நம் தமிழ்நாட்டில் மருமகளை மாட்டுப்பெண் என்று கூறும் வழக்கம் ஒருசில சமூகங்களில் உள்ளது. அதற்குக் காரணம் என்ன, எதனால் நாம் வீட்டிற்கு வரும் மருமகளை மாட்டுப்பெண் என்று அழைக்கிறோம் என்று இந்தப் பதிவில் காண்போம்.
இந்த வார்த்தையின் பொருளைச் சொல்லாய்வுமூலம் தேடும் சிலர் இதன் தோற்றத்தைப் பற்றியும் இதன் பொருளைப் பற்றியும் வெவ்வேறு கருதுகோள்களைத் தருகின்றனர். அவற்றுள் எது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது, மாட்டுப்பெண் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் என்னவாக இருக்கும் என்பதை இங்கு அலசி ஆராய்வோம்.
மாட்டுப்பெண் – வெவ்வேறு சொல்லாராய்ச்சி விளக்கங்கள்
சொல்லாராய்ச்சி – 1
பொதுவாக மாட்டுப்பெண் என்ற சொல்லைப் பற்றித் தவறான பல புரிதல்கள் உள்ளன. முதல் தவறான புரிதல், இதன் பொருளை உணராதவர்கள் இதில் மாடு என்னும் வார்த்தை வருவதால் அது பெண்களை மாடு என்று குறிக்க இந்த ஆணாதிக்க சமுதாயம் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமுதாயத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் ஆணாதிக்கம் இருக்கிறதா என்று நோண்டி நோண்டிப் பார்ப்பார்கள்; இல்லை என்றாலும் கூட இருப்பதாகக் கட்டமைக்க முயற்சிப்பார்கள். அவர்களுக்கு இந்த வார்த்தை அல்வா சாப்பிடுவது போல்.
இது மட்டுமல்ல, பல வார்த்தைகள் நமக்குப் பொருள் தெரியவில்லை என்றால் அந்தப் பொருளை அவர்கள் தவறாக நம்மிடம் பரப்பி அதன் மூலம் சமுதாயத்தில் இல்லாத பிரச்சனைகள் இருப்பதாகக் கட்டமைக்கக்கூடும். நாம் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தச் சொல்லாய்வுபற்றி என் கருத்து என்னவெனில், சில சமூகங்களில் மருமகனை மாட்டுப்பிள்ளை, மாட்டுப்பையன், மாட்டுக்கார மாப்பிள்ளை என்றெல்லாம் அழைக்கும் வழக்கமுள்ளது; அதுவென்ன பெண்ணாதிக்கமா? அதனால், இந்தச் சொல்லாராய்ச்சி முற்றிலும் தவறு.
சொல்லாராய்ச்சி – 2
தன் குடும்பத்தில் வந்து வசமாக மாட்டிக்கொண்ட பெண் மாட்டுப்பெண். ஏனெனில் திருமணம் என்பதே பெண்களுக்கு எதிரானதுதானே. எனவே, ‘மாட்டியப்பெண்’ என்ற சொல்லே மருவி ‘மாட்டுப்பெண்’ என்றாயிற்று. இவ்வாறு சிலர் பிதற்றுகின்றனர். இதனைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை, சிரித்துவிட்டு கடந்துசெல்லலாம்.
சொல்லாராய்ச்சி – 3
வீட்டிற்கு வரும் மருமகள் தன்னைப் பற்றியும் தன் சுக துக்கங்களைப் பற்றியும் கவலைப்படாமல் மாடு போன்று உழைத்து அந்தக் குடும்பத்தை முன்னேற்றுகிறாள். அதனால், அவள் மாட்டுப்பெண் என்று அழைக்கப்படுகிறாள். இது பெண்களை எப்போதும் உயர்த்திப் பேசுபவர்களின் கூற்று.
பெண்களை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை. ஆனால், அவர்களை உயர்த்துவதற்காக ஆண்களைத் தாழ்த்தக் கூடாது. இது எப்படிப்பட்ட மனநிலையென்றால், சிலர் விலங்குகளில்கூட பெண்ணினம்தான் சிரமப்படுகிறது என்று கூறுவார்கள். உதாரணமாக, பசுமாட்டின் பாலைக்கூட உறிந்து அதனைக் கொடுமைப்படுத்துகிறோம் என்று கூறுவார்கள். ஆனால், எருது விவசாயிகளுக்குத் தன் உயிரைக்கொடுத்து வேலை செய்வதை அவர்கள் கருத்தில் கொள்வதேயில்லை.
மாடு போன்று உழைத்தல் என்பது காளைமாடுகளை வைத்துதான் கூறுகிறார்கள். அதற்காகப் பசுக்கள் தாழ்ந்தவைகளாகாது. அவைகளை நாம் பாலுக்காகப் பயன்படுத்துகிறோம், காளைகளை நாம் உழவுக்குப் பயன்படுத்துகிறோம் அவ்வளவே. இவற்றுள் ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்றெல்லாமில்லை.
அதைப்போன்றுதான் மனித இனத்திலும், ஆண்கள் வெளியில் சென்று பொருளீட்ட உழைக்கின்றனர்; பெண்கள் வீட்டில் உழைக்கின்றனர். ஒரு மூட்டைத் தூக்கும் மனிதரை எடுத்துக்கொண்டால், அவரின் தேவையைப் பொறுத்து ஒரு நாளைக்கு நூறு முதல் இருநூறு மூட்டைகள் வரை ஏற்றி இறக்க வேண்டியிருக்கும். எனவே, மருமகள் மாடு போன்று உழைப்பதால்தான் அவள் மாட்டுப்பெண் எனப்படுகிறாள் என்பதும் தவறான புரிதல்.
சொல்லாராய்ச்சி – 4
மருமகள் தன் குடும்பத்திற்கு வரும் இன்னொரு பெண் போன்றவள். தன் குடும்பத்தில் இருக்கும் பெண் வேறொரு புகுந்தவீட்டிற்கு சென்றுவிடுகிறாள். அவளுக்கு மாற்றாகத் தன் குடும்பத்திற்கு மருமகளாக வரும் பெண் ‘மாற்றுப்பெண்’. அதுவே நாளடைவில் ‘மாட்டுப்பெண்’ என்று திரிந்துள்ளது.
இது கருத்தாக மிகச்சரி. ஒவ்வொரு குடும்பமும் மருமகளை தன் மகள் போன்றே நினைக்க வேண்டும். ஆனால், மாற்றுப்பெண் என்பது மாட்டுப்பெண் என்று திரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழைப் பொறுத்தவரை ‘மாற்று’ என்பது ‘மாத்து’ என்றுதான் திரியும். எடுத்துக்காட்டுகள்: மாற்றுத்துணி > மாத்துத்துணி, கைமாற்று > கைமாத்து. எனவே, இந்தச் சொல்லாய்வும் பொருந்தாது.
சொல்லாராய்ச்சி – 5
‘மாநாட்டுப்பெண்’ என்பதே மருவி ‘மாட்டுப்பெண்’ என்றானது. திருமண நிகழ்வு மாநாடு என்றும் மணப்பெண் மாநாட்டுப்பெண் என்றும் சிலர் கூறுகின்றனர். இது மேலும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய ஒன்று. இருப்பினும், மாட்டுப்பெண் என்னும் வார்த்தைக்கே நேரடியான பொருளிருக்கும்போது இந்தச் சொல்லாய்வை ஏற்றுக்கொள்வது சரியாகாது.
மாட்டுப்பெண் – உண்மைப் பொருள்
மாடு என்பதை கால்நடை இனம் என்ற பொருளில் மட்டுமே பார்ப்பதே மேற்கண்ட தவறான சொல்லாராய்ச்சிகளுக்கு வித்திடுகிறது. மாடு என்பதற்கு அடிப்படையான பொருளே செல்வம் என்பதுதான். பசுக்களும் காளைகளும் நமது செல்வங்களாதலால் அவைகள் மாடுகள் எனப்படுகின்றன.
அந்தக்காலத்தில் ஒருவர் வைத்திருக்கும் மாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டே அவர்களின் செல்வம் மதிப்பிடப்பட்டது. இரண்டு பால் மாடுகள் இரண்டு எருதுகளை ஒருவர் கொண்டிருந்தாலே அவரது வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்.
மாடு என்னும் வார்த்தை செல்வம் என்னும் பொருளில் வரும் குறளை நோக்குங்கள்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
குறள் 400.
சில வார்த்தைகள் – மாட மாளிகை, மாடி வீடு.
மாட்டுப்பெண் என்னும் வார்த்தையைத் தமிழ் இலக்கணப்படி பின்வருமாறெல்லாம் விளக்கலாம்.
மாடு + பெண் = மாட்டுப்பெண்.
- மாடு போன்ற பெண் என்று எடுத்துக்கொண்டால் அது உவமைத்தொகை. அதாவது, மருமகள் நம் வீட்டிற்கு வரும் செல்வம் போன்றவள்.
- மாடு ஆகிய பெண் என்று எடுத்துக்கொண்டால் அது உருவகம். அதாவது, மருமகள்தான் ஒரு வீட்டின் செல்வமே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான், சமூகத்திலும் மதிப்புக்குரியவன் ஆகிறான். இதனால், அந்தக் குடும்பம் முழுமை பெற்றக் குடும்பமாக மாறுகிறது; அடுத்தத் தலைமுறையும் உருவாகிறது. மருமகள் என்பவள் குடும்பத்தை முழுமை பெறச் செய்யும் செல்வம்.
- மாட்டைக் கொண்டு வரும் பெண் என்று எடுத்துக்கொண்டால் அது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை. அதாவது, செல்வத்தைக் கொண்டுவரும் பெண். தன் பிறந்தவீட்டில் பெற்ற நற்பண்புகளும் குடும்பம் நடத்தும் திறனுமே அவள் கொண்டுவரும் செல்வங்கள்.
மேற்கண்ட மூன்றனுள் எதை எடுத்துக் கொண்டாலும் மருமகள் என்பவள் செல்வம் என்ற நோக்கத்திலேயே அவளை மாட்டுப்பெண் என்று அழைக்கிறார்கள் என்பது தெளிவுற விளங்கும். இதற்கு நாம் பல உதாரணங்களைக் கூறலாம்.
ஒரு வீட்டிற்கு மருமகள் வருவதால் நல்லது நடக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. சிலர் இவ்வாறு கூறக் கேட்டிருப்பீர்கள், “எல்லாம் என் மருமகள் வந்த நேரம்”. அதற்கு அர்த்தம், மருமகள் வந்ததுதான் வீட்டில் நடக்கும் நல்லவைகளுக்குக் காரணம் என்பதாகும். இவ்வாறு ஒரு பெண் மருமகளாகத் தன் குடும்பத்திற்கு வருவது குடும்பத்தை மேம்படுத்தி எல்லா செல்வங்களையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கை பொதுவாகப் பெரும்பாலானவர்களிடத்தில் நிலவுகிறது.
மேற்கண்ட நம்பிக்கைக்குக் குறியீடாகச் சமுதாயத்தில் சில பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
சில சமூகங்களில் திருமணத்தின்போது மணப்பெண் மாட்டுடன் வருவாள்.
சில சமூகங்களில், மாப்பிள்ளைகள் மாடுகளுடனும் ஆடுகளுடனும் பெண் வீட்டிற்குச் சென்று, அவற்றை அன்பளிப்பாக அளித்துப் பெண்ணைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவர் அல்லது நிச்சயதார்த்தம் செய்து கொள்வர்.
பசுமாட்டைப் பெண் தெய்வமாக வணங்கும் நடைமுறையும் நம்மிடமுள்ளது.
இறுதியாக
இவ்வாறாக, தமிழர்கள் மருமகளை தங்கள் வீட்டின் செல்வமாகக் கருதியே அவளை மாட்டுப்பெண் என்று அழைத்தார்கள் என்பதே அறுதியிட்டுக் கூறக்கூடிய உண்மை. மருமகள் மட்டுமல்ல மருமகனும் ஒரு வீட்டிற்கு புதிதாக வரும் செல்வமே. அவனுக்கும் மேற்கூறியவைகள் அனைத்தும் பொருந்தும். எனவேதான் மருமகனையும் மாட்டுப்பையன் என்று அழைத்தார்கள்.
அடுத்தப் பதிவில் சந்திப்போம், நன்றி.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.