பகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்.
1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்.
முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா அல்லது அதன் மருத்துவ பலன்களைத்தான் பெறமுடியுமா? அதுபோல, வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறும்போது அதைக் கேட்பதும் கடைபிடிப்பதும் நமக்குச் சிரமமாக இருந்தாலும், அதனைக் கடைபிடிப்பதால் நாம் அனுகூலம் அடையும்போது பெரியவர்கள் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்வோம்.
2. எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்.
தன்னைவிட பலம் (பண பலம், மன பலம் அல்லது உடல் பலம்) குறைந்தவர்களை நாம் வஞ்சித்தாலோ அல்லது ஏமாற்றினாலோ கடவுள் அவர்களுக்குச் சார்பாக இருந்து நம்மை வஞ்சிப்பார்.
3. சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த கட்டு சோறும் நிலைக்காது.
ஊருக்குப் போகும்போது நாம் உணவுப் பொட்டலம் எடுத்துச் செல்வோம். அது ஒரு வேளை அல்லது இரண்டு வேலைகளுக்குத்தான் வரும். அதுபோலப் பெரியவர்கள் கூறும் அறிவுரை அப்போது மட்டும்தான் கடைப்பிடிக்கப்படும். நமக்கென்று ஒரு சுயபுத்தி இருந்தால்தான் நாம் நல்வழி வாழ்வோம். யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததெல்லாம் நம் மனதில் நிரந்தரமாய் நிலைக்காது, கடைபிடிக்கவும் முடியாது.
4. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
எதையுமே ஒரு அளவோடுதான் செய்ய வேண்டும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. இரவும் பகலும் கண்விழித்துப் படித்தால் நம் உடல் நலன்தான் கெடும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது படிப்பு விஷயத்திலும் உண்மைதான். என் பள்ளி வயதில் சிலர் காலைக் கடனைக் கூட நிறைவேற்றாமல் படித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் போன்றோருக்குத்தான் இந்தப் பழமொழி சரியாகப் பொருந்தும்.
5. எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது?
எள், செக்கில் நன்கு மசியப்படும்போது தன்னிடம் உள்ள எண்ணெய் தன்னை விட்டுச் செல்கிறதே என்று அழுவது நியாயம். ஆனால், முறையாகப் பராமரிக்கப் படாததால் அதனோடு கலந்திருக்கும், எலியின் கழிவான ஒன்றிற்கும் உபயோகமில்லாத புழுக்கை அழுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதுபோல, ஒருவரின் காரியத்தில் அவசியமே இல்லாத மற்றொருவர் உடனிருக்கும்போது இந்தப் பழமொழியைச் சொல்லுவர். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் மணிக்கணக்காகக் காத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள்தான் எள். சம்மந்தமே இல்லாமல் உங்கள் நண்பன் உங்களுடனேயே காத்திருக்கிறான் என்றால் அவன்தான் எலிப்புழுக்கை.
6. உற்றார் திண்ணா புத்தா பூடும், ஊரார் திண்ணா பேரா விளங்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தேவையானவற்றை செய்தால் அவர்கள் வாழ்த்தமாட்டார்கள். ஏனென்றால் அது கடமை. அதுதான் புத்தா பூடும் என்பது. அதாவாது செய்தது வீண்தான் (தன் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் நினைப்பது). அதுவே ஊரில் உள்ளவர்களுக்குச் செய்தால் நல்ல பேர் விளங்கும். குடும்பத்தைப் பதறடித்துவிட்டு ஊருக்கு உபகாரம் செய்பவர்களின் மனப்போக்கு இப்படித்தான் இருக்கும். அதாவது பேர் வாங்க வேண்டும் என்ற பகட்டுப்போக்கு மட்டுமே இருக்கும். குடும்பத்தைக் கவனிக்கமாட்டார்கள். அவர்களின் அந்த மனப்போக்கு தவறு என்று சாடுவதுதான் இந்தப் பழமொழி. அதற்குத்தான் “தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்(charity begins at home)” என்று மற்றொரு பழமொழியைக் கூறி வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
7. அடிக்காம அழுவுற பொம்பலையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்ப முடியாது.
மழை பெய்யும்போது இடி இடித்தால் அது நிற்கப்போகிறது என்று அர்த்தம். ஆனால் சத்தம் இல்லாமல் பெய்யும் மழை எப்போது நிற்கும் எனச் சொல்ல முடியாது. அதுபோல, எதற்கெடுத்தாலும் (தொட்டாஞ்சிணிங்கி போல்) அழும் பெண்களுக்கு இந்தப் பழமொழி கூறப்படுகிறது.
8. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினதே சாக்கு.
எனக்குத் தெரிந்த ஒருவர் அடிக்கடி குடிப்பார். ஏன் என்று கேட்டால், “என் பொண்டாட்டி என்கிட்ட சண்ட போட்டுக்கிட்டே இருக்கிறா. அத மறக்கத்தான் தினமும் குடிக்கிறேன்.” என்பார். அவர்தான் நொண்டிக்குதிரை. அவர் ஒரு பெரிய குடிகாரர். எப்படியாவது குடிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு சாக்கு சொல்லிக் குடித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினதே சாக்கு’ என்பதின் அர்த்தம்.
9. மடியில கனம் இருந்தால்தானே மனசுல பயம் இருக்கும்.
நம்மில் ஏதேனும் குறை இருந்தால்தானே நாம் பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவோம்.
10. கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும்.
கடையில் ஒரு பொருள் வாங்க விலை கேட்கிறோம். கடைக்காரர் ஐம்பது ரூபாய் என்கிறார். நாம் இருபது ரூபாய் தருவதாகப் பேரம் பேசுவோம். கடைக்காரர் முப்பது ரூபாய்க்குத் தருவதாகக் கூறுவார். ஆனால், நாம் விடாப்பிடியாக இருபது ரூபாய் என்றே இருப்போம். ஆனால், அவர் அந்த விலை கட்டுப்படி ஆகாது என்று கூறி இருபத்தைந்து ரூபாய்க்குத் தருவதாக ஒத்துக்கொள்வார். நாமும் ஒரு வழியாகச் சம்மதிப்போம்.
கடைக்காரருக்கும் கண்டிப்பாக லாபமாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்தப் பொருளின் அடக்கவிலை இருபது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் (கொடுவாள் புடி) என்று கூறியதால்தான் இருபத்தைந்து ரூபாய்க்கு (அரிவாள் புடி) விற்றார். அவருக்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைத்தது. அதுவே முப்பது ரூபாய் என்று கூறியிருந்தால் அவர் நஷ்டத்திற்குதான் அந்தப் பொருளை விற்றிருக்க முடியும். இது நமக்கும் பொருந்தும். ஏனெனில், அந்தப் பொருளை நாம் முப்பது ரூபாய்க்கு கேட்டிருந்தால் முப்பத்தைந்து ரூபாய்க்குதான் கிடைத்திருக்கும்.
11. மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பித் திங்கணும்.
நமது நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றுகிறது. நோய்க்கு மருந்தே சாப்பிட்டாலும் நமக்கு நம்பிக்கையில்லையென்றால் நோய் தீராது. அதாவது மண்ணைக்கூட அதுதான் நோய்க்கான மருந்து என்று நம்பி சாப்பிட்டால் நோய் தீருமாம்.
12. வருவது வழியில நிக்காது, போறது போவாம இருக்காது.
நமக்குக் கிடைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பது கண்டிப்பாகக் கிடைக்கும். என்னதான் முயன்றாலும் நமக்கென்று தலையில் எழுதி வைக்காதது கண்டிப்பாகக் கிடைக்காது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதுதான் இந்தப் பழமொழியின் அர்த்தம்.
13. உணவே மருந்து, உடலே வைத்தியர்.
நாம் சாப்பிடும் சத்தான உணவுதான் நோய்க்கு மருந்து. நோய்க்கிருமிகளுக்கு ஏற்றாற் போன்று எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் நமது உடல்தான் வைத்தியர். சரிவிகித உணவு உண்டு மன திடத்துடன் வாழ்ந்தால் நம்மை நோய் அண்டாது.
14. பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
பிச்சையிட்டால் நமக்குப் புண்ணியம் என்று நினைக்கிறோம். ஆனால், பிச்சைக் கேட்பவர்கள் உண்மையாகவே வாழ்கையில் கஷ்டப்படுகிறார்களா என்று பார்த்துப் பிச்சையிட்டால்தான் நமக்குப் புண்ணியம். நல்ல வாழ்க்கை தரம் இருந்தும் சோம்பேறித்தனமாய் பிச்சையெடுப்பவர்களுக்கு பிச்சையிட்டு அவர்களை ஊக்குவிக்கக் கூடாது.
15. வயிற்று சோத்துக் காரனுக்கு வலம் வந்ததுதான் மிச்சம்.
மிக ஏழ்மையானவன் எவ்வளவுதான் அலைந்து திரிந்து உழைத்தாலும் தனது வயிற்றை நிரப்பிக்கொள்ளும் அளவுக்குத்தான் அவன் பொருள் ஈட்ட முடியும். சில நேரங்களில் அது கூட முடிவதில்லை. அவனால் தன் வாழ்க்கைக்கு என்று எதையும் மிச்சப்படுத்த இயலாது.
தொடரும்….
பகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
உங்களது இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது. உங்கள் இந்த சேவை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். வாள்க வழமுடன்