ஒருவன் சுயநலத்தோடு வாழ்வது என்பதில் தவறேதுமில்லை. தான், தன் குடும்பம் என்ற சுயநலம் ஒரு மனிதனுக்கு அடிப்படையான அவசியமான ஒன்று. இந்தப் பதிவில் “மனிதன் தன் குடும்பம் என்ற சுயநலத்தோடு வாழ்வது சரியானதா?” என்ற கேள்வியை ஆய்வு செய்வோம்.
தனிமனித சுயநலம்
“தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும்” என்பார்கள். இது பசியுற்றோருக்கு உணவளிக்கக் கூடாது என்று கூறும் பழமொழியன்று. தன் நிலையே மோசமாக இருக்கும்போது அடுத்தவர்களை முன்னேற்ற அவர்களுக்காக உழைத்து அதன்மூலம் போலி மகிழ்ச்சி காணும் மனிதர்களை நல்வழிப்படுத்த கூறப்பட்ட பழமொழி.
ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். தன் தேவைக்குப் போக மிஞ்சியதை அடுத்தவருக்குக் கொடுத்து உதவ வேண்டும். சிலர், தங்கள் தேவைகளை அதிகமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பிறருக்கு உதவ மாட்டார்கள். அந்த மனப்பான்மை தவறு.
“போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து” என்னும் பழமொழிக்கேற்ப ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வதே மனிதத்தன்மை. ஊர் ஊராகத் தேடிப்போய் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், சூழ்நிலை சந்தர்ப்ப வசத்தால் வாய்ப்பு ஏற்படும்போது மற்றவருக்கு உதவலாம்.
குடும்பத்தில் சுயநலம்
ஒரு நாட்டின் முதுகெலும்பு குடும்பங்கள்தான். ஒவ்வொரு குடும்பமும் சிறப்பாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எனவே, ஒரு மனிதன் தான் சம்பாதித்து தன் குடும்பத்திற்காகச் செலவு செய்து, குடும்பத்தை முன்னேற்றப் பாடுபடுவது மிகச் சரியானதே, மேலும் எக்காலத்திற்கும் பொருத்தமானதே.
ஆனால், குடும்பத்திற்குள் தனிமனித சுயநலம் மிகவும் தவறான ஒன்றாகும். தனக்கே எல்லாம் வேண்டும் என்ற சுயநலம் குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகளையும் உறவுகளுக்குள் விரிசல்களையும் உண்டாக்கும். குடும்பநலனைவிட தன்னலம் முக்கியமில்லை.
ஆங்கிலத்தில் “Charity Begins at Home” என்று ஒரு பழமொழி உண்டு. அதன் அருத்தம் “தனிப்பட்ட நன்மைகளும் சமூக நன்மைகளும் குடும்பத்திலிருந்தே பிறக்கும்” என்பதாகும். பொருளாதார நலனோ, மனநலனோ, சமூகப் பொறுப்போ எதுவாக இருந்தாலும், உதவி செய்யும் பழக்கத்தை முதலில் நமது குடும்பத்தில் தொடங்க வேண்டும்.
ஒருவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பரிவுடன் உதவிகள் செய்தால்தான் அவர் பொதுநலனுடன் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் பரிவுகாட்டி உதவிகளைச் செய்வார். குடும்பத்தில் சுயநலமற்ற அன்பும் அதனோடுகூடிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவசியம். நல்ல பண்புகள் குடும்பத்திலிருந்தே பிறக்கின்றன; அவைகளே குடும்பங்களை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி சமூக கட்டமைப்பை உறுதிப்படுத்துகின்றன.
சமூகத்தில் சுயநலம்
ஒருவன், தான் தன் குடும்பம் எனச் சுயநலத்தோடு வாழ்வது தவறில்லையென்றாலும், சுயநலத்தோடு மட்டும் வாழ்வது எக்காலத்திலும் தவறேயாகும். அது மனித மாண்புக்கு முழு பொருள் தாராது, மனித வாழ்வையும் முழுமைப்படுத்தாது. அதேபோல், குடும்பத்தைப் பதறடித்துவிட்டு, பொதுநலத்தோடு வாழ்வதும் மிகத் தவறு.
எனவே, சரியாகக் கூறவேண்டுமானால், ஒருவன் முழுதும் சுயநலமாக இருப்பதும் தவறு, முழுதும் பொதுநலமாக இருப்பதும் தவறு. ஒருவனுக்கு பொதுநலன் கலந்த சுயநலமும், சுயநலம் கலந்த பொதுநலமும் இருப்பதே இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
உதாரணமாக, நாம் நம் வீட்டில் ஒரு மரம் நடுவதென்பது நமக்கும் பயன்தரும், மற்றவர்க்கு காற்று மழை தரவும் உதவியாக இருக்கும். இது, பொதுநலம் கலந்த சுயநலம். மேலும் ஒரு எடுத்துக்காட்டு – நாம் நல்லவர்களாகவும் அன்பும் பண்பும் நிறைந்தவர்களாகவும் குடும்பத்துடன் பாசத்தோடும் வாழ்வதும் நம் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் நமது சுயநலமே. இருப்பினும் நாம் அவ்வாறு இருப்பது சமூகத்திற்கு முன்னுதாரணமாகும்; நம்மைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். நம்மைப்போலவே குடும்பப் பிணைப்புடன் வாழவும் வாய்ப்பிருக்கிறது. இதுவே நமது செயலால் விளையும் பொதுநலன்.
ஒரு பிச்சைக்காரர், நம்மிடம் உணவு கேட்கும்போது, நாம் நாளைக்கே அந்த நிலமைக்கு வந்தால் என்ன ஆவது என்று நினைத்தால் அவருக்கு உணவளிக்க தயங்கமாட்டோம். ஒரு விபத்தில் அடிப்பட்டவரைப் பார்க்கும்போது நம்மை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்தால் உடனே அவருக்கு உதவ ஓடுவோம். நாம் மற்றவருக்கு உதவிசெய்தால்தானே நமக்கும் மற்றவர் உதவி செய்வர்! பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையே நாம் அவர்களுக்குச் செய்யும் தன்மையே சுயநலம் கலந்த பொதுநலம்.
இறுதியாக
ஒரு மனிதன் சுயநலத்தோடு வாழ்ந்தாலும் மனிதநேயத்துடன் குறைந்தபட்ச பொதுநலனுடன் இருத்தல் அவசியம். அப்படியிருந்தால்தான் மற்றவரும் பொதுநலனோடு நமக்கு உதவுவார்கள். எனவே, நாம் சுயநலத்துடன் வாழ்ந்து நம்மையும் நம் குடும்பத்தையும் முன்னேற்றுவோம்; “செய்த தர்மம் தலைகாக்கும்” என்னும் கூற்றிற்கேற்ப மற்றவர்க்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து சமுதாயம் முன்னேறுவதற்கு ஒரு காரணியாகவும் இருப்போம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.