கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு கலந்த கருத்துக்கள்தான் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இன்று, எங்கள் ஊர் காட்டில் நான் பார்த்துத் தெரிந்துகொண்ட முக்கியமான, மனிதர்களுக்குப் பயனுள்ள கல்லத்திமரம் பற்றிக் கூறப்போகிறேன்.

இந்த இயற்கை, கடவுள் நமக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். இயற்கையில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது என்பதுதான் உண்மை. என்னதான் அலோபதி மருத்துவத்தில் பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தாலும், இயற்கையோடு ஒன்றிய நமது நாட்டு வைத்தியத்திற்கு இணையாகாது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்துப் பாட்டி வைத்தியத்திலேயே இருக்கிறது. ஆனால், சொன்னால் வைத்தியம் பலிக்காது என்று மறைத்து வைத்ததால் இன்று பெரும்பாலானவை அழிந்துவிட்டன. ஆனால், ஒரு சில மருத்துவக் குறிப்புகள் காலத்தைக் கடந்து இன்றும் இருக்கின்றன. அவைகளில் ஒன்றுதான் கல்லத்தி.

சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், கட்டுப் போட்டப் பிறகும் சரியாகாது. முருடு போன்ற வீக்கம், ரத்தக்கட்டு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். எலும்பில் மிக மிக மெல்லிய விரிசல் இருந்தாலும் அந்த வீக்கம் இருக்கும். அவர்கள் அந்தப் பிரச்சனையுடனேயே வேலை செய்யும்போது மேலும் வலி அதிகரிக்கும். இவற்றிற்கு தீர்வு என்ன? பிரச்சினைக்குரிய இடத்தில் கல்லத்திப் பால் அடிப்பதுதான்.

கல்லத்தி என்பது என்ன?

இது அத்தி மரத்தின் ஒரு வகை. பொதுவாகப் பாறைகளின் இடுக்கில் வளரும். அதனால்தான் கல்லத்தி எனப்படுகிறது. பொதுவாகக் காடுகளில் காணப்படுகிறது. அதன் படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கல்லத்தி-மரம்

இது ஒரு அரிய வகைத் தாவரம். எந்த அளவுக்கு என்றால், எங்கள் ஊர்க் காட்டில் இரண்டே இரண்டு மரங்கள்தான் உள்ளன. இம்மரங்கள் பெரும்பாலும் பெரிய பெரிய பாறை இடுக்குகளில், இடுங்கட்டான இடங்களில் மட்டும்தான் வளரும். அடிப்பட்டவர்கள் மரத்தின் அடியை அடைய பாறைகளில் ஏறிச் செல்வதும் கடினம், பாலை பிடித்து வருவதும் கடினம். கல்லுக்குள் ஈரம் என்பார்களே, அந்த ஈரத்தை உறிஞ்சிதான் இந்த மரம் வளர்வதாகப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

எப்படி பால் அடிப்பது?

கல்லத்தி மரத்திலிருந்து பால் எடுக்க வேண்டுமெனில் பொழுது புலர அந்த மரத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும். அதாவது காலை 6.30 மணிக்குள்தான் அந்த மரத்திலிருந்து பால் வரும். மற்ற நேரங்களில் இரண்டு மூன்று சொட்டுக்கள் எடுப்பதே சவாலாகிவிடும்.

கூர்மையான கல் ஒன்றை எடுத்துக் கல்லத்தி மரத்தின் மேல் குத்தினால் பால் லேசாகக் கசியும். அதனை மெல்லிய சிறு துணியினால் (உடம்பின் எந்த இடத்தில் பால் அடிக்கவேண்டுமோ அந்த அகலத்திற்கு) ஒற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். சொத சொதவெனத் தேவையான அளவு பால் துணியில் உறிஞ்சப்பட்ட பிறகு துணியை விரித்துப் பக்குவமாகத் தேவைப்படும் இடத்தில் பத்துப் போட வேண்டும். அல்லது மரத்தைக் கொத்துப் போடும்போதே பாலை எடுத்துப் பிரச்சினையுள்ள இடத்தில் தடவிவிட்டு பின் அதன்மேல் துணியைப் போடலாம். கீழே உள்ள படத்தில் எவ்வளவு கொத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்களேன்!

கல்லத்தி-மரம்-closeup

எந்த அளவிற்கு கல்லத்திப் பால் பயன்படுகிறது?

என் அம்மாவிற்கு வண்டியிலிருந்து கீழே விழுந்ததால் வலக்கை மணிக்கட்டு உடைந்தது. கட்டுப்போட்டு குணமான பின்பும் வேலை செய்யும்போது கையில் தாளாத குடைச்சல் ஏற்படும். குறிப்பாகப் பாத்திரம் விளக்கினால், அடுத்த ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக, வலி நிவாரணிகளை பயன்படுத்திக்கொண்டு கையையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். இந்தப் பிரச்சினை இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்தது.

இறுதியில் இந்தக் கல்லத்திப் பற்றித் தெரிந்தவுடன் காட்டிற்கு சென்று அதன் பாலை மணிக்கட்டு முழுவதும் தடவி ஒருநாள் முழுக்க கைக்கு அசைவு கொடுக்காமல் வைத்திருந்தார். அதன் பிறகு அந்த வலி பிரச்சினையே இல்லை (பத்து வருடம் ஆகிவிட்டது). மூன்று வருடமாக என் அம்மாவிற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த அந்தக் குடைச்சல் எங்கே போனது? அதுவே மருத்துவரிடம் சென்று scan, report மற்றும் வைத்தியம் என்று செய்திருந்தால்….?

ஜவ்வு விடுபட்டதின், எலும்பு முறிவின் நுணுக்கமான பிரச்சினைகளைத் துல்லியமாக, நிரந்தரமாகச் சரிசெய்வதுதான் இந்தக் கல்லத்தியின் பெருமை.

சுற்று வட்டங்களிலிருந்து எங்கள் ஊர் காட்டுக்கு இப்பிரச்சினை உள்ளவர்கள் பலபேர் வந்து பயன்பெறுவதைப் பார்த்திருக்கிறேன். எலும்புப் பிரச்சினை மட்டுமல்ல, அடிப்பட்ட இடத்தில் வீக்கம் இருந்தாலும் இந்தக் கல்லத்திப் பால் அடித்தால் உடனே சரியாகும்.

“எங்கே போவோம் கல்லத்திக்கு?” என்று கேட்கிறீர்களா? ஆங்காங்கே கடவுள் இந்தக் கொடையை வளரச் செய்துதான் வைத்திருக்கிறார்; விசாரித்துப் பார்த்தால் தெரியும். கல்லத்திக் கிடைக்காதவர்கள் ஆல மரத்தின் பாலையோ அல்லது அத்தி மரத்தின் பாலையோ இரண்டு மூன்று முறை கூடுதலாக அடித்துப் பயன்பெறலாம்.

20 Comments

  1. இராஜராஜேஸ்வரி ஏப்ரல் 16, 2014
  2. Iniya ஏப்ரல் 16, 2014
    • Anand ஜூலை 23, 2016
  3. bandhu ஏப்ரல் 16, 2014
    • Anand ஜூலை 23, 2016
  4. வெங்கட் நாகராஜ் ஏப்ரல் 19, 2014
  5. Ramani S ஏப்ரல் 19, 2014
  6. சங்கர் மே 26, 2016
  7. Mr.Raja ஜூலை 26, 2016
  8. சுப்பு செப்டம்பர் 23, 2016
  9. சுதாகர் மே 13, 2017
  10. ramsu ஜூலை 18, 2017
  11. Kannan டிசம்பர் 17, 2018

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.