உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது.
ஆனால், சிலர் நான் அவன்போல் இல்லையே, இவன்போல் இல்லையே என்று பொறாமைப் படுகின்றனர். நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே என்று தங்கள் மீதே ஒரு தன்னம்பிக்கை அற்ற ஒருவர்களாக உள்ளனர். அவ்வாறு இருத்தல் தவறு. அதனை விளக்க நான் சிறு வயதில் படித்த கதையைக் கூறுகிறேன்.
அது ஒரு வேதாள உலகம். நினைத்தது நினைத்தவாரே உடனே நடக்கும் உலகம்.
அந்த உலகத்தில் எலி ஒன்று ஒரு பெரிய மரத்தின் அடியில் உள்ள வலையில் வாழ்ந்து வந்தது. அதற்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அது எண்ணற்ற உயிர்களுக்கு அடைக்கலம் தருகிறது. அந்த மரத்தை அதில் உள்ள பறவைகள் தினமும் வாழ்த்திச் சென்றன.
இதையெல்லாம் பார்த்த அதற்கு “நாம் இதைப் போன்று ஒரு மரமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று எண்ணியது. உடனே அது ஒரு பெரிய மரமாக மாறியது.
அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அதன் கிளைகளில் நிறைய பறவைகள் கூடுகள் கட்டியிருந்தன. அந்தப் பறவைகளுடன் அந்த மரம் தினமும் கொஞ்சி விளையாடியது.
ஒருநாள், அது மேலே பார்த்தபோது, ஒரு மேகம் தன்னை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டது. “ஆஹா! என்ன ஒரு உயரத்தில் அந்த மேகம் இருக்கிறது. அதுதான் மரத்தைவிடப் பெரியது. நான் அந்த மேகமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே!” என்று எண்ணியவுடன் அது மேகமாக மாறியது.
ஒரு நாள் பெரிய புயல் ஒன்று வீசியது. புயல் காற்று அதன் மீது பட்டதும் அது கரைந்து மழையாக மாறிக்கொண்டிருந்தது. “என்னையே கரைக்கக்கூடிய வலிமை கொண்ட இந்தப் புயலாக இருந்தால்…” இப்போது அது புயல் காற்று.
அது தனது வலிமையை காட்ட எல்லா இடங்களிலும் உள்ள மரம், செடி, கொடி, வீடு மற்றும் மக்களுக்குச் சேதம் விளைவித்தது. அது போகும் வழியில் ஒரு மலை அதனைத் தடுத்தது. அதனால் அதனைத் தாண்டிச் செல்ல இயலவில்லை.
“கம்பீரமான இந்த மலையே உலகத்திலேயே பெரியவன். இவனாக நான் மாற வேண்டும்.” உடனே அது ஒரு பெரிய மலையாக உருவெடுத்தது. இப்போது, அதற்கு மிகவும் சந்தோஷம். அப்படியே சில காலம் வாழ்ந்தது.
ஒரு நாள் அதற்கு வலி ஏற்பட்டது. காரணம், அதன் அடியை யாரோ குடைந்துகொண்டிருந்தார்கள். கீழே பார்த்தபோது அதற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ஒரு எலி மலையின் அடியில் உள்ள பாறையைக் குடைந்துகொண்டிருந்தது.
அப்போதுதான் அதற்கு உண்மை விளங்கிற்று. “இவ்வளவு பெரிய மலையான என்னையே குடைகிற சக்தி எலிக்குத்தான் உள்ளது. இது தெரியாமல் நான் இவ்வாறு நடந்துகொண்டேனே! நான் மீண்டும் எலியாகவே மாற வேண்டும்.” எலியாக மாறியபின், அது மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
இந்தக் கதைமூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், உலகில் உள்ள ஒவ்வொரு பிறவியும் ஒரு தனித்துவத்தோடு அதனதன் வேலையைச் செய்ய வேண்டும். நாம் இவ்வாறு இல்லையே, அவ்வாறு இல்லையே என்று எண்ணி நமது தனித்துவத்தை இழந்துவிடக் கூடாது.
எனவே நாம் நாமாக எப்போதும் இருக்க முயற்சி செய்வோம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
நல்ல கருத்துக்கள்… உதாரணத்திற்கு அருமையான கதை… பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…
அருமையான கதை
பொறுமையுடன் மனதில் பதியும்படி படித்தேன் .
மனதில் ஒரு தெளிவு .
உங்கள் வெற்றி பதிவுகள் தொடரட்டும் ..
NALAIRUKU