மரமே!
நாங்கள் உன்னை வளர்க்கிறோம்; நீ எங்களுக்காகவே வளர்கிறாய்.
பூமியிலிருந்து சத்துக்களை உறுஞ்சுகிறாய்; நன்றிக்கடனாக வெள்ளத்தின் போதும் புயலின் போதும் மண்ணரிப்பைத் தடுக்கிறாய்.
நாங்கள் தண்ணீர் ஊற்றுகிறோம்; கைம்மாறாக எங்களுக்குக் காய் கனிகளைத் தருகிறாய். நன்றி
மறவா பிறவியே!
உன்னை வெட்டுபவர்களைக் கூட மன்னித்து அவர்களுக்கும் பயன்படும் பொருளாகிறாய்.
வெட்டினாலும் இறந்துவிடுவதில்லை நீ! தன்னமிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் துளிர்விட்டெழுந்து உலகிற்கு உன் சேவையைத் தொடர்கிறாய்.
கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காதபோது உன் இலைகளை உதிர்த்து மனிதர்களுக்காகத் தண்ணீரை
விட்டு வைக்கிறாய்.
களைப்பாய் வருபவர்களுக்கு நிழல் தருகிறாய்.
அனைத்திற்கும் மேலாக நாங்கள் உயிர் வாழ்வதே உன்னால்தான். பின் என்ன? நீதானே எங்களுக்குக் காற்றைத் தூய்மைப் படுத்தித் தருகிறாய்!
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் கூட உறைவிடம் ஏற்படுத்தித் தருகிறாய்.
நன்மையே உருவானவன் நீ.
நீ உலக நன்மைக்காகப் பாடுபடுகிறாய். ஆனால், நாங்கள் எங்களை மட்டுமே நினைக்கிறோம்.
உபகாரம் செய்யவில்லையென்றாலும் பிறர்க்கு அபகாரம் செய்யத் துணிகிறோம்.
கைம்மாறு செய்யாமல் நன்றி மறக்கிறோம்.
பொறாமை கொள்கிறோம், சண்டையிட்டுக் கொள்கிறோம்.
மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கிறோம்.
பிறர்க்கு நல்லது செய்வதில்லை; நல்லது செய்ய நினைப்பவகளுக்கும் பழிதேடி தருகிறோம்.
நீ எங்களுக்கு நல்லது செய்கிறாய்! ஆனால், நாங்கள் உன்னையும் விடுவதில்லை; உன் காட்டை அழித்து நாட்டைப் பாழாக்குகிறோம்.
எங்களுக்கு நீ எவ்வளவோ மேல். மனிதர்கள் அனைவரும் உன் சிறப்பறிய விரும்புகிறேன்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.