சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3

proverbs-பழமொழிகள்

பகுதி-2 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 

1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.

ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது.

2. மத்தளத்துக்கு இரு புறமும் அடி.

வாழ்கையில் எல்லாவிதங்களிலும் கஷ்டப்படுபர்களை சுட்டும் வகையில் இந்தப் பழமொழியைக் கூறுவார்கள். உதாரணமாக, ஒருவீட்டில் மனைவியிடமும் அம்மாவிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆண்போல்.

3. நொல்லயன் கொல்லில அள்ளாதவன் பாக்கி.

நொல்லயன் என்றால் கண் தெரியாதவன் என்பது நமக்குத் தெரியும். அவன் கொல்லியில் (அதாவது கொல்லை என்பதை கொல்லி என்கிறார்கள். வயக்காடு என்றும் கூறுவார்கள்.) பயிரிட்டால் அவைகளை மற்றவர்கள் கண்டிப்பாக அபகரிக்கத்தான் பார்ப்பார்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் கண் தெரியாதே! ஒருவரும் பாக்கி இல்லாமல் அவனை ஏமாற்ற நினைப்பார்கள். நாமும் கண் தெரியாதவர்களைப் போன்று வெகுளியாக இருந்தால் அனைவரும் நம்மை ஏமாற்றதான் முயல்வார்கள்.

4. பொது பொண்டாட்டி புழுத்து செத்தா, என் பொண்டாட்டி வீங்கிச் செத்தா.

ஒரு நான்கு பேருக்குப் பொதுவாக ஒரு மனைவி இருந்தால் யாராவது ஒருவர் அவளைக் கவனிப்பார்கள் என்று நால்வருமே கவனிக்கமாட்டார்கள். அதனால் அவள் கவனிப்பாரின்றி இறப்பாள். அதுதான் ‘பொது பொண்டாட்டி புழுத்து செத்தா’ என்பதன் பொருள். அடுத்தவங்களைப் பார்த்துப் பார்த்துப் பொறாமைப்பட்டே, நலிந்து போவதை பழமொழியின் இரண்டாம் பகுதி உணர்த்துகிறது.

5. பக்கத்து இலைக்கேன் பாயாசம் கேக்கற?

அடுத்தவர்களுக்காகப் பரிந்து பேசி, பிறரிடம் பிரச்சினைக்குச் செல்பவர்களை இந்தப் பழமொழி வைத்துத் திட்டுவோம். அதாவது, ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றால், நமக்குப் பாயாசம் இன்னும் வரவில்லையென்று பரிமாறுபவரிடம் கேட்கலாம். ஆனால், அருகில் அமர்ந்து உண்பவருக்காகக் கேட்பது என்பது நம் வேலை இல்லை. அவருக்கு வாய் இருக்கிறது, அவர் கேட்டுக்கொள்வார். அதுபோலதான் வாழ்க்கையும்.

6. குடிக்கக் கூழு, கொப்பளிக்கப் பன்னீரா?

ஏழ்மையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கு மீறிச் செலவு செய்தால் அல்லது ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டால் இந்தப் பழமொழியைக் கூறுவோம்.

7. தனக்கே தகராறாம், தம்பிக்குத் தயிர் சோறாம்.

“தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்” என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை இந்தப் பழமொழி குறிப்பிடுகிறது. அதாவது, உதவி செய்யக்கூட நாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். மிகவும் ஏழ்மையானவர்கள் பிறருக்கு உதவி செய்ய என்னும்போது இப்படித்தான் சமுதாயம் அவர்களைக் கேலி செய்கிறது.

8. கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சி.

ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத புத்தி கோணிய ஒருவன் (கோணையன்) கிழித்த ஒரு துணி கோமணமாகப் பயன்படுத்த உதவியது. அப்படியென்றால் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது போல ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைக்கப் படுபவர்களால் கூட நன்மை இருக்கும்.

9. அள்ளாம குறையாது, சொல்லாம வராது.

எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது. குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்?

10. மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.

மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாகக் கூறுகிறார்கள்.

11. உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி.

சிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு தின்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன் ‘உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி’ என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி தின்பண்டத்தையும் அவனே தின்றுவிடுவான்.

12. வெக்கம் வேணாங்குது, விருப்பம் கொண்டாங்குது.

ஒரு வீட்டிற்கு செல்கிறோம். அவர்கள் நமக்குச் சாப்பிட ஒரு பலகாரம் கொடுக்கிறார்கள். ஆனால், நாம் அதனை வாங்கி சாப்பிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வாங்க மறுத்துவிடுகிறோம். ஆனால், நமது மனதிற்குள் அதைச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு விருப்பம் இருக்கும். அதுதான் ‘வெக்கம் வேண்டாம் என்கிறது, விருப்பம் கொண்டுவா என்கிறது’ என்பதின் அர்த்தம்.

13. ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், ஊட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன்.

ஒரு சிலர் இருக்கிறார்கள். மற்றவர்களுடைய நன் மதிப்பைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஊருக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். ஆனால், வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைக் கடைக்கண்ணால் கூடப் பார்க்க விரும்பவும் மாட்டார்கள். இவர்கள் மனக்குரல்தான் இந்தப் பழமொழி.

14. ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்.

தன்னிடம் உள்ள தவற்றை ஒத்துக்கொள்ளாமல் சூழ்நிலைகள் மீதோ அல்லது அடுத்தவர்கள் மீதோ பழி போடுபவர்களை இப்படி கூறலாம்.

15. வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா செலவுல வச்சிக்க.

வாழ்கையில் நமக்குக் கிடைப்பது இலாபம் என்று வைத்துக்கொள்வோம். கிடைக்காததை அது நமக்கு இல்லையென்ற ஒரு நன் மனதுடன் கவலையற்று இருப்போம்.

தொடரும்…

பகுதி-4 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 

2 Comments

  1. palani balaraman அக்டோபர் 24, 2017

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.