proverbs

தமிழ் சொல்லாடல்கள் பகுதி–16

proverbs

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

1.  ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழை பொழியும்.

இந்தக் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாக அந்தக் காலத்தில் இருந்தது. இன்றைய சூழ்நிலைக்கு இது முழுவதுமாகப் பொருந்தாது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

2. கூட வந்தவன் சரியில்லையென்றால் குடை சாய்வது நிச்சயம்.

சேருவார் சேர்க்கை சரியில்லையென்றால் நாம் நம் வாழ்க்கையில் அதல பாதாளத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க இயலாது.

3. சுருட்டை சோறு போடும், கோர குடியக் கெடுக்கும்.

சுருட்டை முடி கொண்ட பெண்கள் குடும்பத்திற்கு ராசியானவர்கள் என்றும் கோரைமுடி கொண்ட பெண்கள் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் என்றும் அந்தக் காலத்தில் பெண்பார்க்கப் போகுபவர்கள்கூட கருத்தில் கொள்வார்களாம். சுருட்டை முடி கொண்ட பெண் பிள்ளைகள் குடும்பத்தைக் கடைசிவரைக் காப்பாற்றுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவியிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. பழமொழியின் உட்கருத்து விமர்சனத்திற்குரியது. இப்படிக்கூட பழமொழி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே பதிவு செய்துள்ளேன்.

4. ஆன கல்யாணத்துக்கு மோளம் என்ன, தாளம் என்ன?

முடிந்துபோன திருமணத்திற்கு யாராவது மேளம் தாளம் அடிப்பார்களா? இல்லை. அதைப்போன்றுதான் முடிந்துபோன பிரச்சினைகளை மீண்டும் ஞாபகப்படுத்தி ‘அது அப்படி நடந்திருக்க வேண்டும்’, ‘இப்படி இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது’ என்பன போன்றவைகளைக் கூறி பிரச்சினையை மீண்டும் கிளறக் கூடாது. ஆனால், அவ்வாறு செய்பவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்விதான் இது.

5. ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் ஆள்.

வாழ்க்கையில் தனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களையே உதாசீனப்படுத்துபவன் ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கும் ஆள்தானே?

6. எட்டாம் பொறவு எட்டிப் பாத்த வீடு, குட்டிச் செவுரு.

இது உண்மையோ பொய்யோ விளக்கத்தைக் கூறிவிடுகிறேன். எட்டாவதாகப் பிறந்த ஒருவரின் எதிர்வீட்டார் பிழைப்பு திண்டாட்டம்தான். அவர்கள் எதிர்வீட்டை எட்டிப் பார்த்தாலே எதிர்வீட்டார் பல பிரச்சினைகளை அனுபவிப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதை மூன்று இடத்தில் நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு வீட்டில் அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த சிரமப்பட்டு வாழவே முடியாமல் வேறு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு சென்றுவிட்டனர். அவர்களின் பழைய வீடு பாழாய்ப் போய் இடிந்துவிழந்து உண்மையிலேயே ஒரே ஒரு கூட்டிச் சுவர்தான் இருக்கிறது. மேலும் இரண்டு வீடுகளில் அந்த எட்டாம் பிறப்பின் பார்வையிலிருந்து தப்பிக்க உயரமான மதில்சுவர் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்தப் பழமொழி உண்மையா பொய்யா என்பதை உங்கள் கருத்துக்கு விட்டுவிடுகிறேன். சமுதாயத்தில் நிலவுவதையும் என் அனுபவத்தையும் பதிவிட்டேன் அவ்வளவுதான்.

7. வட்டிக்கு அட்டிகை வாங்கி அட்டிகையை வித்து வட்டி கட்டினானாம்.

ஒருவன் தன் மனைவிக்காகக் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அட்டிகை வாங்கினான். சிலமாதங்கள் வட்டி கட்டாததால் வட்டி குட்டி போட்டுப் பெருந்தொகையாகிவிட்டது. கடைசியில் வேறு வழி இல்லாமல் அட்டிகையை விற்று கடனை அடைக்க முயன்றான். ஆனால், அவனால் வட்டியை மட்டுமே அடைக்க முடிந்ததாம். யாரும் தங்கள் தகுதிக்கு மீறிப் பகட்டுச் செலவுகளைச் செய்யக் கூடாது, விரலுக்குத் தகுந்த வீக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இச்சொல்லாடல் வலியுறுத்துகிறது.

8. கொன்றால் பாவம் தின்றால் தீரும்.

இந்தப் பழமொழி இரு அர்த்தங்களில் கூறப்படுகிறது. ஒன்று, தெரியாமல் கொலை செய்பவர்கள் (எதேர்சையாக நடத்தல்) அதனால் வரும் பாவத்தைப் போக்க அதற்கான வினைப் பயனை அனுபவித்தால்தான்(அதாவது தின்றால்தான்) அந்தப் பாவம் போகும். தெரிந்து செய்யும் கொலைகளுக்கு இது பொருந்தாது. 

மற்றொரு அர்த்தம் – விலங்குகளைக் கொல்வதும் பாவமே. ஆனால், கறிக்கடைக்காரர் அவரது வயிற்றுப பிழைப்புக்காக அதைச் செய்கிறார். அதனை வாங்குபவர் உணவுக்காக வாங்குகிறார். ஆனால் அவர் கொல்லவில்லை, அதனால் பாவமும் சேரவில்லை. எனவே, கறிக்கடைக்காரர் செய்யும் மிருகக்கொலை பாவமாகப் பார்க்கப்படுவதில்லை. ஏனெனில், அவர் செய்த பாவம் அந்தக் கறியை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டவரால் தீர்ந்துவிடுகிறது.

9. எழுதாத குறை அழுதாலும் தீராது.

எப்போதுமே எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள்தான் பேசும். உதாரணமாக, ஒரு மேலதிகாரி தன் ஊழியரிடம் தான் கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நல்லவராகவே இருந்தாலும் செலவுகளை ஞாபகப்படுத்தி ஒவ்வொன்றாகத் திக்கித் திக்கி சொல்லிக்கொண்டிருந்தால், அவரை ஊழல் செய்கிறார் என்று மேலதிகாரி நினைக்கக்கூடும். அதுவே அவர் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் செலவுகளைக் குறித்துவைத்துக்கொண்டு அதைப் பார்த்து டான் டான் என்று கூறினால் மேலதிகாரியும் அவரை நம்புவார். எழுதாத குறையால் வரும் பிரச்சினையைப் பார்த்து அழுதாலும் அந்தப் பிரச்சினை தீருமா?

10. எலும்பு உடைந்தால் கூடும், மனசு உடைந்தால் கூடுமா?

எலும்பு உடைந்தால் கட்டு போட்டுக்கொள்ளலாம். ஆனால், மனம் உடைந்தால் எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் சரியாகாது. எனவே, நாம் பிறரிடம் பழகும்போதும் பேசும்போதும் அவர்கள் மனம் புண்படும்படியாக நடந்துகொள்ளக் கூடாது.

11. தெரியாத ஸ்ரீதேவியைப் பார்க்கிலும் தெரிந்த மூதேவியே மேல்.

‘தூரத்தில் இருக்கும் பலாக்காயை விடக் கையில் இருக்கும் கிளாக்காயே மேல்’ என்பதற்கு கிட்டதட்ட இணையான பழமொழி. எங்கோ உள்ள ஸ்ரீதேவி என்னும் ஒருவள் நமக்கு உதவுவாள் என்று அவளைத் தேடிச்செல்வதைவிட, நம் அருகிலேயே உள்ள மூதேவியிடம் கெஞ்சி கேட்டாவது உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், நம் கையில் இருக்கும் ஒரு பொருளை விட்டுவிட்டு தூரத்தில் இருக்கும் ஒரு பொருளுக்காக ஆசைப்படுவது தவறு.

12. சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.

தமிழர்களின் தலைசிறந்த கடவுள் முருகன். சுக்கை அவருடன் ஒப்பிடுவதிலிருந்தே எந்த அளவுக்கு அது மனித நலனுக்குப் பயன்படுகிறது என்பதை அறியலாம். ஏனென்றால் அதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை.

13. கொண்டையைக் கலைக்க ஒரு பேனும் குடும்பத்தைக் கலைக்க ஒரு பொண்ணும்.

பேன் கடிப்பதால் ஏற்படும் அரிப்பு கொண்டையைக் கலைக்க வைத்துவிடுகிறது. அதுபோல, சில தவறான பெண்கள் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது தன் கணவனை அவன் குடும்பத்திலிருந்து பிரித்துவர அந்தக் குடும்பத்தையே கலைக்கும் வேலைகளையும் செய்துதான் கொண்டிருக்கிறார்கள்.

14. அரத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்கமாட்டாள்.

இப்பழமொழி, கொஞ்சம் கூட மற்றவர்கள்மீது பச்சாதாபம் இல்லாத கருமிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. அறுபட்ட கையில் சுண்ணாம்பு வைத்தால் ரத்தம் நின்று சரியாகிவிடும். ஆனால், அதற்கும் சுண்ணாம்பு செலவாகிவிடும் என்பதால் கொடுக்க மனம் இல்லாமல் இருக்கும் இரக்கமற்றவள் போலப் பலர் இந்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

15. இருட்டுக்கு போனாலும் திருட்டு கை நிக்காது.

திருட்டுப் பழக்கம் உள்ளவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் திருடுவதற்கே முயலுவார்கள் என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகிறது.

தொடரும்…..

அறிவிப்பு: இந்தத் தளம் WordPress platformக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, பின்னூட்டமிடுபவர்களின், முகம் தெரிய அவர்கள் தங்களது மின்னஞ்சலுக்கு Gravatar set செய்வது அவசியமாகிறது. அவ்வாறு செய்வது பிற WordPress தளங்களில் பின்னூட்டமிடும்போதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் Gravatar set செய்வது எப்படி என்பதை அறிந்துகொள்ளவும். மேலும் இதுவரை இட்ட பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர்களின் படம் தெரியாது. எனவே, ஏற்கனவே பின்னூட்டங்கள் இட்டவர்கள் என்னைத் தொடர்புகொண்டு உங்களது மின்னஞ்சல் (Gravatar set செய்தது), பெயர் மற்றும் தள முகவரி இவற்றைக் கொடுத்தால் நான் உங்கள் பின்னூட்டங்களை edit செய்வேன், பழைய பின்னூட்டங்களுக்கு உங்கள் முகமும் தெரியும்.

இதுவரை Google Friend Connect மூலம் பின்பற்றியவர்களின் கவனத்திற்கு. இனிமேல் Google Friend Connect Gadget இயங்காது. எனவே, கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழிமூலம் subscribe செய்துகொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

RSS: https://feeds.feedburner.com/valarvaanam

Feedly: http://feedly.com/i/subscription/feed/https://feeds.feedburner.com/valarvaanam

Email: https://feedburner.google.com/fb/a/mailverify?uri=TamilPriyan&loc=en_US

Facebook: https://www.facebook.com/TamilPriyanWeb


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

One Response

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading