தமிழ்படம் பாக்கிறீங்களா? (2)

Tamil-Actors

பகுதி ஒன்றைப் படிக்க.

அனைவரும் காலை உணவை உண்டபிறகு மீண்டும் தொடர்ந்தார்கள்.

“வேற ஏதாவது கத சொல்லுங்க.” என்றார் flop star.

ஜான்சன் தொடர்ந்தார்.

“Sir, இந்தக் கதையில hero பத்தாவது படிக்கறான்.”

“நான் எப்படீங்க பத்தாவது படிக்கிற மாதிரி நடிக்கிறது?”

“Sir, நீங்க இதுக்காக 15 கிலோ எடை குறைக்கணும். அப்படியே நான் உங்கள சின்னப்பையன் மாதிரி காட்டுவேன் sir.”

“அதுக்கெல்லாம் ரொம்ப மெனக்கெடனுமே!”

“இப்படியெல்லாம் ஏதாவது build-up கொடுத்தாதான் sir மக்கள்கிட்ட எதிர்பார்ப்பு அதிகமாகும்.”

“மொதல்ல கதைய சொல்லுங்க.”

“ஒருநாள் அவன் தன்னோட பேனா காணோம்ன்னு புலம்பறான் sir. அப்புறம் அதையே பாட்டாவும் பாடறான் sir.”

“அப்ப, அந்தப் பாட்ட நீங்களே எழுதி compose பண்ணி வச்சிருப்பீங்களே!”

“ஆமாம் sir.”

“அப்போன்னா பாடுங்க.”

“என் பேனா, என் பேனா, என் பேனா

ரெண்டு நாளா காணாம்.

என் பேனா, என் பேனா, என் பேனா

ரெண்டு நாளா காணாம்.

Inkகு போட்டு எழுதனா ink பேனா.

மைக்குச்சி போட்டு எழுதனா மைப்பேனா.

ஆனா, நான் வச்சிருந்தேன் gel பேனா.

நான் ராவி வந்த பேனா இப்ப காணாம்”

“சரி, பாட்டு OK. ஆனா உங்க குரல்தான் கன்றாவியா இருக்கு. சரி, மேல சொல்லுங்க.”

“நம்ம heroவோட பேனாவ காணல. பொதுத்தேர்வுக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அந்த நேரம் பாத்து அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாருக்கும் அரசே இலவசமா பேனா geometry box எல்லாம் குடுக்குது. அந்தப் பேனாவ வச்சி பரீட்சை எழுதிட்டு வரான். ஆனா பரீட்சை முடிஞ்சவொடனே அவனோட நண்பன் தற்கொலை செஞ்சிக்கிறான்.”

“ஏன்?”

“Sir, government கொடுத்த பேனா எழுதல. அவனோட பேனாவும் தீந்துபோச்சி. கஷ்டப்பட்டு படிச்சும் fail ஆகிட்டோமேன்னு தற்கொல பண்ணிக்கிட்டான் sir.”

“அப்புறம்?”

“Hero, களத்துல எறங்கறான் sir. அப்பதான் தெரிஞ்சிது அந்தப் பசங்களுக்கு பேனா குடுத்ததுல ஊழல் நடந்திருக்குன்னு.”

“மீதி கதைய நான் சொல்றேன் பாருங்க. நம்ம hero ஊழலுக்குக் காரணமானவங்கள வேரறுக்கறதுதான் second half. அதுதானே?”

“அதேதான் sir. எப்படி sir கண்டுபிடிச்சீங்க?”

“தமிழ் சினிமாவே இத வச்சிதானே ஓடுது.”

“Sir, படம் பேரு ஊழல் ஆரம்பம்

“வேணாம் வேணாம். வேற ஏதாவது நல்ல கதையா சொல்லுங்க.”

“OK Sir. அடுத்த கதை. இந்தக் கதையில நம்ம hero மதுரையில ஒரு கிராமத்துல இருந்து சென்னைக்கு வரான் sir. இங்க அவனுக்கும் வில்லனுக்கும் நடக்கறதுதான் sir கதை. இந்தப் படத்துல மதுர பாஷையில கலக்கபோறோம் sir.”

“ஹூம்…. ஆமாம்… மதுரையில இருந்து சென்னைக்கு போவான், சென்னையில இருந்து மதுரைக்குப் போவான், தமிழ்நாட்டில இருந்து வெளிநாடு போவான், வெளிநாட்டுல இருந்து இந்தியா வருவான்; அங்கேயெல்லாம் ஒரு வில்லன் இருப்பான். இதே கதைய எத்தன நாளைக்குத்தான் சொல்லுவீங்க. எல்லாத்தையும் நான் நம்ம Young கொலபதி படத்திலேயே பாத்துட்டேன்.”

“இல்ல sir, இந்தக் கத கொஞ்சம் வித்தியாசமானது.”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன எந்த ஒரு கிராமத்துப் படத்திலேயும் மதுர பாஷையே பேசுறாங்க? மதுரையில எடுத்தா பரவாயில்ல. ஆனா, கதைக்களம் திருவண்ணாமலையில இருக்கிற படங்கள்ல கூட மதுர பாஷையே பேசுறாங்க.”

“Sir, மக்களுக்கு மதுர தமிழ்தான் புடிக்கிது. ஏன் sir, உங்களுக்குப் பிடிக்கலையா?”

“சங்கம் வளர்த்த மதுரைத் தமிழ யாருக்காவது புடிக்கமா இருக்குமா? ஆனா, படங்களில் காட்டுற விதம்தான் பிடிக்கல. மதுர காரங்கன்னா என்னவோ சண்ட போடவே பொறந்தவங்க மாதிரி எப்ப பாத்தாலும் அருவா கம்போடவே சுத்தீட்டிருக்கிற மாதிரி, கிட்டத்தட்ட எல்லா மதுரை படங்களிலும் பயங்கர வன்முறைய காட்டுறாங்க, அவங்க தமிழும் வன்முறை கலந்ததாவே இருக்கு அதுதான் புடிக்கல. இதனால மதுரக்காரங்கள பாத்தாலே பேசப் பயமா இருக்கு.”

“நீங்க ஏன் sir பயப்படுறீங்க? மதுரக்காரங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.”

“அப்ப ஏன் அப்படிக் காட்டறதில்ல?”

“எல்லா directorsம் அப்படி மாறிட்டாங்க sir. சமுதாயத்துல இல்லாத அல்லது எங்கோ ஒரு மூலையில நடக்கிறத வெளிச்சம் போட்டுக் காட்டறேன்னு மக்கள் மனசுல நஞ்ச விதைக்கிறாங்க.”

“நீங்க சொல்றது ரொம்ப சரிதான். ஆமாம், நான் கேக்கறேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க. ஏன் எல்லா directorரும் மதுர வட்டார மொழி கதையையே சொல்றீங்க? தமிழ்ல வேற எந்த வட்டார மொழியும் இல்லையா?”

“தமிழ்ல பல வட்டாரமொழிகள் இருக்கு sir. மதுரைத்தமிழ், திருநெல்வேலி தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், தென்னாற்காடு தமிழ், வடாற்காடு தமிழ், கொங்குநாட்டுத் தமிழ், சென்னைத் தமிழ், பெங்களூரூ தமிழ், சீனத்தமிழ், இலங்கைத்தமிழ், மலேசியா தமிழ், பிராமணத்தமிழ், பண்ணித் தமிழ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.”

“அது என்ன பண்ணித் தமிழ்?”

“அது ஒன்னும் இல்ல sir. படிச்ச மக்கள் பேசுறாங்களே, walk பண்ணி, talk பண்ணி, start பண்ணி, drive பண்ணி, face பண்ணி, worry பண்ணி, eat பண்ணி, laugh பண்ணி, sleep பண்ணி. அதுதான் sir பண்ணித்தமிழ்.”

“ஹா… ஹா… ஆமாம் ஆமாம்… இத்தனைத் தமிழ் இருக்கு. இதையெல்லாம் நான் எந்தப் படத்திலேயும் பாத்ததில்லியே!”

“Sir, ஒரு காலத்துல பெரும்பாலான படத்துல விழுப்புரம் தமிழ்தான் பயன்படுத்தனாங்க. இடையில கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிரமிப்பு செஞ்சிது. இப்ப மதுரை அல்லது திருநெல்வேலி தமிழ் பயன்படுத்தறாங்க. வருங்காலத்துல வேற ஏதாவது தமிழ் பயன்படுத்தலாம் sir.”

“கண்டிப்பா வருங்காலத்துல தமிழ் படத்துல பண்ணித் தமிழ்தான் பயன்படுத்துவாங்கன்னு நினைக்கிறேன்.”

“சரியா சொன்னீங்க sir.”

“சரிங்க ஜான்சன். நான் என்ன மாதிரி கத எதிர்பார்க்கிறேன்னா, நான் நடிக்கப் போற படம் பலநாட்டுத் திரைப்பட விழாக்கள்ள திரையிடப்படனும், awards வாங்கணும். அந்த மாதிரி கத சொல்லுங்க.”

“அது ரொம்ப கஷ்டம் sir.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“Sir, வெளிநாட்டு அளவுல அங்கீகாரம் கெடைக்கணும்னா நம்ம கலாச்சாரத்த மையமா வச்சி படம் எடுக்கணும். அப்படி எடுத்தா நமக்குப் பேர் கெடைக்கும். படம் ஓடாது; பணமும் சம்பாரிக்க முடியாது.”

“ஆமாங்க. Gold Fishes படம் பாத்தேன். நல்லாதான் இருந்துச்சி. ஆனா, வசூல் வரல. அவ்வளவு ஏன், Generations படம் ரொம்ப அருமையா இருக்குதுன்னு சொன்னாங்க. ஆனா இந்த areaவுல release ஆகல. கொஞ்ச நாள் கழிச்சு அத எப்படியாவது பாக்கணும்னு நானும் பல CD கடையில கேட்டுப் பாத்தேன். Internetலகூட தேடிப்பாத்தேன். கெடைக்கவேயில்ல.”

“Sir, நம்ம மக்களுக்கு இயல்பா எடுத்தா பிடிக்காது. அவங்களுக்குத் தேவ first halfல comedy + love, second halfல action + sentiment, climaxல love ஒன்னு சேரும், மொத்தம் அஞ்சு பாட்டு அதுல ரெண்டு குத்துப் பாட்டு. அவ்வளவுதான் sir.”

“உண்மைதான். சரி அடுத்த கதை என்ன?”

“Sir, இந்தக் கதை ஒரு பேய் கதை”

“பேய் கதையா? இதல்ல முன்னாடியே சொல்லி இருக்கணும். சரி சொல்லுங்க”

“ஒரு அடர்த்தியான காட்டுக்குள்ள சந்தன மரத்த வெட்டிக் கடத்தறாங்க. இத பாத்த hero அந்த ஊர் தலைவர்கிட்ட சொல்றாரு. அப்பதான் தெரிஞ்சிது அவங்க எல்லாருமே கூட்டுன்னு. எல்லாரும் ஒன்னு சேர்ந்து heroவ கொன்னுடறாங்க. அதனால hero ஆவியா வந்து அவங்கள பழி வாங்கறான் sir.”

Mr.ஜான்சன் வித்தியாசமா கத வச்சிருக்கேன்னு சொல்றீங்க. ஆனா எந்தக் கதையும் வித்தியாசமாவே இல்லியே. பொதுவா இந்தப் பேய் கதைகள் எல்லாமே பழி வாங்குவதாவே இருக்கு. ஒரு பொண்ண கெடுத்து கொல பண்ணிடுவாங்க அவ ஆவியா வந்து பழிவாங்குவா, இல்ல சொத்துப் பிரச்சினைக்காக யாரையாவது கொன்னுடுவாங்க, குடும்பத் பிரச்சினையில யாராவது செத்துடுவாங்க, நம்பிக்க துரோகத்தால யாராவது செத்திடுவாங்க, இவங்க எல்லாம் ஆவியா வந்து பழி வாங்குவாங்க. பழி வாங்கும் கத இல்லன்னா யாராவது சூன்யம் வப்பாங்க, அப்படியும் இல்லன்னா அந்த வீட்ல இருக்குற பேய் தன்னோட வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்களக் கொன்னுடும். இதேயேதான் மாத்தி மாத்தி படமா எடுக்கறாங்க.”

“இந்தக் கதை ஒங்களுக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறேன். தீவிரவாதத்தப் பத்தி ஒரு கத இருக்கு. சொல்லட்டுமா?”

“அப்போ அந்தத் தீவிரவாதிகள் எல்லாமே இஸ்லாம் மதத்தவரா?”

“ஆமாம் sir.”

“என்ன ஜான்சன், நீங்களும் மத்த directors மாதிரியே இருக்கீங்க? எல்லாரும் இஸ்லாம் மதத்தவர தீவிரவாதிகளாகவும், cabaret dance ஆடுற பெண்களையும் கேவலமான நடத்தையுள்ள பெண்களையும் கிறிஸ்துவர்களாகவும் காட்டுறாங்க. யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் தப்பு பண்றாங்க. ஆனா அவங்க ஒட்டுமொத்த சிறுபான்மையினர அவமதிக்கிற மாதிரிக் காட்சி அமைக்கிறாங்க. அவங்கள மாதிரியே நீங்களும் இருக்கீங்களே?”

“இல்ல… sir… ஆண்டாண்டு காலமா இப்படித்தான் எல்லாரும் படம் எடுக்கறாங்க. அதுதான் எனக்கும் தொத்திக்கிச்சு.”

“ஒங்கள மட்டும் குறை சொல்லி என்ன ஆகப்போது? முன்னேர் எவ்வழியோ பின்னேரும் அவ்வழியே. சரி, நீங்க அடுத்த கதைக்கு வாங்க.”

“Sir, இந்தக் கதையில் hero ஒரு conductor. வில்லன் அந்த busல வரான். Ticket எடுக்கறான். மீதி ஒரு ரூபா சில்லறய hero அடுத்தநாள் வரும்போது வாங்கிக்க சொல்றாரு. ஆனா, வில்லன் heroகூட சண்டைக்கு வரான். அப்போ hero தன்னோட நிலமைய விளக்கி ஒரு பாட்டு பாடறான் sir.

சில்லறைதான் இருந்திருந்தால் நானும் கொடுத்திருப்பேன்.

ஒரு ரூபாதான் தீந்துடுச்சே அதனால் கொடுக்கலையே.

இதை நீயும் உணர்ந்துகொண்டால் நாளைக்கு வாங்கிக்கொள்ளு.

இல்லையென்றால் நீயும் நானும் மோதிதான் பார்த்திடலாம்.

ஒரே ரூபா சில்லற

அத இல்லன்னு நீயும் சொல்லற

இதுதான் உனது முடிவு என்றால் நான்தான் உனக்கு எதிரியடா.

நாளைக்குப் பார் வரும்போது என்ன செய்யிறேன்னு

இனி உனக்குத் தொடங்கப்போது கெட்ட காலம்தான்டா.

இப்படி அந்த வில்லன் சொல்லிட்டு heroவுக்கு பரம எதிரி ஆயிடறான் sir. அவங்களுக்குள்ள நடக்கிற சண்டதான் மீதி கதை.”

“ரொம்ப வித்தியாசமான கதை. அடி வாங்கியதால வில்லன், காதல் பிரச்சினை வில்லன், கார் மேல கை வச்சதுக்காக வில்லன், bike திருடினதால வில்லன் இப்படி பல வில்லன்கள பாத்திருக்கேன். ஆனா, ஒரு ரூபா சில்லற பிரச்சினைக்கு வில்லனா? பலே! பலே!”

“Sir, அப்ப ஓங்களுக்கு கத புடிச்சிருக்கா? இந்தப் படமே பண்ணலாமா?”

Mr.ஜான்சன் ஏதாவது சொல்லிடப்போறேன். வேற ஏதாவது கத சொல்லுங்க.”

“….! ….! சரி sir. இதுதான் என்னோட கடைசி கத. இது உங்களுக்குக் கண்டிப்பா புடிக்கும்.”

“சொல்லுங்க, புடிக்குதான்னு பாப்போம்.”

“நம்ம கதையில Heroin ரொம்ப திமிர் பிடிச்சவ. Heroவுக்கும் அவளுக்கும் நிறைய தடவ சண்டை நடக்குது. Hero அவளோட தப்ப அவளுக்கு உணர்த்தராரு. அதனால heroin அவர love பண்றாங்க. ரெண்டு பேரும் பல தடைகள மீறிக் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இதுதான் sir கத.”

“இந்தக் கதையத்தான் பெருசா சொன்னீங்களா? சரி இதுக்குக் கூட ஏதாவது பாட்டு வச்சிருப்பீங்களே?”

“ஆமாம் sir, ஒரு பாட்டு இருக்கு. ஆரம்பத்தில heroin திமிர் பிடிச்சவளா இருந்தப்ப hero இந்தப் பாட்ட பாடறான் sir.

எங்கே போகுதோ நாணம்

அங்கே போகுதே மானம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

எதுவும் உனக்கில்லை பெண்ணே…!

ஹேய்! உன் குணத்தாலொரு புரட்சியை உண்டாக்கு.

ஏ ஹேய் ஹேய்! உந்தன் திமிரைக் குறைத்து தண்மையாகு.

அழகு உனக்கு மிஞ்சும் மிஞ்சும் மிஞ்சும்.

குணம்தான் உன்னில் பஞ்சம் பஞ்சம் பஞ்சம்.

பெண்போல் நடந்துகொண்டால் கைக்கூப்பி கும்பிடுவேன்

திமிரோடு நடந்துகொண்டால் கொட்டத்தை அடக்கிடுவேன்

என்ன sir, பாட்டு நல்லாருக்கா?”

Mr.ஜான்சன் இது உங்களளோட கடைசி கதையா?, இல்ல எனக்குக் கடைசி கதையா?”

“ஏன் sir அப்படி கேட்கிறீங்க?”

“பின்ன, இந்த மாதிரி ஒரு பொண்ணப்பத்தி தப்பா பாடினா என்னோட படத்த release பண்ண விடுவாங்களா? அப்புறம் என் cinema வாழ்க்கையே கேள்விக்குறியாயிடுமே!”

“Sir, நம்ம என்ன பொண்ணுங்களே இப்படித்தான்னா பாட்டு பாடறோம். அந்தப் பாட்டுக்கே யாரும் எதிர்ப்பு தெரிவிக்கல. இன்னும் சொல்லப்போனா அந்தப் பாட்டு பொண்ணுங்க மத்தியில ரொம்ப famous. நம்ம அந்த ஒரு திமிர் பிடிச்ச பொண்ணப்பத்திதான் பாடப்போறோம் sir. நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது.”

“என்னதான் இருந்தாலும் பொண்ணுங்கள கிண்டல் பண்றது ரொம்ப தப்பு.”

“OK sir. உங்களுக்குப் பிடிக்கலைனா அந்தப் பாட்டு வேணாம்.”

“ஆமாம் ஜான்சன், நான் ஒரு கேள்வி கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?”

“மாட்டேன் sir. கேளுங்க.”

“ஆமாம் பொண்ணுங்களுக்கு இலக்கணமா அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அப்படீன்னு சொல்றீங்களே. ஆண்களுக்கு என்ன இலக்கணம்?”

“தெரியலையே sir”

“ஆண்களுக்கும் இலக்கணம் இருக்கு. ஒவ்வொரு ஆண்களும் தங்கள் வாழ்க்கையில் தன்மை, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி இந்த நான்கு குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.”

“ஓ…! அற்புதம் sir. Sir….., எந்தக் கத புடிச்சிருக்கு?”

“நீங்கச் சொன்ன கதை எதுவுமே பிடிக்கல.”

“என்ன sir, இப்படி சொல்லிட்டீங்க? என் கூடக் கண்டிப்பா ஒரு படம் பண்றதா வாக்கு கொடுத்தீங்களே sir?”

“கவலப் படாதீங்க ஜான்சன். நான் சொல்ற மாதிரிக் கதை எழுதி எடுத்துட்டு வாங்க. கண்டிப்பா ஒரு படம் பண்ணலாம்.”

“எந்த மாதிரி sir?”

“நீங்க சொன்ன எல்லா கதையையும் mix பண்ணி ஒரு கதை எழுதிட்டு வாங்க. அதுல action, sentiment, love, comedy, romance, குத்து பாட்டு, thrilling எல்லாம் இருக்கணும்; இதுதான் கதைனு கண்டே புடிக்க முடியாத மாதிரி இருக்கணும்; விறுவிறுப்பா போகணும்; முக்கியமா படம் 500 நாள் ஓடனும். அப்படியொரு கதை ஏற்பாடு பண்ணிட்டு வாங்க.”

“….! …! ..! சரி sir. நீங்க சொல்ற மாதிரியே நான் ஒரு கதை ready பண்ணிட்டு வரேன்.”

“இம்… போயிட்டு வாங்க.”

ஜான்சன் நடையைக் கட்டினார். போகும் வழியில்,

“க***** நாயி…. இவனுக்குப் பொழுது போகலன்னு என்னைய கூப்பிட்டு கதை கேட்டுக் கடைசியில மசாலா கதைதான் வேணும்னு சொல்லிட்டான். படம் 500 நாள் ஓடனுமாம். ஓடும்டா! ஓடும்! Theaterஐ விட்டுத்தான் ஓடும். இந்த மாதிரி heroக்கள் இருக்கிற வரைக்கும் நம்மள மாதிரி directors என்னைக்கும் புதுசா try பண்ணி வித்தியாசமான படம் எடுக்கவே முடியாது.” என்று flop statஐ திட்டிக்கொண்டே சென்றார்.

முற்றும்.

8 Comments

  1. Yarlpavanan Kasirajalingam ஆகஸ்ட் 31, 2014
  2. ஸ்கூல் பையன் செப்டம்பர் 1, 2014
  3. Nat Chander செப்டம்பர் 2, 2014
  4. Nat Chander செப்டம்பர் 7, 2014
    • மரிய ரீகன் ஜோன்ஸ் செப்டம்பர் 7, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.