பிறரை புண்படுத்தச் சொல்லப்பட்ட பழமொழிகள்

நமது தமிழ் நாட்டில் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பழமொழிகள் வாழ்க்கைக்கு தேவையானதாகவும், நமது சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கின்றன.

என்னதான் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளுக்காகப் பழமொழிகள் கூறி இருந்தாலும், சில பழமொழிகள் மற்றவர்களை இழிவுபடுத்தவும் அவர்களது மனதை புண்படுத்தவும் கூறப்பட்டு வந்துள்ளன. சில பழமொழிகளின் உண்மை பொருள் வேறாக இருந்தாலும் அவைகள் திரித்துக் கூறப்பட்டு வருகின்றன.

அவைகளில் சிலவற்றை பார்ப்போம்.

பெண்களை இழிவுபடுத்த சொல்லப்பட்டவை:

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?

பெண்களை அடிமைகளாக வைத்திருக்க எண்ணிய ஆணாதிக்க வர்கம் இதைக் கூறியே பெண்களை மட்டம் தட்டி வந்தனர். இதில் என்ன கொடுமை என்றால் பெண்களே இதைக் கூறி வந்ததுதான். என் சிறு வயதிலேயே நான் பெண்களே பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் தற்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது மகிழ்ச்சியே.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

பெண்கள்தான் பிரச்சினைகள் உருவாக்குகின்றனர் மற்றும் அழிவையும் ஏற்படுத்துகின்றனர் என்பது போன்று தவறாகப் பலர் பயன்படுத்துகின்றனர்.

“நன்மை ஆவதும் பெண்ணாலே, தீமை அழிவதும் பெண்ணாலே” என்பதுதான் உண்மையான அர்த்தம்.

பெண் புத்தி பின் புத்தி

“பெண்கள் எதையும் யோசிக்காமல் செய்துவிடுவார்கள். பின் அதன் விளைவைப் பார்த்துதான் தங்கள் செய்த தவறை உணர்வார்கள்” என்பது தவறானது.

“பெண்கள் எப்போதும் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். பின்னால் நடக்கப் போவதை முன்பே யூகித்து எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வார்கள்” என்பதுதான் சரி.

உடல் குறைபாடு உள்ளவர்களைப் புண்படுத்தச் சொல்லப்பட்டவை

disability

நொண்டிக்கு நூத்தியெட்டு குறும்பு

அவர்களே தங்களால் பிறரைப் போன்று ஓடி ஆடி விளையாட முடியவில்லையே என்று தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதை விட்டுவிட்டு மேலும் அவர்களது மனம் புண்பட இந்தப் பழமொழியை உபயோகப்படுத்துகிறோம். குறும்பு என்பதை கலகலப்பாக இருத்தல் என்று நாம் நல்ல அர்த்ததில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊமை ஊரைக் கெடுக்கும், ஆமை வீட்டைக் கெடுக்கும்

ஆமை புகுந்த வீடு நாசமாகப் போகும் என்பார்கள். அது உண்மையா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அதனுடன் ஊமைகளை ஒப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவர்கள் என்ன அவ்வளவு கெட்டவர்களா? ஆம். என்ன ஆம் என்கிறேனே என்றுதானே பார்க்கிறீர்கள்?

இங்கு ஊமை என்பது ஊனமுள்ள ஊமை கிடையாது. ஊமை போன்று இருப்பவர்கள். அதாவது மனதில் வஞ்சத்தை வைத்துக் கொண்டு எப்போதும் ஊமை போன்று இருப்பவர்கள். அவர்கள் சமயம் பார்த்துக் காலை வாரி விடுவார்கள். இதுதான் உண்மையான அர்த்தம்.

செவுடன் காதில் சங்கு ஊதியது போல்

செவுடன் காதில் சங்கு ஊதினால் கேட்காதுதான். ஆனால், சிலர் காதிருந்தும் செவிடர்களாக உள்ளனர். நல்லதை கேட்க மறுக்கின்றனர். அறிவுரைகளை மதிப்பதில்லை. செவிடர்களை இங்கு உபயோகப்படுத்தி இந்தக் கருத்தைக் கூறியிருப்பதுதான் இந்தப் பழமொழியின் ஒரே குறை.

கள்ளனை நம்பினாலும் நம்பலாம் குள்ளனை நம்பக் கூடாது.

இதன் பொருளே வேறு. அதாவது யாரையும் உருவம் கண்டு குறைத்து மதிப்பிடக் கூடாது. குள்ளமாக இருப்பவர்கள் எப்போதும் நம்மைவிட பெரிய காரியங்களையும் செய்வர். அதாவது மிகவும் திறமையானவர்கள். இதுதான் உண்மை. எனவே இதுவும் தவறானதாகவே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

One Response

  1. s suresh செப்டம்பர் 16, 2012

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.