தமிழ் உலக அளவில் உயர்தனிச் செம்மொழியாக மிளிர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் தொடர்ச்சியாக இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது. காலத்திற்கேற்ப நிறைய மாற்றங்களைச் சந்தித்தாலும் அதன் அடிநாதத்தை தன் வட்டார வழக்குகளில் இழக்காமல் காத்து வருவதால் தமிழ் இன்னும் அழியாமல் இருக்கிறது.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் தமிழில் உள்ள வட்டார வழக்குகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. நாம் என்று ஆங்கிலம் கலந்து பேச ஆரம்பித்தோமோ அன்றே வட்டார வழக்கு அழிய ஆரம்பித்துவிட்டது. ஆங்கிலம் கலந்து பேசுவது பெருமை என்ற மனநிலை, தமிழை குறிப்பாக ஒவ்வொரு இடத்திற்குமான தனித்துவமான வட்டார வழக்குகளை மறக்க வைத்துவிட்டது.
பொதுத்தமிழில்கூட மேல்வாய், முகவாய் என்று நாம் அன்று பயன்படுத்திய வார்த்தைகளை இன்று பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை; அவைகளுக்குப் பொருள் தெரிந்தவரும் சிலரே. கைக்குட்டை போன்ற வார்தைகள் அழிந்துவிட்டன. ஆங்கில வார்த்தை கலந்து தமிழில் சரளமாகப் பேச முடியாமல் பலர் திண்டாடுவது வட்டார வழக்கை அழிக்கின்றது.
வட்டார வழக்குகள்பற்றி
ஒவ்வொரு மொழியிலும் அது பேசப்படும் இடத்தின் தன்மைக்கேற்ப சில வார்த்தைகள் மாறுபடும், சில புதிய வார்த்தைகளும் உருவாகும். தமிழிலும் வெவ்வேறு வட்டார வழக்குகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகின் வெவ்வேறு இடங்களிலும் அந்தந்த இடத்திற்கென்று தனித்தனி வட்டாரத் தமிழ் இருக்கின்றது.
உதாரணமாக, சென்னை தமிழ், கொங்கு தமிழ், நெல்லை தமிழ், மதுரை தமிழ், குமரி தமிழ், நடுநாட்டுத்தமிழ், பாலக்காடு தமிழ், மைசூர் தமிழ், மும்பை தமிழ் என்று இந்தியாவில் பல வட்டார வழக்குகளும் இலங்கையில் சில வட்டார வழக்குகளும் மலேசிய மற்றும் பர்மாவில் நிறைய தமிழ் வட்டார வழக்குகளும் உள்ளன.
ஒரு ஊரில் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லும் அதே பொருளைக் குறிக்க வேறு இடத்தில் வேறொரு சொல்லும் பயன்படுவதுமே வட்டார வழக்கின் அடிப்படை. எடுத்துக்காட்டாக, அன்னையின் அன்னையை பாட்டி, அம்மம்மா, அம்மாயி, அம்மத்தா, அம்மாச்சி, பாட்டிமா என்று பல பெயர்களில் வெவ்வேறு ஊர்களில் அழைக்கிறார்கள்.
சில வார்த்தைகள் ஒரு ஊரில் ஒரு பொருளும் வேறு ஊரில் வேறொரு பொருளும் தருகின்றன. உதாரணமாக, ‘ஆயா’ எனும் வார்த்தை சில ஊரில் அம்மாவைக் குறிக்கவும் சில ஊரில் பாட்டியைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறான விஷயங்களால் சில வட்டார வழக்கு மொழிகளைப் புரிந்துகொள்வது சிலருக்கு கடினமானதாக இருக்கும். இலங்கையின் சில வட்டார வழக்கு பேச்சுக்களை தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்துகொள்ள இயலாதது இதற்கு ஒரு சான்றாகும். எவ்வாறாயினும் ஒவ்வொரு வட்டாரத் தமிழும் நமது தமிழன்னைக்கு அணி சேர்ப்பனவே.
வட்டார வழக்கின் பயன்கள்
வட்டார வழக்குகள் மொழியின் சொத்துக்கள். அவையே ஒரு மொழியின் சொல்வளத்தைக் காப்பாற்றுகின்றன. அவற்றாலேயே வார்தைகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. உதாரணமாக, “பைய போலாம்” என்று திருநெல்வேலி தமிழில் கூறுவார்கள். பைய என்னும் சங்ககாலத்து வார்த்தை இன்றளவும் வாழ்கிறது.
நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு, நம் தமிழ் பிற நாட்டு மன்னர்களின் ஆதிக்கத்தினாலும் பிற நாட்டவருடனான வணிகத்தொடர்பினாலும் இருபத்திரண்டிற்கும் மேற்பட்ட மொழிகள் கலந்து அது தன் தூய்மையை இழந்து காணப்பட்டது. எழுத்துவழக்கில் பெரும்பாலும் சமஸ்கிருதம் கலந்து எழுதப்பட்டது. அதனால் பல சான்றோர்கள் அதனை மீட்டுருவாக்கம் செய்ய அரும்பாடு பட்டனர். அவர்களுக்குத் தமிழ் வார்த்தைகளை மீட்டுருவாக்கம் செய்யச் சங்க இலக்கியங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தனவோ அதேயளவு வட்டார வழக்குகளைப் பற்றிய ஆராய்ச்சியும் மிகுந்த துணை புரிந்தன என்பதை நாம் மறுக்க இயலாது.
அம்மா என்னும் வார்த்தை, ஆயி, ஆயாள், தாயி, ஆத்தா, தாயார், ஆச்சி, அம்மை என்று பல வகைகளில் வட்டார வழக்காக வழங்கப்படுகிறது. இதன்மூலம் எப்படி நம் தமிழ் வார்த்தை வேறு மொழிகளுக்குச் செல்கிறது என அறியலாம். மராத்தியில் அம்மாவை ‘ஆய்’என்று அழைக்கிறார்கள். ‘மும்பை’ என்னும் வார்த்தைகூட தன்னுள்ளே ‘ஆய்’ என்ற வார்த்தையைப் பெண் தெய்வத்தைக் குறிக்க கொண்டுள்ளது. இந்த வார்த்தை நம் சங்க இலக்கியத்தில் இருந்தாலும் நாம் தற்போது எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் ஆய் என்பதை பயன்படுத்துவதில்லை. எனவே மராத்தியர்கள் அது தமிழல்ல மராத்திய வார்த்தை என்று வாதிடுவதை சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், கும்பகோணத்திலும் நடுநாட்டிலும் இன்னும் ஒருசில இடங்களிலும் ‘ஆயி’ என்ற கொஞ்சம் திரிந்த வார்த்தை பயன்பாட்டிலிருக்கிறது. சிலர் கருப்பாயி, மரியாயி என்று பெயர் கொண்டுள்ளனர். சில குலதெய்வங்களின் பெயர்கள் பெரியாயி, மல்லாந்த மாரியாயி என்றும் இருக்கிறன. இவைகள் இல்லையென்றால் உலகம் மராத்தியர்கள் சொல்வதையே நம்பும். அது தமிழ் வார்த்தை இல்லாமல் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது.
இந்தியில் அம்மாவை ‘மா’ என்று அழைக்கிறார்கள். நாமும்கூட பேச்சுவழக்கில் ‘மா’ என்றே அழைக்கிறோம். தெலுங்கில் பெண்ணை ‘அம்மாயி’ என்கிறார்கள். நமது வட்டார வழக்குகளை ஆராய்ந்தாலே பல இரகசியங்கள் வெளிவரும். அதற்கு நம் வட்டார வழக்குகளைப் பயன்படுத்துவதும் அதனைப் பாதுகாப்பதும் அவசியம்.
வட்டார வழக்கு அழிந்துவருவதற்கான காரணங்கள்
வட்டார வழக்கில் பேசுவதை கௌரவக் குறைச்சலாக நினைத்தல்
சிலர் வட்டார வழக்கில் பேசுவதை கௌரவக் குறைச்சலாகவும் பட்டிக்காட்டுத் தனமாகவும் நினைக்கின்றனர். அதனால் பொதுப்படையான தமிழிலோ அல்லது ஆங்கிலம் கலந்தோ பேசுகின்றனர்.
ஆங்கிலம் கலந்து பேசுதல்
சிலர் தங்களைப் பெரிய மேதாவிகளாகக் காண்பிக்க ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர். அவர்களுடன் பேசுபவர்களுக்கும் அது தொற்றிக்கொள்கிறது. இந்தப் போக்கு ஒவ்வொரு தமிழ் வார்த்தையாக அழித்துக்கொண்டே வருகிறது.
தவறான கற்பிதம்
சிலரால் வட்டார வழக்கில் பேசுவது தவறு என்றும் அது மொழியைச் சிதைக்கிறது என்றும் தவறாக மக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. அதனால் பலர் தங்கள் வட்டார தமிழில் பேசாமல் பொதுத்தமிழிலேயே பேசுகின்றனர்.
கேலி கிண்டல்
சில வார்த்தைகள் வேறு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். எனவே, சிலர் அடுத்தவர்களின் கேலிக்கு பயந்து பொதுவான தமிழில் பேசுகின்றனர். நான் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது ‘மல்லாட்டை’ என்று பேசினால் கிண்டல் செய்வார்கள்.
வேற்றுமொழி என்று தவறாகப் புரிந்துகொள்ளுதல்
சில வார்த்தைகளை நாம் தமிழில்லையெனத் தவறாகப் புரிந்துகொள்வதால் அதற்கு மாற்றாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, ஜுரம் என்ற வார்த்தையைத் தவிர்த்து அனைவரும் காய்ச்சல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். சுரம் என்பதே ஜுரம் என்று திரிந்துள்ளது. காய்ச்சல் என்பதும் சிறப்பான வார்த்தைதான். அதனை எந்த வட்டாரத்தில் பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் பயன்படுத்தட்டும். ஜுரம் என்று பயன்படுத்துபவர்கள் சுரம் என்று மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில், ஒவ்வொரு வார்த்தையின் பயன்பாடும் முக்கியம்.
பெரியவர்களுடன் பேசுவதை தவிர்த்தல்
பெரியவர்களுடன் சகஜமாகப் பேசும்போதுதான் வட்டார வழக்கு நமக்குக் கடத்தப்படும். சிலர் பெரியவர்கள் பேசினாலே வெறுப்பாகிறார்கள். வட்டார வழக்கின் அழகே ஏற்ற இறக்கமாகப் பேசுவதும், சில இடங்களில் வார்த்தையை இழுத்துப் பேசுவதும் மற்றும் அருத்தமில்லாத சத்தங்களைச் சேர்த்துப் பேசுவதும்தான். இன்றைய தலைமுறையினரிடம் அந்தக் கலைநயம் இல்லை. அது முதியவர்களிடமிருந்து மட்டுமே பெறக்கூடிய சொத்து.
வேளாண்மை அழிதல்
வட்டார வழக்குகள் அழிவதற்கு விவசாயத்தை மறந்து வெளியூருக்கு வேலைக்குச் செல்வது ஒரு முக்கியக் காரணமாகும். இது தற்காலத்தில் தவிர்க்க முடியாதென்றாலும் மண்ணோடு பழகினால்தான் நிறைய வார்த்தைகள் நமக்குத் தெரியவரும். நம் வீட்டிற்கு வரும் நேரத்திலாவது நம் பெற்றோர்களுக்கு விவசாயத்தில் உதவ வேண்டும்.
திரைப்படங்கள்
வட்டார வழக்குமட்டுமல்ல தமிழே அழிவதற்கு மிக முக்கியக் காரணம் திரைப்படங்கள். தமிழ்ப் படம் என்று பெயர் வைத்துவிட்டு 50% ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அப்படியே வட்டார வழக்கு பயன்படுத்தினாலும் சென்னை, மதுரை, அல்லது கோயம்புத்தூர் தமிழ் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒழுங்காக இருக்காது, கொலைசெய்து வைத்திருப்பார்கள்.
தற்காலத்தில் கிராமத்து திரைபடங்கள் என்றாலே, மதுரை வட்டார வழக்குதான் பயன்படுத்துகிறார்கள். கதைக்களம் விழுப்புரமாக இருக்கட்டும், கிருஷ்ணகிரியாக இருக்கட்டும், அவர்கள் பேசுவது “இருக்காய்ங்க” என்று மதுரைத் தமிழ்தான். ஆனால், அந்த மாவட்டங்களுக்கென்று தனித்துவமான வட்டார வழக்குகள் இருக்கின்றன. அதனை முயற்சி எடுத்து இயக்குனர்கள் மக்களுக்குக் காண்பிப்பதில்லை. சமீபத்தில் சில படங்களில் வேறுசில வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுவது சற்று ஆறுதலான விஷயமே.
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள்
தமிழ் அழிவதில் தொலைக்காட்சிகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நம் பேச்சுவழக்கில் ஆங்கிலம் புகுத்தப் பலர் முயல்கின்றனர்; மேலும் சில வார்த்தைகளுக்குத் தவறான பொருள்களும் பரப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘தாறுமாறு’ எனும் எதிர்மறை பொருள்கொண்ட வார்த்தையை இன்று நாம் நேர்மறை பொருள்கொண்ட வார்த்தையாகப் பயன்படுத்துவதற்குக் காரணம் தொலைக்காட்சிகள்தான்.
YouTube போன்ற சமூக வலைதளங்களில் ஒருசிலர் செய்யும் தவறான செயல்களால் இன்று அடித்தட்டு மக்கள்வரை ஆங்கிலம் கலந்து பேசும் பழக்கமும் தமிழ் பண்பாட்டைப் பின்பற்றுவது பயனற்றது என்ற எண்ணமும் வேரூன்றி வளர்கிறது.
வட்டார வழக்குகள் அழிவதால் ஏற்படும் தீமைகள்
வார்த்தைகள் அழியும்
உதாரணமாக, இன்று செய்தித்தாளில்கூட காவலரைப் போலிசார் என்றே எழுதுகின்றனர். இதனை நாம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், சில வார்த்தைகளை இழந்தால் அதனை மீட்டெடுக்கவே முடியாது. எடுத்துக்காட்டாக ‘plastic paper’ என்பதை தற்போது ‘நெகிழித் தாள்’ என்றும் வேறுசில பெயர்களைக் கொண்டு தமிழாக்கப்படுத்தியுள்ளனர். இது மிகவும் வேடிக்கையான ஒன்று. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வார்த்தைகளை விடுத்து புதிதாக ஒரு வார்த்தையை உருவாக்குவது தமிழின் இயல்பைச் சிதைக்கும், மக்கள் இயற்கையாகச் சொற்கள் உருவாக்கும் திறனும் குறையும்.
ஒரு பொருளுக்குத் தமிழாக்கம் செய்யும்போது ஏற்கனவே அதனைக் குறிக்க வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றனவா என்று பார்த்தல் அவசியம். ‘Plastic paper’ என்ற வார்த்தை எங்கள் தென்னாற்காடு வழக்கில் ‘சவ்வுத்தாள்’ என்று புழக்கத்தில் இருந்தது, தற்போது plastic paper என்றே பயன்படுத்துகின்றனர். சவ்வுத்தாள் என்ற வார்த்தை யாருக்கும் தெரியவில்லை, இணையத்தில்கூட இல்லை என்பது வருத்தமான ஒன்று. இவ்வாறு எவ்வளவு வார்த்தைகள் பயன்படுத்தப்படாததாலும் பதிவுசெய்யப்படாததாலும் அழிந்தனவோ!
பழமொழிகள் மற்றும் சொலவடைகள் அழியும்
தற்போது சொலவடைகள் யாரும் பயன்படுத்துவதில்லை. மக்களுக்கு உயரிய சிந்தனைகளைப் போதிக்கக்கூடிய சிறந்த பழமொழிகளும் சொலவடைகளும் வட்டார வழக்குகளிலேயே பொதிந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தவில்லையெனில் வருங்காலச் சந்ததியினரை நெறிமுறைப்படுத்த பெரியோர் கூற்றுகள் இல்லாமலேயே போகும்.
பேச்சுச்சுவை குறையும்
ஒவ்வொரு வட்டார வழக்கைக் கேட்கும்போதும் அதன் சுவையை உணரலாம். உதாரணமாக, கொங்கு தமிழில் இனிய இசையையும், குமரி தமிழில் ஒருவித சொல்லினிமையையும் காணலாம். வட்டார வழக்குகளிலேயே எதுகை மோனைகளும் உவமைகளும் உருவகங்களும் அதிகம் இருக்கின்றன. அவையே தமிழுக்கு அழகு சேர்கின்றன. அவைகள் அழிந்தால் தமிழ் அதன் சுவையில் குறைந்து நிற்கும்.
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கலைகள் அழிதல்
ஒவ்வொரு வட்டாரத்திற்கென்று சில நாட்டுப்புற பாடல்களும் சில கிராமியக் கலைகளும் இருக்கின்றன. அவைகள் அழிந்துவருவதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டேதானே இருக்கிறோம்?
தமிழ் வார்த்தைகள் பிறமொழி வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளப்படும்
சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. அவற்றில் உள்ள சில வார்த்தைகள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாததால் அவைகள் மலையாள வார்த்தைகள் என்று சிலர் வாதிடுகிறார்கள். மேலும், சிலப்பதிகாரத்தையே தங்களுடையது என்று உரிமை கொண்டாடவும் முயற்சிக்கிறார்கள். அப்பனுக்குப் பிறந்தவன்தான் பிள்ளையேயொழிய பிள்ளைக்குப் பிறந்தவன் அப்பன் என்று கூறக் கூடாது. அவ்வாறு அவர்கள் கூறுவதால் அந்த வார்த்தைகள் தமிழில்லை என்றாகிவிடாது. இருப்பினும், அப்படியொரு முகாந்திரத்தை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது; நமது வட்டார வழக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
வரலாறு அழியும்
ஒவ்வொரு வார்த்தையிலும் அல்லது நாம் சொற்களை அடுக்கிக்கூறும் விதத்திலும் நமது பழமொழிகளிலும் வரலாறுகள் பொதிந்துள்ளன. உதாரணமாக, இலக்கணத்தில் ஐந்திணைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றே வரிசைப்படுத்துவோம். இதில் மாந்தர்குல வரலாறே இருக்கிறது என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எவ்வாறெனில், மனிதன் முதலில் மலைகளிலேயே வாழ்ந்தான். பின், இறங்கிவந்து காடுகளில் வாழப் பழகிக்கொண்டான்.
காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கினான். அப்போது, ஒவ்வொரு மனிதனும் தினமும் மரங்களை வெட்டும் வெட்டிவேலைக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்குக் கூலி கிடையாது, மக்கள் ஒன்று சேர்ந்து வேளாண் நிலங்களை உருவாக்குவதுதான் அவர்களது அடிப்படை நோக்கம். இன்றும்கூட பயனில்லாத வேலைகளைச் செய்பவர்களை வெட்டிவேலைச் செய்கிறார்கள் என்றே கூறுகிறோம்.
இவ்வாறாக நம் வட்டார வழக்குச் சொற்களை ஆராய்ந்தால் வரலாறு புலப்படும். எனவே, அவற்றைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் மிக முக்கியம். இல்லையெனில் வரலாறு அழியத்தானே செய்யும்?
வட்டார வழக்குகளைப் பாதுகாக்க செய்யவேண்டியவை
வட்டார வழக்கிற்கும் பொதுத்தமிழுக்கும் எழுத்து வழக்கிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதோடு அவற்றிற்கிடையே நாம் ஒரு சமநிலையைக் கையாள வேண்டும். வட்டார வழக்கில் பேசுவதால் தமிழ் அழியாது; மாறாக, அது தமிழைப் பாதுகாக்கும். வட்டார வழக்குகளைக் காப்பாற்ற நாம் அனைவரும் அவரவர் வட்டார வழக்கிலேயே நம் வட்டாரத்தில் இருக்கும்போது பேசுவது அவசியமாகிறது.
பிற வட்டாரங்களுக்குச் செல்லும்போதும் நம் வட்டார வழக்கைப் பேசுவதற்கு கூச்சப்படக் கூடாது. ஒருவேளை நம் பேச்சைக் கேட்பவர்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்களுக்கு அதன் அருத்தத்தை எடுத்துரைக்கலாம். இதனால், அவர்களுக்கும் தமிழின் பல பரிமாணங்கள் புரியவரும். மேடைப் பேச்சுகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பொதுத் தமிழையும் நமது படைப்புகளான நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவற்றில் இலக்கியநயத்துடன் எழுத்துவழக்கையும் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. இருப்பினும் கதைகள் எழுதும்போது வட்டாரவழக்கில் எழுதுவதே அதற்கு உயிர் கொடுக்கும்.
மேலும், நாம் வட்டார வழக்கிலேயே பேசினாலும் வார்தைகளுக்கு பொருளுணர்ந்து பேசுவதும் அவசியம். உதாரணமாக, ‘காமி’ என்னும் வார்த்தை தெலுங்கு வார்த்தை என்று ஒரு சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், காண்பி என்னும் தமிழ் வார்த்தைதான் காமி என்று திரிந்திருக்கிறது, அது தமிழேயாகும். பொருளுணர்ந்து பேசினால்தான் இது நமக்கு விளங்கும்.
நாம் ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசாமல் அதற்கு இணையான நம் வட்டார வழக்கு வார்த்தைகளையே இயன்றவரைப் பயன்படுத்த வேண்டும். Talk பண்ணி, walk பண்ணி என்று பண்ணித் தமிழில் பேசித் தமிழைச் சிதைக்கக் கூடாது.
கற்றறிந்தவர்களும் தமிழ் ஆராய்ச்சியாளர்களும் வட்டார வழக்குபற்றித் தங்களுக்குப் புரிந்ததை படிக்காதவர்களுக்கு விளக்க வேண்டும். நாம் பெரியவர்களுடன் பேசும் வழக்கத்தைக் கொண்டிருத்தல் அவசியம். முக்கியமாகப் படித்தவர்கள் படிக்காதவர்களுடன் அதிகமாக உரையாட வேண்டும். ஏனெனில், பொதுவாகப் படித்தவர்களே தங்கள் சூழ்நிலை காரணமாக வட்டார வழக்குகளைத் தங்கள் பேச்சில் இழக்கின்றனர். வட்டார வழக்கு ஓரளவாவது இன்னும் வாழ்கிறது என்றால் அது படிக்காதவர்களால்தான்.
எழுத்துப்பூர்வமான விஷயங்களே அழியாமல் நிற்கும்; அழிந்தாலும் மீட்டெடுப்பது எளிது. எனவே, நமது வட்டார வழக்குகளைப் பதிவுசெய்வது இக்காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். நமது வட்டார வழக்குத் தமிழை நூல்களாகவோ இணையதளத்திலோ பதிவுசெய்ய வேண்டும். நானும் என் தளத்தில் ஒவ்வொரு வட்டார வழக்கையும் பதிவு செய்கிறேன். யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தெரிந்த சொற்களைப் பதிவேற்றலாம்.
இறுதியாக
நாம் ஒவ்வொருவரும் வட்டார வழக்கின் மேன்மையை உணர்ந்து அதனைப் பயன்படுத்தத் தயங்காமல் நம் வட்டார வழக்கை இயன்றவரைப் பயன்படுத்துவோம், பிறரைப் பேசச் செய்யவும் ஊக்குவிப்போம். மேலும், வட்டார வழக்குகளைப் பாதுகாக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம். நன்றி, அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.