1. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்.
கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்ய வேண்டும் என்று. எனவே, வாழ்கையில் சமாளிக்க முடியாத பிரச்சனை வந்தால் அதைக் கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேற வேண்டும்.
2. ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்.
இந்தப் பழமொழி இரு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
எங்கோ திருமணம் நடப்பதற்கு இங்குச் சந்தனம் பூசிக்கொண்டு கொண்டாடுதல். அதாவது, ஒரு சூழ்நிலைக்குப் பொருந்தாத ஒன்றைச் செய்தல் – தன் குடும்பத்தில் இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் ஒரு செயலைச் செய்து சந்தோசப்படுவது. எடுத்துக்காட்டாக, நம் ஊர் திருவிழாவாக இருந்தால்கூட பரவாயில்லை, எங்கோ ஒரு ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு செல்வதால் என்ன பலன்? இந்த மாதிரி பிரச்சனைகளைப் பொருள்படுத்தாமல் சம்மந்தமேயில்லாத வேலையைச் செய்வதால் பிரச்சனைகள் தீரப்போவதில்லை.
எங்குத் திருமணம் நடந்தாலும் இங்குக் கொண்டாடுதல் – எங்கு எது நடந்தாலும் தான்தான் அதற்குக் காரணம் என்று கூறுதல். எடுத்துக்காட்டு, ஒரு மாணவன் பெரிய அளவில் சாதித்ததால் அவனை ஊரே பாராட்டும்போது, அவன் அக்கம்பக்கத்தினர் சிலர் “அவன் எங்க வீட்லதான் தினமும் வந்து படிப்பான். அவனுக்குச் சந்தேகம் வரும்போது நான்தான் சொல்லிக் கொடுப்பேன். எனக்கு அப்பவே தெரியும் இவன் பெரிய ஆளா வருவான்னு” இவ்வாறு பிதற்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.
3. எறும்பும் தன் கையால் எண் ஜான்.
நம் கையால் எறும்பை அளந்தால் அது துரும்பு போலதான் இருக்கும். ஆனால், எறும்பு அதன் கையால் தன்னை அளக்கும்போது அது எட்டு ஜான் இருக்கும். அதாவது அவரவர்களுக்கு அவர்கள் பெரிய புத்திசாலிதான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை உண்டு.
4. வெல்லம் இருக்கும் இடத்தில்தான் ஈ மொய்க்கும்.
உதாரணமாக, ஒரு உணவகத்தில் உணவுகள் மற்ற உணவகத்தைக் காட்டிலும் சுவையாக இருந்தால் அங்குதான் மக்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் சொல்லவேண்டுமென்றால், நாம் என்னதான் சகஜமாக அனைவரிடமும் நட்புணர்வு பாராட்ட நினைத்தாலும், ஒரு சிலரிடம் மட்டும் அனைவரும் நண்பர்களாகப் பழகுவர். ஏனென்றால் அந்த ஒரு சிலரே இனிக்க பேசுவர், மற்றவர்களைக் கவரக்கூடிய நல்ல குணங்களைக் கொண்டிருப்பர். வேறொரு கோணத்தில், அதிக செலவு செய்யும் ஏமாளி ஊதாரிகளைச் சுற்றி நிறைய காரியவாதிகள் மொய்ப்பார்கள் என்னும் அர்த்தத்திலும் கூறலாம்.
5. குளிக்கப் போய், சேறு பூசிக் கொள்ளலாமா?
பலர் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்கள் நல்ல காரியங்களைச் செய்ய முற்படுவர். ஆனால், அந்தக் காரியத்திற்கு எதிரான கெட்ட காரியங்களையே செய்து முடிப்பர்.
6. சோறு கண்ட இடம் சொர்க்கம், கஞ்சி கண்ட இடம் கைலாசம்.
தன்னுடைய கடமைகளைச் செய்யாமல், தங்கள் சந்தோஷத்தை மட்டுமே பார்ப்பவர்களைக் குறிக்க இந்தப் பழமொழி பயன்படுகிறது.
7. கும்பிடுவது பசுமாட்டை, குருமா வைப்பதும் அதே பசுமாட்டை.
மனிதர்கள் கடவுளைத் தங்களுக்கு வேண்டுமென்றால் கும்பிட்டுக்கொள்வார்கள். அதே கடவுளின் பெயர் வைத்து இனம் பிரித்துத் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்கள். அவரை வைத்து அனைவருக்கும் அறிவுரை கூறுவார்கள். ஆனால், பணத்திற்காக அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்தக் கடவுளையே பணயம் வைப்பார்கள்.
8. கடப்பாரைய முழிங்கிட்டு கஷாயம் குடிச்ச கதை.
சிலர் பெரிய பெரிய பாவங்களைச் செய்திருப்பார்கள். அதற்கெல்லாம் பரிகாரமாகப் பிறருக்கு உதவி, தானம் மற்றும் தர்மங்கள் செய்வார். இதனால் அவர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நம்புவார்கள். அது எப்படியென்றால், கடப்பாரையை முழிங்கிட்டு கஷாயம் குடிக்கும் கதை போல்தான்.
வேறொரு கோணம் – ஒரு மிகப்பெரிய நோய்க்கு, சிறிய வைத்தியம் செய்யும்போது இந்தப் பழமொழி பயன்படுத்தப்படுகிறது.
9. வெண்கல பூட்ட உடச்சி விளக்கமாத்த திருடியத போல்.
சில செயல்களை மிகக் குறைந்த முயற்சியில் செய்யலாம் என்றால், அதை அந்த எளிய வழியில் செய்வதுதான் புத்திசாலித்தனம். செய்யக்கூடிய செயலால் வரும் அனுகூலத்தைவிட நம் முயற்சி அதிகம் என்றால், அந்தச் செயலைச் செய்யாமல் இருப்பதே நல்லது.
10. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
சிலர் தாங்கள் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பின் பொறியாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அதன்பின் மாவட்ட ஆட்சியாராக வந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள். இப்படியாக எதைப் பார்த்தாலும் ஆசைப்படுபவர்கள் ஒன்றைக் கூட ஒழுங்காகச் செய்யமாட்டார்கள்.
11. கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது.
ஒரு சிலர் இருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து ஊதாரித்தனமாக நிறைய பணம் செலவு செய்வார்கள். ஆனால், தன் உறவினர்களுக்கு ஒரு பத்து ரூபாய்க்கு செலவு செய்ய யோசிப்பார்கள். மேலும் கணக்கு எழுதும்போது ஐந்து பத்து துண்டு விழுந்தால், யாரோ திருடியிருக்கிறார்கள் என்று ஆராய்வார்கள். தாங்கள் சம்பாதித்தது வீணாகிறேதே என்று புலம்புவார்கள். ஆனால், தாங்கள் செய்யும் ஊதாரிச் செலவைப் பற்றிக் கவலைப் படமாட்டார்கள்.
12. குடலேத்தம்னு தெரியாம கோடி பணம் செலவு செய்த கதையாட்டம்
நோயை இனம்கண்டு வைத்தியம் செய்யாமல் கண்டபடி வைத்தியம் செய்து பணம் செலவு செய்வதைக் குறிப்பிட இதனைப் பயன்படுத்துவார்கள்.
13. அறிவாளிக்கு ஆயிரம் கண்; முட்டாளுக்கு ஒரே கண்.
அறிவாளிகள் எதைச் செய்தாலும் அதனால் வரும் பிரச்சினைகள் நன்மைகள் அனைத்தையும் ஆராய்வர். அந்தச் செயலை முடிக்க முடியாமல் போனால் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கண்டுபிடித்து முடிப்பர். ஆனால், இந்த முட்டாள்கள் முடியவில்லை என்று உட்கார்ந்துவிடுவார்கள்.
14. ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் வரக் கூடாது.
கோபம் ஒரு கொடிய நோய். கோபத்தால் ஒருவன் தன் நண்பர்களை இழக்கிறான். உறவினர்களின் நெருக்கத்தை இழக்கிறான். ஆதலால், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு கோபத்தைக் குறைக்க வேண்டும்.
15. அண்டையில் காவேரி, முழுகமாட்டாதவ மூதேவி.
பக்கத்திலேயே காவேரி இருந்தாலும் குளிக்காமல் அசுத்தமாக இருப்பவள் மூதேவிதானே. சுத்த பத்தம் முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.
தொடரும்….
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
குருமா\இந்த வார்த்தையெல்லாம் பழமொழியில் சேருமா..#டவுட்டு.
உங்கள் சந்தேகம் சரிதான். அந்த பழமொழியில் வேறு ஏதாவது வார்த்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், இப்போது குருமா என்றுதான் பயன்படுத்துகிறார்கள். அந்த பழமொழியை நவீன பழமொழி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான பதிவு.மிகவும் நன்று. தொடருங்கள்.
வருகைக்கு நன்றி அண்ணே!