பகுதி – 8 ஐ படிக்க இங்குச் சொடுக்கவும்.
1. அந்தி மழை அழுதாலும் விடாது.
பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடைமழை போன்று துன்பம் வரும்போது இந்தப் பழமொழியை உபயோகப்படுத்துவர்.
2. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
நாம்தான் பெரியவர் என்று அகம்பாவத்தில் இருக்கக் கூடாது. எந்தவொரு செயலைச் செய்வதிலும் நம்மைவிட வலிமையான திறமையானவர்கள் உண்டு என்பதை நினைவில் கொண்டு ஆணவம் தவிர்த்து வாழ வேண்டும்.
3. அகல உழுகிறதை விட ஆழ உழு.
நிலத்தை உழும்போது, சீக்கிரம் உழ வேண்டும் என்பதற்காக அகல உழுதால் பயிர் நன்றாக வளராது; ஆழ உழுதால்தான் மண் தளர்ச்சி கொடுத்து நாம் விளைவிக்கும் பயிர் நன்கு வேரூன்றித் தழைத்து வளர முடியும். அதுபோல, எந்த ஒரு காரியத்தையும் மேலோட்டமாகச் செய்யாமல், அதில் முழுவதுமான கவனம் செலுத்தி செய்தால் நமது உழைப்பிற்கான பூரண பலன் கிடைக்கும்.
4. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் தேனும்.
சிலர் தேன் ஒழுகப் பேசுவார்கள்; நமக்கு உதவி செய்வதுபோல் நடிப்பார்கள். ஆனால், அவர்களது உள்ளம் முழுதும் தீய எண்ணங்களே நிறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
5. பசி ருசி அறியாது.
வீட்டில் அம்மா சமைத்து வைத்ததை அருமையாகவே இருந்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி அவர்கள் மனதை புண்படுத்துவோம். ஏனென்றால், பசிக்கும்போது சாப்பாடு கிடைப்பதால் அதன் அருமை தெரிவதில்லை. அதுவே பல நாட்கள் சாப்பிடாத பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் எவ்வளவு கேவலமான ருசியுள்ள உணவைக் கொடுத்தாலும் அதனை அவன் வெளுத்து வாங்குவான்.
6. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
நாம் யானை வளர்த்தால், அது வாழும்போதும் நமக்கும் மற்ற மனிதர்களுக்குப் பல வகைகளில் உதவுகிறது. யானை சாணம் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு மிக முக்கிய காரணியாகும். மேலும், அது இறந்தாலும் அதன் தந்தம் நல்ல விலை போகும். அதன் உடல் காட்டில் உள்ள விலங்குகளுக்குப் பல நாள்கள் உணவாகப் பயன்படும். அதுபோல, வள்ளல்கள் சிலர் இருந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவார்கள்; இறந்தாலும், மற்றவர்களுக்கு உதவுவதற்கான சூழ்நிலையை அமைத்துவிட்டு செல்வார்கள்.
7. நெருப்பு நெருப்பா திங்கறவன் கரி கரியா பேளுவான்.
பழமொழி என்னவோ அருவருப்பாக இருந்தாலும், அதன் கருத்து உண்மைதான். யாரும் தங்களுடைய வினைப்பயனிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.
8. கழுத விட்டையா இருந்தாலும் கை ரொம்பனா சரி.
இலவசத்திற்கு அலைபவர்கள், தரமற்ற பொருட்களை வாங்குபவர்கள் எல்லாம் இந்த மனோபாவம் கொண்டவர்கள்தான். அதாவது, நூறு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான ஆப்பிள் பழம் வாங்கலாம் என்று வைத்துக்கொள்வோம். சிலர் அதில் திருப்தி ஆகமாட்டார்கள். வேறொரு கடையில் அதே நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ தரம் குறைவான ஆப்பிள் பழம் தருகிறார்கள் என்றால் அதைத்தான் வாங்குவார்கள். அவர்களுக்கு நிறைய கிடைக்க வேண்டும் என்றுதான் விருப்பமே தவிர தரத்தைப் பற்றிக் கவலை இல்லை.
மேலும் ஒரு உதாரணம்: நாம் என்னதான் ஒருவருக்குப் பல உதவிகள் செய்திருந்தாலும் அது அவருக்குப் பெரிதாகத் தெரியாது. அதுவே, குறைந்த செலவில் ஒரு பெரிய பொருளை வாங்கி அவருக்கு அன்பளிப்பு கொடுக்கும்போது அவர் நம்மை மெச்சிக்கொள்வார்.
9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிஷனுக்கு ஒரு சொல்லு.
பெரியவர்கள் தவறு என்று சொல்லிச் செய்யக் கூடாது என்றதை மீண்டும் செய்யும் மனிதன் மனிதனே இல்லை.
10. தன் காலுக்குத் தானே முள் தேடுவது போன்று.
ஒத்த பழமொழிகள்:
- வேலியில் இருக்கும் ஓணானை வேட்டிக்குள் எடுத்துவிட்ட கதையாட்டம்.
- வீதியில போற சனியனை வீட்டுக்குள் கூப்பிட்டு வந்ததுபோல்.
- சொந்த காசுல சூன்யம் வைத்த கதைபோல்.
- சனியன தூக்கி பனியன்ல போடாத. (நவீன பழமொழி என்று கூறலாம்.)
சில நேரங்களில் நாம் தேவை இல்லாமல் செய்யும் சில காரியங்கள் நமக்கே தீங்கு விளைவிப்பதாக முடியும். இந்தக் கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன.
11. சொன்னா பொண்டாட்டி செத்துடுவா; சொல்லலனா புருஷன் செத்துடுவான்.
மருத்துவர், கணவனுக்குக் கொடிய உயிர்க்கொல்லி நோய் இருப்பதை மனைவியிடம் கூறினால், அவள் மிகவும் இளகிய மனம் கொண்ட மிகுந்த பாசக்காரியாக இருந்தால், அதிர்ச்சியிலோ நாளடைவில் மனவேதனையிலோ இறக்க வாய்ப்பிருக்கிறது. அதனைக் கணவனுக்குத் தெரியப்படுத்தி அவனுக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்றால், நோய் பெரிதாகி கணவன் இறந்துவிடுவான்.
அதைப் போல, வாழ்கையில் சில நேரங்களில் ஒரு செயலைச் செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்போம். ஆனால், அதைச் செய்தால் நமது நண்பர்களுக்குக் கெடுதல் வரலாம்; செய்யவில்லையென்றால் நமக்குக் கெடுதல் வரும். அந்த நேரத்தில் எதையுமே செய்யமுடியாமல் தவிப்போம். அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றப் பழமொழிதான் இது.
12. வெட்டிட்டு வான்னா கட்டிட்டு வரனும்.
ஒத்த பழமொழி:
- எள்ளுன்னா எண்ணையா நிக்கணும்.
“விறகு வெட்டிட்டு வா” என்றால், “காட்டிற்கு சென்று விறகுகளை வெட்டி அதனைக் கட்டாகக் கட்டி வீட்டிற்கு கொண்டு வா” என்று அர்த்தம். அடிமுட்டாள்கள்தான் விறகுகளை வெட்டி அப்படியே போட்டுவிட்டு வந்து, “நான் விறகுகளை வெட்டிவிட்டேன்” என்று கூறுவார்கள். பின், நாம் அவர்களுக்கு “மீண்டும் போய் அவைகளை கட்டிக்கொண்டு வீட்டிற்கு எடுத்துவா” என்று கூறவேண்டியதாய் இருக்கும். அதுபோல, நாம் ஒரு செயலைச் செய்யும்போது மிகுந்த ஈடுபாட்டுடன் கவனமாகச் செவ்வனே செய்ய வேண்டும்.
13. வந்தா வறுசட்டி வச்சி வறுப்பான்.
ஒரு வீட்டிற்கு விருந்தாளியாகப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள், விருந்தினராகிய நம்மை உபசரிக்க சமையல் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் நாம் வரும்போதுதான் அதனைச் செய்வார்கள் (உதாரணம்: சட்டியில் பயிர் வறுத்தல்). அப்போது நம்மிடம் கூறுவார்கள், “வாங்க! உங்களுக்காகத்தான் மெனக்கெட்டு இத செய்யிறேன்.” என்று.
அதாவது, அவர்கள் நமக்காகச் செய்வது நமக்குத் தெரியவேண்டுமாம். இது போலியான பாசத்தைக் குறிக்கிறது. இவர்கள் நாம் அவர்கள் வீட்டிற்கு போகும்போது மட்டுமே நம்மைப் போலியாகக் கவனிப்பார்கள்; பாசத்தைக் கொட்டுவார்கள். ஆனால், பிற நாட்களில் நம்மைப் பற்றிய நினைப்பே அவர்களுக்கு இருக்காது.
மேலும் ஒரு உதாரணமாக அலுவலகங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒருசிலர் வேலை நேரத்தில் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், மேற்பார்வையாளர் வரும்போது அப்படியே வானத்தையே வளைப்பதைப் போன்று வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் இந்தப் பழமொழி கொண்டு குறிப்பிடலாம்.
14. கோழியைக் கேட்டு மசாலா அரைப்பதில்லை.
“கோழி! கோழி! நான் ஒன்ன கொழம்பு வைக்கட்டுமா?” என்று அதனிடம் போய்க் கேட்டால் அது வேண்டாம் என்றுதான் சொல்லும். அதுபோல, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு முடிவு எடுக்கும்போது, அது சரி என்று தோன்றினால், அவர்களாகவே அதை எடுக்கவேண்டியதுதான். தனக்கு கீழ் இருப்பவர்களிடன் கேட்டால் அவர்கள் கூறும் கருத்துக்களால் குழப்பம்தான் வரும்.
15. குடுமியை பிடிச்சிக்கிட்டுதான் கூலியை கேட்கணும்.
ஒருசில அலுவலகங்களில் முதலாலிகள் தொழிலாளிகளுக்குச் சரிவரக் கூலி கொடுக்கமாட்டார்கள். அப்போது என்ன செய்வது? தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்துதான் தங்களது சம்பளத்தைப் பெறுவர். வேலை செய்தால்தான் முதலாளிக்கு லாபம் வரும். அதுதான் முதலியின் குடுமி.
அதுபோல, வாழ்கையில் நியாமாக நமக்குக் கிடைக்க வேண்டியவற்றை நேர்மையற்றவர்களிடமிருந்து வாங்க, அவர்களைப் பற்றிய ஏதாவது ஒன்று நமக்குப் பிடிப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வேலையைச் செய்யும்போது முழுவதையும் முடித்துக் கொடுத்துவிடாமல், பாதி கொடுத்துவிட்டு மீதி பாதியை ஊதியம் கொடுத்தபிறகு கொடுக்கலாம்.
தொடரும்…
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
விளக்கங்கள் மிகவும் அருமை… உங்களின் தேடல் தொடரட்டும்… பாராட்டுக்கள்…
வாழ்த்துக்கள்…
nice proverbs
தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்
http://maatamil.com
நன்றி