பெரியவர்கள் இளையவர்களை அது செய்யக் கூடாது இது செய்யக் கூடாது என்றும் இந்த நேரத்தில் அதைச் செய்யக் கூடாது அந்த நேரத்தில் இதைச் செய்யக் கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பார்கள். இளைஞர்கள் அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறுகிறார்கள்.
ஆனால், பெரியவர்களைப் பொறுத்தவரை அவை முன்னோர்களின் அனுபவத்தினால் கூறப்படுபவை; பட்டறிவினால் கண்டுகொள்ளப்பட்டவை. பெரியவர்கள், முன்னோர்கள் கூறி வைத்துள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு திடமான காரணம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகின்றனர். அந்தக் காரணங்களையெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கூறி வளர்க்காததால்தான் நமக்கு அவர்கள் கூறுவதற்கான உண்மையான காரணம் தெரிவதில்லை, மூட நம்பிக்கையாகத் தெரிகிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்த இடுகையில் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் சில பெரியவர்களின் நம்பிக்கைகளைப் பார்ப்போம். முடிந்தவரை அவற்றின் காரணங்களைப் பல வயதானவர்களிடம் கேட்டு எழுதியுள்ளேன். அவை அறிவார்ந்த நம்பிக்கைகளா அல்லது மூட நம்பிக்கைகளா என்பதை தங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். இன்று மூட நம்பிக்கையாக இருப்பது நாளை அறிவியலாகவும் தெரியலாம். அதனால், இன்று அதனை இணையத்தில் பதிவு செய்வது அவசியமாகிறது. மாற்றுக்கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் கூறவும்.
வெளியூருக்கு போகும்போது அடுத்தவர் எங்கே போகிறோம் என்று நம்மைக் கேட்கக் கூடாது.
இயற்கை ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வைத்திருப்பதுபோல் நமது காரியங்கள் கைகூடவும் சில நேரங்களையும் விதிகளையும் வைத்திருக்கிறது. அவற்றைச் சில சகுணங்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறது. அவைகளை நாம் மூட நம்பிக்கை என்றும் ஒதுக்கிவிட முடியாது என்பது பெரியவர்களின் நம்பிக்கை. அவற்றில் ஒன்றுதான் போகும்போது எங்கே போகிறோம் என்று கேட்டால் அந்தக் காரியம் உருப்படாது என்பது. அந்தக் கேள்வியை ஒருவர் கேட்டதால் அந்தக் காரியம் உருப்படாமல் போகவில்லை, அந்தக் காரியம் நிறைவேறாது என்பதால் இயற்கை அதனைக் குறிப்பால் உணர்த்துகிறது. அதனை அவர்கள் வாழ்க்கையில் பலமுறைப் பட்டு உணர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
உதாரணமாக, உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்கச் சென்றார்கள். எல்லாரும் கிளம்பி வெளியே சென்றபோது, பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர், “என்ன எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்டார். அவர்கள் கொஞ்சம் கடுப்புடன் பதில் கூறிவிட்டு கடவுளை மீறி என்ன நடந்துவிடும் என்னும் பாணியில் சென்றனர். ஆனால், பெண் வீட்டிலோ பெண் படிக்க வேண்டும் என்று கூறுவதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டனர். இது நம்பிக்கையின்படி நடந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா என்று என்னால் கூற இயலவில்லை. ஆனால், இதைப் போன்று பலமுறை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.
வெளியூருக்கு செல்லும்போது கதைவை இடிக்கக் கூடாது, தலை இடிக்கக் கூடாது, கால் தடங்குதல் கூடாது.
அப்படி நிகழ்ந்தால் அந்த நேரத்தில் சென்றால் நமது காரியம் தடைபடும் என்று அர்த்தம். எனவே, மீண்டும் வீட்டிற்குள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வார்கள். அதன் நோக்கம் நேரத்தைக் கடத்துவதுதான். அதாவது ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு விதி இருக்கிறது. எனவே, வேறு நேரத்தில் செல்லும்போது நாம் நினைத்துச் செல்லும் காரியம் கைகூட வாய்ப்பு இருக்கிறது என்பது இந்த நம்பிக்கைக்குக் காரணமாகப் பெரியவர்கள் கூறுவது.
வெளியூருக்கு செல்லும்போது பூனை குறுக்கே வரக் கூடாது.
பூனை போகும் திசையை வைத்துப் பலன் அமைகிறது. வலப்புறமிருந்து இடப்புறம் சென்றால் தீமை எனவும், இடப்புறம் இருந்து வலப்புறம் சென்றால் நன்மை எனவும் பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
ஆனால், சில பெரியவர்களே அதனை மூட நம்பிக்கை என்கிறார்கள். அந்தக் காலத்தில் போர் செய்யும் போர் வீரர்கள் தங்கள் வழியில் பூனையைப் பார்த்தால் அது மக்கள் வாழும் பகுதி என்பதை உணர்ந்து அவர்களுக்குத் தொந்தரவு செய்யமால் வேறு இடத்தில் போர் செய்வார்கள். அவர்கள் கடைபிடித்த அந்த நம்பிக்கைதான் இன்று அனைத்து மக்களும் கடைபிடிக்கிறார்கள் என்பது மாறுபட்ட கருத்துள்ள பெரியவர்களின் கூற்று.
சண்டை பிடித்துக் கொண்டு ஒரு காரியத்தில் இறங்கினால் அது தோல்வியில்தான் முடியும்.
உதாரணமாக ஒரு வீட்டில் உள்ள தம்பதிகள் ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கணவன் மனைவி இருவரும் மனம் ஒத்து அந்தக் காரியத்தைச் செய்யும்போது அவர்களிடையே நேர்மறை எண்ணங்கள் இருக்கும், எனவே அந்தக் காரியமும் கைகூடும். கைகூடவில்லையென்றாலும் அதனால் வரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்கும்.
அதுவே அவர்கள் சண்டை பிடித்துக்கொண்டு அந்தக் காரியத்தில் இறங்கினால் அவர்களிடையே எதிர்மறை எண்ணங்கள்தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள். எனவே, அந்தக் காரியத்திற்கு பலன் கிடைப்பது மிகக்கடினமே. சில நேரங்களில் தற்காலிக வெற்றி மட்டுமே கிடைக்கும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து ஒற்றுமையுடன் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
வாசற்படியில் உட்காரக் கூடாது.
வாசற்படியில் உட்கார்ந்தால் வீட்டில் கடன் அதிகரிக்கும் என்பது பெரியோர் வாக்கு. மேலும் கற்பிணிப் பெண்கள் வாசற்படியில் உட்கார்ந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தலை பெரிதாகும் என்பார்கள்.
பொழுதெறங்கி தூங்கக் கூடாது.
அதாவது மாலைப் பொழுதில் தூங்கக் கூடாது. உண்மையில் அவ்வாறு தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு. ஐதீகத்தின்படி மாலைப்பொழுது லட்சுமி வரும் நேரம் என்பார்கள். மூதேவி உள்ளே இருந்தால் லட்சுமி எப்படி வரும்?
ஒரு இடத்திற்கு போகும்போது பாம்பு பார்க்கக் கூடாது.
இதனைப் பற்றிய பெரியவர்களின் நம்பிக்கை என்னவெனில், ஒரு முக்கிய வேலைக்காக ஒரு இடத்திற்கு செல்லும்போது பாம்பு பார்க்கவே கூடாது, அதுவும் சாரைப் பாம்பை அறவே கூடாது என்பதுதான். உதாரணமாக, ஒரு விவசாய நிலம் வாங்க அந்த இடத்தைப் பார்க்கச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்குச் சாரைப் பாம்பைப் பார்த்தால் உடனே நாம் முடிவு செய்துவிடவேண்டியதுதான், அந்த இடம் நமக்கில்லையென்று. அந்த இடத்தை வாங்கினால் குடும்பம் விருத்திக்கு வராது என்பதை கடவுள் சாரைப் பாம்புமூலம் உணர்த்துகிறார். இது எல்லா விதமான விஷேசங்களுக்கும் பொருந்தும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
இருட்டில் சாப்பிடக் கூடாது.
அப்படி சாப்பிட்டால் நாம் ஒரு கை எடுத்துச் சாப்பிடுவோம், கூடவே பேய் ஒரு கை எடுத்துச் சாப்பிடும். எனவே நமக்குக் கிடைக்கவேண்டிய சத்தைப் பேய் எடுத்துக்கொள்ளும். இப்படித்தான் பெரியவர்கள் சிறுபிள்ளைகளை பயமுறுத்துவார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இருட்டில் நமது சாப்பாட்டில் பூச்சி விழுந்தால்கூடத் தெரியாது. எனவே அவற்றையும் நாம் சேர்த்து சாப்பிட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கூறினால் நாம் கேட்கவா போகிறோம்? எனவேதான் நம்மைப் பேய் பிசாசு என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
உச்சந்தலையில் பேன் இருத்தல்
15 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தலையில், உச்சந்தலையிலேயே பேன் அதிகமாகத் தென்பட்டால், அவர்கள் பிற்கால வாழ்க்கை மிகவும் வேதனை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் காலம் முழுக்க தன் உழைப்பிலேயே வாழவேண்டிய நிலையிருக்கும், மற்றவர் உதவி கிடைக்காது. நான் சிலரது சொந்தக் கதை சோகக்கதையைக் கேட்கும்போது அவர்களில் சிலர் இவ்வாறு கூறுவார்கள். அவர்களுக்கும் அவ்வாறு இருந்ததாகவும் அதனால்தான் இவ்வாறு கஷ்டப்படுவதாகவும் கூறுவார்கள்.
தலையில் சிக்கு இருத்தல்
சில பெண்களுக்கு முதல் நாள் வாரிய தலையை அடுத்தநாள் காலையில் வாரும்போது, அப்போதுதான் வாரியது போன்று சீப்பு சர சர வெனச் செல்லும். ஆனால் சில பெண்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு வாரிய தலையைகூட மறுபடி வாரும்போது சீப்பில் சிக்கு ஏற்படும்; முடியைப் பிச்சி பிச்சி எடுப்பார்கள்; ஒரு இரண்டு நாள் தலை சீவாமல் விட்டுவிட்டால் சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையே சிக்கல்தான் என்பது பெரியவர்கள் கூற்று. இது ஆண்களுக்கும் பொருந்தும்.
தொடரும்…
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
என்னமோ போங்க…! சிலவற்றை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது…
தாங்கள் ஏற்க மறுத்ததை வெளிப்படையாக பகிர்ந்தால் நலம் என்று என் மனம் எதிர்பார்க்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.