குறிப்பு: இந்தக் கட்டுரை, தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
முன்னுரை:
அன்பார்ந்த வாசகர்களே!
சமுதாய சீர்கேட்டிற்கு காரணிகள் பல இருப்பினும், முதல் வரிசையில் நிற்பது போதைப் பழக்கம், சினிமா மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களான கைபேசி, இன்டெர்நெட் போன்றன என்பதை நாம் நன்கு அறிவோம். அதில் ஒன்றான போதைப் பழக்கத்தைப் பற்றி மேற்குறிப்பிட்டுள்ள தலைப்பில் என் கருத்துக்களுக்கு கட்டுரை வடிவம் தருகிறேன்.
போதை:
‘போதை’ என்ற வார்த்தை நேர்மறையான எண்ணங்களைத் தரக்கூடிய வாய்ப்பில்லை. என்றால், அப்படிபட்ட வார்த்தைக்குச் சொந்தமான செயல்கள் எவ்வளவு கீழ்த்தரமானது, அதன் தாக்கம் எத்தகைய கோரமானது மற்றும் விளைவு எவ்வளவு மட்டமானது என்பதை உணர்ந்துதான் ஆக வேண்டும். போதை ஏற்படுத்தும் விபரீதங்களை மறக்கவும் இயலாது.
அன்று:
யாராவது ஒருவர் குடித்திருக்கிறாரெனத் தெரிந்தாலே முகம் சுளிப்பார்களாம்; காவலர்கள் தேடித்தேடி அவர்களைப் பிடித்துத் தண்டிப்பார்களாம்; அதனால், குடிகாரர்கள் மறைந்து குடித்துவிட்டு ஓடி ஓடி ஒளிந்து கொள்வார்களாம்.
குடிகாரர்களை சமுதாயத்தில் சம மரியாதை தராமல் ஒதுக்கி வைப்பார்களாம். குடிகாரர்கள் பெண் தேடும் படலத்திலேயே வாழ்க்கையைக் கழிப்பார்களாம். “அவன் ஒரு குடிகாரன்; அவனிடம் சரிசமமாகப் பேசுதல் கூடாது.” என்று மனநிலை பாதிக்கப் பட்டவர்களைப் போன்று ஒதுக்கி வைப்பார்களாம். இவையெல்லாம் என் தாத்தா பாட்டி சொன்னது.
இன்று:
குடிப்பழக்கம் நாகரீகத்தின் ஒரு அங்கம்; நகர வாழ்க்கையின் ஒரு பங்கம்; அதனால்தான் வருத்தப்படாத வாலிபர்கள்போல, போதை தெளியாதவர்கள் உலா வருகிறார்கள் எங்கும். இதற்கெல்லாம் ஒத்து ஊதினாற் போன்று அரசாங்கமே வைத்த டாஸ்மாக் மதுபானக்கடை மக்களை நாளுக்குநாள் மயக்கத்தில் ஊற வைத்துக்கொண்டிருக்கிறது.
இயற்கையின் தொட்டில்களான கிராமத்திலும் மக்கள் போதைப் பழக்கம் என்ற வைரசால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டில் எந்த விசேசம் நடந்தாலும் சரி, “இன்னைக்கு என்ன விருந்து (treat)?” எனக் கேட்டு டாஸ்மாக் கடையில் இருப்பதை வீட்டிற்கு வற்புறுத்தியாவது வரவழைத்து விடுகிறார்கள். மது அருந்துவது ஒன்றும் பெரிய விசயமல்ல; பரவலாகக் குடிக்காத ஆண்கள் இல்லை, என்ற மனநிலைக்கு பெண்களும் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கருத்து உங்களுக்கு முரண்பாடாகத் தெரியலாம். இருந்தாலும் அதுதான் உண்மை.
சமீபத்தில் ஒரு உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தபோது இரண்டு பெண்கள் பேசியது என் காதில் விழுந்தது. இருவரில் ஒருத்தி அந்த மணப்பெண் மீது கரிசனையுடன், “மாப்பிள்ளை முகத்தைப் பார்த்தால் குடிப்பழக்கம் உள்ளவர்போல் தெரியுதுடி” என்று சொல்ல மற்றொருத்தி, “குடிக்காத மாப்பிள்ளைகள் கிடைப்பது குதிரைக் கொம்பாயிடுச்சி. பெண்களில் சிலரும் சமவுரிமையென்று கூட்டணி வைத்துக் கொள்கிறார்களே, தெரியாதா உனக்கு? இந்தப் போதைப் பழக்கத்தைச் சரி பண்ணிடலாம். மாப்பிள்ளைக்கு இன்னொரு போதை இல்லாமல் இருந்தால் அதுவே அவள் செய்த புண்ணியமாக இருக்கும்” என்றாள்.
போதை வகைகள்:
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியன முக்கிய மூன்று ஆசைகள் இருப்பது போன்று போதையிலும் முக்கிய இரண்டு உண்டு. மது மற்றும் மாது. அந்தப் பெண் சொன்ன இரண்டாவது போதை என்ன என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். பெண்கள் ஆண்களிடம் வெறுக்கும் விசயமும் இதுதான். குடும்பம் என்ற வட்டத்துக்குள் இருந்தால் அது ஆரோக்கியமானது. குடும்பத்தை விட்டு வெளியில் வட்டமிடுவதுதான் மாது என்ற இரண்டாவது போதைக்கு அடித்தளம் எனக் கூறப்படுகிறது.
‘அளவிற்கு மிஞ்சிய அமுதமும் நஞ்சு’ எனக் கூறப்படுவதுபோல, எந்த ஒரு பழக்கமும், நல்ல பழக்கமாகவே இருந்தாலும் கூட, அளவுக்கு மிஞ்சினால் அதனைப் போதையெனக் குறிப்பிடுவதில் தவறில்லையெனக் கருதுகிறேன்.
மாக்களின் மனநிலை:
மக்களாகப் பிறந்தால் மக்களாக வாழ வேண்டும். மாக்களாக வாழக் கூடாது. மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள பகுத்தறியும் திறன்தான் மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தலைச்சிறந்த வித்தியாசம். அதன் அடிப்படையில்தான் எல்லாப் பண்பு குணநலன்களில் மனிதன் மாறுபட்டு இயற்கையை கோலோச்சுகிறான்.
வாழ்வது ஒரு தரம், வாழ்க்கை ஒரு பெரும் வரம்.
வாழ்க்கையை பொருள்பட வாழ ஒன்று சுயபுத்தியாவது இருக்க வேண்டும். இல்லை, சொல்புத்தியாவது இருக்க வேண்டும். இது இரண்டுமே வேண்டாம், எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன், இப்படித்தான் வாழனும் என்ற மனித கோட்பாட்டிற்குள் வரமாட்டேன் என்றும், யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்றும், ‘மானம் போனா போகுது, என் தொப்ப ரொம்பனா போதும்’ என்றும் சூடு சுரணை இல்லாமல் குடிகாரர்களாக வலம் வருபவர்களைப் பார்க்கும்போது பாரதியைப் போன்று, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே…’ எனப்பாடத் தோன்றுகிறது.
குடும்பத்தில் பிரச்சினைகள்:
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். அப்பா குடிகாரர். ஆனால், அவர் அரசுப்பணியில் அதுவும் அறப்பணியில் இருக்கிறார். மாலை வீட்டிற்கு வந்தவுடன் தேநீர் அருந்திவிட்டு வெளியில் சென்றால் குடித்துவிட்டுதான் திரும்புவார். மனைவி, பிள்ளைகளை ஒரு சுமையாகக் கருதுபவர். மனைவியை வசைமொழிகளால் ஆசீர்வதிப்பார். பிள்ளைகளை “ஒழிந்து போங்கள்” எனத் திட்டுவார். நான்கு சுவற்றுக்குள் ஒரு சிறைக் கைதிகளைப் போன்று வளர்க்கப்படும் அவர்கள் மனநிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்படும்! இந்தக் குடும்பத்தின் கதையை ஒரு தொடர் கதையாகப் பின்னர் எழுதத் திட்டமிட்டுள்ளேன். இப்படி குடும்பங்கள் சீரழியக் காரணம் போதைப் பழக்கம்தான் என்பதை மறுக்க இயலாது.
வினோதமான கலாச்சாரங்கள்:
சில ஆண்கள் தங்கள் மனைவிகள் அழகாக இருக்க ஆசைப்பட்டு தினமும் 10 மில்லி பிராந்தி சாப்பிட வைத்து மெருகேற்றுகிறார்களாம்.
இன்னும் சில ஆண்கள் “எனக்குக் கம்பெனி கொடுக்க நீயும் குடி” என மனைவியைத் துணைக்கு அழைத்துப் பயிற்சி கொடுக்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதுமட்டுமல்ல நன்றாகப் பழுத்த அழுகிப்போகிற நிலையில் உள்ள திராட்சை மற்றும் வாழைப்பழங்களை வாங்கி வந்து அதனுடன் வெல்லம் முதலிய பொருட்களைச் சேர்த்து தூய பழச்சாராயம் தயாரித்துக் குடிக்கிறார்கள் எனவும் தெரிகிறது.
இப்படிப்பட்ட தினுசு குடிகாரர்களுக்கு குடும்பத்தின் மீது எப்படி அக்கறை வரும்? இவர்களால் குடும்பங்கள் வடிக்கும் கண்ணீர்க்கு அளவில்லை. அடுத்தவர்கள் கண்ணீரில் நீச்சலடித்து கும்மாளம் அடிக்கும் இவர்களை எந்த இனத்தில் சேர்ப்பது?
இவர்கள் பிள்ளைகள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள்? மனைவி பிள்ளைகளின் மகிழ்ச்சியை அடகு வைத்துக் குடித்து கும்மாளம் அடிக்கும் இவர்கள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன?
தேவையற்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டால் அதை மறக்க எளிதாக எடுத்துக்கொள்ளும் கொள்கையைப் (take it easy policy) பயன்படுத்தலாம். எப்படியும் வாழலாம் என்று மிருகத்தனமாக வாழ்க்கையை அனுபவிக்க பயன்படுத்தலாமா இந்தக் கொள்கையை? மனசாட்சியை அலச வேண்டிய விசயம் இது. நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் தீய விளைவுகளைக் கொண்டுவரும் என்பதுதான் உண்மை.
விளைவு:
குடிப்பழக்கமும் போதைப் பழக்கமும் மனிதனை அடிமைப்படுத்துகிறது; மனிதனை மிருகச் செயலுக்குத் தூண்டுகிறது; மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் உதாசீனப்படுத்தி பிறர் மனதை இரணமாக்கும் கொலைபாதகச் செயலையும், நிஜ கொலைகளையும் செய்ய வைக்கிறது; மானங்கெட்ட வாழ்க்கைக்குத் தள்ளுகிறது; சமுதாயத்தில் மதிப்பிழந்தவர்களாகத் திரிவதுதான் எஞ்சுகிறது.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ஏதாவது ஒரு பழக்கம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது என உளவியல் சொல்கிறது. குடிகாரர்களுடனும் போதை ஆசாமிகளுடனும் தினம்தினம் பழகும், வசிக்கும் நபர்களின் நிலமை என்ன? சிலபேர் பிஞ்சிலேயே பழுக்கக் காரணமும் இதுதான்.
அடுத்த தலைமுறை:
தானும் அழிவதோடு உடன் இருப்பவர்களையும் சிறுகச் சிறுக அழிக்கிறார்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்களது பிள்ளைகள் மற்றவர்களைப் பார்த்துத் தங்களது தந்தை அவர்களைப் போல் நல்லவர்களாக இல்லையேயென மனம் புழுங்கி, தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிப்பது எவ்வளவு கோரமான விளைவு! சிலபேருடைய வாழ்க்கையே வீணாவதையும் பார்க்கலாம்.
நான் படித்த பள்ளியில், 8-ம் வகுப்பில் தமிழ்மணி என்ற மாணவன் நன்றாகப் படிக்கக்கூடியவன்; அவன் அழகானவன்; வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆனால், அவன் முகம் எப்போது வாட்டமாகவே இருக்கும். இதைக் கவனித்த ஆங்கில ஆசிரியை அவனிடம் எல்லா விசயத்தையும் கேட்டு அறிந்து “உனக்குப் பிடித்த அம்மாவை வாழ வைக்கவாவது நீ நன்றாகப் படி; உன் அப்பாவின் செய்கைகளை மறந்துவிடு”, என்று அடிக்கடி அவன் மனதை தேற்றி படிப்பில் அதிக ஆர்வமூட்டினார். இன்று அவன் ஒரு ஆசிரியராகப் பணிபுரிகிறான். எல்லா மாணவர்களுக்கும் நல்ல ஆசிரியர்கள் அமைவதில்லையே! கவனிக்கப்படாத பிஞ்சு மனசுகளில் சில சைக்கோவாகிக் கொண்டிருக்கின்றன.
குடியினால் பணமிழந்து, சொத்திழந்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள் ஏராளம். இது தொடர்ந்தால் வீட்டின் நிலமை என்ன? வீடுகளில் அமைதி சமாதானம் இல்லையெனில் சமுதாயத்தின் நிலமை என்னாவது? அடுத்த தலைமுறையின் நிலமை என்ன?
அமெரிக்காவின் பின்னடைவுக்குக் காரணம் சில அசிங்கமான கலாச்சாரங்கள்தான்.
தீர்வு:
கலாச்சாரம், பண்பாடுகளில் பழமை வாய்ந்த, வீரமும் தீரமும் மிகுந்த இந்த இந்திய மண்ணில் வாழும் நாம் ஒவ்வொருவரும் நல்ல கொள்கைகளைக் கடைபிடித்து, நல்ல பழக்கங்களை வளர்த்து, தீயவைகளை விட்டொழித்து மனித நேயத்தோடு நடந்து, ‘தர்மம் தலைகாக்கும்’ என்பதால் அவரவர்கள் தம்மால் இயன்ற உதவிகளைப் பிறர்க்கும் செய்து, பிறர் மகிழ தானும் மகிழ்ந்து, ஏட்டில் அல்ல, இதயத்தில் இடம்பிடித்து வாழ்வதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும்; முழுமையான வாழ்வாகும். அப்போதுதான் நாமும் பிறவிப்பயன் நீந்தி இறைவனடி சேர முடியும்.
முடிவுரை:
நாம் ஒவ்வொருவரும், மனிதப்பிறவி மகத்தான பிறவியென உணர்ந்து, சிறு சிறு களைகளையும் நம்மில் வளர விடாமல், ஒழுக்கமுள்ளவர்களாக, தீமை தரும் நாகரீகங்கள் அநாகரீகங்கள் என்பதை உணர்ந்து, மனதில் உறுதியோடும், நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நலமாக வாழவிட்டு, பிறர் சுட்டுவிரலுக்குப் பலியாகாமல் அற மற்றும் பண்பு வாழ்க்கை வாழ்வோமாக!
போதை வஸ்துக்களை ஒழிப்போமாக!
போதைக்கு அடிமையாகாத புதிய தலைமுறையைப் படைப்போமாக!
போதை என்ற வார்த்தை, வாழ்க்கை என்ற அகராதியில் இல்லாமற்போகச் செய்ய, தீயாய் வேலை செய்வோமாக!
போதை விரும்பும் பேதைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தியத் திருநாட்டின் மேதைகளாக மாறுவோமாக!
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
அமேரிக்கா பற்றி பின்னடைவு என்று சொன்ன நீங்கள், எதில் பின்னடைவு, அதற்க்கு என்ன காரணம் என தெளிவாக்கவில்லை.பொருத்தமில்லாமல் அந்த வாக்கியம் துருத்திக்கொண்டிருக்கிறது!
சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் அவர்கள் போதை போன்ற உல்லாச காரியங்களில் அதிகம் கவனம் செலுதியதுதான் என்பது என் கருத்து.
நல்லதொரு கட்டுரை… பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்… போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…
வணக்கம்
தங்களின் கட்டுரை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் கட்டுரை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்
———————————————————————————————————————-
குறிப்பு-
நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
———————————————————————————————————————-
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கட்டுரையின் வழியாகத் தங்கள் தளம் அறிமுகம் கிடைத்தது. தமிழ்ப்படைப்புகள், நட்புடன் தொடர வாழ்த்துகள். நன்றி.
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!
Happy New Year 2020 and Congratulations!
wonderful content.