நா நெகிழ் வாக்கியங்கள் (Tamil Tongue Twisters)

நா-நெகிழ்-பயிற்சி
Tamil Tongue Twisters Practice

நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாகப் படித்துப் பழகுங்கள்.

நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை.

உங்களுக்குத் தெரிந்தவை

பின் வருவனவை நீங்கள் கேள்விப்பட்டவைகளாகவோ அல்லது சிறு வயதில் படித்தவைகளாகவோ இருக்கலாம்.

  1. இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.
  2. கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கைக் குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளத்தில் குதித்தது.
  3. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்குப் பைத்தியம் பிடிச்சா எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியர் வந்து அந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு?
  4. காக்கா காக்கான்னு கத்திறதினால காக்கான்னு பேரு வந்ததா?
    காக்கான்னு பேரு வந்ததினால காக்கா காக்கான்னு கத்துதா?
  5. கிழட்டுக் கிழவன் வியாழக் கிழமை சடு குடு விளையாடக் குடு குடு வென ஓடி வாழைப் பழத் தோலில் வழுக்கி விழுந்தான்.
  6. கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்டக் கட்ட முட்ட.
  7. ஓடற நரியில ஒரு நரி கிழ நரி உருளுது புரளுது.
  8. பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.
  9. பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
  10. ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.

என்னுடையவை

எல்லாருக்கும் தெரிந்ததை கூறுவதில் என்ன பயன். எனவே, நானே யோசித்து சில நா நெகிழ் வாக்கியங்களை எழுதியிருக்கிறேன். அவைகளையும் படித்துப் பழகுங்கள்.

  1. தேவியும் கோபியும் கிளைகளில் தாவி, ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினார்கள்.
  2. சொல்லவும் மெல்லவும் முடியாமல் அள்ளவும் மொள்ளவும் தெரியாமல் கொட்டவும் வெட்டவும் பிடிக்காமல் சட்டம் பேசின சிட்டைப் பார்த்துச் சிரித்த மொட்டையைக் காண மொட்டை மாடிக்குச் சென்றேன்.
  3. கூட்டுக் களவாணிகள் கூட்டமாகக் கோட்டுப் போட்டு ஏட்டு வீட்டில் திறந்த பூட்டை பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்.
  4. மெத்தையிலிருந்து விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாகி கைப்பைய்யும் பொத்தையாகி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான் அத்தை மகன் சொத்தைப் பல் முத்தையன்.
  5. பக்தியில் முத்தின பக்தன் பக்தர்களைப் பத்துப் பத்துப் பேராகப் பந்திக்கு அழைத்தான்.
  6. சொல்லச் சொல்லச் சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்லச் சொந்தங்களும் எதுவும் இல்ல.
  7. வியாழக்கிழமை வாழப்பாடிக்கு வாழச் சென்றவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தான்.
  8. ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.
  9. சுத்தத்தை மறந்து சொந்தத்தைத் துறந்து பந்தத்திடம் இரந்து பணத்தைக் கரந்து பாதி வாழ்கையில் பரதேசியானான்.
  10. ஒரு கை கொடுக்க, மறு கை எடுக்க, பிற கை மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்.

4 Comments

  1. Asokan Vai மே 28, 2014
  2. Stuard மார்ச் 23, 2016

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.