி தூக்கத்துல பெனாத்துறியா?” என்று கூறி கதவைச் சாத்திவிட்டு படுத்தான் சீனு.
இரவு சரியாகத் தூங்காததால் சீனு காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்தான். அப்போது அவனுக்குப் பெரிய அதிர்ச்சி. வீடு முழுவதும் குப்பையாக இருந்தது.
தூங்கிக்கொண்டிருந்த குமாரை எழுப்பி வீட்டைக் காட்டினான்.
“டேய்! என்னடா வீடு இப்படி இருக்கு? ராத்திரி பளிச்சின்னு இருந்துச்சேடா”
“அதான்டா எனக்கும் புரியல.”
குமார் ஒரு திகிலுடனே இருந்தான். காலைக்கடன் முடிக்கக் கழிவறை சென்றான் சீனு. ஆனால், தண்ணீர் வரவில்லை. இருந்தாலும் இரவில் பிடித்து வைத்திருந்த நீரை வைத்து இருவரும் தங்கள் காலைக்கடனை முடித்தார்கள்.
சிறிது நேரம் கழித்து ஒரு பெரிய காக்கை கூட்டம் அங்கு வந்தது. அவைகள் மிகச் சத்தம் போட்டுக்கொண்டு வீட்டின் ஜன்னல் கதவுகளைக் கொத்திக்கொண்டிருந்தன.
இவைகளைப் பார்த்த குமாருக்கு காய்ச்சலே வந்துவிட்டது. வெளியில் செல்ல முடியாமல் இருவரும் வீட்டிலேயே அமர்ந்திருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து அவைகள் சத்தம் ஓய்ந்தது. பின் சாப்பிடப்போகலாம் என்று பார்த்தபோது குமார் காய்ச்சலால் நடுங்கிக்கொண்டிருந்தான்.
“டேய்! என்னடா ஆச்சி?”
“பயமா இருக்குடா. எனக்குக் காய்ச்சலே வந்திடுச்சி. இந்த வீட்ல என்னமோ இருக்கு.”
“போதும். போதும். நான் சாப்பிடப்போறன். நீ தூங்கு. நான் சாப்பாடு வாங்கிட்டு வறன். அப்படியே மாத்ர வாங்கிகிட்டு வறன்.” என்று சொல்லிவிட்டு சீனு கிளம்பினான். “என்ன current இல்ல?” என்று மனதில் எண்ணிக்கொண்டான். கீழே கணபதி வீட்டைப் பார்த்தான். நேற்றுபோலவே சாத்தியிருந்தது.
பின் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு இட்லி, மாத்திரை வாங்கிவந்தான். அப்போதும் அவர் வீடு சாத்தியிருந்தது.
“சார்! வீட்ல இருக்கீங்களா? சார்…”
பதில் இல்லை. அவன் மேலே சென்று குமாரிடம் சாப்பாட்டைக்கொடுத்தான்.
“என்ன ஊருள்ள current இருந்துச்சே. இங்க மட்டும் இல்ல” என்று தன் மனதில் எண்ணிக்கொண்டான் சீனு.
குமார் எழுந்து சாப்பாட்டைத் திறந்தான். குபீரென்று மோசமான வாடை வீசியது.
“டேய்! என்னடா இப்படி கப்பு அடிக்கிது?”
“நான் வாங்கிட்டுவரம்போது நல்லாதானே இருந்துச்சு!”
குமார் சாப்பிட முற்பட்டான். ஆனால், அவனுக்கு வாந்தி வந்துவிட்டது. வாயைக் கழுவ குழாயைத் திறந்தான். நீர் வரவில்லை.
“டேய்! என்னடா இன்னும் தண்ணி வரல. வீட்டுக்காரர்கிட்ட சொல்லுடா.”
“வரம்போது பாத்துட்டுதான் வரன். அவர் வீட்ல இல்ல.”
“ஒருவேள அவர் உள்ள இருப்பாரு. வா மறுபடியும் பார்த்துட்டு வரலாம்.”
“சரி, இந்தா. நேத்து எடுத்துட்டு வந்த தண்ணி இருக்கு. அத வச்சி சமாளிச்சிக்க.”
இருவரும் கீழே சென்று பார்த்தார்கள். பல முறை அழைத்தும் ஒரு பதிலுமில்லை. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். வீட்டில் யாரும் இருப்பது போன்று தெரியவில்லை. மேலும் வீடு குப்பையாக இருந்தது.
“என்னடா, இவங்க வீடும் குப்பையா இருக்கு?”
“அதாண்டா எனக்கும் புரியல. சரி. நீ போயி தூங்கு. நான் போயி நல்ல சாப்பாடு பார்சல் வாங்கிட்டு வறன்.”
“வேணாண்டா. மதியமா சாப்ட்டுக்கலாம். நான் போயி தூங்கறன்.”
“டேய்! பசிக்குமேடா!”
“பரவாயில்ல, நான் சமாளிச்சிக்கறேன்.”
“சரி நீ தூங்கு. நான் வீட்டைச் சுத்தம் பண்றன்.”
சீனு மதியமும் சாப்பிட்டுவிட்டு குமாருக்கு வாங்கிவந்தான்.
“குமார், எந்திரிச்சி சாப்டு.”
அவன் எழுந்து பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட முற்படும்போது காலை போலவே கேவலமான வாடை அடித்தது. சாப்பாடு குழைந்திருந்தது.
“டேய்! நீ என்னடா, எப்ப பாத்தாலும் கெட்டுப்போன சாப்பாடே வாங்கிட்டு வர?”
“என்னன்னே தெரியிலியே! நான் சாப்பிட்டப்ப நல்லாதானே இருந்துச்சி. சரி அந்தச் சாப்பட்ட தூக்கிப்போட்டுடு. எப்படியாவது கஷ்டப்பட்டு எழுந்து வா. ஹோட்டல்ல போயி சாப்டுட்டு வந்துடலாம். காலையில வேற நீ சாப்படவே இல்ல.”
குமாருக்கு வேற வழியில்லை. சீனுவுடன் ஊருக்குள் சென்று சாப்பிட்டுதான் ஆக வேண்டும்.
குமார் சாப்பிடும்போது, சீனு கடைக்காரரிடம், “அண்ணா! நீங்க பார்சல் குடுத்த சாப்பாடு குழஞ்சி போச்சிணா. காலையில இட்லியும் அப்படித்தான் கெட்டுப்போச்சி. அதுவுமில்லாம பொண நாத்தம் அடிக்கிது.” என்று கேட்டான்.
“என்னப்பா சொல்ற? எத்தனையோ பேர் வாங்கிட்டுப் போறாங்க. யாரும் இப்படி சொல்றது இல்லியே.” என்றார் கடைக்காரர்.
இடையில் அங்குச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவர், “யாருப்பா நீங்க? புதுசா இருக்கீங்க!” என்று கேட்டார்.
“அண்ணா நாங்க காலேஜில சேந்திருக்கோம். இங்கயே வீடு பாத்து தங்கியிருக்கோம். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குல்ல, அந்த வீட்லதான். கீழ வீட்டுக்காரர் இருக்காரு. மேல நாங்க இருக்கோம்.”
“அந்த வீட்லயா? அங்க ஆளு இருக்காங்களா? அது பாழடஞ்ச வீடு மாதிரி இருக்குமே!”
“ஆமாண்ணா. பகல்ல அப்படித்தான் இருக்கு. ராத்திரிதான் மின்னுது. ஒரு புதுவிதமான கல்லுல கட்டியிருப்பாங்க போல.”
“ஓ! அப்படியா. அந்தப் பக்கம் சுடுகாடு இருக்குல்ல. அதனால ராத்திரி அந்தப் பக்கம் போனதே இல்ல.”
“என்னன்னா சொல்றீங்க? சுடுகாடா?” என்று பயத்துடன் கேட்டான் குமார்.
“ஆமாம்ப்பா. ஒரு பெரிய வேப்பமரம் இருக்குல்ல? அங்கதான் இருக்கு.”
“ஐயோ! சுடுகாடா?”
“சுடுகாடு இருந்தா என்ன ஆயிடும்? ஏன்டா எப்ப பாத்தாலும் பயப்படற?”
“தம்பி இப்பதான் நீ வாங்கிட்டுபோன சாப்பாடு எப்படி கெட்டுப்போச்சின்னு தெரியுது.” என்றார் கடைக்காரர்.
“எப்படி?” என்று கேட்டான் சீனு.
“நீ சுடுகாடு வழியா சாப்பாட எடுத்துட்டு போனதால அத பேய் சாப்டிடுச்சி. அதான், பொண நாத்தம் அடிக்கிது.”
“எப்பா! இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நம்மள பைத்தியக்காரங்களா மாத்திடுவாங்க. டேய்! குமாரு, சீக்கிரம் வா.”
சாப்பிட்டு முடித்த குமார் மாத்திரை சாப்பிட்டுவிட்டு சீனுவுடம் கிளம்பி வந்தான். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனுடன் வீடு வந்து சேர்ந்தான். அப்போதுகூட வீட்டுக்காரர் அவர் வீட்டில் இல்லை. இருவரும் உறங்கச் சென்றார்கள். மாலை ஆறு மணிவரை உறங்கினார்கள். நல்ல தூக்கம். சீனு எழுந்து பார்த்தபோது வீட்டின் மின் விளக்குகள் அனைத்தும் எரிந்துகொண்டிருந்தன.
“காலையில எல்லாம் off பண்ணிதானே இருந்துது. யார் போட்டிருப்பா?”
சீனு கீழே இறங்கி சென்று அழைப்பு மணியை அழுதினான். சத்தம் கேட்டு வீட்டுக் காரர் வந்து திறந்தார்.
“என்னப்பா?”
“என்னங்க பகல்ல வீடுல்லாம் ஒரே குப்பையா இருக்கே?”
“அதுவந்துப்பா, காலையில 3 மணிக்குக் காத்து மோசமா வீசுச்சி. நீங்க ஜன்னல சாத்தாம தூங்கி இருப்பீங்க. அதான் வீடு குப்பையா ஆகியிருக்கும். நான்கூட சாத்த மறந்துட்டன்.”
“சார்! நீங்க எங்க போயிருந்தீங்க. பகல்ல ஆளே இருக்கமாட்டுக்கிறீங்களே?”
“என்னப்பா சொல்ற? நான் வீட்லதான் இருந்தேன்.”
“நான் கூப்பிட்டுப் பார்த்தேனே. நீங்க வரலியே!”
“உள்ள வேலையா இருந்திருப்பேன். கேட்டிருக்காது.”
“ஒ! அப்படியா சார்? அப்புறம் சார் ஒரு காக்கா கூட்டம் வந்து ஐசாட்டியம் பண்ணிச்சு சார்.”
“என்னப்பா சொல்ற? எனக்கு அந்த மாதிரி ஒன்னும் தெரியலையே.”
“அப்பப்பா! நீங்க அந்த அளவுக்கா வேல செஞ்சிட்டு இருந்தீங்க? இல்ல ஒங்களுக்கு காது கேட்காதா?”
“என்னப்பா கிண்டல் பண்ற? சரிப்பா, இன்னைக்கு என் பையனுக்குப் பொறந்த நாளு, ராத்திரி இங்கேயே சாப்புடுங்கப்பா. 8 மணிக்கு வந்திடுங்க.”
“சரிங்க.”
இருவரும் 8 மணிபோல் அங்கே சென்றார்கள். பிறந்த நாளைக் கொண்டாடிய பின்பு டைனிங் டேபிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பீட்ஸா தந்தார்கள். வெளியில் நாய் குறைத்துக்கொண்டிருந்தது. ராமு நாயைத் துரத்திவிட சென்றான்.
“சார், பாத்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டான் சீனு.
“அங்கதாம்பா”
குமார் பீட்ஸா சாப்பிட, சீனு பாத்ரூமிர்க்கு சென்றான். திரும்பி வரும்போது எதர்ச்சியாகக் குமாருக்கு அருகில் இருந்த கண்ணாடியைப் பார்த்தான் சீனு.அதில் பேய் போன்ற உருவங்கள் தெரிந்தன. பயந்துபோன சீனு அனைவரையும் பார்த்தான். அனைவரும் பேய் என்பதை உறுதி செய்தான். குமாரை எச்சரித்து அவனை இழுத்துக்கொண்டு வெளியே தப்பியோட முற்பட்டான். ராமு உள்ளே நுழைந்துகொண்டிருந்தான். அவனும் கொடூரமான உருவத்தில் இருந்தான். அதனால் பயத்தில் தடுக்கி இருவரும் கண்ணாடியில் விழுந்தார்கள். அந்தக் கண்ணாடி அவர்களை வேறொரு இடத்திற்கு கொண்டு சேர்த்தது. எழுந்து பார்த்தார்கள். ஒரு ஆலமரத்திற்கு அருகே இருப்பது தெரிந்தது.
“டேய்! தப்பிச்சிட்டோம் போலிருக்கு.” என்றான் சீனு.
“ஆமாண்டா, அந்தக் கடவுள்தான் நம்மள காப்பாத்தியிருக்கணும்.”
“டேய்! அங்கப்பாருடா”
அங்கு அந்த tea கடை இருந்தது. கடைக் காரரும் இருந்தார். அவர்கள் அவரிடம் நியாயம் கேட்கச் சென்றார்கள்.
“என்னண்ணா, இப்படி எங்கள பேய் வீட்ல மாட்டிவிட்டுட்டீங்களே!”
“என்னப்பா ஏதேதோ சொல்றீங்க?”
அவர்கள் நடந்தவற்றை விளக்கமாகக் கூறினர். Tea கடைக் காரருக்கும் உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது.
“நீங்க ஏதோ சொல்றீங்க. எனக்கும் உங்கள நம்பாம இருக்க முடியல. நான்தான் சொன்னேனப்பா. நான் ஊருக்குப் புதுசு. எனக்கு யாரப்பத்தியும் அவ்வளவா தெரியாது. நீங்க அந்த ஆலமரத்து வழியாதான வந்ததா சொன்னீங்க? வாங்க போயி பாப்போம்.”
“அண்ணா! வேணாண்ணா. வாங்க போயிடலாம். பேய் ஏதாவது பண்ணிடப்போதுண்ணா.” என்றான் குமார்.
“அதையும் பாப்போம். தம்பி, எனக்குப் பேயின்னா பயமே இல்ல. ஏன்னா, இருபது வருஷமா பேய் கூடத்தான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன். அந்தப் பேயி ரண்டு பேய பெத்துபோட்டிருக்கு.” என்று அந்த ரணகளத்திலும் தமாசு செய்தவர் அந்த ஆலமரத்திற்கு பக்கத்தில் சென்று பார்த்தார்.
“எங்க கதவு? எங்க கதவு?” என்று கேட்டுக்கொண்டே கோலால் மரத்தின் எல்லா இடங்களிலும் தட்டிப்பார்த்தார். ஆனால் எதுவும் அங்கு இல்லை. ஆலமரம் இயற்கையான ஆலமரம் போன்றுதான் இருந்தது.
“என்னப்பா? என் நேரத்த வீணடிக்கிறீங்களே? ஏதாவது கெனா கண்டீங்களா? போங்கப்பா நீங்களும் உங்க கெனாவும்.” என்று கூறிய கடைக்காரர் அந்த இடத்தை விட்டு விலகினார்.
“அவர் நம்பலனா பரவாயில்ல. வா நம்ம ஓடிப்போயிடலாம்.” என்று குமார் சீனுவை கூப்பிட்டான். ஆனால், திடீரென்று அந்த ஆலமரத்திலிருந்து ஒரு கை அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டது.
“அண்ணா! அண்ணா! பாருங்க. ஒரு கை அவன உள்ள இழுத்துக்கிச்சி. வாங்க போயி அவன காப்பாத்தலாம்.” என்றான் சீனு.
அதனைப் பார்த்து அதிர்ந்த tea கடைக்காரர், “தம்பி, என்னப்பா நம்மாள என்ன பண்ண முடியும்? இந்தப் பக்கம் வந்துடு. நாம ஓடிப்போயிடலாம்.” என்று கூறிய அவர் ஓட்டம் பிடித்தார். சீனு செய்வதறியாது திகைத்து நின்றான்.
அங்கு குமார் ஒரு அறையில் மாட்டிக்கொண்டிருந்தான். இது வேறு அறைபோல் இருந்தது. ஏனென்றால் இங்கு அவன் தப்பித்துச் செல்லக் கண்ணாடி இல்லை. ஆனால் அந்த மூன்று பேய்களும் அவனை நெருங்கி வந்தன. அதில் பிறந்தநாள் கொண்டாடிய மகன் பேய் அவனைக் கடித்தது.
“ஆ… ஆ… ”
என்று கத்திய குமார் tea கடை benchலிருந்து இருந்து மல்லாக்க விழுந்தான்.
“டேய்! என்னடா தூங்கிட்டியா? ரெண்டு நிமிஷம் கடைக்காரர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள தூங்கி பெஞ்சில இருந்து விழுந்துட்ட!” என்று சீனு கேட்டான்.
இதுவரை நடந்ததெல்லாம் கனவு என்பதை உணர்ந்த குமார் எதையோ சொல்லிச் சமாளித்தான்.
சிறிது நேரம் கழித்து ஒருவர் bike ல் அங்கு வந்தார்.
“தோ, இவர்தான் அந்த வீட்டுக்காரர். சார், இவங்கதான் உங்க வீட்ட வாடகைக்கு கேட்டு வந்திருக்காங்க”
இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். குமாருக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் அவர் அந்தக் கனவில் வந்த அதே வீட்டுக்காரர். அவர் பேசத்தொடங்கினார்.
“சரி, நீங்க இங்கயே இருங்கப்பா. பையன் கடையில காத்துக்கிட்டு இருப்பான். நான் போய்த் தொறந்து விட்டுட்டு வறன்.” என்று கூறினார்.
குமார் அவரிடம் “வேணாம் சார்! வீடு வேற தூரமா இருக்குன்னு சொல்றீங்க. அதுவும் ஒதுக்குப்புறமா இருக்குன்னு சொல்றீங்க. அது எங்களுக்குச் சரிப்பட்டு வராது. நாங்க ஹாஸ்டல்ல தங்கிக்கறோம்.” என்று கூறினான்.
சீனு எவ்வளவோ கூறியும் குமார் அவனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். பின் அவன் கண்ட கனவைக் கூறினான்.
“சரிடா! நீ சொல்ற மாதிரியே ஹாஸ்டல்ல தங்கிக்கலாம். ஏன்னா, நீயே ஒரு பயந்தாங்கொள்ளி. ஒன்ன பயமுறுத்த எனக்கு விருப்பமில்ல.”
ஒரு மாதம் கழித்து,
விடுதி காப்பாளரின் பிறந்த நாள் விழாவிற்காக சீனுவிடம், மாணவர்களுக்கு pizza வாங்கிவருவதற்கான தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டது.
“சீனு, இந்திலி போயி அங்க இருக்குற பேக்கரில 200 பீட்ஸா ஆர்டர் கொடுத்துட்டு வா” என்று விடுதி காப்பாளர் கூறினார்.
“சார், ஏன் பக்கத்து ஊருல ஆர்டர் கொடுக்கச் சொல்றீங்க? pizza நல்லா இல்லாம போய்டப்போகுது. கள்ளக்குறிச்சில கொடுக்கலாமில்ல.”
“இல்லப்பா, போன வருஷம் அங்கதான் கொடுத்தேன். நல்லாதான் இருந்துச்சு. அதனாலதான் அங்கவே கொடுக்கச் சொல்றேன்.
“சரி சார், நான் போய் ஆர்டர் கொடுத்துட்டு வரன்.”
என்று கிளம்பினான். நடந்துதான் இந்திலி சென்றான். போகும் வழியில் ஒருtea கடையில் விசாரித்தான்.
“அண்ணா! இங்க ஒரு bakery இருக்குல்ல? அதுக்கு எப்படிப்போணும்?”
“பேக்கரியா அங்க ஆளு இருக்காங்களா? மூனு மாசம் ஆச்சேப்பா அந்த bakery வேல செஞ்சே!”
“என்ன சொல்றீங்க? எங்க வார்டன் அந்த bakeryலதானே பீட்ஸா ஆர்டர் கொடுத்துட்டு வரச் சொன்னாரு. கடக்காரர்ட ஏற்கனவே ஃபோன் பண்ணி சொல்லிட்டாதா சொன்னாரே!”
“அப்படியா? ஒரு வேள இப்ப bakeryய மறுபடியும் ஆரம்பிச்சிருப்பாங்களோ என்னவோ? அது ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கு. அங்கெல்லாம் அவ்வளவா நான் போனது கிடையாது. சரிப்பா, நீ நேரா போ. தனியா மல்லாட்டக் கொல்லைக்கு நடுவுல ஒரு வீடு இருக்கும். அதுதான்.” என்றார் அந்த tea கடைக்காரர்.
“ரொம்ப நன்றிண்ணா.” என்று கூறி விடைபெற்றான். 6.30 மணி அளவில் அந்த வீட்டிற்குச் சென்றான். அவர் கூறியது போலவே மணிலா கொல்லைக்கு நடுவில் அந்த வீடு இருந்தது. அது ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
அழைப்பு மணியை அடித்தான். ஒருவர் வந்து திறந்தார்.
“என்னப்பா! என்ன வேணும்?”
“பீட்ஸா ஆர்டர் கொடுக்கணும்.”
“ஒ! அப்படியா! உள்ள வாப்பா!”
உள்ளே சென்று பார்த்தான். ஒரு பையன் பீட்ஸா சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒருவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
“எத்தன பீட்ஸா வேணும்? என்னைக்கு வேணும்?”
“அண்ணா! நாள மாறாநாளு எனக்கு 200 பீட்ஸா வேணும்?”
“தனியா வாங்கனா ஒரு pizza அம்பது ரூபா. நீ மொத்தமா வாங்கறதால 40 ரூபா போட்டுக்கலாம். 8000 ரூபா ஆகும்.”
“சரி, நீங்க கடையிலேயே மூனு பேர்தான் இருக்கீங்க. எப்படி 200 பீட்ஸா ரெண்டு நாள்ல செய்வீங்க?”
“அத பத்தியெல்லாம் நீ கவலப்படாதப்பா. நாங்க பம்பரமா வேல செய்வோம். நீ இப்ப ரெண்டாயிரம் ரூபா அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ. நாள மாறாநாளு நாங்களே எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு மீதி பணத்த வாங்கிக்கிறோம்.”
“சரி, ஒங்கள்ட்ட ஒன்னு கேக்கணும். வீடு முழுக்க ஒளி வெள்ளத்துல மின்னுது. ஆனா, இந்த ரூம்ல மட்டும் ஏன் வெளிச்சம் கம்மியா இருக்கு?”
“இந்த ரூம நாங்க அதிகமா பயன்படுத்தமாட்டோம். அதான் பழைய பல்ப அப்படியே வீட்டுட்டோம்.”
“சரி, இந்தாங்கண்ணா அட்வான்ஸ். நான் வரன்.”
“எங்கப்பா போற? இந்தாப்பா பீட்ஸா சாப்டுட்டு போ.”
“பரவால்ல. நான் வரன்.”
“தம்பி, இன்னைக்கு என் பையன் பொறந்தநாள். அதாம்பா ஒன்ன சாப்டுட்டு போவ சொல்றன்.”
“ஒ இது ஒங்க பையந்தானா? Happy Birthday குட்டி.”
அந்தச் சிறுவன் சீனுவைப் பார்த்து முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
“என்ன சார்! இவன் இப்படிப் பண்றான்?”
“அவன், அப்படித்தாம்பா. கூச்ச சுபாவம். நீ பீட்ஸாவ சாப்பிடு.”
சீனு அந்தப் பையனுக்குக் கொஞ்சம் அருகில் அமர்ந்தான்.
அப்போது உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. “டேய்! என்னடா அங்க சத்தம் கேட்குது?” என்று ஊழியரை அதட்டிக்கொண்டு உள்ளே சென்றார் கடைக்காரர்.
சீனு பீட்ஸாவை சாப்பிட எடுத்தபோது அவன் மனதில் எண்ணிக்கொண்டான்.
“ம்… இந்த pizzaவ பாத்தாலே குமார் சொன்ன கததான் ஞாபகம் வருது.”
சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கடைக்காரர் ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரின் நிழல் அந்த அறையில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் தெரிந்தது. அது அகோரமாக இருந்தது. குமார் சொன்ன கதையில் வந்தது போன்றே நடப்பதை உணர்ந்த சீனு பயந்தான். பின்னே திரும்பிப்பார்த்தான். கடைக்காரர் முதுகு மட்டும்தான் தெரிந்தது. அப்போது அவன் மூளை ஏதோ எச்சரித்ததால் அந்தப் பையனைத் திரும்பிப்பார்த்தான். அந்தப் பையன் சீனுவைப் பார்த்துச் சிரித்தான்.
சற்று தைரியம் வந்தவனாய் கடைக்காரரைப் பார்த்தான். தற்போது அவரின் நிழலே தெரியவில்லை. அவர்கள் பேய்தான் என்பதை அறிந்து ஓடிவிடலாமென முடிவெடுத்து ஓட முயற்சித்தான். ஆனால் அவனால் நகர முடியவில்லை. அந்தப் பையனைப் பார்த்தான். அவன் இருந்த இடத்தில் அவன் இல்லை. குமார் கனவில் வந்தது போல் ஏதாவது கண்ணாடி இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தான். ஏதும் இல்லை. எப்படியாவது வெளியில் சென்றுவிட்டால் தப்பித்துவிடலாமென எண்ணி மீண்டும் ஓட முயற்சித்தான். தற்போது அவனால் நகர முடிந்தது. கதவின் அருகே ஓடியபோது சட்டென்று கதவு மூடிக்கொண்டது.
“ஐயோ! கடவுளே! என்னய காப்பாத்து.”
“ஆஆஆ…….”
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
ரீகன் ஜோன்ஸ்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
முடிவில் ஒரு ஆரம்பம் ..விறு விறுப்பான கதை..!
Not bad..!!
வணக்கம்
தம்பி.
எப்படி சுகமா?…
மிக அழகாக பேச்சு மொழி நடையில் அழகாகன வினாக்கள் தொடுத்து. உரையாடல் அமைத்த விதம் அருமை.அத்தோடு மகிழ்ச்சியும் திகிலும் நிறைந்ததாக உள்ளது.
இறுதில் சொல்லியுள்ள கருத்து. அவனால் திகில் சம்பவத்தில் இருந்து தப்பிக்கமுடியாமல் கதவுகள் பூட்டப்படுகிறது. அவன் அந்த திகில் சம்பவத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கான்….அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நலமாக இருக்கிறேன் அண்ணா.
தங்களது வருகைக்கும், கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது… வாழ்த்துக்கள்…
அருமையான படைப்பு வாழ்த்துக்கள்