இன்று நல்ல நாளா?

நமது தமிழ்நாட்டில் இன்றும் நல்ல நாள், கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள். அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள்.

நம்முடைய பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு இராசிபலன் வைத்திருக்கிறார்கள்.

1. ஞாயிறு – நாய் படாத பாடு:

சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனைக் கடுமையாக அடித்துப் போட்டாலோ சீக்கிரத்திலேயே இறந்துவிடும். ஆனால் நாய்கள் அப்படியில்லை. நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.

முகத்தில் அடிப்பட்ட நாய் கூடப் பல நாள்கள் உயிருடன் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் சீக்கிரத்தில் சாவதில்லை.

“நாய் பட்ட பாடு” என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப்படுவதுதான். “நாய் படாத பாடு” என்றால் அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டியது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால் குறிப்பாகத் திருமணம் செய்துகொண்டால் “நாய் படாத பாடு” என்பது ஐதீகம்.

2. திங்கள்:

திங்கள் கிழமையைப் பற்றிப் பெரியவர்கள் விமர்சனங்கள் எதுவும் எனக்குத் தெரிந்து கூறவில்லை. சுபமுகூர்த்த நாளாக இருந்தால் சிறப்பு, அவ்வளவுதான். இது நமக்கு அவ்வளவாகத் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

3. செவ்வாய் – வெறும் வாய்:

செவ்வாய்க் கிழமைகளில் முதன்முதலில் ஒரு காரியத்தைத் தொடங்கினால் அந்தக் காரியத்தால் நமக்கு எந்த அனுகூலமும் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாகத் தொழில் தொடங்கவே கூடாது என்கிறார்கள் பெரியவர்கள்.

4. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது:

அதாவது புதன் கிழமையை வீணடிக்கக் கூடாது. நல்ல காரியங்களைப் புதன் கிழமைகளில் துணிந்து செய்யலாம் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

5. வியாழன் – விருந்து என்று கூட மருந்து சாப்பிடக் கூடாது:

வியாழனில் வைத்தியம் பார்த்தால் அந்த நோய் குணமாவது கடினம் என்பது ஐதீகம்.

6. மங்கள வெள்ளி:

வெள்ளிக் கிழமைகளில் செய்யும் காரியம் மங்களகரமாக முடியும். புதனுக்கு அடுத்தபடியாக எல்லா சுப தொடக்கங்களுக்கும் வெள்ளிக்கிழமை சாலப் பொருந்தும் என்று எல்லோரும் கூறுவதுதான் இதன் சிறப்பு.

7. சனி பிணம் தனியாகப் போகாது:

சனிக் கிழமைகளில் யாரேனும் இறந்தால் விரைவிலேயே வேறொருவர் இறப்பார் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

இவ்வாறாக ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு இராசிபலன் உள்ளது. ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாள்களை வீணடிக்காதீர்கள். சமுதாயத்தில் நிலவும் கருத்துகளைப் பதிவிட்டேன், அவ்வளவுதான்.

“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை” என்பது பழமொழி. “நாள் செய்வதை நல்லவன் கூடச் செய்யமாட்டான்” என்பதும் ஒரு பழமொழி. “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்பதும் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலானோர் பற்றிக்கொள்ளும் பழமொழியும் இதுவே.

நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே. நாம் ஒரு செயலைச் செய்யும்போது நல்லதையே நினைத்துச் செய்தால் நல்லதே நடக்கும். ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமாகவே இருக்கும்.

நல்லதையே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

One Response

  1. river livejobs பிப்ரவரி 1, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading