பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி – 11

பகுதி-10 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

Proverb-Meaning

1. பாழாப் போன சாப்பாடு பசுமாட்டு வயிற்றில்.

பசுமாட்டிற்கு உணவு கொடுக்கக் கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் மாடு இல்லையென்றால் உணவு மீதிபடும்போது வீணாகக் கூடாதே என்பதற்காகத் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பார்கள். அவர்களுக்கும் இந்தப் பழமொழி பொருந்தும்.

2. மேயற ஆடு பில்ல கொம்புல கட்டிக்கிட்டா போகுது?

ஆட்டுக்கு மேயப் போனாதான் பில் கிடைக்கும். அதுபோல, நாம் உழைத்தால்தான் நமக்குப் பலன் கிடைக்கும். நமக்கு வேண்டிய அந்தப் பலன், நம் கைகளிலேயே இருப்பதில்லை. அதைத் தேடும்போதுதான் கிடைக்கும்.

3. அஞ்சி மணியம் பண்ண வேண்டிய அவசியமும் இல்ல, கெஞ்சி பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயமும் இல்ல.

மணியம் என்பது அதிகாரமுள்ள ஒரு பதவி (உதாரணம்-மணியக்காரர்). பிச்சை என்பது ஒரு கீழ்த்தரமான தொழில் என்றே வைத்துக்கொள்வோமே. எனவே, இந்தப் பழமொழியின் அர்த்தம், உயர்ந்த வேலையாக இருந்தாலும் சரி, தாழ்ந்த வேலையாக இருந்தாலும் சரி. ஒருவருடைய சுய கௌரவம் பாதிக்கப்படாமலும், தன்மான உணர்ச்சி நசுக்கப்படாமலும் இருக்க வேண்டும்.

4. நடந்தா நாடெல்லாம் உறவு; படுத்தா பாயும் பகை.

ஒருவர் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தால் எப்படி உறவுகள் கிடைக்கும். பக்கத்து வீட்டுக்காரர் பெயர்கூட தெரியாமல்தான் இருப்பார். சுறுசுறுப்பாகப் பல ஊர் செல்லச் சோம்பலாகாமல் வேலை செய்பவர்கள், தாங்கள் செல்லும் இடத்திலெல்லாம் உறவுகளை உருவாக்குவர்.

சோம்பேறித்தனமாக எப்போது பார்த்தாலும் தூங்குபவர்களை யாருக்கும் பிடிக்காது, அவர்கள் படுக்கும் பாய்க்குக்கூடத்தான். என்றாவது ஒருநாள் பொறுமையை இழக்கும் அந்தப் பாய், அவர்களைத் தன் எதிரியாகக் கருதி நிரந்தரமாக அவர்களைப் படுக்கையில் போட்டுவிடும்.

5. காணாத கண்ட கம்மங்கூழ சிந்தாத குடிடா சிலி மூக்கா.

யாருக்காவது ஒரு உணவுப்பொருளின் மீது ஏக்கம் இருந்தால், அது கிடைக்கும்போது அரக்கப் பறக்கச் சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடும்போது அந்த உணவுப்பொருள் கீழே சிந்தும். உதாரணமாக, ஒருநாள் முழுவதும் ஒருவன் நீர் அருந்தவில்லை, உயிரே போய்விடும் தருவாயில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். தற்போது அவனிடம் ஒரு குவளை நீர் கொடுத்தால், அவன் அவசரமாகக் குடிக்கும்போது நீர் சிந்தும்.

ஏனெனில், அந்த நேரத்தில் அவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவசரப்படுகிறான். அதனால், நீரும் வீணாகிறது. அதுதான் கூடாது என்கிறது இந்தப் பழமொழி. அதாவது, நமது வாழ்கையில் கிடைப்பதற்கரிய வாய்ப்பு கிடைக்கும்போது அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவசரத்தில் அதனை வீணடித்துவிடக் கூடாது.

6. கட்டுச்சோத்து மூட்டைய கும்பல்ல அவுக்காத.

பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்பார்கள். ஆனால், இது அதற்கு எதிர்மறையான பழமொழி. அலுவலகத்தில் நண்பர்களோடு மதிய உணவு சாப்பிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் எடுத்துச் சென்ற உணவை மற்றவர்க்குக் கொடுப்போம்; நண்பர்கள் அவர்களுடைய உணவை நமக்குக் கொடுப்பார்கள்; இது பகிர்ந்துண்ணுதல்.

ஆனால், ஒரு சிலர் இருக்கிறார்கள். தினமும் சாப்பாடு எடுத்துவரமாட்டார்கள். அவரவர்களிடம் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி தங்கள் மதிய உணவை முடித்திக்கொள்வார்கள். ஒருசிலர் தங்கள் உணவைத் தனியாகச் சாப்பிட்டுவிட்டு, நாம் சாப்பிட வரும்போது அதில் பங்கு கேட்பார்கள். இவர்கள் அடுத்தவர்களிடம் பிடுங்கித் தின்னப் பிறந்தவர்கள். எனவே, அத்தகையவர்கள் முன் நம் உணவை (கட்டுச்சோறு) சாப்பிடாமல், தனியாகச் சாப்பிடுவதுதான் நல்லது.

இது உணவுப் பொருளுக்கு மட்டுமல்ல. அனைத்திற்கும் பொருந்தும். மேலும் ஒரு உதாரணம் – பணத்தை பிறர் முன்னிலையில் எண்ணினால், அவர்கள் கடன் கேட்கவோ அல்லது நமக்குச் செலவு வைக்கவோ வாய்ப்பு இருக்கிறது. நாம் மறுத்தால் பகைமைதான் மிஞ்சும்.

7. வாழ்த்த வாழ்த்த வைரக்கல்லு; திட்டத் திட்டத் தெய்வக்கல்லு.

வாழ்த்துதல் என்றால் இங்கு எந்த ஒரு முகாந்தரமும் இல்லாமல் ஒருவர் நம்மைச் சபிப்பது என்ற பொருளில் வருகிறது. சிலர் நம் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் சபிப்பர். அவர்களுடைய அநாகரிகப் பேச்சுகளை நாம் சகித்துக்கொள்ளும்போது வைரமாகவும், பிறருடைய காட்டுமிராண்டித் தனமான திட்டுகளை ஜீரணித்துக்கொண்டு அமைதிப் பாதையில் செல்லும்போது தெய்வமாகவும் ஆகிறோம் என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.

8. ஆடன காலும் அரைச்சக் கையும் சும்மா இருக்காது.

“உழைத்த கட்டை ஓய்ந்து உட்காராது” என்றும் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது உழைப்பாளிகள் என்றும் சோம்பேறிகளாக நேரத்தை வீணடிக்கமாட்டார்கள். உதாரணமாக, நம் தாத்தா பாட்டிகள் முதிர்ந்த வயதிலும்கூட ஓய்வெடுக்காமல் தானாக விரும்பி நமக்கு வீட்டு வேலைகளில் உதவிசெய்ய வருவதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?

9. காய்ச்ச மரந்தான் கல்லடி படும்.

கனி கொடாத மரத்தை எவரும் சட்டை செய்யமாட்டார்கள். காய்த்துக் கொண்டிருக்கும் மரத்தைதான் அனைவரும் கல் எறிந்து பழம் பறிக்க முயற்சி செய்வர். அதுபோல, நல்லவர்களுக்குத்தான் பிரச்சினைமேல் பிரச்சினை வரும் (பலரும் அவர்களிடம் பலன் எதிர்பார்ப்பதால்). சோப்பளாங்கிகளை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

10. என்னைக்கும் போடாத மகராசி இன்னைக்கு போட்டா; என்னைக்கும் போட்டத் தேவு** இல்லன்னுட்டா.

இது ஒரு பிச்சைக்காரன் கூற்று.

இந்தப் பழமொழி பச்சையாக இருந்தாலும், உலகத்தில் மக்களின் மனநிலையைக் குறிப்பிட இங்குப் பதித்துள்ளேன். எப்படியெனில், தினமும் உதவி செய்தவர்களை அலட்சியம் செய்துவிட்டு, உதவியே செய்யாத ஒருவர் திடீரென்று உதவி செய்துவிட்டால் அவர் பக்கம் சார்ந்து முந்தினவரை பழிப்பதுதான் இந்த உலகம்.

எவ்வாறெனில், ஒரு பிச்சைக்காரன் தனக்கு இதுவரை தவறாமல் பிச்சையிட்ட பெண்ணை இன்று ஒரு நாள் பிச்சைப் போடவில்லையென்று, அவளைத் தேவு** என்று அழைக்கிறான். இதுதான் உலகம்.

11. ஆசை இருக்கிற இடத்தில்தான் பூசை இருக்கும்.

ஒருவர் நம் மீது பிரியமாக இருந்தால்தான் நாம் சொல்வதைக் கேட்பார், செயல்படுவார். இல்லையென்றால், “நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?” என்னும் பாணியில்தான் நம்மிடம் நடந்துகொள்வார். பிரியமானவர்கள் வீட்டிற்கு வந்தால் உபசரிக்கும் முறையும், பிரியமற்றவர்கள் வரும்போது உபசரிக்கும் முறையும்தான் இதற்கு உதாரணம்.

12. தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனா?

ஒத்த பழமொழி: தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா?

அது அதுக்கு ஒரு தகுதி வேண்டாமா? அவரவர்கள் அவரவர் தகுதியில் இருக்க வேண்டும். உதாரணமாக, தலைவர் ஒருவர் இருக்கையில் மற்றவர்கள் தலைவரைப் போன்று பாவனை செய்தால் அல்லது அதிகாரம் பண்ணினால் அவர்கள் தலைவர்களாகிவிடுவார்களா? “தலை இருக்க வால் ஆடக்கூடாதுங்க”.

13. நல்லது நெனச்சு நடுவழி போனா பொல்லாதது போறவழி போகும்.

நல்லதை மட்டுமே எண்ணி தைரியமாக நம் பாதையைக் கடந்துசென்றால், நம் தைரியத்தைப் பார்த்துக் கெட்டது தானாகத் தன் வழி செல்லும்; நம்மை அணுகாது.

14. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

பிள்ளை அழுதால் அது பசியில் இருக்கிறதென்று தாய் அதற்குப் பால் கொடுப்பாள். அதுபோல, நமக்கு யாரிடமாவது ஒரு வேலை ஆக வேண்டும் என்றால், அவர்களிடம் பலவாறு பன்முறை பேசிப்பார்த்தால்தான் அவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். கேட்காமலேயே உதவி செய்யும் பெரிய நல்லகுணம் பெரும்பாலும் யாருக்குமில்லை.

15. பாத்திரம் அறிந்து பிச்சையிடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.

பிச்சைக் காரர்களில் ஒருசிலர் சோம்பேறிகளாக இருப்பதால் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்குப் பிச்சை போட்டால் அது தர்மமாகாது. அதுபோல, நல்ல குடும்பம் எனத் தெரிந்தபின்தான் நம் வீட்டுப்பெண்ணை கட்டிக்கொடுக்க வேண்டும். இங்குக் கோத்திரம் என்பதை குடுப்பத்தின் தராதரத்திற்கு மட்டும் ஒப்பிட்டுள்ளேன்.

தொடரும்…

10 Comments

  1. Jeevalingam Kasirajalingam மார்ச் 29, 2014
  2. வெங்கட் நாகராஜ் மார்ச் 30, 2014
  3. Bagawanjee KA மார்ச் 30, 2014
  4. Iniya மார்ச் 30, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.