பேயாவது பிசாசாவது

பேயாவது! பிசாசாவது! நான் நம்பமாட்டேன் – சிறுகதை

மணி நன்கு படித்தவன். துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவன், தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். “விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ளலாம். எதற்காக வெளிநாட்டில் அடிமை போன்று வேலை செய்ய வேண்டும்?” என்பது அவனது எண்ணம். தன் குடும்ப கஷ்டத்துக்காகப் பத்து வருடங்களாகத் துபாயிலேயே இருந்தான். இப்போது அவன் குடும்பம் தலை தூக்கிவிட்டது. அதனால் இனி அவன் சிரமப்பட வேண்டியதில்லை. தன் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்தாலே குடும்பதிற்கு தேவையான வருமானம் ஈட்ட முடியும். எனவே, அவன் மீண்டும் வெளிநாடு செல்லப்போவதில்லை.

மணியின் அம்மா ‘ரசாத்தி’யும் அத்தை ‘சீத்தா’வும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஏண்டி, போன வாரம் அந்த வேணு செத்துட்டான் இல்ல! அது பேயாலதான் அப்படின்னு ஊரே பேசிக்குது!” ராசாத்தி கேட்டாள்.

“ஆமாம் அண்ணி. பேயப் பாத்து பயந்ததாலதான் அவன் செத்துட்டான்னு சொல்றாங்க!” சீத்தா கூறினாள்.

“அந்தக் கதைய கொஞ்சம் சொல்லேன்!”

“அதுவா அண்ணி, நம்ம தலைவரோட நெல் களம், செல்லான் ஓடைக்குப் பக்கத்துல இருக்குது. களத்துல அடிச்சி வச்ச நெல், எள் இவற்றையெல்லாம் காவல் காப்பதற்காகத் தினமும் ராத்திரி யாராவது களத்திலேயே தூங்குவது வழக்கம். போன வாரம் முழுக்க வேணுவுக்கு அந்த வேலைய கொடுத்திருக்காங்க. முன்னால காவல் காத்தவங்களெல்லாம் ராத்திரி செல்லான் ஓடையில சாரி(பேய்களின் அணிவகுப்பு) போகுதுன்னும் அதனால பத்தரமா தூங்கணும்னும் ராத்திரி முழிச்சி பாக்கக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க.”

“அப்புறம்?”

“ஆனா, வேணு அத நம்பல. எல்லாரையும் கிண்டல் பண்ணியிருக்கான். என்ன பெரிய பேய், அதையும் பாத்திடுவோம் அப்படீன்னு எகத்தாலமா பேசியிருக்கான். களத்துல ராத்திரி தூங்கும்போது நடு சாமத்துல ‘உச்சு… உச்சா.. ஒய்! உச்சு… உச்சா… ஒய்!’ அப்படீன்னு யாரோ நிறைய பேரு கத்திக்கிட்டு போகற மாதிரி இருந்துச்சாம்.”

“அவன் என்ன பண்ணினான்?”

“அவன் சரியான தூங்குமூஞ்சி. அதனால எழுந்திரிக்க சோம்பேறித்தனப்பட்டுட்டு நல்லா தூங்கிட்டானாம். இப்படியே நாலு நாள் தூங்கியிருக்கான். அஞ்சாவது நாள் எப்படியாவது அது யாருன்னு பார்க்கத் தூங்காமலே இருந்தானாம். அன்றும் அதேபோல் உச்சு… உச்சா… ஒய்! உச்சு… உச்சா.. ஒய்! என்று சத்தம் கேட்டிருக்கு. அது செல்லான் ஓடைக்கு அருகில் கேட்டது. ஏந்திரிச்சு போயி பார்த்தான். அங்க ஓடையில ஒரு பத்து பதினைந்து தீப்பந்தம் மட்டும் அந்தரத்தில தொங்கிக்கொண்டு அவன நோக்கி வந்திருக்கு. யாரும் இருக்கிற மாதிரி தெரியல. ஆனா, உச்சு… உச்சா.. ஒய்! என்கிற சத்தத்தோட அந்தத் தீப்பந்தங்கள் அவனை நோக்கி வந்துட்டு இருந்துச்சாம்.”

“அப்புறம் என்னடி ஆச்சு?”

“உடனே அவன் ரொம்ப பயந்துபோயி தல தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்துட்டானாம். வீட்டில இருக்கிறவங்களிடம் இத சொன்னானாம். அதற்கு அவங்க அது கொள்ளிவாய்ப் பிசாசு என்று சொன்னாங்களாம். அவனுக்கு ஜுரம் வந்திடுச்சாம். பயத்தில் தூங்கியவன் காலையில எழுதிரிக்கவே இல்லையாம்.”

“அடப் பாவமே! தைரியசாலின்னு சொல்லிட்டு பேய பாத்ததுக்கே செத்துப்போயிட்டானே! ஏற்கனவே மினி பேய், அப்புறம் பக்கத்து ஊர்ல ஆவி கத, இப்ப கொள்ளிவாய்ப்பிசாசா? அடுத்து என்னவோ?”

“அடுத்தது என்னவா? இன்னும் வேற ஏதாவது நடக்கணுமா?”

“இல்லடி, ஒரே பயமா இருக்கு.”

“என்னமா! நீயுமா நம்புற? அவன் ஜுரம் வந்துதான் செத்துப் போயிருக்கான். பேயப் பாத்ததால ஒன்னும் சாகல. சும்மா மூட நம்பிக்கை வச்சிக்காதீங்க!” மணி குறுக்கிட்டான்.

“இது மூட நம்பிக்கையில்ல. பேய் இருப்பது உண்மை.” ராசாத்தி கூறினாள்.

“ஆமாம்பா. உன் அப்பாகூட காட்டிற்கு வேட்டையாடச் செல்லும்போது பேய் அடிச்சுதான் செத்துபோயிட்டாரு.” சீத்தா கூறினாள்.

“நீங்க வேற, சும்மா இருங்க அத்த. எங்க அப்பா, ஓநாய் கடிச்சுதான் செத்தாரு. பேய் அடிச்சி சாகல.”

“நீயெல்லாம் பேய நேரா பாத்ததான் நம்புவ.”

“வாய்ப்பே இல்ல. பேயே வந்து சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.”

பேயாவது பிசாசாவது

“சரி. நீ நம்பவேணாம். இப்ப போயி அந்த விறகுகள பிளந்து போடு.” ராசாத்தி கூறினாள்.

“சரிம்மா”

அவன் சிறு வயதில் தன் அப்பாவுடன் காட்டிற்கு வேட்டைக்கு செல்வான். அவன் ஒரு நாள் செல்லாத அன்று தனியாகச் சென்ற அவன் அப்பா ஏதோ ஒரு மிருகம் அடித்து இறந்துவிட்டார். ஆனால் ஊர் அவர் பேய் அடித்துதான் இறந்துவிட்டார் என்று கதை கட்டிவிட்டுவிட்டதாக மணி நம்புகிறான்.

இப்போது அவன் பத்து வருடங்கள் கழித்து தன் ஊருக்கு வந்துள்ளதால் இன்று வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்று ஆர்வம் வந்துவிட்டது. அம்மாவிடம் கூறியதற்கு பேய், பிசாசு என்று காரணம் கூறி போக வேண்டாம் என்று தடுத்தார். ஆனால் அதனை மணி பொருட்படுத்தவில்லை. இரவில் காட்டிற்கு கிளம்பினான். நீண்ட நேரம் அலைந்து பார்த்தும் அவனுக்கு ஒன்றும் அகப்படவில்லை.

களைப்படைந்த அவன் ஒரு மரத்தினடியில் அமர்ந்தான். அப்போது யாரோ பேசுவது போன்று இருந்தது.

“டேய்! ஒத்த கண்ணா! டேய்! அங்க போகாதடா! அங்க ஒன்ன கொல்ல ஆளு இருக்காண்டா! நான் சொல்லச் சொல்லக் கேட்காம போறல்ல. அவ்வளவுதான்!”

இதைக் கேட்டதும் மணி மிகவும் பயந்துவிட்டான். இந்த இரவு நேரத்தில் இந்தக் காட்டில் யார் பேசுவது என்று பயந்தாலும் தன்னை தைரியப்படுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் அந்தக் குரல் நின்றுவிட்டது. அப்போது ஒரு காட்டுப்பன்றி வந்தது. அதைப் பார்த்த அவனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. தன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். அந்தப் பன்றி தொப்பென விழுந்தது. அதைத் தன் தோளில் எடுத்துப் போட்டுக் கொண்டு வீடு வந்தான்.

அவன் வீட்டிற்கு வரும்போது அதிகாலை ஆகிவிட்டது. அவன் பன்றியை அரிந்தான். அப்போதுதான் அந்தப் பன்றிக்கு ஒரு கண் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. பொதுவாகப் பேய்கள் பன்றியின் மேல்தான் இருக்கும் என்று சிறு வயதில் கேட்ட கதை ஞாபகத்திற்கு வந்தது.

“நேத்து பேசிய குரல் சொன்ன மாதிரியே இந்தப் பன்றிக்கு ஒரு கண் இல்லியே. ஒரு வேள, பேய்தான் இந்தப் பன்றிக்கு எச்சரிக்கை கொடுத்திருக்குமோ?” என்று அவன் பயப்பட ஆரம்பித்தான். இருந்தாலும் தன் மனதை அமைதிப்படுத்தித் தைரியமானான்.

வேறு ஒருநாள். வெளியூறுக்கு சென்று கூத்து பார்த்துவிட்டு வரும்போது ஒரு வயல்வெளி வரப்பு மீது நடந்துவரவேண்டியிருந்தது. அப்போது அவன் பார்த்த ஒரு நிகழ்வு அவனைத் திகிலடைய செய்தது. அந்தரத்தில் ஒரு கொள்ளிக்கட்டை மட்டும் எரிந்துகொண்டு வரப்பு வழியே அவனை நோக்கி வந்தது. இப்போது அவனுக்குப் பேய்மீது பயம் ஏற்பட்டது. அது கண்டிப்பாகக் கொள்ளிவாய்ப் பிசாசகத்தான் இருக்கும் என்று நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது. ஆனால், அது தன்னை நோக்கி வருகிறது, என்ன செய்யப்போகிறதோ என்று பயந்தான். ஆனால் நேராக வந்து கொண்டிருந்த அது இடது பக்கம் திரும்பி அந்த வரப்பு பக்கம் சென்றுகொண்டிருந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று மணி ஓட்டம் பிடித்தான்.

வீட்டில் இதைக் கூறினால் எங்கே அவனை இரவில் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்களோ என்று அவன் கூறவில்லை. ஆனால் பேய் இருப்பது உண்மைதான், இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மட்டும் முடிவெடுத்தான்.

ஒரு நாள் மாலை நேரம், மணியின் நண்பன் ரகு அவனைப் பார்க்க வந்தான்.

“டேய்! மணி, எப்படிடா இருக்க?”

“டேய்! ரகு! நல்லா இருக்கேண்டா. நீ எப்படிடா இருக்கே?”

“நான் நல்லா இருக்கேண்டா. வெளிநாட்டில இருந்து எப்படா வந்த?”

“ரெண்டு வாரம் ஆச்சுடா. நான் வந்த அடுத்த நாளே உன்ன வந்து பாக்க உன் வீட்டுக்கு வந்தேன். ஆனா, நீயும் என்ன மாதிரியே வெளிநாட்டுல கஷ்டப்படறதா சொன்னாங்க.”

“ஆமாண்டா, நானும் எட்டு வருஷமா சிங்கப்பூர்ல இருந்தேன். நேத்துதான் வந்தேன்.”

மணியும் ரகுவும் சிறுவயது முதல் நண்பர்கள். இருவரும் பல வருடங்களுக்குப் பின் சத்திப்பதால் நிறைய பேசினார்கள். ரசாத்தியும் அவர்களுடன் கலந்துகொண்டாள்.

“டேய், நம்ம வேட்டையாடி எவ்வளவு நாளாச்சி! இன்னிக்கே நான் வேட்ட கறி சாப்பிடணும். கிளம்பு காட்டுக்குப் போகலாம்.”

“டேய்! வேணாண்டா, எனக்கு இப்போதெல்லாம் காட்டுக்குப் போகவே ரொம்ப பயமா இருக்குடா.”

“ஏன்டா?”

“இல்லடா, பேய் பிசாசு ஏதாவது இருக்குமோ அப்படீன்னுதான்”

“டேய்! என்னடா? நீ போயி பேய்க்கெல்லாம் பயப்படுற?”

“ஆமாம், அதானே! நான் சொன்னதுக்கே நீ நம்பல. இப்ப நீயே பயப்படுற? சரி. எது எப்படியோ, பயப்படுறவன கூட்டிட்டு போகாதடா” என்று ராசாத்தி ரகுவைக் கண்டித்தாள்.

“என்னம்மா, நீங்க இன்னும் மாறவே இல்லையா? பேய் பிசாசுன்னு ஏதேதோ சொல்லி இவனையும் பயமுறுத்தி வச்சிருக்கீங்க! அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நான் உத்திரவாதம் தறேன். நாங்க ரெண்டு பேரும் காட்டுக்குப் போயிட்டு வறோம்” என்று கூறியவன் எப்படியோ இருவரையும் சமாதானம் செய்து மணியைக் காட்டிருக்கு அழைத்துச் சென்றான்.

அவர்கள் அலைந்து திரிந்ததில் ஏழு முயல்கள் கிடைத்தன. அதுவே போதும் என்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

“டேய்! எனக்கு மூனு போதும். இந்தா ஒனக்கு நாலு” ரகு மணியிடம் கொடுத்தான்.

இருவரும் அவர்களது கைகளில் முயல்களுடன் வந்துகொண்டிருந்தனர். அப்போது தங்களது பின்னால் யாரோ தொடர்ந்து வருவது போன்ற ஒரு உணர்வு மணிக்கு ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தான். ஆனால் யாரும் இல்லை.

இவன் இப்படியே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வருவதைக் கண்ட ரகு, “டேய்! என்னடா ஆச்சி, ஏன் திரும்பித் திரும்பிப் பாத்துட்டுவர?” என்று கேட்டான்.

“யாரோ பின்னாடியே வர போல இருக்குடா.”

“ஆமான்டா, அது பேயிதான்.”

“என்னடா சொல்ற?”

“நீ, பெரியவங்க சொல்ற கதையெல்லாம் கேட்டதில்லியா? ராத்திரியில நாம கறி எடுத்திட்டு போனா, வாடைக்கு பேய் நம்ம பின்னாடியே வரும். சமயத்துல, நம்மல கொன்னுட்டு கறிய தூக்கிட்டுப் போயிடும். உங்க அப்பாவக்கூட அப்படித்தான் பேய் கொன்னுதுன்னு சொல்லிக்கிறாங்க.”

“அய்யைய்யோ! நான், அப்பவே சொன்னேன். எனக்குப் பயமா இருக்குடா, நான் வரலன்னு! இப்ப என்ன கூட்டிட்டு வந்து பேய் கையால சாவ வச்சிடுவ போலிருக்கே?”

“டேய், என்னடா பெரிய பயந்தாங்கொள்ளியா மாறிட்ட? ஒன்ன பயமுறுத்தச் சொல்லிப் பாத்தேண்டா. அதெல்லாம் வெறும் கட்டுக் கதடா. நீ பயந்துபோய் இருக்க. அதனாலதான் யாரோ நம்மல பின்தொடர்ந்து வர போல இருக்கு.”

“டேய், இல்லடா, யாரோ பின்னாலேயே வராங்கடா.”

“பேசாம வாய மூடிக்கிட்டு வாடா.”

இருவரும் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். திடீரென்று யாரோ கரகரத்த குரலில் பேசினார்.

“டேய். நில்லுடா. உன்ன கொன்னுடுவேன்.”

இதைக் கேட்ட ரகு “டேய், மணி. நான் ஒன்ன மாதிரி பயந்தவன் கிடையாது. பேய் மாதிரி பேசினா நான் பயந்திடுவேனா?” என்று திரும்பிப் பார்த்தான். யாருமே இல்லை. மணி கூட இல்லை. மணிக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் யாரோ கீழே கிடப்பது போன்று தெரிந்தது. ஓடிப் பார்த்தான். அது மணி.

“டேய் மணி, என்ன பயமுறுத்த நாடகம் ஆடுறியா?”

ஒரு பதிலும் இல்லை. அருகில் சென்று பார்த்த பிறகுதான் மணி இறந்து கிடக்கிறான் என்று ரகுவிற்கு தெரிந்தது. எப்படி மணி திடீரென இறந்து கிடக்கிறான்? ஒருவேளை பேய்தான் அவனைக் கொன்றிருக்குமோ? இவன் வீட்டில் கேட்டால் என்ன சொல்வது? அந்தப் பேயிடமிருந்து எப்படி தப்பிப்பது? என்று பல எண்ண அலைகளுடன் மணியைக் கட்டிப் பிடித்து அழுதுகொண்டிருந்தான்.

அப்போது ஒரு கை அவன் தோளைத் தொட்டது. ரகுவிற்கு உடம்பு நடுங்கியது. யார் என்று திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. மெல்ல அழுத கண்களுடன் கூடிய தன் முகத்தைத் திருப்பினான். திரும்பியவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ஒரு கரிய உருவம் அவன் அருகில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அவன் அது பேய் என்பதை உணர்ந்தான். பயத்தில் கத்துவதற்குள் அந்த உருவம் தனது கைகளால் ஓங்கி அவனை ஒரு அறை விட்டது.

அடுத்தநாள், இருவரது வீட்டிலும்.

ஒரே அழுகுரலும் ஒப்பாரியும்தான்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading