பழமொழிகளின் விளக்கங்கள் பகுதி – 10

பகுதி-9 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

proverbs

1. ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும்.

நாம் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கிறோம் என்றால், வேறொரு வாய்ப்பு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். ‘இங்கு இல்லை’ என்பதற்கு ‘வேறு எங்கோ இருக்கிறது’ என்பதுதான் பொருள். அதனால், நாம் வாய்ப்புகளைத் தேடித்தேடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. பூவும் வேணும், மீசையும் வேணும்.

ஒரு மனிதன் ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம். இரண்டிற்கும் ஆசைப்படுவது பொருந்தாது. அதுபோல, ஒருவர் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழலில், இரண்டுமே வேண்டும் என்று அடம்பிடிக்கும்போது இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.

3. ஓணானோட ஓட்டம் வேலி வரைக்குந்தான்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. ஓணான் ஓடினாலும் வேலியில் அதன் வேகம் குறைந்து சிறுவர்களிடம் மாட்டிக்கொள்ளும் (சிறுவர்கள் ஓணானைக் கொள்வதைப் நாம் பார்த்திருப்போம்). அதுபோல மிதப்பில் ஆடுபவர்களின் ஆட்டம் குறிப்பிட்ட நேரம் வரைக்கும்தான். நேரம் வரும்போது அவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள்.

4. கம்புக்குக் களை எடுத்த மாதிரியும் தம்பிக்குப் பெண் பாத்த மாதிரியும்.

‘ஒரே கல்லுல ரெண்டு மாங்கா’ என்பதற்கு இணையான பழமொழி. அதாவது முயற்சி ஒன்று. ஆனால், பலன் இரண்டு. அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள்தான். அதனால், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்குப் பெண் பார்க்க வேண்டுமென்றால் ஊர் ஊராகத் தேடவேண்டியதில்லை.

பெரியவர்கள் என்ன செய்வார்கள் என்றால், தன் வயலுக்குக் களை எடுக்கவரும் பெண்களுடன் கூடவே வேலை செய்து, அவர்களுடன் பேசிப் பழகி ஒவ்வொருவருடைய குணத்தையும் அறிந்து அவர்களில் ஒரு நல்ல பெண்ணைப் தன் வீட்டுப் பையனுக்குத் தேர்ந்தெடுப்பார்கள். பின் அவள் வீட்டிற்கு பெண் கேட்கச் செல்லுவார்கள்.

5. கூர மேல சோத்த போட்டா ஆயிரம் காக்கா.

அதாவது நமக்கென்று ஆதரவு இல்லாவிட்டாலும், அடுத்தவர்களுக்குப் பணத்தையோ அல்லது அவர்களுக்குத் தேவையானவற்றையோ கொடுத்து நமக்கு ஆதரவைத் திரட்டலாம். உதாரணமாக, திருமணத்தின்போது உறவினர்கள்தான் பந்தி பரிமாறுதல் போன்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள். உறவினர்கள் அதிகம் இல்லாதவர்கள் கூலி கொடுத்து ஆட்களை அன்று ஒருநாள் வேலைக்குக் கூட்டிவருவார்கள். அவர்களைக் கொண்டு எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்வார்கள்.

6. ஆளாகறதுக்கு முன்னாடியே அரச மரத்த சுத்தி வந்தாளாம் ஆம்பளப்புள்ள வேணும்னு.

அவசரமாக எதையும் செய்பவர்களை இந்தப் பழமொழி வைத்துத் திட்டுவர். ஒரு செயலைப் படிப்படியாகச் செய்தால்தான் வெற்றி கிட்டும் என்றால் அதன்படித்தான் நிதானமாகச் செய்ய வேண்டும். விரைவிலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடைசிப் படியை நேரடியா செய்யக் கூடாது.

7. அடுத்தவன் கைய தலைக்கு வச்சிக்கிட்டு எவ்வளவு நாளைக்குத் தூங்க முடியும்?

‘தன் கையே தனக்கு உதவி’. நாம் முன்னேறப் பலர் உதவலாம். நம் முன்னேற்றம் சிறிது காலம் வேண்டுமானால் அவர்களால் காக்கப்படலாம். ஆனால், நம்முடைய உழைப்பினால் மட்டுமே அது நிலைத்து நிற்கும்.

8. ஆட்டிக்கிட்டு போற கைய நீட்டிக்கிட்டு போனா, போடற மகராசன் போட்டுட்டுப் போறான்.

கொஞ்சமாவது முயன்றால்தான் வாழ முடியும். அதாவது, சும்மா இருப்பதற்கு பதில் குறைந்தது கையை நீட்டி யாசித்தாலே, யாராவது பிச்சைப் போடுவார்கள். அப்படியிருக்க, கடுமையாக உழைத்தால் அதன் பலன் எத்தகையதாக இருக்கும்!

9. கொட்டக் கொட்டக் குனிபவனும் முட்டாள்; குனியக் குனியக் கொட்டுபவனும் முட்டாள்.

ஆம். கொட்டக் கொட்ட உயர வேண்டுமே ஒழிய, தாழ்ந்து மேலும் கொட்டு வாங்க வாட்டமாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பவனை முட்டாள் என்றுதான் கூற வேண்டும். மேலும், நாம் குனியக் குனியக் கொட்டுபவன், அதாவது அடுத்தவர்களின் பலவீனத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரம் செய்ய நினைப்பவனும் முட்டாள்தான். ஏனெனில், அவன் வேரோடு அழியப்போகிறான் என்பதை உணராமல் செய்துகொண்டிருக்கிறான்.

10. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்.

நம் அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஆட்கள் பல பேரைக் காண்கின்றோம். உதவி செய்தவர்களுக்கே குழி வெட்டுபவர்கள், வெளியில் சாதி இல்லை என்று கூறிக்கொண்டு சாதியை வெறியுடன் கடைப் பிடிப்பவர்கள், மக்களுடைய வரிப் பணத்திலேயே ஆட்சி நடத்திக்கொண்டு மக்களுக்கே கெடுதல் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் இந்த இனத்தில் சேருவார்கள்.

11. குத்தாலத்துல குளிக்கப் போயி குழாயில குளிச்ச கதையாட்டம்.

மெனக்கெட்டு குத்தாலம் செல்வது எதற்காக? அங்கு உள்ள அருவிகளில் குளிக்க. குத்தாலத்திற்கு சென்று அங்கு ஏதோ ஒரு குழாயில் குளிக்க, எதற்காகக் குற்றாலம் செல்ல வேண்டும்? அதை நம் ஊரிலேயே செய்யலாமே! அதாவது நாம் செய்யும் செயலின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டும்.

மேலும் ஒரு உதாரணம்: ஒரு புத்தகக் கண்காட்சி செல்கிறோம் என்றால், அங்குப் போய் வார இதழ்கள் வாங்கவா செல்வோம்? இல்லை. வார இதழ்கள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், புத்தகக் கண்காட்சியில்தான் மிக அரிய புத்தகங்கள் கிடைக்கும்.

12. ஏழையின் குரல் அம்பலத்தில் ஏறாது.

உண்மைதான். அறிவுரையை ஏற்றுக்கொள்வதில் கூட ஒரு பிரபலம் கூறினால்தான் ஏற்றுக்கொள்வோம். ஒரு சாதாரண மனிதர் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்று சமுதாயத்தில் ஏழைகளுக்குப் பாதகமாகவும், பணக்காரர்களுக்குச் சாதகமாகவும் தீர்ப்பு வழங்குவதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

13. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தேங்காய் உடைச்சான்னா நான் ஒரு சட்டியாவது உடைக்கணும்.

பலர் இப்படித்தான் வீம்பு கட்டிக்கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்கிறோம். ஆனால், அதைச் செய்வதால் நஷ்டம் நமக்குத்தான் என்பதை புரிந்துகொள்வதில்லை. உதாரணமாக, பெண்களில் சிலர் தங்களது தோழிகள் புதிதாகப் புடவை அணிந்தாலோ அல்லது நகை வாங்கினாலோ அவர்களும் வசதி இல்லையென்றாலும் வீம்புக்கு வாங்குவர். அதனால் கடன் பிரச்சினைதான் அதிகமாகும்.

14. கல்லுல வேர்த்தாலும் வேர்க்கும் அவன் நெஞ்சுல வேர்க்காது.

ஈவு இரக்கம் இல்லாமல் பிறரை கொடுமைப் படுத்துபவர்களை அல்லது ஆபத்தில் கூடப் பிறருக்கு உதவாமல் இருப்பவர்களை இந்தப் பழமொழி வைத்துக் குறிக்கலாம்.

15. கத்து வச்ச கைவேல காலத்துக்கும் உதவும்.

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.” என்பது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொண்டால் யாரையும் நம்பி பிழைக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தொடரும்…

4 Comments

  1. Arasu பிப்ரவரி 5, 2014
  2. Iniya மார்ச் 30, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.