பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11
1. தாய் முகம் பாக்காத சேயும், மழை முகம் முகராத பயிறும் புண்ணியப்படாது.
எவ்வளவுதான் நீர் பாய்ச்சினாலும் ஒரு முறையாவது மழை பெய்தால்தான், பயிர் செழித்து வளரும். அதுபோல, தாய் அரவணைப்பில் வளரும் பிள்ளைகள்தான் முகமலர்ச்சியுடன் வாழ்வர்.
2. பாட்டி பேரு கிழவி; கிழவி பேரு பாட்டி.
இரண்டு விஷயங்களும் ஒன்றுதான். ஆனால், பலர் இந்த மாதிரி கூறிதான் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு விஷயத்தைக் கூறுவோம். அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், அவர்கள் அது சரியில்லாதது போன்றும் அவர்கள் கூறியதுதான் சரி என்பதுபோன்றும் கூறுவார்கள். உண்மையில் இருவர் கூறியதும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் வேறுவிதமாகக் கூறியிருப்பார்கள், அவ்வளவுதான்.
3. பாலைப் பார்ப்பதா? பானையைப் பார்ப்பதா?
பானையில்தான் பாலை ஊற்றி வைக்க வேண்டும். பாலை பூனைக் குடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பானை உடையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். பாலும் முக்கியம்தான், பானையும் முக்கியம்தான். கணவன் மனைவிதான் பானையும் பாலும். இவர்களால் பாதிக்கப்படும் மாமனார் மாமியார்கள், அப்பா அம்மாக்கள் சொல்லும் கூற்றுதான் இது.
4. கிட்ட வா என்றால் மூஞ்சை நக்கிடுவான்.
சிலருக்கு நாம் கொஞ்சம் இடம் கொடுத்தால், நம் தலையிலேயே ஏறி ஆடுவார்கள். நாம் அவர்களுக்குச் சம மதிப்புக் கொடுத்து நம்முடைய இன்ப துன்பங்களில் பங்குகொள்ளச் செய்வோம். ஆனால், அவர்களோ அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நமக்குப் பாதகத்தை விளைவித்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் நம் கிட்டவே அண்டவிடக் கூடாது.
5. தாயைப் பழித்தாலும் பழிக்கலாம், தண்ணீரைப் பழிக்கக் கூடாது.
தாய் தெய்வத்திற்கு சமம். எந்தவொரு பிள்ளையும் யாரை அவதூறான வார்த்தைகளைக் கொண்டு திட்டினாலும் தன் தாயைத் திட்டமாட்டான். அப்படி திட்டினால் அது மிகப்பெரியப் பாவம். ஆனால், தாயைப் பழிப்பதைவிட மோசமான செயல் தண்ணீரைப் பழிப்பது என்று நம் முன்னோர்கள் கூறிவைத்திருக்கின்றனர். இந்தப் பழமொழி எந்த அளவுக்கு உண்மை என்று நகரங்களில் வாழ்பவர்களுக்கு நன்கு தெரியும். தண்ணீர் நமக்கு உயிர்நாடி போன்றது. அதனை அதிகமாகக் கிடைக்கும்போது அதன் அருமை தெரியாமல் வீணடிப்பது அதனைப் பழிப்பதற்கு சமம். முந்தைய சந்ததி தண்ணீரைப் பழித்ததால் இந்தச் சந்ததி சிரமப்படுகிறது. இன்றைய சந்ததி பழித்தால் நாளைய சந்ததி கஷ்டப்படும்.
6. பயந்தவனுக்குப் பகலும் பகை; துணிந்தவனுக்கு கடலும் அற்பம்.
முற்றிலும் உண்மையான பழமொழி. பயத்துடன் ஒரு காரியத்தில் இறங்கினால் அது தோல்வியில்தான் முடியும். துணிந்து தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது எந்த ஒரு காரியமும் வெற்றியடையும். மனிதர்களுக்குத் துணிவே துணை.
7. ஊர அடிச்சி உலையில போடாதே.
பலர் இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டு உலை கொதிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த வீட்டு அடுப்பை அணைக்கிறார்கள். லஞ்சம் வாங்குபவர்கள், அடுத்தவர்களுக்குத் துரோகம் இழைத்து பணம் சம்பாதிப்பவர்கள், அடுத்தவர் முதுகின்மேல் சாலை போடுபவர்கள், இவர்கள் எல்லாம் இந்த ரகத்தில் சேருவார்கள். அவ்வாறு இருத்தல் தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
8. கன சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாப்பு.
இரு மனிதர்கள் மிகுந்த நெருக்கமான நட்போடு பழகினால் ஊரில் பலர் இருவரின் சினேகிதத்தைப் பார்த்துப் பொறாமைப் படுவார்கள். அதனால், இருவரின் நட்பில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், மனிதர்களின் எண்ண அலைகள் நம்மைப் பாதிக்கின்றன. என்ன செய்வது, சில நேரங்களில் மற்றவர்கள் கண்ணுக்கும் வாய்க்கும் பயந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.
9. பாத்திரத்தை மாற்றினால் பாலின் நிறம் மாறுமா?
அது எப்படி மாறும்? எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் பால் வெள்ளை நிறம்தான். அதுபோல, நல்லவர்கள் எந்தச் சூழலிலும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். சிலர், நல்லவர்களைக் கெட்டவர்களாக மாற்றப் பல சோதனைகள் கொடுப்பார்கள். இருந்தாலும், நேர்மையாளர்கள் நேர்மை தவறாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
10. குந்தித் தின்னாக் குன்னும் கரையும்.
மலையளவு பொருள் மற்றும் சொத்துக்கள் ஒருவனிடம் இருந்தாலும்கூட அவன் உழைக்காமல் சோம்பேறியாய் உட்கார்ந்து தின்றுகொண்டிருந்தானெனில் அவன் சொத்துக்கள் விரைவில் கரைந்துவிடும்.
11. பேச்சுதான் வாழைப்பழம், செயலெல்லாம் எட்டிக்காய்.
சிலர் இனிக்க இனிக்க பேசுவார்கள். ஆனால், அவர்களின் செயல்கள் அனைத்தும் நமக்குத் தீமை பயப்பனவாக இருக்கும். எட்டிக்காய் ஒரு கொடிய விஷம். இவர்கள் அந்த எட்டிக்காய்க்குச் சமமானவர்கள். ஆனால், வாழைப் பழத்தைப் போன்று சுவையான பேச்சால் நம்மைக் கவிழ்பவர்கள்.
12. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.
எந்த ஒரு உண்மையையும் யாராலும் மறைத்துவைக்க இயலாது. என்றாவது ஒருநாள் அந்த உண்மை தானாக வெளிப்பட்டுவிடும்.
13. மீன் குஞ்சிக்கு நீந்தக் கத்துத் தரனுமா?
தேவையே இல்லை. அது பிறவியிலேயே நீந்தத் தெரிந்த ஒரு உயிரினம். அதுபோலக் கெட்டிக் காரர்களுடைய பிள்ளைகள் கெட்டிக் காரர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் எதையும் புதிதாகக் கற்றுத் தரவேண்டியதில்லை. உதாரணமாக, மீனவர்களின் பிள்ளைகளுக்கு மற்றவர்களின் பிள்ளைகளைவிட நன்றாக மீன் பிடிக்க வரும்.
14. ஆத்தோட போனாலும் போவேன், தெப்பக்காரனுக்குக் காசு தரமாட்டேன்.
இது ஒரு கருமியின் கூற்று. ஆழமான ஆற்றைக் கடக்க தெப்பத்தில் சென்றால்தான் முடியும். நடந்து சென்றால் ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட வேண்டிவரும். ஆனால், இந்தக் கருமி தன் உயிரே போனாலும் பரவாயில்லை, காசு செலவாகக் கூடாது என்கிறான். இப்படித்தான் பலர் சிக்கனம் என்ற பெயரில் தங்களது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடச் செலவு செய்யாமல் கருமியாய் இருக்கிறார்கள்.
15. கொல்லனைக் கண்டால் குரங்கு கு*சிக்கு பூணு கட்டச் சொல்லுமாம்.
கொல்லன் மனிதன். குரங்கு விலங்கு. அப்படியிருக்க அது மனிதனை அதிகாரம் செய்யப் பார்க்கிறது. பூணு என்பது உலக்கையின் அடியில் இருப்பது. அதனைக் கட்ட பழுக்கக் காய்ச்சி சொருகுவார்கள். அதைக் குரங்கின் கு*சியில் கட்டினால்…? குரங்குக்குச் சாவுதான். அதோட அறியாமை அதனை அவ்வாறு செய்யச் சொல்கிறது. தான் மனிதனைவிட பெரியவன் என்று காட்டிக்கொள்ள மனிதனை அதிகாரம் செய்யும் குரங்கு அதனால் தனக்குதான் ஆபத்து என்பதை உணரவில்லை.
மனிதர்களில் சிலர் அந்தக் குரங்குபோன்றுதான் உள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு கணவன் மனைவி. கணவன் வெளியூரில் தங்கி வேலை செய்கிறார். அங்கு அவருக்குக் கடுமையான வேலை. மனைவி வீட்டில் சும்மாதான் இருக்கிறார். கணவர் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். வீட்டு வேலைகளெல்லாம் (household work) அப்படி அப்படியே இருக்கும். அவர் மனைவி தனது ஆளுமைத் திறனைத் தன் கணவரிடம் காட்ட அன்றுபார்த்து உடம்பு சரியில்லாததுபோல் பாசாங்கு செய்துகொள்வார். ஒரு தேநீர் கூடத் தன் கணவருக்குக் கொடுக்கமாட்டார். அவர்தான் சமையல் செய்து தன் மனைவிக்குக் கொடுப்பார். பின் மனைவி வீட்டு வேலைகளைத் தன் கணவரைச் செய்யச் சொல்வார். இப்படியாகக் கணவர் வீட்டிற்கு வரும் அந்த ஒரு நாள் கூட அதிகப்படியான வேலைகளைச் செய்து நொந்துவிட்டு செல்வார். அந்தக் குரங்கின் அறியாமை இந்த மனைவியின் கணவனை அடிமைப்படுத்தும் குணத்திற்கு சமம்.
தொடரும்…
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
http://www.Nikandu.com
நிகண்டு.காம்
நன்றி…
பாலை, பானையை …..
சிறந்த விளக்கம்!