என்னங்க! நான் சொல்றது தப்பா?

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கைக்குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம்.

வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். ஒப்புக்கு உபசரித்துவிட்டு எப்போ போவார்கள் எனக் கேட்காத குறையா பார்வையும் பார்த்து ஒரு வழியாய் அவர்களை அனுப்பிவிட்டு நிம்மதி பெருமூச்சி விடுகிறோம்.

நேரடியாக அசட்டைப் பண்ணி அனுப்புகிறவர்களும் உண்டு. “சரி, வந்தவர்களிடம் சராசரி நேயத்தோடவாவது நடந்துகொள்வோம்” என்று மனித நேயத்திற்கு pass mark வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், பொருள் விற்கவோ, விளம்பரம் செய்யவோ, உதவி கேட்கவோ வருபவர்களிடம் எப்படி பேசுகிறோம் என்பதுதாங்க நம்ம விவாதம்.

ஒருநாள் “காஷ்மீர் கம்பளி வாங்கிறீங்களா?” என ஒருவர் தெருவில் விற்றார். ஒவ்வொரு வீட்டிற்கு நேராகவும் குரல் கொடுத்தார். அவ்வமயம் ஒருவர், “இப்படியும் திருடங்க வேவு பாக்க வருவாங்க. அந்த ஆள்கிட்ட பேசாதீங்க” என்று கூறினார்.

ஒரு பெண்மணி “மீன் வாங்கிறீங்களா?” என வீடு வீடா கேட்டு வியாபாரம் செய்தார். மீன் வருணனை தந்து வாங்குறீங்களா எனக் கெஞ்சதா குறையாகக் கேட்டவரிடம், வேலைக்குப் போகிற அவசரத்தில் ஒருவர், “ஏங்க! நீங்கப் பாட்டுக்கும் தெருவுல வித்துகிட்டே போனா வாங்குறவங்க வாங்குவாங்க. இப்படி கதவைத் தட்டி இம்சை பண்ணாதீங்க. போங்க.” என்று மூஞ்சைக் காட்டினார். (மனச்சோர்வு சிறிதும் ஏற்படாமல்) அந்தப் பெண்மணி அடுத்த வீட்டிற்கு நேராக நின்று சத்தமாகக் கூவி அழைத்துத் தான் வைத்திருந்த மீன்களின் பெயர்களை விரைவாக அடுக்கினார். அவர்களும் வேலைக்குப் போறவங்கதாங்க. ஆனால் அவர் சொன்னதில் மனிதத்தின் வாசனை தெரிந்தது. அவர் “இன்னைக்கு நேரம் இல்லம்மா. ஞாயிற்றுக்கிழமை வாங்க.” எனக்கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி விட்டார்.

மற்றொருநாள் நன்கொடை வசூல் பண்ண வந்தவர்களிடம், “வாரத்துக்கு ஒருத்தர் இப்படி வந்துடுறாங்க” என்றார் ஒருவர். “இது மரியாதையா எடுக்கிற பிச்சை” என்றார் மற்றொருவர். “வீடுகளை நோட்டம் விடுவதற்கு இப்படியொரு உத்தி; Two in one, நல்லா இருக்கு இல்ல?” எனச் சொல்லியவரை அருகில் இருந்தவர் புரியாத புதிராகப் பார்க்க, அவர் “நோட்டமும் விட்டுக்கிறாங்க, செலவுக்குப் பணமும் வசூல் பண்ணிக்கிறாங்க.” என்றார்.

அழகா உடை அணிந்துகொண்டு அலங்காரமும் செய்துகொண்டு வந்து “பழைய துணி குடுத்து உதவுங்க” எனக் கேட்டவரின் பாவனைகளைப் பார்த்து உதட்டைப் பிதிக்கியவர்கள்தான் மிச்சம். “போனவாரமே உன்னப்போல நாலு பேர் வந்தாங்க. அவங்களுக்கு வீட்ல இருந்த பழைய துணிகளையெல்லாம் கொடுத்துட்டோம்.” என்று பொருத்தமா பொய் சொன்னவங்களையும் பார்த்தேன்.

“ஏதாவது வேலை செய்து பிழைக்கவேண்டியதுதானே? இது ஒரு பொழப்பா” என்றவர்களும் உண்டு. வீட்டில் இருக்கிற மனைவி சாப்பிட்டாளா என்றுகூட கேட்க மனமில்லாத ஒருவர் “நீ என்ன ஊரும்மா? சாப்பிட்டியா?” என்று கேட்டு அந்தப்பெண்மணியின் விபரம் தெரிஞ்சிக்க முற்பட்டதையும் பார்த்தேன்.

வேறு ஒருநாள் நடந்த சம்பவம் – காலை 7.30 மணிக்கு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சங்கராபுரம் என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து சிற்றுந்து எங்கள் தெருவின் முக்கூட்டில் வந்து நின்றது. ஐந்து ஆசிரியைகள் இறங்கி எங்கள் தெருப்பக்கமாக வந்தார்கள். மாணவர்கள் சேர்க்கைக்கு வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களைக் கொடுத்தார்கள்.

“புள்ள புடிக்கிற van வந்திடுச்சி” என்றார் ஒருவர். “இப்பெல்லாம் அரசு பள்ளியில நல்லாவே சொல்லிக்கொடுக்கறாங்க, என்னமோ ஓசுல சொல்லித் தரமாதிரி வந்துட்டீங்க?” என்றார் ஒருவர். “கவர்ச்சிகரமா notice கொடுப்பீங்க, தினுசு தினுசா காரணம் சொல்லிக் கட்டணமும் வசூல் பண்ணுவீங்க. உங்க notice எங்களுக்கு வேணாம்” என்றார் மற்றொருவர். கடைக்குச் சென்ற நான் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே என் வீட்டிற்குள் நுழைந்தேன்.

“சீக்கிரம் கிளம்பு. Busஅ விட்டுடப்போற.” என்று என் அம்மாவை என் அப்பா அதட்டும் சத்தம் கேட்டது. ஒரு ஆசிரியை எங்கள் வீட்டிற்கும் வந்து, “Madam! உங்க வீட்ல பள்ளிக்கூடத்துல சேக்கற பசங்க இருக்காங்களா?” என்று கேட்டார். “இருபத்தொன்னு, இருபத்தியஞ்சிலதாம்மா ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க” என்று கிளம்பும் அவசரத்திலும் மலர்ந்த முகத்துடன் என் அம்மா சொல்ல, அந்த ஆசிரியை சின்னதாய் மலர, மரியாதையோடுதான் பதில் சொன்னார்கள் என்ற திருப்தியுடன் செல்வது தெரிந்தது.

ஆங்கிலத்தில் ‘A word to the living is worth a cataract of tributes to the dead’ என்பார்கள். உண்மைதான். நம்மால் முடிந்தது பிறர் மனதைப் புண்படுத்தாத ஒரு பதில்; நாமெல்லாம் வாழத் தகுதி இல்லையோ என மற்றவர்களை நினைக்க வைக்காத பதில்.

என்னங்க! நான் சொல்றது தப்பா?

8 Comments

  1. yarlpavanan ஏப்ரல் 30, 2015
  2. chandraa மே 1, 2015
  3. Venkat மே 4, 2015

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.