வாங்க சிரிக்கலாம்

children-smiling

சிரிப்பு என்ற உடனே ஞாபகத்திற்கு வருவது “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்னும் கூற்றுதான். நாம் நம் குடும்பத்தினரிடமும் அண்டை அயலரிடமும் மனம் விட்டுப் பேசிச் சிரிக்கும்போது அவர்களுடன் நட்புறவு வளர்வதோடு நமது ஆயுளும் கூடுகிறது.

ஆனால் ஒரு சிலர், எப்போது பார்த்தாலும் பணம் பணம் என்று தங்கள் நேரத்தைச் செலவழிப்பார்கள்; ஆனால், குடும்ப உறுப்பினர்களிடம் நேரத்தைச் செலவிடமாட்டார்கள். மற்றவர்களிடமும் மனம் விட்டுப் பேசமாட்டார்கள்; எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொள்வார்கள். ஆனால் உடல் நோயைக் குணமாக்க சிரிப்பு யோகாசனம் என்று கடற்கரையில் கும்பலாகச் சேர்ந்து பைத்தியங்கள் போன்று சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

அந்த யோகாசனத்தால் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் ஒருவன் தன் கவலைகளை மறந்து சிரிக்கும்போதுதான் அவன் சிரிப்பது இயற்கையான சிரிப்பாக இருக்கும். மற்றவர்களிடம் அன்பு காட்டி அவர்களை மதித்து அவர்களுடன் உறவாடும்போதுதான் ஒருவன் தன் கவலைகளை மறப்பான். எனவே, போலி சிரிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். சரி வாங்க, ஒரு ஐந்து நிமிடம் கவலைகளை மறந்து சிரித்துவிட்டு போங்க.

நகைச்சுவை – 1:

ஒருவன் மிகுந்த மனக்கலக்கத்தில் இருந்தான். கொஞ்ச நாட்களாகத் தன் மனைவி தன் பேச்சைச் சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை தன் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை என்னும் கவலைதான் அது. ஒருவேளை அவளுக்குக் காது கேட்காமல் இருக்கும் என்று சந்தேகப்பட்டான். அதனால் அவளுக்கு ஒரு சோதனை வைக்க எண்ணினான்.

அவன் மனைவி சமையற்கட்டில் உணவு தயார் செய்துகொண்டிருந்தாள். சோதனையை ஆரம்பித்தான். ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டான்.

“50 அடி, 40 அடி, 30 அடி, 20 அடி, 10 அடி, மிக அருகில்” இவ்வாறாக எழுதி வைத்துக்கொண்டு தன் மனைவியின் கேட்கும் திறனைச் சோதிக்க முற்பட்டான்.

“அடியே! இன்னைக்கு என்ன சமையல்?”

…..

உடனே “50 அடி – கேட்கவில்லை” என்று குறித்துக் கொண்டான்.

“அடியே! இன்னைக்கு என்ன சமையல்?”

…..

உடனே “40 அடி – கேட்கவில்லை” என்று குறித்துக் கொண்டான்.

இவ்வாறாக அனைத்து தூரத்திலும் தன் மனைவிக்குக் காது கேட்கவில்லை என்பதை உணர்ந்தான். அதைக் குறித்தும் வைத்துக் கொண்டான். கடைசியில் மிக அருகில் சென்று,

“அடியே! இன்னைக்கு என்ன சமையல்?” என்று கேட்டான்.

“உங்களுக்கு எத்தன தடவ சொல்றது? இன்னைக்கு சமையல் சாம்பார் சாதம். இதோட 6வது முற சொல்றேன். என்ன காது கேட்கலையா?” என்று அவள் பதில் கூறினாள்.

நகைச்சுவை – 2:

இரண்டு மருமகள்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

மருமகள் 1: என்னடி, ஒரு வாரமா ஆளையே காணோம்?

மருமகள் 2: எங்க மாமியாரு செத்துட்டாங்க. அதான் எங்க வீட்டுக்காரருக்கு ஆறுதலா வீட்டிலேயே இருந்தேன்.

மருமகள் 1: ஐயோ! பாவத்த! எப்படிடி செத்தாங்க?

மருமகள் 2: கெணத்துல தண்ணி எடுக்கும்போது தவறி விழுந்து செத்துட்டாங்கடி.

மருமகள் 1: ஆஹூம்… என் வீட்டிலேயும்தான் கெணறு இருக்குது. அதுல என் மாமியாரு விழமாட்டேங்குறாளே!

மருமகள் 2: அது எப்படி அவங்களா விழுவாங்க. நாமதான் ஒத்தாச பண்ணனும்.

நகைச்சுவை – 3:

சிறைச்சாலையின் ஒரு அறையில் இரு திருடர்கள் இருந்தனர். ஒருவன் கடிகாரத்தை திருடியதால் தண்டனை அடைந்தவன், மற்றொருவன் கோழி திருடியதால் சிறைக்கு வந்தவன். இருவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர். கோழி திருடன் கடிகார திருடனை அசிங்கப்படுத்த எண்ணினான்.

கோழி திருடன்: “முருகா, இப்ப நேரம் என்ன இருக்கும்?”

கடிகார திருடன்: “கோழி கூவற நேரம் இருக்கும்.”

கோழி திருடன்: ….!

நகைச்சுவை – 4:

ஒரு மனநலக் காப்பகத்தின் மேலாளர் மனநலம் குன்றியவர்களை குணப்படுத்த அதிரடி முடிவு எடுத்தார். ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் இரு பைத்தியங்களை ஒப்படைத்தார். அவர்களைக் குணப்படுத்துபவர்களுக்கு பெரிய அளவில் ஊக்கத்தொகை கொடுப்பதாகவும் வாக்களித்தார். கணேசன் என்பவரிடம் ராஜேஷ், செல்வம் என்னும் இரு பைத்தியங்கள் ஒப்படைக்கப்பட்டன. ஒருநாள் ராஜேஷ் கணேசனிடம் வந்து “செல்வம் கிணத்துல விழுந்துட்டான். நான் அவன காப்பாத்திட்டேன்.” என்று கூறினான். கணேசன் மறுமொழியாக “என்னடா சொல்ற? உண்மையாவா?” என்றான். “ஆமாம், நான்தான் அவன் உயிர காப்பாத்தினேன்.” என்று ராஜேஷ் கூறினான்.

கணேசன் தன் மனதில் “இந்த அளவுக்குத் தெளிவா பேசுறான்? அப்போ இவனுக்குப் பைத்தியம் குணமாயிடுச்சோ? அப்போ நமக்கு ஊக்கத்தொகை கண்டிப்பா கிடைக்கும்.” என்று எண்ணிக்கொண்டான். “சரி வா. போய்ப் பாக்கலாம்.” என்று ராஜேசை அழைத்தான். கிணற்றிற்கு அருகில் சென்று பார்த்தால் செல்வம் அங்கு இல்லை. “எங்கடா? எங்க அவன்?” என்று கேட்டான். “மேலப் பாருங்க.” என்றான் ராஜேஷ். பார்த்த கணேசன் அதிர்ந்தான். ஏனெனில் செல்வம் மரத்தில் தூக்கு போட்டு இறந்திருந்தான்.

“டேய்! என்னடா ஆச்சி?”

“நனஞ்சிட்டான் இல்ல. அதான் அவன காய வச்சிருக்கேன்.” என்றான் ராஜேஷ்.

நகைச்சுவை – 5:

விவசாயி ஒருவர் தலையில் பெரிய வைக்கப்போர் கட்டை வைத்துக்கொண்டு மாளாமல் சென்றுகொண்டிருந்தார். அப்போது மாட்டுவண்டியில் வந்த அவரது நண்பர் அவரை விசாரித்தார்.

“டேய்! ஏன் இப்படி சிரமப்பட்டு தூக்கிட்டுப் போற? வண்டியில ஏறி ஒக்காந்திக்கோ.”

“பரவால்லடா. ஏற்கனவே வண்டியில நெறைய கனமான பொருள் இருக்கு.”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்ல. ஏறிக்கோ.”

விவசாயி ஏறினார். பின் சிறிது தூரம் சென்றபின் திருப்பிப்பார்த்த நண்பர் ஆச்சர்யம் அடைந்தார். ஏனெனில் அந்த விவசாயி நின்றுகொண்டு தலையில் வைக்கப்போர் கட்டை வைத்துக்கொண்டிருந்தார்.

“டேய்! ஏன்டா அத தலையில வச்சிக்கிட்டு நிக்கிற? வண்டியில வச்சிட்டு உட்காரு.”

“அது இல்லடா. ஏற்கனவே வண்டி கனமா இருக்குது, நான் வேற கூடுதல் கனம், இதுல வைக்கோல் கட்டையும் வச்சிட்டா மாடு வண்டிய இழுக்காது. அதனாலதான் என் தலையில வச்சிருக்கேன்.”

“………!”

நகைச்சுவை – 6:

நமது வாழ்க்கையில் பல நேரங்களில் பல நகைச்சுவைகள் நடக்கும். பள்ளியில் ஒருநாள் திருத்திய தேர்வுத்தாள்களை ஆசிரியர் கொடுத்துக்கொண்டிருந்தார். எனது நண்பன் ஒருவன் அவனது தேர்வுத்தாளை வாங்கிவிட்டு மிகுந்த சோகத்தில் வந்தான்.

“டேய்! ஏன்டா சோகமா இருக்க?”

“மார்க் எடுக்கலடா.”

“எங்க காட்டு பாப்போம். டேய்! என்னடா 0 மார்க் எடுத்திருக்க?”

“அதான் சொன்னனே. மார்க் எடுக்கலன்னு.”

நகைச்சுவை – 7:

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம்தான் எங்கள் ஊரில் கைபேசி வந்த நேரம். அதனால் அனைவரும் அதை ஒரு அதிசயமாகப் பார்த்தார்கள். பலர் யாருக்காவது அழைப்புக் கொடுத்துப் பேசுவதிலேயே பொழுதைக் கழிப்பர். அந்தக் காலக்கட்டத்தில் Customer Careக்கு அழைப்பு விடுத்தால் இலவசம். கட்டுப்பாடுகளும் கிடையாது. அதனால் பொழுது போகாதவர்கள் Customer Careக்கு call செய்து மணிக்கணக்கில் பேசுவார்கள். ஒருசிலர் wrong call செய்து சந்தோஷம் அடைவார்கள். அப்படி ஒருவர் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன்.

அவர் தன் மனதில் தோன்றிய ஏதோ ஒரு தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டார்.

(மறுமுனையில்) “ஹலோ! யாரு பேசறது?”

(இவர்) “நீதான் பேசற.”

“என்ன கிண்டலா?”

“இல்ல நக்கல்.”

“விளையாடாதீங்க. யாருன்னு சொல்லுங்க.”

“ஏன் நீங்கச் சொல்லமாட்டீங்களா?”

“நீங்கதான் phone செஞ்சீங்க. நீங்கதான் சொல்லணும்.”

“நான் phone பண்ணினா, நான்தான் சொல்லனும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா? நீயே சொல்லு.”

“டேய்! தொலச்சிடுவேண்டா ராஸ்கல்.”

“எத தொலைச்சிடுவ? ஏன்யா தொலைக்கிற? அப்புறம் தேடறது கஷ்டம்யா.”

“……”

“சரி, சரி. Tension ஆவாத. Wrong number, வச்சிடு.”

நகைச்சுவை – 8:

சென்னையில் ஒருநாள் நான் MTC பேருந்து ஒன்றில் அமர்ந்திருந்தேன். எனக்கு முன் இருக்கையில் இரண்டு வாலிபர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

வாலிபர் 1: டேய்! Express Bus என்ன speedல போகும்?

வாலிபர் 2: என்ன, ஒரு 100 கிலோமீட்டர் speed போகும்டா.

வாலிபர் 1: அப்படீன்னா ஒரு மணி நேரத்துல எத்தன கிலோ மீட்டர் போகும்?

வாலிபர் 2: ஒரு 45 கிலோமீட்டர் போகும்ன்னு நெனைக்கிறேன்.

“அட மேதாவிங்களா!” என்று என் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

நகைச்சுவை – 9:

எங்கள் தெருவில் ஒருநாள் இரண்டு பசங்க ஆளுக்கொரு தர்பூசணி பழத்தை வைத்துக்கொண்டு அதனை விற்க வந்தார்கள். ஒருவன் ஆறு வயது மதிக்கத்தக்கவன், மற்றொருவன் பத்து வயது மதிக்கத்தக்கவன். அவர்களை அழைத்து விலை விசாரித்தேன்.

சின்னப்பையன் கூறினான். “அந்தப் பழம் 20 ரூபா. இந்தப் பழம் 30 ரூபா.”

“என்னப்பா இது? ரெண்டும் ஒரே அளவுதான் இருக்கு. ஆனா நீ வச்சிருக்கிற பழத்த 30 ரூபான்னு சொல்ற?”

“இல்லண்ணா, இது பெரிய பழம்.”

“டேய்! அளக்காத. ரெண்டும் ஒரே sizeலதான் இருக்கு. எப்படி இத பெரிய பழம்ன்னு சொல்ற?”

“அந்தப் பழத்த அவன் easyயா தூக்கிட்டு வரான். ஆனா இத என்னால தூக்க முடியாம தூக்கிட்டு வரேன். அப்போ இது பெரிய பழம்தான?”

எனக்குச் சிரிப்புத் தாங்கமுடியவில்லை. “டேய்! அவன் பெரிய பையன். அவனுக்கு easyயா இருக்கும். ஒன்னால தூக்க முடியலைன்னா விலை அதிகமா சொல்லுவியா? சரி சரி, பரவாயில்ல. ரெண்டையும் கொடு” என்று 50 ரூபாய் கொடுத்து வாங்கினேன்.

நகைச்சுவை – 10:

இன்று இந்தியாவில் ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிப்பதைப் பார்த்தால் எனக்கும் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்குப் பெயரும் வைத்துவிட்டேன். எனது கட்சியின் பெயர் நாம் இந்தியர் முன்னேற்றக் கழகம் (அப்படி ஏற்கனவே ஒரு கட்சி இருந்தாலும் இருக்கலாம்), சுருக்கமாக நா.இ.மு.க என்று அழைக்கலாம். இதை என் நண்பனிடம் எனது கட்சியின் பெயர் நா.இ.மு.க என்றேன். உடனே அவன் “அப்போ, கட்சியின் சின்னம் என்ன நாயி மூக்கா?” என்று என்னைக் கலாய்த்துவிட்டான்.

நகைச்சுவை – 11:

பின்வரும் நகைச்சுவைத் துணுக்கு எங்கோ படித்தது.

மகள்: அப்பா, நான் சாதிக்க விரும்பறேன்.

அப்பா: மவளே, உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. என்னம்மா சாதிக்க விரும்பற?

மகள்: எதிர் வீட்டு பையன் ‘சாதிக்’க விரும்பறேன்பா.

அப்பா: ……..!

நகைச்சுவை – 12:

சோகமான நிகழ்வுகளைக் கூட ஒருசிலர் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். எங்கள் ஊரில் யாராவது இறந்துவிட்டால் “வண்டி ஏறிவிட்டார்” என்பார்கள். அதுவே சாகும் தருவாய்க்குச் சென்று பிழைத்துக்கொண்டால் “visa கிடைக்கவில்லை” என்பார்கள். தூக்கு மாட்டி இறந்தவர்களை “ஊஞ்சல் ஆடிவிட்டார்” என்பார்கள்; அதே போன்று விஷம் சாப்பிட்டு இறந்தவர்களை “கலர் குடிச்சிட்டார்” என்பார்கள்.

நகைச்சுவை – 13:

ஒரு மனிதன் கடவுளிடம் வரம் கேட்க மிகுந்த தவம் செய்துகொண்டிருந்தான். பல ஆண்டுகள் தவத்திற்குப் பின் கடவுள் அவன் முன் தோன்றினார்.

“மகனே! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்.”

“என்ன கடவுளே? இத்தனை ஆண்டுகள் கழுத்து வருகிறீரே?”

“மகனே! உனக்குத்தான் அது பல ஆண்டுகள், எனக்கு அது மிகக்குறைந்த நேரமே. என்னைப் பொறுத்தவரை உனது வேண்டுதலுக்கிணங்கி மிக விரைவிலேயே உன்முன் தோன்றிவிட்டேன்.”

“அப்படியா! கடவுளே ஒனக்கு ஒரு வருடம் என்பது எவ்வளவு நேரம் மாதிரி?”

“இங்க பூமியில் ஒரு வருடம் என்பது எனக்கு ஒரு வினாடி மாதிரி.”

“நூறு வருஷம்…?”

“அது ஒரு நிமிஷம் மாதிரி.”

“ஆச்சரியமாக இருக்கிறது கடவுளே!”

“உன் ஆச்சர்யம் இருக்கட்டும் மகனே, எதற்காக என்னை அழைத்தாய்? அதைச் சொல் முதலில்.”

“எனக்கு ஒரு வரம் வேண்டும் கடவுளே!”

“என்ன வரம்?”

“எனக்குச் சாகா வரம் வேண்டும்.”

“சரி இரு, ஒரு நிமிடம் கழித்து வருகிறேன்.”

“……”

என்னங்க, நல்லா சிரிச்சீங்களா? நீங்களும் ஏதாவது நகைச்சுவையான பதிவுகளை எழுதியிருந்தால் அதனை உங்கள் கருத்துக்களில் இணைத்துவிடுங்கள். அனைவரும் படித்து மகிழலாம்.

10 Comments

    • மரிய ரீகன் ஜோன்ஸ் நவம்பர் 19, 2014
  1. 'பசி’பரமசிவம் நவம்பர் 19, 2014
  2. ‘தளிர்’ சுரேஷ் நவம்பர் 19, 2014
  3. Yarlpavanan Kasirajalingam நவம்பர் 20, 2014
  4. chandraa ஜூன் 14, 2015

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.