என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

do good

“என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?” என்னும் வசனம் இன்று மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நானும், இதை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையாக அல்ல, சிந்தனைத் துளிகளாக. சமுதாயத்தில் தவறு செய்பவர்களை (ஆண்பால் பெண்பால் இருவரையும்) பார்த்துக் கேட்கும் கேள்வியாக இந்த வசனத்தைப் பயன்படுத்தப்போகிறேன்.

என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

பிள்ளைங்க கூட நேரத்த செலவு பண்றதுல கவனம் செலுத்தாம எப்ப பார்த்தாலும் TV முன்னாடியே உட்கார்ந்துகொண்டு தொடர் பார்க்கிறதையே பொழுதுபோக்கா நினைக்கிறீங்களேம்மா?

வீட்ல ஒருத்தி நமக்காக வழிமேல விழிவச்சி காத்திருப்பான்னு நெனைக்காம போற வற பொண்ணுங்களையெல்லாம் டாவடிக்கிறியேம்மா?

பிள்ளைங்கள அழகு பார்த்து வளர்க்காம, நீ உன்ன அழகுபடுத்த மணிக்கணக்கா செலவு செய்யிறியேம்மா? இப்படி மினிக்கிக்கிட்டுத் திரியிறீங்களேம்மா?

உனக்கு ஒரு கண்ணு போனா அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகனும்னு நினைக்கிறியேம்மா?

பொண்ண கட்டிக்குடுத்துட்டா வீட்டுவேல செய்ய ஆள் இல்லாமல் போயிடும்னு அவள காலா காலத்துல ஒருத்தவன் கையில ஒப்படைக்காம சுயநலமா இருக்கீங்களேம்மா?

நீ ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு உனக்கு மருமகளா வந்த பொண்ண இப்படி கொடுமப்படுத்திறியேம்மா?

புகுந்த வீட்ல இருக்கிறவங்கள உன் சொந்தமா நினைக்காம, சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டு, அவசரத்துல அள்ளித்தெளிச்சி, தொப்புள்கொடி உறவையே பிரிக்கப் பாக்கிறியேம்மா?

குடி குடியைக் கெடுக்கும் அப்படீன்னு விளம்பரம் போட்டு அரசாங்கம் தலையால தண்ணி குடிக்குது. படிச்சவங்க கூட, அவ்வளவு ஏன், ஆசிரியர்கள்கூட குடிக்கிறீங்களேம்மா? கேட்டா, அரசாங்க வருமானத்தப் பெருக்கத்தான் குடிக்கிறேன்னு சொல்றீங்களேம்மா? இப்படி பண்ணினா எப்படிம்மா நல்ல சமுதாயத்த உருவாக்க முடியும்?

ஒருவர் செய்வது தவறு எனத் தெரிந்தும் அவர் அளிக்கும் கைக்கூலியை வாங்கிக்கொண்டு, நியாயத்துக்குத் துணை போகாம கண்டும் காணாம போறியேம்மா? அடுத்தவர் படும் துன்பம் உனக்கு வராதுன்னு நினைப்பா?

என்னம்மா, உன் வார்த்தையெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயாம்மா? நான் அத செய்வேன் இத செய்வேன்னு அறை கூவல் விடுற. சமயம் வாய்க்கும்போது சொன்ன சொல்லக் காப்பாத்தாம ஏனோ தானோன்னு போறியேம்மா?

சொத்து சேர்க்கறது நல்ல விஷயம்தாம்மா. ஆனா, குறுக்கு வழியில கோடிக்கணக்குல சேர்க்கனும்னு குறிக்கோளா வச்சிருக்கியேம்மா?

ஒரு ஒரு நாளும் நம் வாழ்க்கையில் கடவுள் தரும் பரிசு. அதனை நல்லபடி பயன்படுத்தாம, நேரத்த கண்டபடி வீணாக்குறியேம்மா?

வாய்க்கு ருசியா நல்லா வக்கணையா இருக்குதுன்னு bakery item பேஷா வாங்கித்தின்னு இப்படி ஊதிப்போறீங்களேம்மா?

ஊடகத்தப் பயன்படுத்தி எவ்வளவோ நல்ல கருத்துக்கள் சொல்லலாம். ஆனா, வக்கிர புத்திய உருவாக்குற மாதிரியே படம் எடுக்கிறீங்களேம்மா?

இயற்கை உரங்கள் பயன்படுத்தி பசுமைப் புரட்சிய உயர்த்தாம, மகசூல் நிறைய தருதுன்னு கண்ட கண்ட ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துறீங்களேம்மா? உங்க உணவ சாப்பிடும் எல்லாருக்கும் slow poison கொடுக்கிறீங்களேம்மா?

என்னம்மா! இப்படி பண்றீங்களேம்மா?

do good to all

சிந்திக்க சில கருத்துக்களை அனைவர்முன் வைத்துவிட்டேன். கருத்துக்கள் நமக்குப் பொருந்தினால் திருத்திக்கலாமெனச் சொல்கிறேன்.

5 Comments

  1. yarlpavanan மார்ச் 22, 2015
  2. chandraa மே 2, 2015

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.