மனிதர்களின் பண்பு நலன்கள் 1

மனிதர்களின் பண்பு நலன்கள்

மனம்: இன்னைக்கு என்ன இடுகை போடலாம்?

நான்: சும்மா இருடா டேய்! தூக்கமா வருது. நாளைக்குப் பாத்துக்கலாம்.

மனம்: இருபது நாளா இததான்டா சொல்ற! இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு இடுகை இட்டே ஆகணும்.

நான்: சரி, என்ன தலைப்பு.

மனம்: தெரியலையே! அத நீதான் யோசிக்கணும்.

நான்: பலதடவ யோசிச்சிட்டேன். ஒண்ணும் தோனல. நான் தூங்கறேன்.

மனம்: டேய்! ஒன்ன மாதிரி ஒரு சோம்பேறிய பார்த்தேதே இல்லடா! சோம்பேறியிலும் சோம்பேறி, கடஞ்செடுத்த சோம்பேறி.

நான்: என்ன? சோம்பேறியிலும் சோம்பேறி, கடஞ்செடுத்த சோம்பேறி? ஏ! எனக்குத் தலைப்பு கெடச்சிடுச்சி!

மனம்: என்ன தலைப்பு?

நான்: கடஞ்செடுத்த சோம்பேறி ன்னு சொன்னீயே. இந்த மாதிரி மனிதர்களின் பண்புகளை வச்சி ஒரு இடுகை போட்டால்?

மனம்: சுவாரசியமாக இருக்குமே? சரி, ஒங்கிட்ட பேசிப் பேசி எனக்குக் களைப்பாயிடுச்சி. நான் தூங்கறேன். நீ தொடரு. எல்லாம் காத்திக்கிட்டு இருக்காங்க.

நான்: சரி.

அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நாம் மனிதர்களின் பண்புகளைப் பார்க்கப் போகிறோம். அதாவது, அவர்களின் சுபாவங்கள், குண நலன்கள், அவர்கள் செய்யும் செயல்கள் மற்றும் அவர்களின் உருவ அமைப்பைப் பற்றிக் குறிப்பிட நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைப் பார்க்கப் போகிறோம்.

கீழுள்ள வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைப் பிறரைப் பற்றிக் கூறும்போது பயன்படுத்துவோம்.

Business people with leader

நல்ல குணங்கள்

பொழைக்கத் தெரிஞ்ச புள்ள

பேசும் பேச்சில், செய்யும் செயலில் எப்போதும் ஒரு வியாபார நோக்கோடு, தனக்கு ஆதாயத்தோடு செய்பவர்கள் அல்லது ஆதாயம் கிடைக்காத ஒரு வேலையில் கூட முயன்று ஆதாயம் பெறுபவர்கள்.

நல்லவன்

நல்ல குணங்களைக் கொண்டவன்.

கலகலப்பானவர்கள்

இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரும் சிரித்துக்கொண்டே இருப்பர். இவர்கள் மற்றவர்களைத் தங்களது ஒவ்வொரு அசைவினாலும் பேச்சினாலும் சந்தோசப்படுத்துபவர்கள்.

நேர்மறையானவன்

எப்போதும் நல்லதையை நினைப்பவன்.

கைராசிக்காரன்

இவன் மற்றவர்களுக்காக ஒரு செயலைத் தொடங்கி வைத்தால் அது கண்டிப்பாக வெற்றியடையும்.

கைதேர்ந்தவன்

இவன் ஒரு வேலையை எப்படி செய்தால் எளிதாக முடிக்கலாம் என்று தெரிந்தவன்.

உழைப்பாளி

உண்மையாக உழைப்பவன்.

படைப்பாளி

புதியதாக ஒன்றை அல்லது அருமையான படைப்புகளை உருவாக்குபவன்.

கொடையாளி

பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட வள்ளல்.

லட்சியவாதி

வாழ்கையில் ஒரு குறிக்கோளோடு இருப்பவன்.

பொறுமைசாலி

எந்தவொரு பிரச்சினையையும் நிதானமாகக் கையாளுபவன்.

கெட்ட குணங்கள்

கெட்டவன்

கெட்ட குணங்களைக் கொண்டவன்.

தீவிரவாதி

ஒரு கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிப்பவன். கண்டிப்பாக எதையுமே அளவுக்கு அதிகமாகச் செய்வது என்பது கெட்ட குணம்தான்.

கொலை காரன்

கொலை செய்பவன் மட்டும் கொலைகாரன் அல்ல. மற்றவர்களின் மனதை மிகவும் காயப்படுத்துபவனும் கொலைகாரன்தான்.

கொள்ளைக் காரன்

அதிகமாக விலை வைத்துப் பொருட்களை விற்பவவன் அல்லது அதிகமாக வட்டி வாங்குபவன், பிறர் உடமையை அபகரிப்பவன்.

மடையன்

எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவன். அதாவது புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உடையவன்.

முட்டாள்

சுத்தமாக அறிவே இல்லாதவன். எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்ற புத்தி இல்லாதவர்களை முட்டாள் என்று கூறுவோம்.

மூதேவி

எப்போதும் முகத்தில் ஒரு மலர்ச்சி இல்லாமல் இருப்பவர்கள், மூதேவிகள். அதாவது தரித்திரம் பிடித்த மூஞ்சி என்பார்களே, அதுதான். இவர்கள் முகத்தில் விழித்துவிட்டு சென்றாலே எந்தக் காரியமும் விளங்காது என்று கூறுவார்கள். சில சமயத்தில் தூங்கித் தூங்கி விழுபவர்களைக்கூட மூதேவி என்போம்.

பொறாமைக்காரன்

அடுத்தவர்கள் முன்னேற்றத்தைக்கண்டு வருத்தம் அடைபவன்.

மகடாள்

முட்டாள்களின் ஒரு வகை. அறிவு கொஞ்சம் இருக்கும். ஆனால் பயன்படுத்தமாட்டார்கள்.

தெக்கணாம்முட்டி

சமயோசித அறிவில்லாதவன். எப்போது எதைச் செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாமல் எதையாவது செய்து அவமானப்படுவான்.

சுயநலவாதி

எப்போதும் தன்னைப்பற்றியே நினைப்பவன்.

கலகக்காரன்

நண்பர்களிடையே கலகம் மூட்டி மகிழ்பவன்.

அழு மூஞ்சி

சின்னப் பிரச்சினை வந்தால் கூட அழுதுவிடுவார்கள். மற்றவர்களையும் சந்தோசம் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.

எதிர்மறையானவன்

எப்போதும் கெட்டதே நடப்பதாகவும் எதிர்காலத்திலும் நடக்கும் என்றும் நினைப்பவன்.

ஊர் சுத்தி

வீட்டிலேயே இருக்கமாட்டான். எப்போதும் எங்காவது வெட்டியாக அலைந்துகொண்டே இருப்பவன்.

வெத்து வேட்டு

தன்னிடம் இந்தத் திறமை இருக்கிறது அந்தத் திறமை இருக்கிறது என்று அலட்டிக்கொள்வார்கள். ஆனால், ஒன்றிற்கும் லாயக்கு இல்லாதவர்கள்.

வெகுளி

ஊர் உலகம் தெரியாதவன்.

ஏமாளி

அனைவரிடமும் ஏமாறுபவன்.

முரடன்

இவன் எதையும் ஒரு முரட்டுத்தனமாகக் கையாளுபவன். கோபப்பட்டாலும் இவன் கொஞ்சம் நல்லவன். திருத்திவிடலாம்.

மூர்க்கன்

வர்மம் வைராக்கியம் போன்ற கெட்ட குணங்களைக் கொண்டவன். இவனைத் திருத்தவே முடியாது.

சிடு மூஞ்சி

எப்போதும் ஒரு எரிச்சலோடே பேசுபவர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.

பகட்டுக்காரன்

தகுதிக்கு மீறிச் செலவு செய்பவன் அல்லது மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற உதவி செய்பவன்.

கோழை

வாழ்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவன்.

படு பாவி

எதற்கும் அஞ்சாத எல்லா கெட்ட குணங்களின் மொத்த உருவமாய் இருப்பவன்.

சிலேடைக்காரன்

தன் உண்மையான குணத்தை மறைத்து மற்றவர்களிடம் நல்லவன் போன்று நடிப்பவன்.

சோப்ளாங்கி

சோம்பேறி. சின்ன வேலை செய்வதற்கே அலுத்துக் கொள்பவன்.

துரோகி

நம்பியவர்களை ஏமாற்றுபவன்.

நய வஞ்சகன்

நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் துரோகி. துரோகம் செய்வது அவன் பிறவிக்குணம்.

ஏமாத்துக்காரன்

நீதி தவறி மற்றவர்களை ஏமாற்றுபவன்.

நோஞ்சான்

உடல் அளவில் மெலிந்து, சத்து இல்லாமல் எப்போதும் சோம்பலோடு இருப்பவன்.

சோணங்கி

இவன் நாம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது எங்காவது கவனத்தை வைத்திருப்பான், நாம் சொல்வதை வேறு விதமாகப் புரிந்துகொள்வான் அல்லது நாம் சொல்வது அவன் மூளைக்கு போய்ச் சேராது.

பச்சோந்தி

நேரம் மற்றும் ஆட்களுக்கு ஏற்றாற் போன்று தன் குணத்தை மாற்றிக்கொள்பவன்.

உதவாக்கரை

இவனால் யாருக்கும் எந்தப் பிரையோஜனமும் இல்லை. ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லை.

செய்யும் செயலை வைத்துக் கூறப்படும் பண்புகள்

பலே கில்லாடி

ஒரு செயலை மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட விதத்தில் நேர்த்தியாக முடிப்பவன்.

வாய் சொல் வீரன்

பேச்சிலேயே மற்றவர்களை வென்றுவிடுவான். இவனுடன் சரிக்கு சரி பேச முடியாது. ஏதாவது பேசி நம் வாயை அடைத்துவிடுவான்.

ரெட்ட வேடம்

ஒருவரிடம் ஒரு குணத்தை வெளிப்படுத்துவது மற்றவரிடம் வேறுவிதமாக நடந்துகொள்வது. இப்படியாகத் தன் வேலை நடக்க நேரத்திற்கு ஏற்றவாறு மாறுபர்களை ரெட்டை வேடம் போடுபவர்கள் என்போம்.

மூஞ்சால காட்டுறான்

ஒருவன் யாரையாவது பிடிக்கவில்லையென்றால், தன்னிடம் பேசும்போது அவர்களை அவமானப்படுத்தும் விதமாகப் பேசுவான். அதுதான் மூஞ்சால காட்டுவது.

ரோசக்காரன்

சூடு, சுரணை உடையவன். யாராவது ‘ச்சி’ என்று ஒரு வார்த்தை சொன்னால்கூட அதையே படிக்கல்லாக வைத்துக்கொண்டு வாழ்கையில் முன்னேறுவான்.

படாத பாடு படுத்தறான் (அ) பாடா படுத்தறான்

மற்றவர்களுக்கு எப்போதும் எரிச்சலூட்டுபவர்கள், இடைஞ்சல் கொடுப்பவர்கள் மற்றும் இடையூறு செய்பவர்களை இப்படி கூறலாம்.

கள்ளம் கபடில்லாத மனசு

எதையும் மனதில் ஒளித்து வைக்கமாட்டார்கள். பேச்சிலும் செயலிலும் உண்மை கொண்டவர்களைக் கள்ளம் கபடில்லாத மனம் கொண்டவர்கள் என்போம்.

மூச்சி விடமாட்டான்

ஏதாவது ரகசியம் சொன்னால் அதைக் காப்பாற்றுவான். ஒரு வார்த்தை கூட யாரிடமும் உளறமாட்டான்.

தங்க மனசு

தங்கம் போன்று விலை மதிப்பற்ற நல்ல குணங்கள் கொண்ட மனதை உடையவர்கள்.

சுந்து சூயல் செய்பவன்

நேர்மை இல்லாதவர்கள். உதாரணத்திற்கு தவறாக வரவுச் செலவுக் கணக்கு எழுதிக் காசைத் திருடுபவர்கள்.

பேச்சுதான் வாழப்பழம்

ஒரு சிலர் பேசியே காரியத்தை முடிப்பார்கள். அவர்களிடம் ஒரு திறமையும் இருக்காது. பேசும் திறன் மட்டும் இல்லையென்றால் அவர்கள் வீண். இப்படிப்பட்டவர்களுக்கு பேச்சுதான் வாழைப்பழம்.

இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்து இருக்கிறான்

எந்தப் பிரச்சினை நடந்தாலும் எருமை மாடுமேல் மழைப் பெய்ததுபோல அசைவற்று இருப்பவனை இப்படி கூறலாம்.

உருவத்தினை வைத்துக் கூறப்படும் பண்புகள்

ஒருவரின் உருவ அமைப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது உருவக்கேலி செய்வது மிகவும் தவறு என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். இது, இந்த இந்த வார்த்தைகள் இருக்கின்றன என்பதை பதிவுசெய்யும் நோக்கத்திற்காக எழுதப்பட்டதேயன்றி வேறு எந்த நோக்கமுமில்லை.

கரி சட்டி

கரி பிடித்த சட்டியைப் போன்று நிறத்தில் உள்ளவர்கள். நாம் வழக்கமாகப் பலர் “அவன் கரி சட்டி போல இருக்கான்” என்ற கிண்டல்களை கேள்விப்பட்டிருப்போம். அது மிகவும் தவறான செயல்.

அட்ட கருப்பு

அட்டை பூச்சி போன்று கருப்பாய் உள்ளவர்கள்.

பலசாலி

மிகவும் வலிமை வாய்ந்தவன்.

கண்ணங் கரேரென்று

உதாரணம்: “அவன், கண்ணங் கரேர்னு இருக்கான்டா”.

அதாவது கண்ணின் கரு விழியைப் போலக் கருப்பாக இருப்பவர்கள்.

வெள்ளை வெளேரென்று

மிகவும் வெள்ளை நிற தோல் கொண்டவர்கள்.

செக்கச் செவேரென்று

மிகவும் சிவப்பாக, பள பளப்பாக அழகாக இருப்பவர்களை “அவன் செக்கச் செவேர்னு இருக்கான்” என்று கூறுவோம்.

குள்ள கத்திரிக்கா

உயரத்தில் குறைவாக இருப்பவர்கள்.

குள்ள வாத்து

இவர்களும் உயரத்தில் குறைவாக உள்ளவர்கள்தான்.

பனை மரம்

உயரத்தில் வளர்ந்து கெட்டவர்கள்.

பொதப் பன்றி

உருவத்தில் பெரியவர்கள். அதாவது தொப்பை வைத்துக்கொண்டு மிகப் பருமனாக இருப்பவர்கள்.

வாட்டஞ்ச் சாட்டமா

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் இவர்கள் அடித்தால் அந்த அடி வாட்டமாக விழும். இவர்களைப் பார்த்தாலே ஒரு மதிப்பு அல்லது பயம் வரும்.

செக்கொலக்கையாட்டம்

மிகவும் உயரமாக மற்றும் ஒல்லியாகச் செக்கு உலக்கைப் போன்று இருப்பவர்களை இப்படிக் கூறலாம்.

செப்பு செலையாட்டம்

செதுக்கி வைத்த சிலையைப் போல் மிகவும் அழகாக அனைத்து நளினங்களுடன் இருக்கும் பெண்களைக் குறிப்பிட செப்புச் சிலையாட்டம் என்று கூறுவோம்.

குத்து விளக்காட்டம்

பளபளப்பாக முகப்பிரகாசமாக இருப்பவர்களைக் குத்துவிளக்காட்டம் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

குணநலன்களின் மிகுதி

ஒருவர் ஒரு குறிப்பிட்ட பண்பை அதிகமாகக் கொண்டிருந்தால் பின்வரும் சொற்றொடர்களைக் குறிப்பிடுவோம்.

கடஞ்செடுத்த சோம்பேறி

உலகத்தில் இப்படியொரு சோம்பேறியைப் பார்க்கவே முடியாது. அதுதான் இதன் அர்த்தம்.

சுத்த சோம்பேறி

ஒரு சில விஷயத்தில் கூடச் சுறுசுறுப்பாக இருக்கமாட்டார்கள். எப்போதுமே சோம்பேறிகளாக இருப்பவர்களை இப்படி கூறலாம்.

வடிகட்டின முட்டாள்

தேநீரை வடிகட்டினால் வடிகட்டியில் தூள் நிற்கும். அந்த அளவுக்கு ஒன்னுத்துக்கும் வேலைக்காகாத முட்டாள்களை இப்படி கூப்பிடுவார்கள்.

உம்மணா மூஞ்சி

எப்போதும் யாரிடமும் பேசாமல் எதையோ பறிகொடுத்தவர்கள் போன்று இருப்பவர்கள்.

ஊமைக் கோட்டான்

இவர்களும் உம்மணா மூஞ்சிகள்தான். ஆனால், மனதில் சூழ்ச்சமம் உள்ளவர்கள். அமைதியாக இருப்பதைப் போன்று நடித்து மற்றவர்களைச் சமயம் பார்த்துக் காலை வாரி விடுவார்கள்.

பரம கஞ்சன்

பிறப்பிலிருந்தே கஞ்சன். இவனைத் திருத்தவே முடியாது.

எச்ச கையால காக்கா ஓட்டாதவன்

மிகவும் கஞ்சன்.

பயந்தாங் கொள்ளி

எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குபவர்கள்.

வீராதி வீரன்

வீரனுக்கெல்லாம் வீரன். அவனை அடித்துக்கொள்ள இந்த உலகத்தில் யாருமே இல்லை.

சூராதி சூரன்

எந்தச் செயலிலும் உஷாராகச் செயல்படுபவன். இவனை ஏமாற்றுவது கடினம்.

ராஜாதி ராஜன்

ராஜாவுக்கெல்லாம் ராஜா.

மேலும் பல பண்புகள் உள்ளன. அவற்றை எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், நான்தான் கடஞ்செடுத்த சோம்பேறியாச்சே!

உங்களுக்குத் தெரிந்த பண்புகள் மற்றும் உங்களிடம் என்ன பண்பு இருக்கிறது என்பதை குறிப்பிடலாம்.

சரி, நன்றி. வருகிறேன்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

9 Comments

  1. Ramani S ஜூன் 7, 2013
  2. indrayavanam.blogspot.com ஜூன் 7, 2013
  3. G.Suresh ஜூன் 7, 2013
  4. rrselvam ஏப்ரல் 8, 2015

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading