பழமொழிகள்

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17

பழமொழிகள்

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16.

1. ஆறிய புண்ணிலும் அசடு நிற்கும்.

நமக்குக் காயம் பட்டால், அது சரியான பின்பும் அதன் வடு சிலநாள் இருக்கும். சில நேரங்களில் ஊன் வளரும். மீண்டும் சினைத்து புண்ணாகி இம்சை கொடுக்கும். அதனால், புண் நன்றாக ஆறும்வரை அதனைக் கவனிக்க வேண்டும்.

அதுபோல, எந்தவொரு பிரச்சினையையும் வேரறுத்து விட வேண்டும். அதுதான் பிறர்க்கும் நமக்கும் நல்லது.

2. அன்னைக்கு உரிச்ச தோலு அன்னைக்கே காயும் – ஐப்பசி மாசத்து வெயில்.

இந்தப் பழமொழி ஐப்பசி மாதத்தின் வெய்யிலின் தன்மையை விளக்குகிறது. மாட்டுத்தோல் பதனிட அன்று காலை உரித்துக் காய வைத்தால் அன்றே காய்ந்துவிடும் அளவுக்கு வெயில் அடிக்கும் என்று முன்னோர்கள் தங்களின் அனுபவத்தில் பழமொழியாகக் கூறி வைத்துள்ளனர்.

3. எல்லாரும் அம்மணக் கட்டையா போற எடத்துல கோமணம் கட்டிட்டு போறவன் முட்டாள்.

ஒத்த பழமொழி: அம்மணாண்டி ஊர்ல கோமணாண்டி பைத்தியக்காரன். (அ) கோமணம் கட்றவன் ஊர்ல வேட்டி கட்றவன் முட்டாள்.

இந்தப் பழமொழியைச் சொல்லிச் சொல்லியே அநியாயம் செய்பவர்கள் மத்தியில் உள்ள நேர்மையானவர்களை முட்டாள்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த நிலைமை என்று மாறுமோ?

4. சுடு வெல்லத்தை நாய் பார்ப்பதுபோல.

சுட சுட இருக்கும் வெல்லத்தைத் தின்றால் நாயின் நாக்கு வெந்துவிடும். ஒரு சில பொருள்கள் நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் அது நமக்கு விருப்பமாகவே இருந்தாலும்கூட திங்கமுடியாமல் சுடு வெல்லத்தை நாய் பார்ப்பதுபோலத்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகள் தங்களது விருப்பமான இனிப்பு வகைகளைச் சாப்பிட முடியாமல் அதையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருத்தல்.

5. நாற்பதுக்குமேல் நா குணம்.

ஒருசிலர் ‘நாற்பதுக்குமேல் நாய் குணம்’ என்று தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நா குணம் என்பதுதான் சரி. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வாழ்கையில் பட்டுத் தெளிந்தவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் என்பதால், அவர்கள் கூறுவது மிகச் சரியாக இருக்கும். பொதுவாக இளைஞர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

6. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.

பூனைக்கும் புலிக்கும் இடையிலான வித்தியாசம் அவைகளின் உருவ அளவும் புலிக்கு இருக்கும் வரிகளும்தான். தானும் புலியைப் போன்று மாறவேண்டுமெனப் பூனை சூடு போட்டுக்கொண்டால் தழும்புதான் ஏற்படும். இதேபோன்றுதான் வாழ்க்கையும். ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலேயே முன்னேற முயலவேண்டுமே ஒழிய, அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையினால் அவர்களைப் போன்று ஆக முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்தால் நமக்கு வேதனைதான் வரும், உயர்வு வராது.

7. துட்டுக்கு வாங்கினாலும் துளுக்கம்பிள்ளைய வாங்கணும்.

இஸ்லாமியர்கள் தொழில் செய்து முன்னேறுவதில் கெட்டிக்காரர்கள். அவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வதில்லை என்றாலும், வாணிபம், சிறுதொழில் மற்றும் சிறு மூலதனத்தைக் கொண்டு பெரும்பொருள் ஈட்டுவது போன்றவைகளில் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான நுட்பங்களில் கைத்தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் இந்தப் பழமொழியைக் கூறிவைத்திருக்கிறார்கள்.

8. காலில் பீய் என்றால் தலையில் பீய் என்பார்கள்.

ஒத்த பழமொழிகள்:

  • இருக்குதுன்னா பறக்குத்தும்பாங்க.
  • ஒன்னுன்னா ஒன்பதா சொல்வாங்க.

இந்தச் சமுதாயத்தில் கட்டுக்கதைகள் விடுவது, புரளி பேசுவது போன்றவை இருப்பது எதார்த்தம். ஆனால், அவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. எந்த அளவிற்கு என்றால் மேற்கண்ட பழமொழிகளைப் போன்று கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல் அதிகபட்சமாகப் பொய்களைச் சேர்த்து அடுத்தவர்களைப் பற்றிப் புரளி பேசுகிறார்கள்.

9. காசு கொடுத்துக் காண்டு வாங்குவதுபோல்.

ஒத்த பழமொழிகள்:

  • சொந்த செலவுல சூன்யம் வைப்பதுபோல்.
  • தன் தலையில தானே மண் வாரிப் போடுவதுபோல்.
  • தன் காலுக்குத் தானே முள் தேடுவதுபோல்.
  • தனக்குத் தானே குழி வெட்டுவதுபோல்.
  • தன் விரலால் தன் கண்ணைக் குத்திக்கொள்வதுபோல்

ஒருவன் செய்யும் சில முட்டாள்தனமான செயல்கள் அவனுக்கே மிகுந்த துன்பத்தைக் கொண்டுவரும்போது மேற்கண்ட பழமொழிகளைப் பயன்படுத்துவோம்.

10. வானத்தில் இருக்கும் சனியனை ஏணி வைத்து இறக்கினாளாம்.

ஒத்த பழமொழிகள்:

  • வீதியே போற இட்றத்த விருந்துக்குக் கூப்பிட்டானாம்.
  • வேலியில கடந்த ஓணானை வேட்டியில எடுத்து விட்டுக்கிட்ட கதையாட்டம்.
  • [நவீனமாக] சனியனை தூக்கி பனியனில் போடாதே.

தேவையில்லாத பிரச்சினைகளைத் தாங்களாகவே வலிய உருவாக்குபவர்களை அல்லது வலிய சென்று மூக்கை நுழைப்பவர்களை இந்தப் பழமொழிகளை வைத்துக் குறிப்பிடுவார்கள்.

11. பொண்டாட்டி கட்டிக்கிற உறவு, பொண்ணு வெட்டிக்கிற உறவு.

அதாவது, மனைவி காலம் முழுக்க தொடரும் பிணைத்த உறவு. ஆனால், மகள் உறவு அவளுக்குத் திருமணம் ஆகும்வரைதான்.

12. பீய் கடக்கக் கூடத் திங்கலாம், பொணம் கடக்கத் திங்கக் கூடாது.

சொந்தங்கள் இறந்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு முடிக்கும்வரை உண்ணுதல் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் இந்தப் பழமொழி.

13. ஆடு பகை; குட்டி உறவு.

சிலபேர் பெரியவர்களைப் பகைத்து அவர்களின் பிள்ளைகளுடன் உறவு கொண்டாடுவதுபோல் நடிப்பார்கள். அவர்களும் அதை உண்மையென நம்பி கடைசியில் பெரிதாக வஞ்சிக்கப்படுவார்கள்.

14. சுத்தி சூர முள்ளு, பக்கமெல்லாம் இண்ட முள்ளு.

ஒருவர் வாழ்க்கையில் தன் சொந்தத்தாலும் அண்டை வீட்டுக்காரர்களாலும் அளவில்லா துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான் இந்தப் பழமொழி. (சூரை செடி புகைப்படம்)

15. வலைக்கு மின்ன ஏன் கல்ல போடற?

இந்தப் பழமொழி இருவகைகளில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. வலையைப் போடுவதற்கு முன் கல் எறிந்தால் அந்த அதிர்வை வைத்து மீன்கள் உஷாராகி நாலாப்பக்கமும் சிதறி சென்றுவிடும். வலையைப் போட்டால் மீன் அகப்பட வாய்ப்பு இல்லை.

அல்லது, வேறு அர்த்தம் – வலையை எப்போதும் நீரோட்டத்தின் போக்கில் போடுவார்கள். அப்போதுதான் நீரோட்டத்தில் செல்லும் மீன்கள் வலையில் அகப்படும். அவ்வாறு கட்டிவிட்டு வலைக்குப் பின்புறமாகக் கொஞ்சம் தூரத்தில் கல் எறிந்தால் பெரும்பாலான மீன்கள் பதட்டத்தில் நீரோட்டத்தின் திசையில் வந்து வலையில் மாட்டிக்கொள்ளும்.

அதுபோல வாழ்க்கையில் – ஒருவர் செய்யும் திருட்டுத்தனங்களை கையும் களவுமாகப் பிடிக்கவேண்டுமென்றால், வலையைப் போடுவதைப் போன்று அவர்களுடன் இயல்பாகப் பழகி ஆதாரத்தைத் திரட்ட வேண்டும்; சரியான நேரத்தில் கல்லெறிந்து மீன் பிடிப்பதுபோல் அவர்களைப் பிடிக்க வேண்டும். அவர்கள் வலையில் மாட்டும்வரை அவர்களை உஷார் படுத்துவதுபோல் நமது செயல்கள் இருக்கக் கூடாது.

தொடரும்….


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

8 Comments

  1. திண்டுக்கல் தனபாலன் செப்டம்பர் 11, 2015
  2. Selvanayagam Tharangan நவம்பர் 5, 2019

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading