கல்லறை

சாந்தி அடையாத ஆவி கதை

முப்பது வருடங்களுக்கு முன்பு,

சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் பகலில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால் இரண்டு இரவுக்காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். வாரம் முழுவதும் ஒரு படம் போடுவார்கள். வெள்ளிக்கிழமையானால் புதிய படம் மாற்றிவிடுவார்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. ‘குமரிப்பெண்’ படத்தின் இரண்டாவது காட்சியைப் பார்த்துவிட்டு ரங்கன் மற்றும் அவனது நண்பர்கள் வெளியே வந்தனர். தங்களது மிதிவண்டிகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்ப எத்தனித்தனர். அப்போது ஒரு பெண் அங்கு வந்து “நானும் உங்க கூட வரேன், என்னையும் கூட்டிட்டுப் போங்க! போற வழியில இறங்கிக்கிறேன்.” என்றாள்.

“யாரும்மா நீ? பொண்ணுங்களையெல்லாம் உட்காரவச்சிட்டுப் போகமாட்டோம். நீ கிளம்பு.”

“என்னங்க! தனியா வந்திருக்கேன். உதவி பண்ணுங்க!”

“அதுக்காக ஒரு பொண்ண ராத்திரியில கூட்டிட்டு போனா எங்கள தப்பா நினைக்கமாட்டாங்களா? ஏன் தனியா வந்த?”

“இல்லங்க, என் வீட்டுக்காரர் வருவாருன்னு வந்துட்டேன். ஆனா, அவரு கடைசிவரைக்கும் வரவேயில்லைங்க.”

“என்னமா! வீட்டுக்காரர் வருவார்னு நெனச்சி வந்தேன்கிற, அவரு வரலனு சொல்ற, ஒண்ணுமே புரியலயே!”

“வாரம் வாரம் புது படம் மாத்தும்போது நானும் என் வீட்டுக்காரரும் தவறாம இங்க வந்து சினிமா பார்ப்பது வழக்கம். இன்னைக்கு அவரு வேலைக்காக வெளியூர் போயிருந்தாரு. எப்படியாவது சினிமாவுக்கு வந்திடுவாருன்னு நானும் வந்துட்டேன். படம் முடியும் வரை தேடித்தேடிப் பார்த்தேன். அவரு கெடைக்கவே இல்லைங்க.”

“கெடைக்கவே இல்லையா? என்ன காணாம போன பொருள தேடற மாதிரி சொல்ற? நீ என்ன சினிமா பாக்க வந்தியா, இல்ல தேட வந்தியா?”

“ஏங்க, எப்படிங்க என் வீட்டுக்காரர் இல்லாம சினிமா பாக்கறது? ஏதோ வந்துட்டேன். இப்ப வீட்டுக்கு இந்த ராத்திரியில ரொம்ப தூரம் எப்படி நடந்து போறது? என்னையும் கூட்டிட்டுப் போங்க!”

“நீ என்னதான் சொன்னாலும் நாங்க யாரும் ஒரு பொண்ண உட்கார வச்சிட்டு போவதா இல்ல”

இப்படியே அனைவரும் தட்டிக் கழித்தனர். அந்த பெண் ரங்கனிடம், “ஏங்க, நான்கூட காரப்பட்டி’ தாங்க. உதவி பண்ணுங்க!” என்று கேட்டாள்.

ரங்கனுக்கு மனசு கேட்கவில்லை. தன் ஊர் பெண் ஒருவள் உதவி கேட்டு செய்யவில்லை என்றால் அது நியாயம் இல்லை. ஊர் என்ன சொன்னால் என்ன? உதவி செய்வதுதான் மனிதாபிமானம் என்று எண்ணி, “சரி வாங்க, நான் உங்கள கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

ஆனால் அவனது நண்பர்கள், “வேணாண்டா! இந்த வம்பு நமக்கு வேணாம்.” என்று எச்சரித்தார்கள். ஆனால், அவற்றை அவன் பொருட்படுத்தவில்லை.

அனைவரும் தங்களது மிதிவண்டிகளில் கிளம்பினர். ரங்கனின் மிதிவண்டியில் அந்தப்பெண் அமர்ந்துகொண்டு வந்தாள். வழியில் நண்பர்கள் படத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டு வந்தனர்.

ரங்கன் அந்த பெண்ணிடம், “நீங்க எங்க ஊருதான்னு சொல்றீங்க, ஆனா நான் உங்கள பார்த்ததே இல்லியே!” என்று கேட்டான். அதற்கு அவள், “நான் உங்கள பார்த்து இருக்கேன். உங்களுக்கும் என்ன நல்லா தெரியும்.” என்றாள்.

“எனக்கு உங்கள தெரியுமா? நீங்க யார் வீடு?”

“அந்தோணிசாமி பொண்ணுதாங்க நானு. என் பேரு மேரி”.

“ஓ! அந்தோணிசாமி பொண்ணு மேரியா நீங்க? எங்கங்க நான் அஞ்சு வருஷமா துபாயில இருந்தேன். ஊருக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது அதனாலதான் ஞாபகமில்ல”.

கோரப்பட்டி’ க்கு செல்லும் சாலை வந்தது.

“டேய் ரங்கா, நாங்க எங்க ஊருக்குப் போறோம், பாத்து பத்தரமா போய்ட்டு வாடா. நாங்க வருகிறோம்” என நண்பர்கள் கூறினர்.

“சரிங்கடா போய்ட்டு வாங்க. அடுத்தவாரம், படத்துக்கு வந்துடுங்கடா”, என்றான் ரங்கன்.

ரங்கணும் மேரியும் காரப்பட்டியை நெருங்கிய பொழுது “ஏங்க வண்டிய நிறுத்துங்க. வீடு வந்துடுச்சி” என்றாள் மேரி.

“என்ன சொல்றீங்க? இங்க வெறும் கல்லறதானே இருக்கு! இங்க இருந்து ரொம்ப தூரம் போகனுமா? நான் வேணும்னா துணைக்கு வரட்டா?” என்றான் ரங்கன்.

“இங்கதான் இருக்கு. நான் போய்க்குறேன், நீங்க போங்க” என்றாள் மேரி.

இருந்தாலும் ரங்கன் மனசுக்கு சரிபடவில்லை. எனவே, அவன் அங்கேயே நின்று பார்த்து கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றவுடன் மேரியின் உருவம் மறைந்துவிட்டது.

கல்லறை

இதை பார்த்த ரங்கனுக்கு சிறிது பயம் இருந்தாலும் அவன் படித்தவன் என்பதால் மேரி தூரம் சென்றதால் கண்ணுக்கு தெரியவில்லை போலும் என்று நினைத்து கொண்டான்.

ரங்கன் வீட்டிற்கு சென்றதும் உண்ணாமல் படுக்க சென்றான். அவன் வழியில் நடந்தவற்றை நினைத்து புலம்பிக்கொண்டிருக்க “டேய் ரங்கா, டேய்.. ராத்ரில படம் பாக்க போகாதடானா கேக்குறியா, இப்ப பாரு ராத்திரி 3 மணிக்கு தூங்காம பெனாத்திகிட்டு இருக்க, என்னாச்சு உனக்கு?.” என்றாள் அவனது அம்மா.

“என்னாச்சு? படம் பாக்க போனோம். பொண்ணு உதவி கேட்டா. கூட்டிட்டு வந்தேன். கல்லறையில எறங்கி போனா. திடீருனு மறஞ்சிட்டாளே? என்னாச்சி?” என்றான் ரங்கன்.

“என்னடா ரங்கா பொண்ணுங்கற! மறஞ்சிட்டாங்கற! என்னடா ஆச்சு உனக்கு?” என்றாள் அவனது அம்மா.

“அது ஒண்ணுமில அம்மா, படம் பாத்துட்டு வரும் போது அந்த அந்தோணிசாமி பொண்ண கூட்டுட்டு வந்தம்மா. வர வழியில கல்லறை கிட்ட இறங்கிட்டா. திடிருனு பாத்தா மறஞ்சி போயிட்டா. அதாம்மா யோசிச்சுகிட்டுருக்கேன்” என்றான் ரங்கன்.

“யாரடா சொல்ற? அந்தோணிசாமி பொண்ணு மேரியவா சொல்ற?”

“ஆமாம்மா” என்றான் ரங்கன்.

“அடேய், அந்த பொண்ணு செத்து ஆறு மாசம் ஆச்சுடா! அத போய் பார்த்தனு சொல்ற? ஒரு வேள தற்கொல பண்ணதால பேயா வந்திருப்பாளோ? பேய்க்காடா உதவி பண்ணி கூட்டிட்டு வந்த? டேய் ஒழுங்கா சொல்றா?”

“ஆமாம்மா. அந்த பொண்ணுதான் சொன்னுச்சி, அது அந்தோணிசாமி மகள் மேரின்னு. என்னமா சொல்ற? மேரி பேயாமா?, ஏம்மா செத்துபோனா?”

“புருஷன் கொடும தாங்க முடியாம தூக்கு போடுகிட்டாடா. நிறைய பேரு அவள ஆவியா பாத்ததா சொன்னாங்க. நான் கூட நம்பல. இப்பதாண்டா எனக்கும் புரியுது, அவ ஆத்துமா சாந்தியடையாம சுத்துது போல.” என்றாள் அவனது அம்மா.

“ஐய்யையோ! நான் போயும் போயும் ஒரு பேய்க்கா உதவி பண்ணியிருக்கேன். என்ன ஆவப்போதோ?” என்று பயந்தான் ரங்கன்.

“பயப்படாம தூங்குடா. அவ ரொம்ப நல்ல பொண்ணுதான். அவளால யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது. இனிமே ராத்திரியில வெளில போகாதடா. காலையில சாமியார்ட்ட போய் மந்திரிச்சு விட்டா சரியாயிடும்”, என்று ஆறுதல் கூறினாள் அவனது அம்மா.

என்னதான் பையனோட பயத்த போக்க ஒன்னும் ஆகாதுன்னு சொன்னாலும் அவளுக்குள் இருந்த பயத்தால் மறுநாள் காலை ஒரு பூசாரியை அழைத்து வந்து ரங்கனை மந்திரித்து விட்டாள்.

இரண்டு நாள் கழித்து

ரங்கனுடைய அம்மா ஊர் கோடியிலிருந்த தனது தங்கச்சி வீட்டிற்கு செல்லும் வழியில், மேரியினுடைய கணவரை சந்திக்க நேர்ந்தது.

“என்னப்பா ஜோசப்பு ஒன்னத்தான் ரெண்டு நாளா தேடுறேன். எங்க போய் இருந்த?”

“போன வாரம்தாங்க எனக்கு பட்டணத்துல கல்யாணம் ஆச்சு, ஒரு வாரமா நான் அங்கதான் இருந்தேன். நேத்திக்கு சாயங்காலம்தான் வந்தேன். என் பொண்டாட்டி வீட்டில இருக்கா. ஆமாம், எதுக்காக என்ன தேடுறீங்க?”

“ஏம்ப்பா, பொண்டாட்டி செத்து ஆறு மாசம்தான் ஆச்சி. அதுக்குள்ள வேற கல்யாணம் பண்ணிட்டு வந்து நீக்கிறீயப்பா? அதுவும் ஊருக்கே தெரியாம!”

“அவ கொழுப்பு புடிச்சவ, செத்துட்டா! அதுக்காக நான் சந்தோஷமா இருக்கக் கூடாதா? இந்த பொண்ணுக்கு என்ன ரொம்ப புடிச்சியிருந்தது. அதனால என் மாமனாரே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க! ஆமாம், நீங்க எதுக்காக என்ன தேடுறீங்க? அத சொல்லுங்க மொதல்ல”

“எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா. நீ என்னடான்னா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட. ஆனா உன் முதல் பொண்டாட்டி ஆவியா அலையிறா!”

“என்ன? என் முதல் பொண்டாட்டி ஆவியா அலையிறாளா? என்ன ஒளறுறீங்க?”

“ஆமாம்ப்பா, நேற்று முந்தின நாள் என் மகன் சினிமாவுக்கு போயிருந்தான். அங்க உன் பொண்டாட்டி உன்ன தேடிக்கிட்டு வந்தாளாம். இரவில் வீட்டிற்கு செல்ல அவனுடய மிதிவண்டியில் அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறாள். அவள பத்தி அவன் விசாரிச்சப்போ, அந்தோணிசாமியின் மகள் மேரி என்று கூறியிருக்கிறாள். பாதியில் இறங்கி கல்லறைத் தோட்டத்தில் நடந்து போனாளாம். பின் கொஞ்ச தூரம் சென்றதும் மறைந்துவிட்டாளாம். என் மகன் வீட்டிற்கு பயத்திலேயே வந்தான். அவனிடம் விசாரித்தபோதுதான் உன் மனைவி ஆவியாக அலைகிறாள் என்று நாங்கள் நம்பினோம். பின் பூசாரியைக் கூப்பிட்டு வந்து சில பரிகாரங்களெல்லாம் செய்தோம்.”

“இது என்ன புது கதை? என்னை பயம்புறுத்த எல்லாரும் கத கதையா சொல்றீங்க? இதுக்கு முன்னால யார் சொன்னதையும் நான் நம்பல. நீங்க சொல்றதையா நம்பப்போறேன்? வேற வேல இருந்தா போயி பாருங்க!”

“நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். அப்புறம் உன் விருப்பம். ஆனா ஒன்னு, ஏதாவது பரிகாரம் பண்ணி உன் முதல் மனைவியின் ஆத்துமாவை சாந்தப்படுத்து. இல்லன்னா பெரிய விபரீதம் நடந்துடும். இந்த பொண்டாட்டியையாவது நல்லா வச்சிக்க!”

“அதெல்லாம் பாத்துக்கலாம். ஆவியாம், பேயாம். யார் காதுல பூ சுத்துறீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவன் சென்றுவிட்டான்.

ஒரு வாரம் கழித்து, ஜோசப்பின் வீட்டில்,

“என்னடி, இவ்வளவு நேரம்? இங்க இருக்கிற தும்பம்பட்டிக்கு போயிட்டு வரவா இவ்வளவு நேரம்?”

“ஏங்க, போன உடனே திரும்பி வரமுடியுமா? என் பெரியம்மாவுக்கு உடம்பு சரியில்ல, பாத்துட்டு வரலாம்னு சொன்னேன். நீங்கதான் வேல இருக்குது வரமுடியாதுன்னு சொல்லிட்டீங்க! நானாவது அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்த பேசிட்டு வரவேணாமா?” என்று ஜோசப்பின் புது மனைவி ஸ்டெல்லா மறுமொழி கூறினாள்.

“அடியே, ராத்திரி எட்டு மணி ஆயிடுச்சிடி! சரி, சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்கு கிளம்பு.”

“சரிங்க, உங்க கூட சினிமா பாக்கறதுக்குதானே ஆசை ஆசையா சீக்கிரமா வந்திருக்கேன்!”

சாப்பிட்டுவிட்டு இருவரும் இரண்டாவது காட்சிக்கு திரையரங்கம் சென்றனர். அங்கு தெரிந்தவர்கள் சிலரை பார்க்க நேர்ந்தது. ஜோசப்பின் நண்பன் மணி என்னும் ஒருவன் அவனிடம் “டேய்! புதுசா கல்யாணம் ஆனப் பொண்ண இப்படி நேரம் கெட்ட நேரத்துல சினிமாவுக்கு கூட்டிட்டு வந்திருக்கியே!”

“இப்பதாண்டா சந்தோஷமா இருக்கணும், ஏண்டா! யார் என்ன பண்ணிடப்போறாங்க?”

“இல்லடா, உன் முதல் பொண்டாட்டி ஆவியா அலையிறதா சொல்றாங்க…”

“சும்மா, வாய மூடுடா. ஆளு ஆளுக்கு கட்டுக்கதை விடாதீங்கடா! அப்படியே அவ ஆவியா அலையிறதாவே இருக்கட்டும். அவ என்ன பண்ணிடுவான்னு பார்ப்போம்.”

“நீ தையிரமா இருந்தா சரிதான்.”

“என் வீட்டுக்காரர் மிகவும் தைரியமானவர். அவர எந்த பேயும் ஒன்னும் பண்ண முடியாது.” என்று ஸ்டெல்லா கூறினாள்.

“அப்படி சொல்லுடி என் செல்லம்!” என்று ஜோசப் அவளைக் கொஞ்சினான்.

“உனக்கு ஏத்த ஆளதாண்டா புடிச்சியிருக்கிற!” என்று மணி கூறினான்.

ஜோசப்பும் ஸ்டெல்லாவும் திரைப்படத்தை ரசித்துவிட்டு வீடு திரும்ப போய்க்கொண்டிருந்தனர். ஜோசப் மிதிவண்டியை ஒட்டிசெல்ல பின்னால் ஸ்டெல்லா அமர்ந்து வந்தாள். அவர்கள் ஊரான காரப்பட்டிக்கு அருகில் இருந்த அந்த கல்லைறை வந்ததும்,

“நிறுத்துங்க, நிறுத்துங்க”

“ஏண்டி, என்னாச்சி?”

“சக்கரத்துல கால விட்டுக்கிட்டேங்க!”

“அய்யோ!” என்று மிதிவண்டியை நிறுத்தினான்.

அவள் அலறிக்கொண்டே இறங்கினாள். “அய்யோ! இங்க பாருங்க என் கால”

ஜோசப் அவளுக்கு என்ன ஆச்சோ என்று பயந்துபோய் அவளது காலைப் பார்த்தான். அவன் மிக அதிர்ச்சியடைந்தான். ஏனென்றால் அது கால் போன்று இல்லை. ஒரு பெரிய தூண் போன்று இருந்தது. பயந்துபோய் அவனது மனைவியை பார்த்தான். ஆனால் அது அவனது முதல் மனைவி மேரி. அதிர்ந்த அவன், “நீ, நீ …” என்று மிகவும் பதட்டப்பட்டான்.

“ஆமாண்டா! நான்தான், நானேதான். உன் ரெண்டாவது பொண்டாட்டி எங்கன்னுப் பாக்கிறியா? போன எடத்துல அவளுக்கு காய்ச்சல வரவச்சிட்டேன். அதனால அவ அங்கியே இருக்கா. என்னக் கொன்னுட்டு நீ மட்டும் சந்தோஷமா இருக்குறியா? நான் விட்டுடுவனா?”

“என்ன ஒண்ணும் பண்ணிடாத”

“டேய்! கூட இருக்கிறது நான்தான்னு தெரியாம எவ்வளவு சந்தோஷமா இருக்கடா! உன்ன இவ்வளவு சந்தோஷமாக இருக்க விட்டா என் ஆத்துமா சாந்தி அடையுமா?” என்று அவனைக் கொல்ல வந்தாள்.

அவன் ஓட முயற்சித்தான். ஆனால் முடியவில்லை. பேயிடமிருந்து தப்பிக்க முடியுமா?

மறுநாள்-

அன்று நவம்பர் 1ம் தேதி. அடுத்தநாள், கல்லறைத்திருவிழா என்பதால் கல்லறைகளை சுத்தம் செய்ய சென்றவர்கள் கண்ணில் ஜோசப்பின் பிணம் தென்பட்டது. மேரியின் கல்லறையின்மேல் கிடந்த ஜோசப்பின் சடலத்தை எடுத்துவந்து அவனது வீட்டில் வைத்தனர். அவனது உறவினர்கள் அழுதுகொண்டிருந்தனர். ஜோசப்பின் இறப்பு அனைவருக்கும் ஒரு புதிராகவும் பயமாகவும் இருந்தது. “இவனே ஒரு அநாதை. கட்டிட்டு வந்த புது பொண்டாட்டியக்கூட காணோமே?” என்று அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.

அப்பொழுது ஸ்டெல்லா தன் தந்தையுடன் அலறி அடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தாள். தனது கணவனைக் கட்டிப்பிடித்து அழுதாள்.

அங்கிருந்த ஜோசப்பின் நண்பன் மணி, “ஏங்க, என் நண்பன் உங்களுக்கு என்னங்க துரோகம் பண்ணினான்? அவன இப்படி அநியாயமாய்க் கொன்னுட்டு இப்ப ஏதோ நாடகம் ஆடுறீங்களே!” என்று கேட்டான்.

“என்ன, நான் என் புருஷனை கொன்னேனா?”

“நடிக்காதீங்க, நீங்கதான் ராத்திரி அவன் கூட சினிமாவுக்கு வந்தீங்க. இது வரைக்கும் எங்க போனீங்க? நல்லா திட்டம் போட்டு அவன கொன்னுட்டு இப்ப ஊர் நம்பரத்துக்காக நடிக்கிறீங்களா?”

“ஐயோ! ஏங்க என் மேல இப்படி ஒரு பழி போடுறீங்க? நேத்து என் பெரியம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு போன எனக்கும் உடம்பு சரியில்லாம போயிடுச்சீங்க. நான் அவர் கூட சினிமாவுக்கு போனேன்னு சொல்றீங்க, கொல பண்ணினேன்னு சொல்றீங்க? நானே என் புருசன கொலப்பண்ணுவனா? இந்த விசயத்த கேள்விப்பட்ட உடனே என் நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கு! என் மேல இப்படி பழியப்போடுறீங்களே!”

ஸ்டெல்லாவின் தந்தை “என்னங்கையா, ரெண்டாதாரமா இருந்தாலும் என் பொண்ணு விரும்பிட்டா என்பதனால இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப ஏதோ கத கட்டி, என் பொண்ணு மேல கொலப்பழியப் போடுறீங்க?” என்று கேட்டார்.

“என்னம்மா, சத்தியமா நீ இப்பதான் வரியா?” என்று ஒரு பெரியவர் ஸ்டெல்லாவிடம் கேட்டார்.

“சாமி சத்தியமா நான் இப்பதான் வரேன்” என்று சொல்லிவிட்டு கதறினாள் ஸ்டெல்லா.

“நீங்க வரலான, உங்க உருவத்துல சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு சினிமா பாத்தது யாரு?” என்று மணி ஆச்சரியப்பட்டான்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல். “டேய்! நான் அப்பவே சொல்லல, மேரி பேயா அலையிறான்னு. அவதாண்டா ஜோசப்ப கொன்றிருப்பா!” என்று கூறியது. அது வேற யாரும் இல்லைங்க, ‘ரங்கன்’தாங்க.

“நீ சொல்றது போலதாண்டா இருக்கும். அவதான் ஜோசப்ப பழிவாங்கியிருக்கா!”

ஊரே இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டது. எல்லோரையும் ஒருவித திகில் ஆட்கொண்டது. ஸ்டெல்லா ஒருபுறம் அழுதுகொண்டிருக்க ஊரே பேய்க்கதையப் பேச ஆரம்பித்தது.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments

  1. s suresh ஜனவரி 1, 2013
  2. சபரி மார்ச் 11, 2020

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading