பகல் கனவு பலிக்காது

working man
உழைப்பே உயர்வு

“கனவு காணுங்கள்” இதுதான் கடந்த பத்து வருடங்களாக இளைஞர்களின் தாரக மந்திரமாக மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொன்மொழியாகக் கூறப்பட்டு வருகிறது. இதை நம் அப்துல் கலாம் கூறினாலும் கூறினார், அனைவரும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அந்தக் கனவு நனவாக எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

கனவு என்பது நமது இலட்சியம். இலட்சியத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தக் கருத்துக்காகத்தான் அப்துல் கலாம் அவ்வாறு கூறினார். ஆனால், நம்மில் பலர் கீழ் வரும் கதையின் கதாநாயகனைப் போன்றுதான் நடந்துகொள்கிறோம்.

கதை

அவன் பெயர் அறிவழகன். பெயருக்கு எதிர்மறையானவன். படிப்பு வரவில்லை. அதனால் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான். வேலை வெட்டிக்கும் செல்லாமல் சோம்பேறித்தனமாகத் திரிந்து கொண்டிருந்தான். பெற்றோர்கள் முதற்கொண்டு அனைவரும் அவனைச் சாடினார்கள். வேலை செய்யாமல் தெண்டச்சோறு சாப்பிடுவதாகத் திட்டினார்கள்.

அதனால் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது சம்பாரித்து பணக்காரனாக வேண்டும் என்பதுதான் அது. வேலை செய்ய அவன் மனம் விரும்பவில்லை. நோவாமல் நோன்பு கும்பிட வேண்டும்’ என்று ஆசைப்பட்டான்.

ஒருநாள், அவன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் அவனை அழைத்தார். அவர் மளிகைக் கடையில் பொருள்களை வாங்கி வைத்திருந்தார். தனது இரு கைகளிலும் பைகள் வைத்திருந்தார். தரையில் அட்டைப் பெட்டி ஒன்று இருந்தது. அது முழுவதும் முட்டைகள்.

“தம்பி, இந்த மளிகை சமானெல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டு போகணும். நான் இந்தப் பைகளை எடுத்துக்கிறேன். இந்த அட்டப் பெட்டிய என் வீடுவரைக்கும் எடுத்துத்திட்டு வரியாப்பா? பத்து ரூபா தரேன்!”

“இது ரொம்ப சின்ன வேலதான! பத்து ரூபா காசு வேற தரன்னு சொல்றாரு! வலிய வரத ஏன் வேணான்னு சொல்லணும்?” என்று மனதிற்குள் எண்ணியவன்,

“சரிங்க, நான் எடுத்துட்டு வரேன்!”, என்றான்.

“இதுல முட்டைங்க இருக்குப்பா! பாத்து பத்திரமாக எடுத்துட்டு வாப்பா!.”

“சரிங்க”, என்று கூறிவிட்டு அவரைப் பின் தொடர்ந்தான்.

போகும் வழியில் யோசித்துக் கொண்டே சென்றான்.

“இந்த வேலையை முடிச்ச ஒடனே பத்து ரூபா கெடைக்கும். அதவச்சி என்ன பண்ணலாம்? . ம்ம்.. சரி அஞ்சி முட்ட வாங்கலாம். கோழிக்கிட்ட அட காக்க வச்சா அஞ்சிக் குஞ்சி பொரிக்கும். அஞ்சிக் குஞ்சிகளும் கோழிகளானா ஆளுக்குப் பத்து பதினஞ்சி முட்டப் போடுங்க. அவைகளும் பிறகு கோழிகளாகும். கொஞ்ச நாள்ல ஒரு பெரிய கோழிப்பண்ணையே வச்சிடலாம். அதுக்கு நான்தான் முதலாளி. அப்படியே கால் மேல கால் போட்டு மத்தவங்களை வேல வாங்குவேன்.”

இப்படியாகக் கற்பனை செய்து கொண்டே செல்லும்போது வழியில் உள்ள வாழைப் பழத்தோலை கவனிக்காமல் கால் வைத்துவிட்டான். வழுக்கி விழுந்தான். முட்டைகள் அனைத்தும் உடைந்தன. முட்டைகளுக்குச் சொந்தக்காரரிடம் அடி உதைப் பட்டு வந்தான்.

அவன் செய்த தவறு என்ன?

முதலில் கொடுத்தவேலையை முடிக்க மட்டுமே கவனம் கொண்டிருந்திருக்க வேண்டும். கையில் காசு வரும் முன்னே பகல் கனவு கண்டதனால் கவனம் சிதறி வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.

நாம் கூடப் பல சமயங்களில் இப்படித்தான் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் செயலை அற்பணிப்போடு செய்யும்போது வெற்றி தானே கிடைக்கும்.

லட்சியத்தோடு கூடிய கனவு காணுங்கள். முயற்சி செய்யாமல் பகல் கனவு காணாதீர்கள். அது என்றுமே பலிக்காது.

2 Comments

  1. s suresh ஆகஸ்ட் 12, 2012

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.