பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி – 8

பகுதி-7 ஐப் படிக்க இங்குச் செல்லவும்.

proverbs-பழமொழிகள்

1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெட்டது மேல்.

படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். அதற்குப் படிக்காத தலைமுறைகள் மூடநம்பிக்கையோடு இருந்ததே மேல்.

2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை.

பிறர் உதவி கிடைக்காமல் வாழ்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு தெய்வமே உற்ற துணை.

3. அறையில் ஆடியபின் அம்பலத்தில் ஆடு.

எந்த ஒரு வேலையைச் செய்யவும் பயிற்சி அவசியம். ஒரு போட்டியில் கலந்துகொள்ள முதலில் அதற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பயிற்சியின்றி நேரடியாகக் கலந்துகொண்டால் தோல்விதான் கிட்டும்.

4. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்பாது

அதாவது, உரலில் அகப்பட்டது என்பது நெல். நெல்லிலிருந்து அரிசி எடுக்க அதனை உரலில் போட்டுக் குத்துவார்கள். உலக்கையின் குத்தை வாங்கினால்தான் உமி தனியாகவும் அரிசி தனியாகவும் பிரியும்.

அதுபோல, சிலர் தங்களுக்கு வாழ்கையில் நல்லதே நடந்துகொண்டிருப்பதால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் குற்றங்களைச் செய்வார்கள். கண்டிப்பாக, அவர்கள் ஒருநாள் செய்த தவறுகளுக்குத் தண்டனை அனுபவிப்பார்கள்.

உதாரணமாக, ஒருவன் தான் செய்த ஒரு தவறுக்கு தண்டனை அனுபவித்துவிட்டான். அதனால், அவன் மனம் திருந்தி வாழ்ந்தாலும் அவனது பிற குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனென்றால், உரலில் அகப்பட்டது உலைக்குத் தப்பாது. நாம் செய்த ஒரு தவறுக்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வந்தால் பிற தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கும் காலமும் வரும்.

சுருக்கமாக தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

5. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

குன்றிமணி பார்த்திருப்பீர்கள். அவ்வளவு அழகாக இருக்கும். அது எப்படி குப்பையில் கிடந்தாலும் தனது அழகை இழக்காமல் இருக்கிறதோ அதுபோல, ஒருவன் உண்மையாகவே நல்லவனாக இருந்தால் எப்படிப்பட்ட தீய சூழ்நிலையில் அல்லது சுற்றுசூழலில் இருந்தாலும் அவன் எப்போதும் நல்லவனாகச் சேற்றில் மலரும் செந்தாமரையாகத் தனித்துவமாக இருப்பான்.

6. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.

ஒத்த பழமொழி: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

இந்தப் புரளி பேசுகிறவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பழமொழி.

7. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

என்றானாலும் உண்மைக்கு உயர்வுண்டு, தீமைக்கு அழிவுண்டும். என்றுமே ‘வாய்மையே வெல்லும்’.

8. வீட்டில் அடங்காதது ஊரில் அடங்கும்.

வீட்டில் தனது பெற்றோர்களுக்கு அடங்காத பிள்ளைகளை, பெற்றோர்கள் தண்டிக்க தயங்குவார்கள். ஆனால், ஊரில் தகாத செயல்களைச் செய்பவர்களை, ஊர் தண்டிக்கத் தயங்காது.

9. சுட்ட சட்டி சுவை அறியாது.

சட்டியில் சமைக்க அதனைப் பொறுமையாகச் சூடேற்றி, பின் ஒவ்வொன்றாகப் போட்டுச் சமையல் செய்வார்கள். அப்போதுதான் உணவு சுவையாக இருக்கும். ரொம்ப அதிகமாகச் சூடேறிய சட்டியில் போடும் பொருட்கள் ஒரு கணத்தில் தீய்ந்துவிடும்.

அதுபோல, மிக அதிகமாகத் தீய குணகளைக் கொண்டவர்கள், நாம் எவ்வளவு நல்லது செய்தாலும், சொன்னாலும் அதைக் கிரகித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது.

10. அடாது செய்தவன் படாது படுவான்.

தீயன செய்பவர்கள், அவர்கள் செய்தவைகளுக்கு ஏற்றாற் போன்று கொடுமையான தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

11. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

“ஒழுவுற வீட்ல இருந்தாலும் இருக்கலாம், அழுவுற வீட்ல இருக்கக் கூடாது” என்று சொல்வார்கள். ஒரு மனிதன் தன் வீட்டில் குடியிருக்க முக்கியமானது அந்தக் குடும்பத்தில் நிலவும் அமைதி மற்றும் சந்தோஷம். எப்போதும் சோகமாக இருப்பவர்கள் வீட்டில் எருமைகூட குடியிருக்கத் தயங்கும்.

12. அற்ப சகவாசம் பிராண சங்கடம்.

நாம் தரம் கெட்டவர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. தவறி வைத்துக்கொண்டால் அது நமக்குப் பிரச்சினையைத்தான் ஏற்படுத்தும்.

13. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

ஆளுக்கு ஏற்றாற் போன்று குணத்தை, பேச்சை மாற்றிச் செயல்படுபவர்களை இவ்வாறு கூறலாம்.

14. இரக்கப் போனாலும் சிறக்கப் போகணும்

அதாவது, எந்தவொரு எளிமையான செயலையும்கூட சிறப்புடனும் பொறுப்புடனும் செவ்வனே செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று எதையும் அலட்சியமாகச் செய்யக் கூடாது.

இது வறுமையிலும் செம்மையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்திலும் கொள்ளப்படுகிறது.

15. ஆட்டுக்குப் பள்ளத்தில் வேகம், ஆனைக்கு காடு மேடெல்லாம் வேகம்.

ஆடுகள் பள்ளத்தில் வேகமாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளால் மேடுகளில் வேகமாக ஓட முடியாது. அதற்கு எதிர்மாறாக, யானைகளால் பள்ளங்களில் வேகமாக ஓட முடியாது (ஓடினால் சாவுதான்). ஆனால் காடு மேடு முழுவது வேகமாக ஓடும்.

அதுபோல, ஒருவருக்கு ஒரு செயலைச் செய்யும் திறமை இல்லாவிட்டாலும் கூட, அதைவிட பெரிய செயல்களைச் செய்யும் திறமை இருக்கலாம்.

தொடரும்…

One Response

  1. திண்டுக்கல் தனபாலன் செப்டம்பர் 23, 2013

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.