கனவுகளின் அர்த்தங்கள் பகுதி - 2 (Meaning of Dreams in Tamil Part - 2) 1

கனவுகளின் அர்த்தங்கள் பகுதி – 2 (Meaning of Dreams in Tamil Part – 2)

தூங்கும் குழந்தை

பகுதி ஒன்றைப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

Meaning of Dreams in Tamil Part – 2

Disclaimer: These meanings of dreams are listed here neither to frighten nor discourage you. I have sincerely tried to collect all these dream meanings in Tamil just to unveil certain facts and meanings. I am not encouraging superstitions.

பொறுப்புத் துறப்பு: இங்குக் கொடுக்கப்பட்டுள்ள கனவுகளின் பொருள்கள் உங்களைப் பயமுறுத்தவோ அல்லது மனச்சோர்வு அடையச் செய்யவோ அல்ல. இவைகளை, சில உண்மைகள் மற்றும் பொருள்களை வெளிக்கொணருவதற்காக மட்டுமே தமிழில் திரட்டி வழங்கியுள்ளேன். மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பது என் நோக்கம் அன்று.

சென்ற பகுதியில் சில கனவுகளின் அர்த்தங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பகுதியிலும் பல பெரியவர்களிடம் கேட்டு நான் அறிந்ததையும் என் சுற்றுப்புறத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன்.

கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா?

அப்துல் கலாம் சொன்னதைப் போன்று கனவு கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் கண்டிப்பாக நடக்கும் என்று உறுதியளிக்கிறேன். ஆனால், தூங்கும்போது காணும் கனவுகள் அப்படியே நடக்கும் என்று நான் உறுதியளிக்கவில்லை.

யாருக்கு நடக்கும், எப்படி நடக்கும், எப்போது நடக்கும்?

நாம் கண்ட கனவு நமக்கே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. நமது உறவினர்களுக்கோ அயலாருக்கோ நடக்கலாம். அவ்வளவு ஏன், நாம் இதுவரைப் பார்த்திராத ஒருவருக்குக் கூட நடக்கலாம். ஆனால், அவருக்கு அவ்வாறு நடக்கும்போது அவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பார். மேலும் நாம் அந்த நிகழ்வைப் பார்த்து நம் கனவின் அர்த்தத்தை உணர்ந்துகொள்வோம்.

நாம் காணும் கனவு அப்படியேவும் நடக்கலாம் அல்லது அதைப் போன்று வேறொன்றும் நடக்கலாம்.

நாம் காணும் கனவு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், எப்போது நடந்தாலும் கனவின் பொருள் உணர்ந்தவர்களுக்கு அந்தக் கனவுதான் பலித்துள்ளது என்பது விளங்கும்.

வாழ்கையில் நடக்கப்போகும் சம்பவங்கள் கனவாக வருகின்றனவா அல்லது நாம் கண்ட கனவினால் வாழ்கையில் சம்பவங்கள் நிகழ்கின்றனவா?

இரண்டுமே காரணமாக அமைகிறது.

நல்ல கனவுகள்

  • குப்பைப் பொறுக்குவது போன்ற கனவு – தவறான அல்லது வேண்டத்தகாதவைகளை நாம் அகற்றிவிட்டோம் என்று அர்த்தம்.
  • பல் முளைத்தல் – நமக்குச் சமுதாயத்தில் மரியாதை கூடும். நமது சொல்லிற்கு அனைவரும் மதிப்புக் கொடுப்பார்கள்.
  • பழம் வாங்குதல் – நன்மை வந்து சேரும்.
  • தண்ணீரில் அடித்துச் சென்று கரையேறிவிட்டால் – பெரிய துன்பம் வந்தாலும் அதிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்பது பொருள்.
  • பாம்பை நசுக்குவது அல்லது கொல்வது போன்ற கனவு – ஏதோ ஒரு தீமையை வென்றுவிட்டோம் என்று அர்த்தம்.

கெட்ட கனவுகள்

  • நாம் நடந்து செல்லும்போது மரம் எதிரில் விழுதல் – யாரோ நமக்கு எதிராகச் சதித்திட்டம் செய்து நமது வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
  • அந்தரத்தில் தொங்குவது போன்ற கனவு – பிரச்சினைகளின் மத்தியில் இருக்கிறோம் என்று அர்த்தம். உடனடித் தீர்வு காண வேண்டும்.
  • முடி கொட்டுவது போன்ற கனவு – நிறைய இழப்புக்கு (உயிர் இழப்பைத் தவிர்த்து) உள்ளாக நேரிடும்.
  • விறகு நாம் எடுத்தால் அல்லது யாரேனும் நம்மிடம் கொடுத்தால் கலகத்திற்கு அடையாளம். கண்டிப்பாகச் சண்டை வருவது உறுதி.
  • நமது இருக்கையில் யாராவது அமர்ந்தால் அவர்கள் நம்மை ஆதிக்கம் செய்யப் போகிறார்கள் என்று அர்த்தம்.
  • வீட்டினுள் பாம்பு நுழைதல் – குடும்பத்திற்கு நிறைய ஆபத்துக்கள் உள்ளன. கவனமாக வாழ வேண்டும்.
  • தலையிலிருந்து பூ எடுத்துப் போடுவது போன்ற கனவு – கனவு கண்டவரின் கணவரோ அல்லது நெருங்கிய உறவினர்களின் கணவரோ இறக்க நேரிடும்.
  • நமக்குப் பிடிக்காதவர்கள் நமக்குப் பிடித்தவர்களின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நமக்குப் பிடித்தவரும் நமக்கு எதிரியாக மாறப்போகிறார்கள் என்று அர்த்தம்.
  • ஜோதிடர்கள் கனவில் வந்தால் – தீய சக்திகளின் ஆதிக்கம் நம்மீது உள்ளது.
  • கறி தின்றால் – யாருக்காவது உடம்பு சரி இல்லாமல் போய்விடும் அல்லது இறப்பு தகவல் வரும்.
  • வேர்க்கடலைத் தின்றால் – நோய்க்கு அறிகுறி.
  • பல் கொட்டுவது போன்ற கனவு – பல அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.
  • துறவிகள் கனவில் வந்தாலும் அது தீய சக்தியே.
  • கனவில் படுத்துக் கொண்டிருத்தல் – உடல்நிலை சரி இல்லாமல் போய்விடும் அல்லது நமது பிழைப்பு அடிமட்டத்திற்கு செல்லப்போகிறது என்று அர்த்தம்.
  • துணி அவிழ்ந்து விழுதல் – அடுத்தவர் முன்னிலையில் அவமானங்களை எதிர்கொள்ளப்போகிறோம்.
  • காட்டுப் பழங்கள் பறித்தல் அல்லது வாங்குதல் – வீட்டிற்கு பீடையை கொண்டுவந்து சேர்த்துவிட்டோம் என்பது பொருள். பலவகை துன்பங்கள் நெருக்கங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும். மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் வாங்குவது நல்லது. ஆனால், காட்டில் விளையும் பழங்கலான நாவல், cherry வகைகள் வாங்குவதோ அல்லது பறித்துச் சாப்பிடுவதோ கெடுதல்.
  • செடியிலிருந்து பழம் பறித்தல் – பழத்தை யாராவது கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் நாமே செடியிலிருந்து பறிப்பது வாழ்கையில் துன்பங்களுக்கான அறிகுறி.
  • நம் துணி தண்ணீரில் அடித்துச் செல்வது போன்ற கனவு – நமது செல்வத்தில் கொஞ்சம் நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம்.
  • செருப்பைத் தொலைத்தல் – நமது பாதுகாப்பைத் தொலைத்துவிட்டோம், துன்பங்கள் நம்மைத் தொடர்வதற்கு வழிவகுத்துவிட்டோம் என்பது பொருள்.
  • கனவில் குளித்தல் – அவ்வளவும் நமக்கு நோய்.
  • தண்ணீரில் மூழ்குவது போன்ற கனவு – இறப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.
  • கனவில் மீன் பிடித்தல், காளான் பிடுங்குதல் – குடும்பத்தில் யாரோ ஒருவர் படுக்கையில் விழப்போகிறார் என்று அர்த்தம்.

சில உண்மைக் கனவுகள் மற்றும் தொடர்புடைய சம்பவங்கள்

சென்ற வெள்ளிக்கிழமை இரவு நான் மீன் பிடிப்பதைப் போன்று கனவு கண்டேன். அதைச் சனிக்கிழமை என் அம்மாவிடம் கூறியபோது நோய்க்கு அறிகுறி என்று பயந்தார். மேலும் அவரும் தான் கண்ட கனவைச் சொல்லிப் புலம்பினார். அவர் கண்ட கனவில் ஒரு குறுமரத்தில் இலைகளுக்குப் பதிலாக வேர்க்கடலை காய்த்துத் தொங்கியதாகவும், வேர்க்கடலை என்பதும் நோய்க்கு அறிகுறி என்றும் பயந்தார். என்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லிவிட்டு CRC meeting சென்றுவிட்டார். அவர் பயந்ததுபோலவே அன்று மதியமே எனக்கு மோசமான காய்ச்சல். நேற்றுதான் எனது உடல்நிலை சரியானது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். என் அம்மா கண்ட கனவில் வந்தது சிறிய மரம். அதனால்தான் எனக்குப் பிரச்சினை. அதுவே பெரிய மரமாக இருந்திருந்தால் என் பெற்றோர்களுக்கு நோய் வந்திருக்கலாம்.

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் அம்மா கண்ட கனவில் யாரோ ஒருவர் வந்து “நான் கொடுத்த ஜவுரி முடியைத் திருப்பிக்கொடு” என்று கட்டாயப்படுத்திக் கேட்டு வாங்கிச் சென்றாராம். அதனால் அன்றே என் அம்மாவிற்கு பணியிறக்கம் கிடைத்தது. AEOவாக இருந்த ஒருவர் நடுநிலைப் பள்ளி தலமையாசிரியராகப் பணியிறக்கம் வாங்கிக்கொண்டதால் seniority அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக இருந்த என் அம்மா ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியையாகச் சென்றார். பின் ஆறுமாதம் கழித்து நிறைய முடி அடர்த்தியாக வளர்ந்திருப்பதைப் போன்று கனவு கண்டார். அதன்படியே அவருக்கு மீண்டும் பதவியுயர்வு கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு என் அண்டை வீட்டுப் பாட்டி ஒருவர் வாழை மரம் சாய்ந்து விழுவதுபோல் கனவு கண்டார். காலையில் எழுந்து பார்த்தபோது உண்மையாகவே அவர் வீட்டு வாழைமரம் குலையுடன் சாய்ந்திருந்தது. அவர் வாழைக் குலை சாய்ந்தால் பெரியவர்கள் யாராவது இறப்பார்களே, என்ன நடக்குமோ என்று புலம்பிக்கொண்டிருந்தார். அவர் பயந்ததுபோலவே அன்று இரவு இறப்புச் செய்தி வந்தது. அவரது பேரன்களில் ஒருவர் (ஐம்பது வயது) இறந்துவிட்டார்.

அடுத்த கனவு ஒரு பெண்ணிற்கு வந்தது. கனவில் ஒருவர் “நீ வைத்திருக்கும் காசில் இரண்டைக் கொடு” என்று கேட்டாராம். அவரும் கொடுத்துவிட்டாராம். பொதுவாகக் கனவில் பணத்தை வாங்கினால் கெட்டது, கொடுத்தால் நம்மிடமுள்ள பீடையை ஒழித்துக் கட்டிவிட்டோம் என்று அர்த்தம். ஆனால், இந்தக் கனவு கொஞ்சம் வித்தியாசமானது. அந்தப் பெண் வைத்திருந்ததில் இரண்டைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் அவர். அதன்பிறகு ஒரு கொடுமை அரங்கேறியது. அவரின் ஐந்து பிள்ளைகளில் இருவர் கிணற்றில் குளிக்கச் செல்லும்போது இறந்துவிட்டனர்.

மேலும் ஒரு கனவு. உறவினரின் மகள் ஒருவர் துறவறம் செல்லப் படித்துக்கொண்டிருந்தார் (கிறிஸ்துவ முறைப்படி துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு தகுந்த இறைக்கல்வி பயில வேண்டும். இந்த இறைக்கல்வி கற்பிக்கப்படும் இடம் மடம் என்று அழைக்கப்படுகிறது. கல்விக்காலம் பொதுவாகப் பெண்களுக்கு ஐந்து வருடங்கள், ஆண்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேல். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் துறவற வாழ்கையின் கஷ்டத்தை உணர்வார்கள். எனவே சிலர் துறவறம் வேண்டாம் என்று வந்துவிடுவர். சிலரை மடத்து நிர்வாகிகளே அனுப்பிவைத்துவிடுவார்கள்). அவரது தாய்வீட்டிலிருந்து வெகுதொலைவில் உள்ள அத்தைவீட்டார் கனவில் அந்தப் பெண் பச்சைப் புடவை அணிந்து வந்திருக்கிறார். எனவே, அவர்கள் அந்தப் பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து “உங்கள் மகள் துறவறம் செல்வதை கடவுள் விரும்பவில்லை போலும். அவள் கன்னியர் மடத்தைவிட்டு திரும்பி வந்துவிடுவாள்.” என்று கூறி தங்கள் கனவைச் சொல்லி விளக்கினர். அதேபோல் ஒருவாரத்தில் அந்தப் பெண் தேவ அழைத்தல் இல்லையென அனுப்பப்பட்டார்.

கனவுகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்

பல மோசமானக் கனவுகளைக் கண்டவர்கள்கூட அதற்கான பலனை அனுபவிக்காமல் தப்பித்திருக்கிறார்கள். எனவே, எந்தவித மோசமான கனவாக இருந்தாலும் நமது ஒரே அடைக்கலம் கடவுளாக இருப்பின் தப்பிக்க வழியுண்டு. சில கடவுள் அனுக்கிரகம் உள்ளவர்கள் கனவிலேயே எச்சரிக்கப்பட்டு கனவையே மாற்றிக் காண்கின்றனர். உதாரணமாகக் கனவில் ஒருவர் நம்மிடம் உள்ள ஒரு பொருளைக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாமும் கொடுக்க முயல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவ்வாறு கொடுத்தால் நம்மிடமுள்ள ஏதோ ஒரு செல்வம் பறிபோகிறது என்று அர்த்தம். ஆனால், கடவுள் அனுக்கிரகம் இருந்தால் நாம் கனவிலேயே நினைவு திரும்பி அவ்வாறு கொடுத்தல் தவறு என உணர்ந்து அந்தப் பொருளை அவரிடம் கொடுக்கமாட்டோம். சிலர் கனவுகளின் அர்த்தம் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் நடந்து, வந்த பிரச்சனைகளிலிருந்து தப்பித்திருக்கிறார்கள்.

கடவுள் திருவடிகளே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

9 Comments

  1. மகேந்திரன் செப்டம்பர் 19, 2014
  2. உயிர்நேயம் செப்டம்பர் 19, 2014
    • மரிய ரீகன் ஜோன்ஸ் செப்டம்பர் 19, 2014
  3. Yarlpavanan Kasirajalingam செப்டம்பர் 19, 2014
  4. manavai james அக்டோபர் 3, 2014
    • Priya அக்டோபர் 8, 2016
    • மரிய ரீகன் ஜோன்ஸ் அக்டோபர் 9, 2016

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading