பகுதி-4 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும்.
1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை.
நமக்கே எது சரி எது தவறு என்ற அறிவு இருக்க வேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்க வேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் நம்மை இப்படித்தான் திட்டுவார்கள்.
2. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
“பயிர் பார்க்காமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது” என்றும் கூறுவர்.
பயிர் வைத்துவிட்டால் மட்டும் வளர்ந்துவிடாது; அதனை அடிக்கடி பார்த்துத் தேவையானவற்றைச் செய்து பராமரிக்க வேண்டும்.
அடிக்கடி உறவினர்களைச் சென்று பார்த்துக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கும் நமக்கும் ஒரு பிணைப்பிருக்கும். இல்லையென்றால், ஒரு சுப நிகழ்வுகளுக்குக் கூட நம்மை அழைக்க மறந்துவிடுவார்கள். அல்லது இப்படியும் கூறலாம். ஒரு சுப நிகழ்வுக்கு நம்மை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அழைத்தார்கள். ஆனால் நாம் போகவில்லையென்றால் அவர்களுக்கும் நமக்குமான உறவு துண்டிக்கப்படும்.
அதுபோல, கடனைக் கொடுத்தவர்கள் வாங்கியவர்களிடம் அடிக்கடி கேட்டால்தான் அவர்களுக்கும் திருப்பித் தர வேண்டும் என்று எண்ணம் வரும். இல்லையென்றால் நம்மை ஏமாற்றத்தான் முயல்வார்கள்.
3. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
ஒருவன் தனது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, கடன் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் அவன்தான் உலகத்திலேயே மகிழ்வாக வாழும் மனிதன்.
4. காலம் போகும், வார்த்தை நிற்கும்.
நாம் பேசும் வார்த்தைகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்துப் பேச வேண்டும். ஒருவரின் மனதை புண்படுத்துமாறு பேசினால், என்னதான் அவர் நம்மை மன்னித்தாலும், நாம் பேசியது அவர் மனதில் ஆறா வடுவாக இருக்கும்.
5. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சர்க்கரையை சாப்பிட்டால்தானே தித்திக்கும். அதற்குக் காசு வேண்டாமா? வாழ்க்கைக்கு எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்தக் கனவை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
சிலர் ஒருவருக்காக எல்லாமும் செய்வேன் என்று சர்க்கரைப் போன்று பேசுவார்கள். ஆனால், ஒரு துரும்பைக்கூட அசைக்கமாட்டார்கள். இந்தப் பிதற்றல்காரர்கள் வாயால் வடை சுடுவதால் என்ன பலன்? சர்க்கரை என்றால் திதிக்குமா?
6. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
மேற்கண்ட பழமொழியை ஒத்திருப்பதைப் போன்று தோன்றினாலும், சிறிது பொருள் மாறுபடுகிறது. நமது கையில் என்ன இருக்கிறதோ அதுதான் நமக்கு உதவுமேயொழிய, கனவில் கண்டதெல்லாம் நமக்குப் பயன்படாது.
7. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.
தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் கொள்கையில் மாறமாட்டார்கள். நல்லது மட்டுமே செய்வார்கள்.
8. துணை போனாலும் பிணை போகாதே.
ஒருவருக்கு துணையாக அவரை ஊக்குவிக்கலாமே தவிர, அவருக்குப் பதிலாக நாம் எதையும் செய்யக் கூடாது. உதாரணத்திற்கு, சிலர் தங்கள் நண்பன் வாங்கிய கடனுக்காகப் பொறுப்பு கையெழுத்துப் போட்டுவிட்டு, நண்பன் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியவில்லையென்றால், தாங்களே அதனை அடைக்கும் சூழ்நிலைக்கு வந்து அல்லல் படுவதைப் பார்த்திருக்கிறோம்.
9. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
அதாவது “பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல தொங்கிதானே ஆக வேண்டும்!” என்பதற்கு இணையான பழமொழி. நாம் செய்த வினைக்கான பயனை அடைந்துதான் ஆக வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றாற்போன்றும் சில காரியங்களைச் செய்துதான் தீர வேண்டும்.
10. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
பணக்காரர்கள் தாம் தூம் என்று செலவு செய்வார்கள். எவ்வளவு நாளைக்கு? எல்லாம் அந்தப் பணம் உள்ளவரை மட்டும்தான். சிலர், தங்கள் அருகில் நண்பர்கள் பக்கபலமாக இருந்தால், ஒரு பிரச்சினை வரும்போது தங்கள் மேலே தவறு இருந்தாலும் கூட, நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மிகவும் அதிகமாகப் பேசித் தங்களது வீரத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதுவே அவர்கள் தனியாக இருந்தால், பயந்துபோய் ஓடிவிடுவார்கள்.
11. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
பயிருள்ள கொல்லையைத்தான் விலங்குகள் மேயாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு அசம்பாவிதத்தால் அழிந்த கொல்லையில் எந்த விலங்கு மேய்ந்தாலும் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. ஒரு எடுத்துக்காட்டு – ஒரு நல்ல குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அனைத்தையும் இழந்து ஊரிடம் மிகுந்த அவப்பெயர் பெற்று வாழ்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குடும்பந்தான் தற்போது அழிந்த கொள்ளை. அதற்கு மேலும் ஒரு அவப்பெயர் வருகிறதென்றால் அதைத் தடுத்து நிறுத்தினால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது? ஏற்கனவே அவர்கள் பட்ட அவமானங்கள் இல்லை என்றாகிவிடுமா? அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமான பழமொழிதான் இது.
12. மான் என்று சொன்னால் புள்ளியா குறைந்துவிடும்?
நண்பர்கள் ஒரு காரணத்திற்காகக் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறுகிறார்கள். ஆனால், ஒருவன் மட்டும் எதுவும் பேசாமலிருந்தால் அவனைப் பார்த்து நண்பர்கள் “மானுன்னா புள்ளியா குறஞ்சி போயிடும்? வாயைத் திறந்து பேசுடா.” என்று கூறுவார்கள்.
13. கத்தரிக்காய் முத்தினால் கடைதெருவுக்கு வந்துதானே ஆகனும்.
அதாவது, எந்த ஒரு விசயத்தையும் நீண்ட நாளைக்கு மறைத்து வைக்க முடியாது. எப்பேற்பட்ட ரகசியமாக இருந்தாலும் ஒருநாள் அது வெளிப்பட்டுவிடும்.
14. புளி மலையில விளைந்தாலும் உரலில் குத்து பட்டுதானே ஆக வேண்டும்.
புளியை கொட்டையை எடுக்க உரலில் போட்டுக் குத்துவர்கள். மலையில் விளைந்தாலும் இதற்குத் தப்ப முடியாது. அதுபோல, என்னதான் பெரிய பணக்காரனாக இருந்தாலும் மனிதர்களுக்கான வேதனைகள், சோதனைகள் மற்றும் சிரமங்களை அனுபவித்துதான் தீர வேண்டும்.
15. அங்கிட்டும் இருப்பான் இங்கிட்டும் இருப்பான், ஆக்கர சோத்துல பங்கும் கேப்பான்.
சிலர் பச்சோந்திபோல் அனைவரிடமும் அவரவர்களுக்கு ஏற்றாற் போன்று பேசிக்கொண்டு அவர்களது குடியைக் கெடுப்பார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது.
தொடரும்….
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
அனைத்து விளக்கங்களும் அருமை…
மிகவும் ரசித்தது : 5 & 10
தொடர வாழ்த்துக்கள்…
“தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுற.. என்று வழக்கு உள்ளது… Please give the real proverb and meaning
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது என்பதன் அர்த்தம்.
பட்டறிவு (அனுபவ அறிவு) இல்லாமல் ஆதிக்கம் செய்வது. அதாவது ஒரு குறுகிய வட்டத்திற்குள் நாட்டாமை செய்வது.