தமிழில் பல பொருள் தரும் வார்த்தைகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது மா எனும் வார்த்தையாகும். அதற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பொருள்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பரவலாகப் பயன்படுத்தப்படும் அர்த்தங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மா என்பதன் பல்வேறு பொருள்களை நன்கு புரிந்துகொள்ளப் பின்வரும் உரையாடலைக் கவனிக்கவும். இது அறுபது வருடங்களுக்கு முன்பு நடப்பது போன்ற ஒரு கற்பனை. ஒரு பெண்மணி தள்ளுவண்டியில் மா விற்கிறார். அதனை ஒரு பெண்மணி வாங்க வருகிறார். அவர்களுக்குள் நடக்கும் உரையாடலைப் படித்துப் பார்க்கவும். இறுதியில் மா என்பதன் அர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உரையாடல்
மா வாங்கலியோ மா! புள்ளத்தாச்சிக்கு புளிப்பு மா, குழந்தைகளுக்குப் பழுத்த இனிப்பு மா. மா வாங்கலியோ மா!
மா! மா! நில்லும்மா.
வாங்கம்மா! மா வாங்கிறீங்களா? பச்சரிசி மா, கற்பூர மா, நீல மா எல்லா மாவும் இருக்கு.
எம்மா?
மா வேணுமான்னு கேட்டா ஏம்மா உங்க அம்மாவைக் கூப்பிடுறீங்க?
ஏம்மா, நான் மா எம்மான்னு கேட்டேன்.
ஓகோ! மா எவ்வளவுன்னு கேட்டீங்களா?
ஆமா, எம்மா?
எம்மா?
என்னம்மா விளையாடுறீயா? நான் எம்மான்னு கேட்டா நீ எம்மான்னு என்னையே கேட்கற? நானா மா விக்கிறேன்?
அம்மா! நான் எந்த மா-ன்னு கேட்டேன்.
எம்மம்மா இது என்ன பேச்சு பூரா ஒரே மாவா இருக்கு?
நான் மா விக்கிறேன் இல்லம்மா! அதாம்மா.
சரி சரி. எம்மா எம்மான்னு நீயே சொல்லிடேன்
அய்யய்யோ எனக்கேவா? சரி, சொல்றேன். பச்சரிசி மா ஒரு கிலோ முக்கால் ரூபா, கற்பூர மா எட்டணா, அப்புறம் நீல மா ஒரு ரூபா.
எனக்கு ஒரு கிலோ நீல மா கொடு
தோ நிறுத்தறேன்.
ஆமா, இதுல மா இருக்குமா?
மாவுல மா இல்லாம வேறென்ன இருக்கும்?
நான் மாவுல வண்டு இருக்குமான்னு கேட்டேன்.
அம்மா, வண்டு இருக்குற மாதான் நல்ல மா.
சரி, இது உன் காட்டுல விலையுதா?
ஆமாம்மா. 10 மா நிலம் இருக்கு. அதுல மாந்தோப்பு வச்சி பராமரிக்கிறேன்.
நீ எந்த ஊரும்மா?
வண்டிப்பாளையம்.
அடடே! அங்கத்தானே எங்க மாமா இருக்காரு!
அவங்க பேரு என்னம்மா?
அவரு பேரு மாமன்னன். அவர உனக்குத் தெரியுமா?
அவர தெரியாதா! அவரு எம்மாம் பெரிய மனுஷன்! அவரு காலால இட்டத கையால செய்ய ஆள் இருக்கு. சனத்துக்கு அவரு மேல அம்மா மரியாத.
ஆமா ஆமா, எங்க மாமான்னா சும்மாவா? அவரு ஒரு அரிமா.
என்னம்மா, மா விக்கிற என்கிட்டேயே இத்தனை மாவா? நானும் மா போட்டுப் பேசுவேன். கண்ணம்மா பொன்னம்மா முனியம்மா, உனக்குக் கொடுப்பேன் உம்மா. எனக்கும் நெறய மா தெரியும்.
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா, நல்லாத்தான் பேசற சும்மா. நானுந்தான் பேசுவேன்.
யம்மா! யம்மா! என்னம்மா பேசுறீங்க யம்மா!
இம்மா பேசுறியே அந்த மாவ எழுதிக்காட்டு.
அது தெரியாதேம்மா! நான் படிக்கலம்மா.
இப்ப ஒத்துக்கிறீயா? நீ மா வித்தாலும் எனக்குத்தான் மா தெரியும்னு?
சரிதாம்மா, இந்தாங்க ஒரு கிலோ நீல மா.
என்ன பழமா கொடுப்பன்னுப் பாத்தா, மாவெல்லாம் மாநிறமா இருக்கு?
பாதி பழம் பாதி காய்தாம்மா போட்டிருக்கேன். அப்பதாம்மா ரெண்டு நாள் வச்சி சாப்படலாம்.
சரி, இந்தா ஒரு ரூபா.
அம்மா உங்க பேரு என்னம்மா?
பத்மா. உன் பேரு என்ன?
பாமா.
மறுமடியுமா? போதும்மா. நான் வரேன். நான் வேற போயி என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு கொடுக்கணும்.
வீட்டுல என்னம்மா சாப்பாடு?
ஆங் … உப்புமா. யாருகிட்ட?
அம்மா! நீங்க உப்புமா எதுல செய்வீங்க, அரிசி மாவுலயா? ரவ மாவுலயா?
சத்துமாவுல.
சத்துமாவா! அது என்னம்மா?
பல தானியங்கள வறுத்து அரைச்சி செஞ்சது. வீட்டுக்கு வாயேன், சாப்பிட்டுட்டு போலாம்!
அம்மா! நான் சாப்பிட வந்தா உப்புமா உங்களுக்குப் பத்துமா?
ஆள விடும்மா, விருப்பமில்லைனா நீ உன் வேலைய பாரும்மா, நான் வரம்மா.
சரிம்மா. அடுத்த தடவ வரும்போது பாக்கலாம். மா வாங்கலியோ மா! மா வாங்கலியோ மா!
மா என்ற வார்த்தையின் பொருள்கள்
- ஒரு எழுத்து
- கருப்பு நிறம் / மாநிறம்
- விலங்கு
- மா மரம்
- மாம்பழம்
- அளவு
- பெரிய
- மாவு
- வண்டு
- அருமை (என்னம்மா பேசுறீங்க – என்ன அருமையா பேசுறீங்க)
- நில அளவு. மூன்று மா = ஒரு ஏக்கர்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.